”தாஜ்மாஹாலை உலகத்து அதிசயம்னு சொல்றானே தவிர உலகத்து சோகம்னு எவனாவது சொல்றானா..?” என்று சின்னபூவே மெல்லபேசு படத்தில் ஒரு வசனம் வரும்.
காதலில் வெற்றி மட்டுமல்ல தோல்வியும், அந்த காதல் தோல்வியினால் உருவாகிற சோகமும் அழகுடையது தான் போலும், ஒரு வித சோகமான அழகு. அதனால் தான் தாஜ்மஹலை உலகத்து அதிசயமாகவே பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமாவில் காதல் தோல்வி படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. காதலை மென்மையாகவும் அழகாகவும் சொன்ன படங்கள் ஏராளம்.
பெரும்பாலான மசாலா படங்களில் ரவுடிகளிடமிருந்து கதாநாயகியை காப்பாற்றி ”என் கடமையை தான் செஞ்சேன்” என்று சொன்ன அடுத்த காட்சியிலேயே கனவுக் காட்சியில் ஜோடியாக ஆடித் திரிவது சினிமா காதலின் கடமையாக தான் இருந்து வந்திருக்கிறது.
விதிவிலக்காக சில படங்கள் காதல் மலரும் தருணங்களை அழகாக காட்சிபடுத்தி இருக்கின்றன.. உதாரணமாக சில படங்கள்.. ஏதோ எனக்கு ஞாபகத்திற்கு வருவதை எழுதியிருக்கிறேன்.. அப்படியே அடிபிறழாமல் திருக்குறள் மாதிரி எல்லாம் எழுத முடியாது..
...........................................................................
ராஜபார்வை
கண் பார்வையற்ற அவன் மின்தூக்கியில் கருப்பு கண்ணாடி அணிந்து நின்று கொண்டிருக்கிறான். பக்கத்தில் யார் நிற்கிறார்கள்? ஆணா? அல்லது பெண்ணா? என்று கூட அவனுக்கு தெரியாது.
அவன் அருகில் அவள் நிற்கிறாள். அவள் அணிந்து இருக்கும் ஆடை அவளது மேலழகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சிரித்த முகத்துடன் நிற்கும் இவனை பார்த்து தன் அழகை இரசிக்கிறான் என்று நினைத்து ஆடையை சரி செய்கிறாள். அவன் இன்னமும் அதிகமாக சிரிக்கிறான்.
மின்தூக்கி நிற்கிறது. அவள் கத்தி கூச்சலிடுகிறாள். மின்தூக்கியை விட்டு வெளியே வந்து விடுகிறாள். மின் தூக்கியின் உள்ளேயே வைத்து அனைவரும் அவனை அடிக்க ஆரம்பிக்க அவனது கண்ணாடி கழன்று கீழே விழுகிறது. கீழே விழுந்து கண்ணாடியை தேடி தரையில் கையை தடவுகிறான். மின் தூக்கியின் கதவு மூடிவிடுகிறது. அவள் அதிர்ச்சியில் உரைகிறாள். அவளுக்கு காதலின் கண் அப்போது தான் திறக்கிறது.
Different Pathetic, இல்லை..?
...........................................................................
நிழல்கள்
அவள் வீட்டு மாடி சன்னலை திறந்தால் எதிர் வீட்டில் மாடியில் குடியிருக்கும் இளைஞர்கள் தங்கியிருக்கும் வீடு தெரியும். அப்போது அவள் சன்னலின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் போது கைதட்டும் ஓசை கேட்கிறது. சத்தம் வந்த எதிர் வீட்டு சன்னலின் திசைக்கு பார்வையை திருப்புகிறாள்.
அங்கே அவனே தான், கண்ணாடி அணிந்து கலைந்த தலையுடன் கைதட்டி இரண்டு விரலை நீட்டி காட்டுகிறான். அவள் படாரென்று சன்னலை அறைந்து தாழிடுகிறாள். இதே போல் இன்னொரு முறையும் நடக்கிறது.
முன் பின் தெரியாத பெண்ணிடம் இத்தனை அநாகரிகமாக நடந்து கொள்வதா என்று கோபமும் வெறுப்பும் கொள்கிறாள்.
இதற்கிடையில் அந்த பெண்ணின் தாயாரும் அவனும் ஒரே ஊர்காரர்கள் என்றும் தூரத்து சொந்தமும் என்று தெரிய வருவதால் அந்த பையனை தன் பெண்ணுக்கு டியுசன் சொல்லி கொடுக்க வைக்கிறாள்.
இந்த கட்டத்தில் அந்த பெண் அவளுக்குள் இருக்கும் வெறுப்பை வெளிகாட்டுகிறாள். தேநீர் சகிக்க முடியாமல் போட்டு தருகிறாள். எடுத்து எறிந்து பேசுகிறாள். எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள்.
அந்த பெண் வீட்டிற்கு கீழே காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது அந்த கண்ணாடி இளைஞன் மேலிருந்து சன்னலை திறந்து கையை தட்டி கூப்பிடுகிறான். இவள் திரும்பி அண்ணாந்து பார்க்கிறாள். இரண்டு என்பது போல் கையை காட்டுகிறான். பக்கத்து டீக்கடையில், "மேலே ரெண்டு டீ கொண்டு போய் கொடு.." என்று சொல்லப்படுகிறது.
அவளுக்கு அப்போது தான் விபரம் புரிகிறது. தன் தவறை உணர்கிறாள். இது நாள் வரை தேநீர் கேட்டு தான் கையை தட்டி இருக்கிறான் நம்மை பார்த்து அல்ல என்று புரிகிறாள்.
இதற்கிடையில் தன்னிடம் ஏன் எதிர் வீட்டுப் பெண் இவ்வளவு அவமரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று குழப்பத்தில் தவிக்கிறான் அவன்.
அடுத்த தினம் டியுசன் சொல்லி கொடுக்க போகும் போது தேநீர் கொண்டு வந்து வைக்கிறாள். அவன் தயங்குகியவாறே, "நீங்க ஏன் எங்கிட்ட மரியாதை குறைவா நடந்துக்கிறீங்கண்ணு எனக்கு புரிஞ்சு போச்சு..! நான் டிகிரி முடிச்சிருக்கேனா இல்லையா என்று தானே உங்கள் சந்தேகம், இங்கே பாருங்க நான் டிகிரி வாங்கினப்போ எடுத்த போட்டோ.." என்று புகைப்படத்தை காட்டுகிறான்.
அவளுக்கு சிந்திக்க எல்லாம் நேரமில்லை. வந்த சிரிப்பை அடக்க விருப்பமில்லை. நன்றாக சிரிக்கிறாள், முன்பு சன்னலை அடைத்தவள் அன்று காதலின் கதவையே திறக்கிறாள்.
............................................................................
நீ பாதி நான் பாதி
அவள் மிதிவண்டியில் வேகமாக வருவதுடன் தவறான திசையில் வந்து வேகமாக வளைக்கிறாள். அவன் மீது மோதி விடுகிறாள். அவன் கீழே விழுகிறான். அவன் எழுந்து திட்டுவானோ "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..?" என்று கேட்பானோ என்று பயந்து "சாரி.." சொன்னவளுக்கு ஏமாற்றம். அவன் எழுந்து இடித்தது யார் என்று கூட பார்க்காமல் சென்று விடுகிறான்.
அடுத்த முறை வேகமாக வந்து இடித்து விடுகிறாள் வேண்டுமென்றே என்று அல்ல, தெரியாமல் தான். திரும்பி பார்க்காமல் செல்கிறான். இன்னொரு முறை ஹோலி பண்டிகையில் வர்ணங்களை தெளித்து விளையாடும் போது அவன் மீது தெளித்து சட்டையை எல்லாம் வீணாக்கி விடுகிறாள். மௌனமாக கலைகிறான்.
ஆச்சர்யப்படுகிறாள், ஒரு வேளை மனநிலை குன்றியவனோ..? அவர்களாக வந்து மோதி விட்டு "ஏய்யா கண்ணை என்னா பிடறிலயா வச்சிருக்கே.." என்று மூளையை கக்குளில் வைத்துக் கொண்டே அலைபவர்கள் கேட்டு திரியும் இந்த மனித கூட்டத்தில் இப்படியும் ஒரு அதிசயமா..? யார் அவன்..?
சாலை நடுவே ஒரு கூட்டம். ஒருவர் வர்ணங்களால் ஓவியம் வரைந்திருக்கிறார். அதை பார்க்கத் தான் அத்தனை கூட்டம். அவனும் நிற்கிறான். அவள் கவனித்து விட்டாள். நிறைய பேர் ஓவியத்திற்கு காணிக்கை வழங்குகிறார்கள். ஒரு சிறுவன் அதிலிருந்து 5 ரூபாயை எடுத்து கொண்டு ஓடுகிறான். பின்னாடியே அந்த சிறுவனை துரத்திக் கொண்டு அவனும் ஓடுகிறான்.
கூட்டம் அவர்கள் ஓடிய திசையையே பார்க்கிறது. அவன் அந்த சிறுவனின் காதை திருகிக் கொண்டே இழுத்து வருகிறான். சிறுவன் அழுதவாறே வருகிறான்.
அவள் கோபமுற்று, "என்னய்யா அப்டி பெரிய தப்பை இந்த சின்ன பையன் செஞ்சுட்டான், வயித்துக்கு சோறு இல்லாம எடுத்திருப்பான், அப்படியே எடுத்திருந்தாலும் இப்படியா போட்டு அடிக்கிறது, இந்தாப்பா திருடாதேன்னு 10 ரூவா கைல கொடுத்திருந்தா பாராட்டி இருக்கலாம்.." என்று முடிக்கும் முன்பே..
அந்த சிறுவன் அழுது கொண்டே தொடர்கிறான், "அதையே தாம்மா அவரும் சொன்னாரு, ஆனா 10 ரூவா இல்லம்மா 20 ரூவா கொடுத்தாரும்மா.." என்று சொல்லவும் அவள் கண்கள் நிமிர்ந்து அவனை தேடுகிறது. அவன் அதோ தூரமாக சென்று கொண்டிருக்கிறான். அவனை தொடர்ந்து அவளது காதலும்....
...........................................................................
இப்படி காதல் கனிரசம் பொழிந்த காட்சிகள் எத்தனையோ..?
0 comments:
Post a Comment