Saturday, October 18, 2008

முகலே ஆஸம்


முகலே ஆஸம் (மாட்சிமை தங்கிய முகலாய பேரரசு) என்ற படம் இந்திய சினிமாவிற்கே ஒரு பெருமை. 1960ம் ஆண்டு கருப்பு வெள்ளையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இரட்டிப்பான லாபத்தை சம்பாதித்து கொடுத்த படம்.

சென்ற ஆண்டு இந்த படம் மீண்டும் கலர் படமாக வெளி வந்தது
வெள்ளி விழாவும் கண்டது
இந்த தலைமுறையினரையும் கவர்ந்திருக்கிறது என்றால்,
இந்த படம் தான் காரணமா? இல்லை,
இந்த காதல் தான் காரணமா?... தெரியவில்லை!.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் காதல் பற்றி இப்படி எழுதினார்
காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள் - என்று.

படத்தின் கதை என்னவோ எல்லோருக்கும் பரிச்சயமான சலிம் - அனார்கலி கதை தான். இந்த கதை உண்மையாக நடந்ததா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் சரியான பதிலாகும். இருந்தும் இந்த படம் இத்தனை தூரம் பாதிப்பை ஏற்படுத்த நிறைய காரணம் உண்டு அந்த பாத்திரத்தில் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் உண்மையான காதலர்களாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த காவிய காதலின் முடிவும் படத்தின் முடிவும் ஒன்று தான்.
சோகம் சோகம் சோகம்.

மதுபாலா என்ற அழகு பதுமை காதலர் தினமாக அனுசரிக்கப்படும் பிப்ரவரி 14ம் தேதி வின்னில் இருந்து இறங்கியது. மும்தாஜ் கான் என்ற இயற் பெயரை கொண்ட இவர் 13ம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார்.
யூசுப் கான் என்ற இயற் பெயரை கொண்ட திலீப் குமார் பாகிஸ்தானில் பிறந்தவர். இருவரும் 1951ம் ஆண்டு ‘தரானா’ என்ற படத்தில் முதன் முதலாக சந்தித்து காதல் மரத்தின் வேர் புதைத்து நீர் பாய்ச்சினர். பிறகு ‘சங்தில்(1952)’ ‘அமர் (1953)’ போன்ற படங்களில் இணைந்து நடித்த போது காதல் துளிர் விட்டு மரமாக வளர ஆரம்பித்தது.

இந்த நிலையில் ‘நயா தவுர்’ எனும் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்கு திலிப் குமாருடன் அனுப்ப மாட்டேன் என்று மதுபாலாவின் தந்தை கூறிய போது காதல் மரம் காயின்றி கனியின்றி வாடி வதங்க ஆரம்பித்தது. இதன் காரணத்தினால் படத்தில் மதுபாலாவிற்கு பதிலாக வைஜெயந்திமாலா நடிக்க ஒப்பந்தமானார்.

ஒரு கட்டத்தில் மதுபாலாவை நிகாஹ் செய்ய வேண்டி காஜியை (திருமண ரெஜிஸ்தரர்) ஏற்பாடு செய்து விட்டு மதுபாலாவிடம் வீட்டை விட்டு வந்து விட வேண்டும் என திலீப் குமார் கூறிய போது அதை மதுபாலா ஏனோ மறுத்து விட்டார். இதன் பிறகு ஒரு கோர்ட் கேஸில் மதுபாலாவிற்கு எதிராக திலீப் குமார் சாட்சியம் கூற நேர்ந்தது, அப்பொழுது திலீப் குமார் நீதிமன்றத்தில், ‘நான் எனது வாழ்நாளின் கடைசி நாள் வரை அவளை காதலித்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரின் மனதில் உள்ள காதல் இவர்களை ‘முகலே ஆஸம்’ எனும் படத்தில் நடிக்க வைத்தது. இருவரும் காட்சியில் பேசியது தவிர ஒரு வார்த்தை கூட வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அப்பொழுது மதுபாலாவிற்கு உடல் நலம் கெட்டிருந்தது (தீராத இதய நோய்). இதை பொருட்படுத்தாது நடித்தார். படத்தை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும் இருவருக்கும் உள்ள காதலின் ஆழம். படத்தின் உள்ள வசனங்களே இவர்களது கதையை பேசியது.

இனி படத்தின் கதை - பிள்ளை வரம் வேண்டி கடும் வெயிலில் சுடும் பாலையில் காலணி கூட அணியாமல் முகலாய பேரரசர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் (- படத்தில் நடித்தவர் பிருதிவிராஜ் கஃபூர் - இவர் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜ்கபூர், ஷம்மி கபூர், ஷஷி கபூரின் தந்தை ரிஷி கபூர், ரந்திர் கபூர், ராஜிவ் கபூரின் தாத்தா, கரிஷ்மா கபூர், கரீனா கபூரின் கொள்ளு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது) சூ•பி ஞானி செய்கு சலீம் சிஸ்டி என்ற இறையடியாரை சந்தித்து தனது பிள்ளை பாக்கியத்திற்காக இறைவனிடம் மன்றாடும் படி வேண்டுகிறார். இறை நம்பிக்கையாளரின் நெஞ்சிலிருந்து வெளியாகும் துவாவானது (பிரார்த்தனை) தக்தீரையே (விதி) மாற்றக் கூடியது என்ற முஹம்மது நபிகளின் வாய்மொழிக் கேற்ப அழகிய மைந்தன் பிறக்கிறான். இறை நம்பிக்கையாளரின் துஆவானது அக்பரின் தக்தீரையே மாற்றி விடுகிறது. பிரசவம் பார்த்தவரிடம், அக்பர் ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்து “இன்று நீ என்ன கேட்கிறாயோ அது அல்லாஹ் உதவியால் உனக்கு கிடைக்கும்” என்கிறார். அவரோ எதுவும் கேட்க மறுத்து விடுகிறார்.

சலீம் என்ற பெயர் தாங்கி வளரும் இந்த குழந்தை (மேலே படித்தவை யாவும் வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்கள் தான், இந்த சலீம் தான் பிற்காலத்தில் ஜஹாங்கீர் என்று அழைக்கப்பட்டார்) தாய்க்கு செல்ல பிள்ளையாக வளர்கிறது.

அதிக செல்லத்தினாலும் செல்வத்தினாலும் சிறு பிராயத்திலேயே மது, மாது என மனம் போன போக்கில் அலையும் இந்த குழந்தையை வருங்கால இந்தியாவின் மன்னன் இப்படி சீரழிந்து திரிவதா என்று “..இவன் நெற்றியில் உள்ள இவனது தாயாரின் அன்பு பதிந்த முகமூடியை கிழித்து போரில் தரிக்கும் இரும்பு கவசத்தை அணி.. வருங்கால முகலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்..” என்று தளபதியிடம் கூறி போர்களத்திற்கு அனுப்புகிறார்.

சலீம் போரில் ஈடுபட்டு வெற்றிகளை குவித்து தந்தைக்கு வெற்றி செய்தியை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் கவித்துவமாக பேசும் சலீமை பார்த்து படை தளபதி, “என்ன ஆச்சர்யம், 14 ஆண்டுகளாக ரத்தத்தில் குளித்த வாளுக்கு கவிதையும் வாசிக்க வருகிறதே” என்று கேட்கும் போது சலீம் சொல்வார், “இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, (உமர்) கய்யாமின் கவிதைகளை கல்லில் எழுதினால் அர்த்தம் மாறிவிடுமா, என்ன..?” என்று.

நேர்ந்து தவம் கிடந்து பெற்ற மகனை பார்க்க பிராயசைப்பட்டு, “உடனே திரும்பவும்” என்று சலீமுக்கு அழைப்பு வருகிறது. அரண்மனை விழாக் கோலம் பூணுகிறது. அரண்மனை சிற்பியிடம் வரவேற்க வேண்டி ஒரு விக்கிரகம் செய்யுமாறு ஆணையிடப் படுகிறது. தவணைக்குள் சிலையை செய்து முடிக்காத சிற்பி மாதிரியாக நின்ற நாதிரா என்ற பெண்ணையே முத்து தோரணங்களால் மறைப்பு போட்டு மூடி சிலை போல் நிற்க வைக்கிறார்.

சலீம் வந்து தாயாரை சந்திக்கிறார். தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை பார்த்து தாய் கேட்கிறார், “நான் பாலூட்டி உனக்கு கொடுத்த ரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் ரத்தத்தை பாய்ச்சினாயா? –
என் கண்ணை விட்டு இவனை மறைத்து விடுங்கள் இல்லை என்றால் என் கண்ணே பட்டு விடும்” என்கிறார்.

சிலையை மூடியுள்ள திரையை அம்பு எய்தி அகற்ற வேண்டும் என சலீம் கேட்கப்படும் பொழுது, சிலை அசையாமல் அப்படியே நிற்கிறது. சலீம் குறி பார்த்து அம்பு எய்தி திரையை விலக்குகிறார். அழகு சிலை வெளிப்படுகிறது, உடனே அக்பர், “நிச்சயமாக இந்த சிலையை சிற்பி வடித்திருக்க முடியாது, இது விண்ணிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்” என் று அழகை அதிசயிக்கிறார்.. அந்த சிலை அசைந்து குனிந்து நன்றி சொல்கிறது. எல்லோருக்கும் ஆச்சர்யம். அக்பர் கேட்கிறார், “ஏன் அம்பு எய்த போதும் கூட அசையாமல் நின்றாய், உன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிருந்தால்..?” என்று – “நான் அசைந்து இருந்தால் அது சாஹிபே ஆலம் (சலீம்) அவர்களுக்கு தானே அவமானம், அது அவரின் வீரத்தை சந்தேகிக்கும் படி அல்லவா ஆகி விடும்” என்று ஒரு போடு போடுகிறார்.

அன்று முதல் நாதிரா என்ற அழகி அனார்கலி என்று அழைக்க வேண்டியும் வேலைக்காரியாகவும் நாட்டியக்காரியாகவும் அரண்மணையிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள படுகிகிறார்.

ஒரு பாட்டு போட்டி நடக்கிறது, “காதல் செய்தவர்கள் எல்லோரும் கடைசியில் சோகத்தில் சிக்கி இறந்து விடுவார்கள்” என்று பாடிய ஒருவருக்கு சலீம் பரிசாக பூவையும் “உண்மை தான் அப்படி இறந்தாலும் அவர்களை இந்த உலகம் மறக்காது” என்று பாடிய அனார்கலிக்கு முள்ளையும் காம்பையும் பரிசாக தருகிறார். பரிசை வாங்கி கொண்ட அனார்கலி, “காம்புக்கு தான், தான் வாடி (பூவைப் போல) விடுவோமோ என்ற அச்சமே இல்லை” என்கிறாள்.

அனார்கலியின் தங்கை சுரய்யா என்ற சிறிய மொட்டு தனது அக்காளின் அகத்தின் காதலை முகத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்கிறது. அனார்கலி நான் வேலைக்காரியாக இருந்து கொண்டு ராணியாக வாழ எவ்வாறு ஆசைப்பட முடியும்” என்று மறுக்கிறாள். சுரய்யாவோ, “ஏன் ஆசைப்பட கூடாது?, நீ அல்லாஹ்விடமிருந்து தான் வந்தாய், அவர் அல்லாஹ் அல்லாமல் வேறு யாரிடமிருந்தாவது வந்து விட்டாரா என்ன..?” என்று ஆறுதல் கூறி தூதுவராக செல்கிறாள்.

சலீமின் கடித்தத்தை சுரய்யா கொடுக்கும் போது, “இதோ, அவரின் இதயம்” என்று கொடுக்கிறாள். அனார்கலி கடிதத்தை பெற்றுக் கொள்ள தயங்க, சுரய்யா, “ஆ! உன் இதயம் கொடுக்கும் போது சிறிதும் யோசிக்க வில்லை, இப்பொழுது அவரின் இதயம் (கடிதம்) வாங்கும் போது இவ்வளவு யோசனையா?” என்கிறாள். இதயம் பெறப்படுகிறது.

இதயங்கள் சந்திக்கிறது,
அனார்கலி சொல்கிறாள், “அல்லாஹ்வுக்காக சொல்கிறேன், நீங்கள் (வேலைக்காரியான) என்னை சந்திக்க வந்து உங்களின் மதிப்பை இழந்து விடாதீர்கள்” என்று
சலீம், “நான் இந்த மேலோர் கீழோர் எனும் சுவற்றை உடைக்க போகிறேன், அனார்கலி, உன் கண்களை காட்டு நான் அதில் என் காதலை பார்க்க வேண்டும்” என்று கவிதை வசனம் பேசுகிறார்.
அனார்கலி, “என் கண்களை பார்க்காதீர்கள், அதில் வேறொன்றுமில்லை, ஒரு வேலைக்காரியின் சோகத்தை தவிர”
சலீம், “நீ வேலைக்காரி என்பதை மறந்து விடு, நீ எதை சொல்ல பயப்படுகிறாயோ அதை சலீமே உன் கண்களில் படிக்க அனுமதி கொடு”
அனார்கலி, “என் கண்களில் இருக்கும் கனவுகளை பறித்து விடாதீர்கள், நான் இறந்து விடுவேன்”
சலீம், “அனார்கலி, உன் கனவுகளை நிஜமாக்கி காட்டுகிறேன், பார்”
அனார்கலி, “யாரோ வருகிறார்கள் - உங்களை(தன்னை பற்றி கவலை பட வில்லை) பார்த்து விடுவார்கள்”
சலீம், “அவர்கள் பார்க்கட்டும்”
அனார்கலி, “இந்த பணியாளினாள் தங்களின் பிரிவை கூட தாங்கி கொள்ள முடியும், ஆனால் தங்களின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் ஒரு களங்கம் வந்து விட்டால் தாங்கி கொள்ளவே முடியாது” என்று ஆனந்த கண்ணீர் அல்ல ஆனந்த காதல் வடிக்கிறாள்.

தந்தைக்கு தெரிய வர பாரம்பரியத்தை காரணம் காட்டி காதல் நிராகரிக்கப் படுகிறது. அனார்கலி சிறை வைக்கப் படுகிறாள். சலீம் தன் கைவசம் உள்ள படையை வைத்து கொண்டு தந்தைக்கு எதிராக போர்க் கொடி தூக்குகிறார். சிறையிலிருந்து அனார்கலியை கடத்துகிறார்.

சலீம் என்ன தான் மாபெரும் வீரனாக இருந்தாலும் இந்திய பேரரசிடம் மோதி வென்று விட முடியுமா? சலீம் சிறை பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறார். மரண தண்டனையை திரும்ப பெறுமாறு நாடே கேட்டுக் கொள்கிறது. அனார்கலி திரும்ப ஒப்படைக்கப்பாடலன்றி தண்டனை திரும்ப பெறப்பட மாட்டாது என்று அறிவிக்கப் படுகிறது. சலீம் மறுக்கிறார், ஆனால் அனார்கலியோ சலீமை காப்பாற்ற தாமாகவே வந்து சரணடைகிறார். சலீமுக்கு விடுதலை, அனார்கலிக்கு உயிருடன் கல்லறை கட்ட வேண்டும் என்பது மன்னரின் ஆணை.

அனார்கலி மரண தண்டனைக்கு முன் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறாள், அனார்கலி, “ஒரு நாளேனும் நான் முகலாய பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டும்” என்கிறார்.
அக்பர், “உன் மனதில் உள்ளது இப்பொழுது வெளியாகி விட்டது, இது தானே உன் ஆசை, மகாராணியாகி சுக போகத்தை அனுபவிக்க வேண்டும் என்பது?” என்கிறார்.
அனார்கலி, “சாஹிபே ஆலம் எனக்கு வாக்கு கொடுத்தார், உன்னை நான் மகாராணியாக்கி காட்டுவேன் என்று, அவரின் ஆசை நிறைவேற வேண்டி தான் நான் இவ்வாறு கேட்கிறேன்” என்கிறாள்
அக்பர் ஒப்புக் கொள்கிறார் ஒரே ஒரு நிபந்தனையோடு, முதலிரவு பாட்டு முடிந்ததும் சலீமை மயக்க மருந்து கலந்த ரோஜாப்பூவை நுகர வைத்து மயக்கமடைய வைத்து விட்டு மரணத்தின் வாசலுக்கு வந்து விட வேண்டும் என்பதே நிபந்தனை. அனார்கலி சம்மதிக்கிறாள்.

அக்பர், “இந்த திட்டம் நடந்தாக வேண்டும், இல்லை என்றால் சலீம் உன்னை இறந்து போக விட மாட்டான், நான் உன்னை வாழ விட மாட்டேன்” என்கிறார்
அனார்கலி, “நான் எப்பொழுதோ இறந்து விட்டேன், இப்பொழுது நீங்கள் பார்ப்பது பேசுவது எல்லாம் ஜனாசாவிடம் (இறந்த உடல்) தான் - நீங்கள் சொல்வது நடக்கும்” என்கிறாள்.
அனார்கலி தலையில் மகாராணி அணியும் கிரீடத்தை (மயக்க மருந்துடைய ரோஜாப்பூவும் இதில் தான் உள்ளது) அக்பர் அணிவித்து விடுகிறார்.
அனார்கலி, “ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் கொடுத்த இந்த மேன்மை தங்கிய பரிசிற்காக நாளை அவர் செய்ய இருக்கும் கொலை குற்றத்தை அனார்கலி மன்னித்து விடுகிறாள்” என்று வார்த்தை சவுக்கடி கொடுக்கிறாள்.

முதலிரவு கொண்டாட்டம் நடைபெறுகிறது, அனார்கலி சலீமை ரோஜாப்பூவை நுகரச் செய்கிறாள்”, சலீம் மயக்க மடைகிறார், அனார்கலியிடம் மயக்க நிலையில், “ஏன் இப்படி செய்தாய்? - என்னை ஏமாற்றி விட்டு போகத் தான் இப்படி செய்தாயா?” என்று கேக்கும் போது அனார்கலி, “நான் உங்களை விட்டு இறந்து போவேனே தவிர ஏமாற்றி விட்டு போக மாட்டேன்” என்கிறாள். சலீம் “அனார்கலி என்னுடையவள், யாரும் தொட விட மாட்டேன்” என்று கத்திக் கொண்டே மயக்கமாகி கீழே விழுகிறார்.

அனார்கலிக்கு மரண அழைப்பு வருகிறது, இந்த கட்டத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் சலீமை பார்த்து மனதிற்குள் பாடுகிறாள்,

“அல்லாஹ் உங்களுக்கு துணையிருக்கட்டும்
இந்த மனத்தின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களது உலகை விட்டு நான் போகிறேன்
எழுந்திருங்கள் - என் இறுதி சலாத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

நாளை என் ஜனாசா (இறந்த உடலை எடுத்து செல்லும் இறுதி ஊர்வலம்)
நீங்கள் இருக்கும் பக்கமாக போகும்

சத்தியம்! உங்கள் தோள்களால்
அதை தாங்கிக் கொள்ள இயலாது”

என்று பாடி விடைபெறுகிறாள்.

அனார்கலியை சுற்றி கல்லறை எழுப்பப் படுகிறது. கண்கள் மட்டுமே தெரிகிறது.
அடுத்து என்ன? - இது தான் முடிவு..

சில இசை செவிக்கு இனிமை, சில இசை இதயம் தொடும், ஆனால் நவ்ஷத் சாபின் முகலே ஆசம் இசையோ உயிரின் வேர் தொடும். அர்த்தம் தெரியா விட்டாலும் கண்கள் குளமாகும். அர்த்தம் தெரிந்தாலோ கண்கள் இரத்தமாகும்.

இப்படியாக இந்த படம் முழுக்க பேசாமல் நடித்த திலீப் குமாரும் மதுபாலாவும் படத்திலேயே எல்லா வற்றையும் பேசி முடித்து விட்டிருந்தார்கள்.

இதன் பிறகு காலம் சுழன்று கொண்டே இருந்தது, மதுபாலாவின் அழகில் மயங்கி திருமணம் முடிக்க எத்தனையோ பேர் தவமிருந்தும் பின்னனி பாடகரான கிஷோர் குமாரை ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் முஸ்லிமாக வேண்டும் என்ற நிபந்தனையோடு நிகாஹ் செய்து கொண்டார். புகழ் பெற்ற பிண்ணனி பாடகர் கிஷோர் குமார் அன்றிலிருந்து கரீம் அப்துல் ஆனார்.

இந்நிலையில் மதுபாலாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. லண்டனுக்கு ஆபரேஷனுக்காக சென்ற போது மருத்துவர்கள் மிகவும் ரிஸ்க் என்று ஆபரேஷன் செய்யவே மறுத்து விட்டனர்.

படுக்கையிலேயே மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த அவர் முகலே ஆஸம் படத்தை மட்டும் 500 தடவை பார்த்திருக்கிறார். அவர் திலீப் குமாருடனான காதலை இன்னும் மறக்க வில்லை.

ஹாலிவுட்டிற்கு மர்லின் மன்றோவும் கிரேட்ட கார்போவும், ஜப்பானிய சினிமா உலகிற்கு தொஷிரோ மி•ப்யூன் பிரெஞ்ச் திரை துறைக்கு ஜின் கேபனும் பிரிஜிட் பார்டோட்டும் ஆனால் இந்திய வெண்திரை உலகிற்கு என்றும் ஒருவர் உண்டு, அது வேறு யாருமல்ல முடிசூடா அரசி மதுபாலா ஒருவர் தான்.

படுக்கையிலேயே கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் வரை மிகவும் கஷ்டம் அனுபவித்த அவர், பிப்ரவரி மாதம் 23ம் தேதி 1969ம் ஆண்டு உலகை விட்டு பிரிந்து போனார். கண்களாலேயே மொழிகளற்ற மொழி பேசி நடிக்கும் இந்த தேவதை தனது கண்களை இறுதியாக இறுக்கமாக மூடிக் கொண்டது.

திலீப் குமாரும் சாய்ரா பானு என்ற நடிகையை திருமணம் செய்து வாழும் சகாப்தமாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

திலீப் குமார் நீதிமன்றத்தில் சொன்னது போல், அவரின் கடைசி நாள் வரை மதுபாலாவை காதலித்து கொண்டு தான் இருப்பார்”

ஒரு முறை
காதலில் தோல்வி
அவசியம் வேண்டும்
வாழ்க்கை முழுமையாகும்

இந்த 'கவிதை மாதிரி' யை சொல்லி முடிக்கிறேன்
முகலே ஆஸத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட
பல கோடி பேரில் ஒருவன்
A.Mohamed Ismail