அரசியலுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. இது மத்த எல்லா மாநிலத்தை விட தமிழ்நாட்டிற்கு ரொம்பவே பொருந்தும். பாபா என்ற சுமாராக கூட இல்லாத படத்தை திரையிட விடாது பொட்டியுடன் பொட்டியை கட்டியது தமிழக அரசியலின் அல்லது சினிமாவின் வரலாற்று சிறப்புகளில் ஒன்று.
இதே போல் குல்சார் சாப் அவர்கள் இயக்கிய ஆன்ந்தி என்ற படத்தை அன்றைக்கு (1975 வாக்கில்) வெளியிட விடாமல் தடுத்து நிறுத்தியதும் அரசியல் செல்வாக்கு தான், அது மட்டுமல்ல அந்த படத்தில் பாடிய கிஷோர் குமாரின் பாடல்களை இரண்டு வாரத்துக்கு ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாது தடை செய்திருந்தார்கள் என்றும் படித்ததுண்டு.
அவ்வாறு ஆன்ந்தி - புயல் என்று தமிழில் அர்த்தம் - படத்தை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்ததற்கு காரணம் என்ன என்றால், படத்தின் கதை இந்திரா காந்தி அவர்களின் கதையை ஒத்து இருந்தது தான். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு படம் வெளியாக முடிந்தது.
குல்சார் சாப் கதை சொல்லும் அழகே தனி. பிளேஷ் பேக் காட்சிகள் இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் படங்களில் பிளேஷ் பேக் காட்சிகள் நிறைந்து இருக்கும். ஒரே தடவையில் பிளேஷ் பேக் காட்சிகள் வந்து முடிந்து விடாது, இடையிடையே பிளேஷ் பேக் காட்சிகள் வந்தவண்ணம் இருக்கும். குல்சார் சாபின் படங்களான பரீச்சே, கோஷிஷ், இஜாஜத், அங்கூர், நம்கீன் இன்னும் அத்தனை கவிதை(யான படங்க)ளும் இதற்கு சாட்சி, அதற்கு, இந்த ஆன்ந்தியும் விதிவிலக்கல்ல..
ஆர்த்தி தேவி (சுசித்ரா சென் - இவர் 12B படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன் சென் என்ற நடிகையின் தாயார் மற்றும் தாஜ்மஹால் படநாயகி ரியா சென், ரய்மா சென்ஆகிய நடிகைகளின் பாட்டி)என்ற சக்தி வாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் சந்திரசேன் (ஓம்சிவ்பூரி) மேடையில் காட்டமாக கேள்விகள் கேட்டு இடைதேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் நாடகம் நடத்துவதில் இருந்து படம் தொடங்குகிறது.
ஆர்த்தி தேவியை இடை தேர்தல் நடக்கும் ஊருக்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர் வந்தால் தங்குவதற்கு இருக்கும் கட்சிக்கு சொந்தமான அலுவலகம் எரிந்து சாம்பலாகிய நிலையில் அவர் தங்குவதற்கு ஹோட்டலில் வசதி செய்ய திட்டமிடுகிறார் அவரின் பிரச்சார குழு தலைவர் (ஓம்பிரகாஷ்).
ஒம்பிரகாஷ் ஹோட்டல் மேனேஜர் ஜே.கே.யை (சஞ்சீவ் குமார்) சந்தித்து தங்களுக்கு தெற்கு கிளையில் உள்ள எல்லா அறைகளையும் வேண்டும் என்று புக் செய்கிறார்.
ஜே.கேவுக்கு ஆச்சரியத்துடன், "இவ்வளவு ரூம் தேவைப்படுகிறதே அப்படி யார் வருகிறார்கள்?" என்று கேட்க, "ஆர்த்தி தேவி வருகிறார்", என்றதும் சற்று தடுமாறுகிறார்.
ஆர்த்தி தேவி ஹோட்டலில் வந்து இறங்கியவுடன் அங்கு இருக்கும் ஊதுவர்த்தி, மண் பானையில் தண்ணீர் போன்று அவருக்கு பிடித்தமான அத்தனையும் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார். அவருக்கு பிடித்த பூவையும் ஹோட்டல் சார்பாக பரிசாக வழங்கப்படுகிறது. எல்லாம் ஜே.கே.யின் ஏற்பாட்டின் படி தான் நடந்திருக்கின்றது.
ஆர்த்தி தேவி மகிழ்ந்து தனக்கு பிடித்தவைகளை யாரோ தெரிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்.
ஜே.கே விடம் சமையல்காரராக இருக்கு பிந்தா காக்கா (A.K.ஹங்கல்) என்பவரிடம் "நீங்கள் (ஆர்த்தி தேவியை) பார்த்தீங்களா?" என்று ஜே.கே. கேட்கிறார்
பிந்தா காக்கா, "உங்கள்ட்ட கேக்காம எப்படி போய் பாக்குறது?" என்கிறார்
"இதுல எண்ட்ட கேக்க என்ன இருக்கு? என்னய விட அதிக உரிமை உங்களுக்கு தான் இருக்கு, நீங்க ஆர்த்திய சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்திருக்கிறீங்க.. அப்புறமா பிஸியா இல்லாத நேரமா பார்த்து போய் பாருங்க" என்கிறார்
தொடர்ந்து பிந்தா காக்கா போய் பார்க்க ஆர்த்தி தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார், "நீங்கள் எப்படி இங்க..?" என்று ஆச்சர்யம் கொள்கிறார்
"நான் சாபோடு தான் இருக்கேன்.. இப்ப சாப் இந்த ஹோட்டல்ல தான் வேல பார்க்குறாங்க.." என்கிறார்
ஊதுபத்திக்கும், மண்பானைக்கும், பூக்களுக்கும் அர்த்தம் புரிந்து விடுகிறது ஆர்த்தி தேவிக்கு, "காக்கா, நான் இங்கே கொஞ்ச நாளைக்கு இருப்பேன், நீங்க அடிக்கடி வந்து பாருங்க.." என்று விடைபெறுகிறார்.
"இஸ் மோடு (சாலையில் உள்ள வளைவுகள்) ஸே ஜாதே ஹேய்ன்" - என்ற நினைவுகள் பாடலாக பின்னோக்கி ஜே.கேயின் பார்வைகளில் நகர்கின்றது.
அதாவது குழப்பமான பல வளைவுகளை உடைய சாலையில் நின்று ஆர்த்தி தேவி ஜே.கேயை நினைத்து பாடுகிறார்,
எந்த வளைவுகள் வழியாக நான் போவது?
கற்களாளான அரண்மனை அல்லது மாளிகை(கோடீஸ்வரர்கள் வசிக்குமிடம், கண்ணாடி வீடுகள் (நடுத்தர வர்க்கம் வசிக்கும் வீடுகள் என கொள்ளலாம்), பறவையின் கூடு போன்ற சிறிய வீடு (ஏழைகள் வசிப்பது)
இப்படி பல இடங்களுக்கு வழிகள் இருக்கிறது? - எந்த வழியில் சென்றாள் தன் காதலனிடம் (காதலியிடம்) தன்னை கொண்டு போய் சேர்க்கும்? என்று -
பல பேருக்கு இந்த பாட்டு பிடிக்காது என்று தான் நான் நினைக்கிறேன் ஏன்னாக்கா இது மிகவும் அருமையான கருத்தாழமிக்க பாடல் - எங்கே இப்போ உள்ள கவிஞர்களை இதே போல் எழுத சொல்லுங்களேன் பார்ப்போம்? - அவங்க "போடா போடி" என்று எழுதுவார்கள்.
பாடல் நினைவுகள் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முடிவுறுகிறது. ஜே.கே போய் கதவை திறக்கிறார். வாசலில் ஆர்த்தி தேவி. இருவரும் ஒரு கனம் திகைத்து போய் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.
இருவரும் கணவனும் மனைவி என்றும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்றும் யூகிக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்சிகள் அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அவர்கள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கவிதைகளாகவும் பதிகின்றன.
படத்தில் ஒட்டு மொத்த கதை..
ஆர்த்தி தேவி மிகவும் பிரபலமானவர்.தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறார். ஹோட்டலில் தங்குகிறார். ஹோட்டல் மேனேஜர் தான் தனது கணவர் என்று தெரிய வருகிறது. குழந்தைக்கு பிறகு தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் ஈடுபாடுகள் இருந்ததால் குடும்பத்தையும் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது, இதன் காரணமாக கணவனுக்கு மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 9 வருடம் கழித்து மறுபடியும் இந்த ஹோட்டல்ல் சந்தித்து இருக்கிறார்கள்.
ஆர்த்தி தேவி பிரபலமாக இருப்பதால் தனது தனிப்பட்ட வாழ்க்கை அரசியலுக்கு பிரச்சினையாக வரக் கூடாது என்று கருதினாலும் தனது கணவரை அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது, வெளியே போய் வருவது என்று இருக்கிறார்.
அப்படி வெளியே முதன் முறையாக ரொம்ப நாளைக்கப்புறம் வரும் போது ஒரு பாடல் வருகிறது.
"தேரே பினா ஜிந்தகி சே கோய் சிக்வா தோ நஹி சிக்வா நஹி..
தேரே பினா ஜிந்தகி சே லேகின் ஜிந்தகி தோ நஹி ஜிந்தகி நஹி.."
- என்று வரும் அந்த பாடல்..
அந்த பாடல் காட்சியில் இருவரும் பேசிக் கொள்வது போல் வசனமும் இடம் பெறுகிறது, ஏதோ எனக்கு தெரிந்த மொழியில்.. எனக்கு தெரிந்த வரையில்..
பெண்: ரொம்ப நாளைக்கப்புறம்... வெளியே வர்ர மாதிரி ஒரு உணர்வு...
ஆண்: என்ன அது..?
பெண்: ஒரு யுகம் தாண்டி வந்த மாதிரி இருக்கு
ஆண்: ம்.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு.. (ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை காட்டி) இந்த கட்டடம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அந்த காலத்துக்கு..
பெண்: ம்.. இன்னொரு ஜென்மம் கெடைச்சு வந்த மாதிரி..இல்ல?
ஆண்: நாம் ஒண்ணு செய்வோம்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும் தெனமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரி இருக்கும்.. (ஆர்த்தி தேவி குளிரில் நடுங்குவதை பார்த்து) ஒன் ஷால் எங்கே?
பெண்: நான் மறந்துட்டேன்
ஆண்: நீ இன்னும் மாறவே இல்லை.. இத வச்சுக்க.. (மாட்டி விடுகிறார்)
பாடல் ஆரம்பமாகிறது..
பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை
சரணம் 1:
பெண்:
நான் போய் சேர வேண்டிய இடம் உன் பாதங்களை பின்பற்றியதாக இல்லாமல் வேறு எங்கேயோ தூரமாக விலகி சென்று விட்டது
நீ என்னுடன் இருந்திருந்தால் உன்னுடன் சேர்ந்து நான் போக வேண்டிய இடங்கள் குறைவில்லாமல் இருந்திருக்கும்
வசனம்:
ஆண்: ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..? அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள்.. நீ பகல்ல பார்த்தா தான் தெளிவா தெரியும்
(எதிரே கையை நீட்டி) இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..
(வேறொரு பக்கம் கையை காட்டி)பகல்ல இங்கே.. (என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)
பெண்: ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..
ஆண்: இந்த நிலவை பாரு.. இது ராத்திரியில மட்டும் தான் வரும்.. பகல்ல வெளியே வர்ரதில்ல..
பெண்: இது தான் எப்போதும் வருதே
ஆண்: ஆமா வரும்.. ஆனா எடைல.. அமாவாசை இருக்கு.. உண்மையில.. எப்போதும் அமாவாசை வர்ர நாள்லேந்து தொடர்ந்து 15 நாளைக்கு இருட்டாவே இருக்கும்.. ஆனா இந்த தடவை அமாவாசை வந்ததிலிருந்து ரொம்ப வருஷமா வரவே இல்ல..
பெண்: (தன்னை தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு) 9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..
சரணம் 2:
பெண்:
உன்னுடைய தோளில் சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கிறது..
உன்னுடைய கண்களிலும் அழுததற்கான தடங்கள் தெரிகிறது..
சரணம் 3:
ஆண்:
நீ மட்டும் ஒரு வார்த்தை சொன்னால் இந்த நிலவு மறைந்து போகாமல் தங்கி விடும், இந்த நிலவின் இரவுகள் நீடித்து இருக்கும்..
ஆனால் அப்படி நீ சொன்னால் கூட அது இந்த ஒரு இரவுக்கு மட்டும் தான்.. தொடர்ந்து வாழ்க்கை பூராவும் இருக்குமா என்று தெரியவில்லை
பல்லவி:
நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு அப்படி ஒன்றும் குற்றம் குறை இல்லை
ஆனால் நீ இல்லாமல் நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையே இல்லை அதில் அர்த்தமே இல்லை
- இப்படியாக முடிகிறது அந்த பாடல்
கணவன் மனைவியின் பிரிவுகளின் வலியை இவ்வளவு உணர்வு பூர்வமாக எந்த வசனங்களும் பாடல்களும் சொன்னதில்லை என்பது என்னுடைய கருத்து.
படத்தில் ஆர்த்தி தேவியின் அரசியல் எதிரிகள் ஹோட்டல் மேனேஜருடன் ஆர்த்தி தேவிக்கு உறவு என்ற ரீதியில் குழப்பம் ஏற்படுத்த பல பிரச்சினைகள் புயலாக (ஆன்ந்தி) புறப்பட்டு வருகிறது.
ஆர்த்தி தேவியின் அரசியல் வாழ்க்கை, தேர்தல் முடிவு என்னாயிற்று? கணவருடன் வாழ்க்கையை தொடர்ந்தாரா? சிம்லாவில் படித்து கொண்டிருக்கும் தனது குழந்தையை கண்டாரா? என்பதை எல்லாம் உணர்வு பூர்வமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
பெர்ஃபார்மென்ஸை பொறுத்த மட்டில் இந்த படத்தில் சஞ்சீவ் குமாரும், சுசித்ரா சென்னும் நடிப்பு பாடம் நடத்துகிறார்கள் என்று தான் சொல்வேன். எக்ஸலண்ட்.
அவுட் ஸ்டேண்டிங்.. மாஸ்டர் பீஸ்..
இந்த படத்தில் வேறு ஏதேனும் நுண்ணரசியல்கள் இருக்கலாம், எனக்கு தெரியவில்லை, ஏனெனில் அந்த பாடத்தில் நான் நர்ஸரி தான் படித்து வருகிறேன்.
பாடல்களை பொறுத்த வரை,
1.
சலாம் கீஜியே என்ற அரசியல் கிண்டல் பாடலும் முஹம்மது ரஃபி வாய்ஸில் கேட்டு மகிழலாம்.
2.
இஸ் மோடு ஸே ஜாதே ஹேய்ன் என்ற அர்த்தமுள்ள கணவன் மனைவிக்கான பாடலும் உள்ளது
3.
தும் ஆகயிஹே நூர் ஆகயா ஹே (நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது) என்ற காதல் பாடலும் உள்ளது
4.
தேரே பினா ஜிந்தகி சே கோயி என்ற பிரிவின் வலியும் உள்ளது
கிஷோர் - லதா - ஆர்.டி.பர்மன் - குல்ஜார் சாப் சேர்ந்தால் பாடல் ஹிட் தானே
சாப்பாட்டிலிருந்து கக்கூஸ் போறது வரை புயல் வேகத்தில் அவசரமாக போய் விட்ட இந்த உலகத்திலிருந்து என்னை அமைதியான மென்மையான் உலகத்துக்கு சில நேரங்களுக்காவது அவ்வப்போது அழைத்து செல்லும் படங்களில் இந்த புயலும் - ஆன்ந்தியும் - ஒன்று என்று தான் நான் சொல்வேன்
No comments:
Post a Comment