Wednesday, July 22, 2009

விஜய் டிவி - தமிழ் பேச்சு - பெரியார்தாசன் - VARK - பயிற்றுவிக்கும் முறை


எனக்கு தெரிந்து இங்கே சிங்கப்பூரில் சன் டிவி, விஜய் டிவி மட்டும் தான் பார்க்க முடியும். நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் சன் டிவியின் தமிழ் மாலை மாறன் குடும்பத்தார்களின் தமிழ் மாலையாகவே மாறி விட்ட நிலையில் விஜய் டிவி நடன் நிகழ்ச்சி, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவே தமிழ் பேச்சு ... என்ற நல்ல நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பாகிறது.

எனக்கு பெரியாரை முழுமையாக பின்பற்றாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் கிட்டதட்ட பெரியாரின் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அதே போல் பெரியார்தாசனையும் பிடிக்கும்.  விளம்பரத்தில் பெரியார்தாசனை பார்த்து விட்டதால் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு வாரம் பார்த்தேன்.

அதில் பெரியார்தாசன் பேசும் பயிற்றுவிக்கும் முறைகளை பற்றி மிக அழகாக குறிப்பிட்டார். மொத்தம் மூன்று விதமான மாணவர்கள் இருப்பார்கள்.

சிலருக்கு படித்தால் தான் புரியும். இவர்களை  Reading   என்று குறிப்பிடலாம்.
அதனால் தான் வகுப்பறையில் ஆசிரியர் செய்திகளை சொல்லுவார்.

சிலருக்கு கேட்டால் தான் புரியும். இவர்களை  Auditory  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் பலகையில் எழுதி போடுவார்.

சிலர் தொடு உணர்ச்சிகாரர்கள், இவர்களை   Kinesthetic  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் மாணவர் அருகிலேயே சென்று அவனை தொட்டு தடவி கொடுத்து எடுத்து சொல்லி புரிய வைப்பார் என்று விளக்கம் கொடுத்தார்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் மொத்தம் நான்கு வகையினர் இருக்கிறார்கள்.
1. படத்தை பார்த்து புரிந்து கொள்பவர்கள் - Visual learners

2. கேட்டு புரிந்து கொள்பவர்கள் - Auditory learners

3. படித்து புரிந்து கொள்பவர்கள் - Reading learners
4. பங்கேற்று புரிந்து கொள்பவர்கள் - Kinesthetic learners

மேற்கூறியபடி நான்கு வகையில் பாடங்களை புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் ஒரு புது வகை உணவு பதார்த்தத்தை அல்லது ஒரு புது திறனை பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் வகைப்படி நீங்கள் படிப்பது என்றால் டிவியில் சமைப்பதை பார்த்து தெரிந்து கொள்வது

இரண்டாவது வகை என்பது நண்பரிடம் அல்லது ஆசிரியரிடம் அல்லது நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்வது

மூன்றாவது முறையில் நீங்கள் புத்தகங்களில் உள்ள ரெஸிபியை படித்து தெரிந்து கொள்வது

நான்காவது வகையினர் சமைத்து பார்த்து தெரிந்து கொள்வது,

இதில் நான்காவது வகை தான் சிறந்த முறை என்று சொல்கிறார்கள். ஏனெனில்...
நான் கேட்டேன் - எனக்கு மறந்து விட்டது
நான் பார்த்தேன் - எனக்கு ஞாபகம் இருக்கிறது
நான் செய்து பார்த்தேன் - எனக்கு புரிந்தது

பங்கேற்று புரிந்து கொள்வது தான் நிலையானது என்று அறியப்படுகிறது

Sunday, July 19, 2009

நீதி கிடைக்குமா?


நேற்றைய தினமலரில் படித்த செய்தி, இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

http://www.dinamalar.com//sambavamnewsdetail.asp?News_id=11563

பொதுவாக பெண்களுக்கு நடக்கும் அநீதி தொடர்ந்து கொண்டே வருகிறது, ஒரு கருத்துக்காக இதை சொல்கிறேன், பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் என்று யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் சொல்கின்றது. இது ஒரு குறீயீடாக கூட சொல்லப்பட்டிருக்கலாம்.

அதாவது தலையில் இருந்து அல்லது காலிலிருந்து படைக்கப்பட்டவள் என்றால் ஆணை விட பெண் மேலானவள் என்றோ அல்லது ஆணை விட பெண் கீழானவள் என்றோ முறையே அர்த்தமாகி போகும்.

ஆனால் விலாவிலிருந்து என்றால் அது உடலின் நடு பகுதியில் இருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஆணுக்கு அதிகாரம் இருக்குமேயானால் அவன் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூட பொருள் கொள்ள முடியும்.

இன்னும் யூத வேதத்தில் (ஹெப்ரிவ் தல்முத்)  விலா எலும்பு கைகளுக்கு கீழே இருப்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதயத்திற்கு அடுத்தபடியாக இருப்பதால் அவள் நேசிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலே கொடுத்திருக்கும் இணைப்பில் காதலித்து மணமுடித்த அந்த ஆண் தனது காதல் மனைவியிடம் உன் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாதே என்று தகராறு செய்திருக்கிறான். இது அவர்களது குடும்ப விஷயம் என்று விட்டு விடலாம், இந்த விஷயம் தற்கொலை செய்தி வரை வராமலிருந்தால்.

"நீ பேசக்கூடாது.." என்று வெறும் வார்த்தைகளால் சொல்லியிருந்தால் தற்கொலை வரை போயிருக்க முடியாது. அடித்திருக்கலாம், வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கலாம்.

பரிதாபத்துக்குறிய அந்த பெண் நிர்வாணமாக தூக்கில் தொங்கப்பட்டிருக்கிறாள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளின் காலையில் அந்த பெண்ணின் தாயார் தொலைபேசியில் 8:23 மணிக்கு தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து செய்தி சொன்ன போது, "நான் குளிச்சிட்டு கோயிலுக்கு போறேன்..' என்று சொல்லியிருக்கிறார்கள். (இது பத்திரிக்கையில் இல்லாத செய்தி). சரியாக 11 மணிக்கு தாயாருக்கு தற்கொலை செய்தி போகிறது.

எது எப்படியிருப்பினும், தற்கொலை என்பது சந்தேகத்திற்குறியதாக படுகிறது. பத்திரிக்கை செய்தியில் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் கூறியிருக்கும் கருத்தும் சிந்திக்க கூடியது தான். 

தவறிழைத்தவர்கள் அவ்வாறு தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

Friday, July 17, 2009

முஹம்மது ரஃபி - இறைவனின் பரிசு - நினைவாஞ்சலி


 பேச முடிந்தவர்கள் அனைவருக்கும் குரல் இருக்கிறது. சில குரல்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. காதால் கேட்டால் செவிக்கு போதை வரும். இதயத்தால் கேட்டால் இதயம் நழுவி போகும். அத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றால் அது ரஃபி சாஹேப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட முஹம்மது ரஃபி அவர்களையே சாரும்.

1940 லிருந்து 1980 வரை - கனீர் குரலோன் முகேஷ் அவர்களிடமிருந்து இளமையான குரலுக்கு சொந்தக்காரரான கிஷோர் குமார் வரை - சங்கர் ஜெய்கிஷனிலிருந்து லக்ஸ்மிகாந்தி பியாரிலால் வரை -  ஓ.பி. நய்யாரிலிருந்து ஆர்.டி.பர்மன் வரை - திலீப் குமாரிலிருந்து ஷம்மி கபூர் வரை - ராஜேந்திர குமாரிலிருந்து ஜானி வாக்கர் வரை - அனைத்து கால கட்டத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர இடத்தையும் பெற்ற பாடகர் ரஃபி சாஹேப் அவர்கள்.

அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.

1924ம் வருடம் டிசம்பர் மாதம் 24ந் தேதி பிறந்த அவர் தனது 13 வது வயதிலேயே அரேங்கற்றம். அவ்ர் பாடலை மிகவும் ரசித்த அவரது மச்சான் ஹமீது அவர்கள் ரஃபி சாஹேப் அவர்களை ஊக்கப்படுத்தினார். ரஃபி சாஹேப் அவர்கள் உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வாஹித் கான், பண்டிட் ஜிவான்லால் மிட்டோ மற்றும் பிரோஜ் நிஜாமி போன்ற சகாப்தங்களிடம் இசை பயின்றார். அதன் பிறகு ஹமீது அவர்கள் ரஃபியை அழைத்துக் கொண்டு பாம்பே சென்று பிரபல இந்தி இசையமைப்பாளரான நவ்ஷாத் சாபின் தந்தையாரிடம் சிபாரிசு கடிதத்தை வாங்கி கொண்டு நவ்ஷாத் சாபிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.

இதற்கிடையே ரஃபி சாஹேப் அவர்களை லாஹுர் வானொலி நிலையம் அழைத்து தங்களின் நிகழ்ச்சிக்காக பாடுமாறு கேட்டுக் கொண்டது. அவர் முதன் முதலில் பாடிய பாடல் 1944 ஆம் ஆண்டு “சோனியே..” என தொடங்கும் ஒரு பஞ்சாபிய பாடலை தான். இந்த பாடலை ஜீனத் பேகம் என்பவருடன் சேர்ந்து பாடினார். இதற்கெல்லாம் பிறகு தான் பாம்பே வந்து நவ்ஷாத் சாப் இசையில் பாடியது எல்லாம்.

கொயா கொயா சாந்த் குலா ஆஸ்மான்

மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ரே

கியா ஹுவா தேரா வாதா

ஜோ வாதா கியா ஹே

சூலேனே ஜோ நா சுக் ஹோத்தோ

பஹாரோ பூல் பர்சாவோ மெரா மெஹபூப் ஆயா ஹெய்ன்

சாந்த் மேரா தில்

தர்தே தில் தர்தே ஜிகர்

ரங் அவுர் ரூப் கி பாராத்

தேரே மெரே சப்னே

தும் பின் ஜாவு கஹா

தேகா ஹெ தேரி ஆகோன் மேன்

தில் தோனே செஹெககா சங்கே யாரே தில்

சௌதவி கா சாந்த்

அபி நா சாவோன் சோடு கர்

தில்கா பன்வர் கானே புகார்

தெரி பியாரி பியாரி சூரத் கோ

ஆஜ் மாசம் ஹே படா பெய்மான் ஹே படா

ஜான் ஜானி ஜனார்த்தன்

சுராலியா ஹே தும்னே

ஹம் கிஸிஸே கம் நஹி

தீவானா ஹுவா பாதல்

சலோ தில் சார் சலோ

தேரே பிந்தியா ரே

எஹே சான் தெரா ஹோ கா முஜ்பர்



- இப்படி எத்தனை பாடல்களில் இதயங்கள் கனிந்திருக்கின்றன

ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது, ஒரு வக்த் தொழுகையை விட்டது கிடையாது, அதை விட முக்கியம் ஒரு படம் கூட பார்த்தது கிடையாது, தன் குரலுக்கு எப்படி நடிகர்கள் வாயை அசைக்கிறார்கள் என்பது கூட தெரியாது என்றாலும், லைலா மஜ்னு என்ற படத்தில் இவர் தோன்றி ஒரு பாடலுக்கு வாயசைத்தும் இருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் இவரை பற்றி சொல்லும் போது, “இறைவனின் பரிசு” என்றார். இவர் இறந்த போது ஷம்மி கபூரிடம் “உங்களின் குரல் போய் விட்டது..” என்றார்களாம், அதற்கு ஷம்மி கபூர், “ரஃபி இறந்து விட்டாரா?” என்று அழுதாராம்.

இவர் ஒரே ஒரு முறை நாகூருக்கும் வருகை தந்திருக்கிறார். இவருக்கு நெருக்கமான நாகூராரில் ஒருவர் “ஷேக் அலாவுதீன் நானா” என்பவர். இவர் தமிழ் சினிமா கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளருமான (வைதேகி காத்திருந்தாள்) தூயவன் என்ற அக்பரின் உறவினர். சில்லடியில் ரஃபி சாஹேபுடன் சந்தித்த அனுபவங்களை பலரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் கடைசியாக லக்ஸிமிகாந்த் பியாரிலால் இசையில் “ஆஸ் பாஸ்” என்ற படத்துக்காக பாடியது தான். அவர் கடைசியாக பாடி கொடுத்து விட்டு எப்போதும் போல் அல்லாமல் “நான் போவா..?” என்று இரண்டு முறை கேட்டிருக்கிறார். அதே நாளில் தான் இறந்தும் போனார்.


இவரின் மறைவிற்கு பிறகும் கூட அன்வர், முஹம்மது அஜிஜ், சுரேஷ் வாட்கர், சோனு நிகம் யாவரும் இவருடைய ஸ்டைலையே பின்பற்றுகிறார்கள்.

2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டாவும் ஸ்டார் பத்திரிக்கையும் ரஃபி சாஹேப் அவர்களை “இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

1948 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பரிசை வழங்கி கௌரவித்தார்

1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பத்மசிரி விருது வழங்கப்பட்டது


இரண்டு முறை தேசிய விருதும் (நீல் கமல் படத்திற்காகவும் ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம் பெற்ற கியா ஹுவா பாடலுக்காகவும்) ஆறு முறை பிலிம் பேர் விருதும் பெற்றிருக்கிறார்.

5000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவரின் பெயரை தான் மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு சாலைக்கு  “பத்மசிரி முஹம்மது ரஃபி சௌக்” என்று இவரின் நினைவாக பெயரிடப்பட்டது.

என் காதுகளிலும் நாவுகளிலும் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் “எஹே சான் தெரா..” என்ற பாடல் தான்.

அதில் வரும் வரிகள்..

எனக்கு சிரிக்க கத்துக் கொடுத்தாய்

இப்போது அழ கத்துக் கொடுக்கிறாய்

அழுது விடுவேன்

அது உன்னை பாதிக்கும் என்ற போது தான்
அழ மறுக்கிறேன்

- என்பது போல் வரும்

கீழே வரும் இந்த பாடலை கேட்டீர்கள் என்றால் எவ்வளவு கஷ்டமான பாடலை எவ்வளவு ஸ்டைலாக பாடியிருப்பார் என்று தெரியும்

அந்த பாடல்..

Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin


Abhi abhi to aayi ho

Bahaar ban ke chhayi ho

Hawa zara mehak to le

Nazar zara behak to le



Ye shaam dhal to le zara

Ye dil sambhal to le zara

Main thodi der ji to loon, nashe ke ghoont pi to loon

Abhi to kuch kaha nahi, Abhi to kuch suna nahi

Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin


-
உங்கள் இசையோடு வாழ்கிறேன்

Thursday, July 16, 2009

அடையாளம்


நான் என்னுடைய வகுப்பில் காலையில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, ஒரு தமிழர் என்னிடம் வந்து “சார், சி.எஸ்.ஓ.சி, (பாடத்தின் பெயர்), கம்மிங், சாரி, லேட்..” இப்படியாக ஆங்கிலத்தை உ டை த் து பேசினார்.

நான் கேட்டேன், “இது தமிழ் வகுப்பு, நீங்க தமிழ்லேயே பேசலாமே..” என்றேன்.

கொஞ்சம் யோசித்து விட்டு,  ”சாரி சார்” என்றார்.

சிங்கப்பூருக்கு வந்து எத்தனை நாளாச்சு என்றேன், “6 வருஷமாச்சு” என்றார்

“அதனால தான் இப்படி..” என்று கூறி விட்டு அவரை கவனித்தேன். தலை முடியில் சிங்கப்பூர் ஸ்டைல் தெரிந்தது. 

”பாஸ்போர் இருக்கிறதா” என்று கேட்டேன்

எடுத்து காட்டினார்

அதில் இருந்த அவரது போட்டோவை காட்டி “இவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்

சிரித்து விட்டார்

---------------------

நாகூர் கவிஞர் சலீம் நானா நல்ல பாடல்கள் எல்லாம் எழுதுவார்கள், அந்த காலத்தில் அவர்கள் எழுதிய ஒரு பாடல் இப்படி ஆரம்பிக்கும், “ஆளே மாறிட்டியே! ஆளே மாறிட்டியே!!...” என்று -

அதாவது லாட்டரில பரிசு விழுந்த ஒருவர் உடை நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி விட அவரின் பழைய கூட்டாளி ஒருவர் பாடுவது போல் அந்த பாடல் அமைந்திருக்கும்.

இந்த பாடல் கவிஞர் சலீம் நானாவிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆபிதீன் நானா அவர்கள் தான் சொல்லணும்.

-----------------------

எங்கள் ஊரில் ஹஜ்ஜுக்கு போய் விட்டு திரும்புபவர்கள் ஹொத்துவாக்கு (வெள்ளி கிழமை தொழுகை) பள்ளிவாசலுக்கு வரும் போது அரபி உடுப்பை போட்டு கொண்டு தான் வருவார்கள்.

ஹஜ்ரத் வஹ்ஹாப் சாபு அவர்கள் இப்படி என்னிடம் சொன்னார்கள், “நீ சைனாக்கு போனா பாம்ப தின்னுட்டு வர கூடாது..” என்று

இன்னொரு தருணத்தில் ஹஜ்ரத் அவர்கள் இப்படியும் சொன்னார்கள், “பேசும் போது வழக்கத்தில் இல்லாத இங்கிலீஷ் வார்த்தைல பேசினீனா ஒனக்கு சரியா பேச தெரியலைன்னு அர்த்தம்..” என்று

---------------

நான் சொல்ல வருவது இதை தான், சிங்கப்பூருக்கு வந்துட்டோங்கறதுக்காக கழிவறைக்கு போய் தாளில் துடைத்து விட்டு வர முடியாது, எப்போதும் போல கழுவிட்டு தான் வரணும்.

சில நடைமுறைகளை நாம மாத்திக்க கூடாது, அது நம்முடைய அடையாளம்.

-----------------------

அப்துல்லாஹ் என்று ஒருவர் சிங்கப்பூருக்கு வந்து வேலைக்கு சேர்ந்தார். எல்லோரும் உடற்பயிற்சி செய்வதை பார்த்து விட்டு அவரும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை 6 பேக் 7 பேக் என்பார்களே அந்த அளவிற்கு உடலை கட்டுகோப்பாக ஆக்கி விட்டாராம்.

வந்து கண்ணாடியை பார்த்திருக்கிறார். உடல் இவ்வளவு அழகாக இருந்தும் தலை முடி ஸ்டைலாக இல்லையே என்று முடி திருத்தகம் சென்று தன்னுடைய முடியை “ஸ்போர்ட்டி லுக்” என்று சொல்லுவார்களே அந்த ஸ்டைலில் தனக்கு முடி வெட்டி விடும் படி கேட்டுக் கொண்டாராம்.

அவ்வாறே வெட்டப்பட்டதும், கண்ணாடியை பார்த்திருக்கிறார், அடுத்த நூற்றாண்டின் இளைஞன் போல் தான் இருப்பதாக உணர்ந்த அவர் வெளியே வந்தாராம், அந்த வழியாக வேகமாக போன கார் ஒன்று அவரை மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.

குத்துயிரும் கொலையிருமான அந்த நிலையில “கடவுளே! என்னய ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினாய்?,பல காலம் நான் கஷ்டப்பட்டு உடலை வளர்த்து இவ்வளவு அழகா முடி வெட்டி நல்லா இருக்கும் போது இப்படி ஒரு துயரத்தை விதிச்சிட்டாயே   ” என்று கதறினாராம்

அந்த நேரத்தில் ஒரு தெய்வீக குரல் அப்துல்லாஹ்விடம் இப்படி பேசியதாம், “அப்துல்லாஹ்! இது நீயாப்பா!! எனக்கு அடையாளமே தெரியலையே!!!” என்று

எந்த அடையாளத்தை நாம் தொலைத்தாலும்
இந்த அடையாளத்தை மட்டுமாவது
தொலைக்காமல் இருக்க வேண்டும்
அது நாம் மனிதர்கள்
என்ற அடையாளத்தை தான்..

Thursday, July 09, 2009

சிங்கை - ஜூரோங் ஈஸ்ட் பஸ் இண்டர்சேஞ்சில் என்னை சந்திக்கவும்


இடமிருந்து:
திரு ஹசிபுர் ரஹ்மான்
திரு கய் ஹோங் வெய்
இஸ்மாயில் (நான் தாங்க)
செல்வி ஜேன் ஹா சூ ஹய்

இந்தி நடிகர் சஞ்சீவ் குமார்


இந்தி திரையுலகின் மிக நேர்த்தியான நடிகர்களின் வரிசையில் திலீப் குமாருக்கு பிறகு சஞ்சீவ் குமாருக்கும் ஒரு இடம் உண்டு. திலீப் குமாருடன் இவர் சேர்ந்து படமும் நடித்துள்ளார் (சங்கர்ஷ், விதாதா போன்ற படங்கள்)

சோலே (தீச்சுடர் அல்லது தீசுவாலை) எனும் படத்தில் வில்லன் கப்பர் சிங்கிடம் (அம்ஜத் கான்) அமிதாப் மாட்டிக் கொள்ள ஒலிந்து கொண்டிருக்கும் தர்மேந்திரா சஞ்சீவ் குமாரின் காலடியில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து தூக்கி போடும் படி கண்களால் சொல்லுவார். சஞ்சீவ் குமார் துப்பாக்கியையும் தர்மேந்திராவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கப்பார் பக்கம் திரும்பி விடுவார். அவர் துப்பாக்கியை எடுத்து கொடுக்காததன் காரணம் ஒரு பிளாஷ் பேக்குக்கு பிறகு கதைப்படி தெரிய வரும்.

சொல்ல வந்த செய்தி இது தான், வசனங்கள் பேசி நடிப்பை காட்ட முடியும், பார்வையில் நடிப்பு திறனை வெளிப்படுத்த முடியுமா? மனுசன், வசனம் பேசும் போதை விட மௌனமாக இருக்கும் போது தான் அருமையாக நடிப்பார்.

1960ல் ஹம் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகம் கண்ட இவர் நடிகராக அடையாளம் காணப்பட்டது கிலோனா (பொம்மை) என்ற படத்தில் தான். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு பிலிம் பேர் அவார்டுக்கு சஞ்சீவ் குமாரின் பெயரும் களத்தில் இருந்தது.

இதன் பிறகு இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அனைத்துமே மிகவும் சவால் மிக்கது தான். அதிலும் முக்கியமாக குல்ஜார் சாப் (ஜெய் ஹோ புகழ்) இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும்.

இவர்களின் கூட்டணியில் நம்கீன், ஆன்ந்தி, பரிச்சே, அங்கூர், கோஷிஷ், மாசும் போன்ற படங்கள் குறிப்பிடதக்கவை. மிஸ்டர் பாரத் எனும் படம் இந்தி படமான திரிசுல் என்ற படத்தின் தழுவல், இந்த இந்தி படத்தில் சத்தியராஜ் வேடத்தில் சஞ்சீவ் குமார் அசத்தியிருப்பார். மாசும் (சீசன் - காலங்கள்) எனும் படம் சிவாஜி நடிக்க வசந்தத்தில் ஒரு நாள் என்று வெளிவந்தது என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

பரிச்சே எனும் படத்தில் அமிதாப்பின் மனைவி ஜெயபாதுரியின் தந்தையாக நடித்திருப்பார், சோலே படத்தில் அதே ஜெயபாதுரியின் மாமனாராக நடித்திருப்பார், அனாமிகா படத்தில் ஜெயபாதுரியின் காதலராகவும் நடித்திருப்பார். கோஷிஷ் படத்தில் ஜெயபாதுரியின் கணவராகவே நடித்துமிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயபாதுரியை தங்கையாக பாவிப்பதாக அறிவித்து அதிலிருந்து ஜெயபாதுரியுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் ஹேமா மாலினியிடம் காதல் வசப்பட்டு ஒரு முறை வெளிப்படுத்தவும் செய்தார். இருவரும் சேர்ந்து சீதா அவுர் கீதா எனும் படத்தில் நடித்திருப்பார்கள் (தமிழில் வாணிராணி - ஏர்ஹோஸ்டஸ் வானிசிரி நடித்தது)  ஆனால் ஏற்கனவே திருமணமான தர்மேந்திராவை திருமணம் செய்ய வேண்டி சஞ்சீவ் குமாரின் காதலை ஹேமாமாலினி ஏற்க மறுத்து விட்டார்.

47வது வயதிலேயே இதய நோயால் இறந்து விட்ட இவர், பெரும்பாலும் ஏற்று நடித்தது 50 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை. அதாவது 50 வயது வரை வாழ்ந்த அவர் 50 வயதுக்கு மேல் திரையில் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.

மிகவும் சிம்பிளான மனிதர், ஒட்டு போட்ட துணியை எல்லாம் உடுத்தியிருக்கிறார்.

பரிச்சேயில் இவர் நடிப்பை பார்த்து கண்கலங்கியதுண்டு. கோஷிஷ் படத்தில் காது கேளாத வாய் பேச முடியாதவராகவும் நடித்திருப்பார்.இந்த படத்திற்காக 1973 ம் ஆண்டு தேசிய விருதை தட்டி சென்றார். இது இவருக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது. முதலாவதாக 1971ல் தஸ்தக் படத்திற்காக கிடைத்தது. சிவாஜி 9 வேடங்கள் ஏற்று நடித்த நவராத்திரி இந்தி பதிப்பில் நடித்தவரும் இவர் தான். மேலும் 14 முறை பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இவர் பிறந்த வருடம் ஜூலை 9 - 1938
இவர் இறந்த வருடம் நவம்பர் 6 - 1985

இன்று ஜூலை 9 -
பிறந்த நாள் வாழ்த்துகள் சஞ்சீவ் குமார்

உங்களின் தீவிர விசிறி
நாகூர் இஸ்மாயில்