நாகூர் ரூமி அவர்களை பற்றி தமிழ் எழுத்துலகம் அறியாததல்ல. இந்த விநாடியிலேயே அடுத்த விநாடியை நம் கையில் தந்தவர்கள் இவர்கள். 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' என்று இவர்கள் எழுதிய புத்தகத்தை தொடர்ந்து இவர்களுக்கு கிடைத்த நேசங்கள் நிறையவே உண்டு.
'சொற்களின் சீனப்பெருஞ்சுவர்களை' எல்லாம் இடித்த இவர்கள் 'சொல்லாத சொல்'லே இல்லை என்று 'குட்டியப்பா' மீது ஆணையிட்டு கூறிவிடலாம்.
அனைத்து களத்திலும் எழுத்தின் ஆளுமையை நிரூபித்த இவர் 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்' வாசி.
இத்தகைய ஆற்றல் மிக்க நாகூர் ரூமி அவர்களின் 'கற்காலம்' என் காலத்தில் நான் படிக்க கிடைத்ததற்கும் என் column(தள)த்தில் வெளியிடுவதற்கும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
****************************************************************
இஸ்லாத்திற்கு எந்த காலத்திலும் உள்ளிருந்தும் சரி, வெளியிலிருந்து சரி, எதிரிகள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். உள்ளிருந்தா என்று ஆச்சர்யப்பட வேண்டிய அவசியமில்லை.. அது சில ஆலிம்களையே கூட குறிக்கலாம்.
இன்றைக்கு இஸ்லாத்தில் பல பிரிவுகள் தோன்றியதற்கும் பல பிளவுகள் வேரூன்றியதற்கும் இத்தகைய ஆலிம்களின் சிந்தனையும் ஆய்வுகளுமே பெரும் காரணம்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து ஒரு விளக்கம் தோன்றுவதில் கூட என்னை பொறுத்த வரை தவறு கிடையாது. அதை பொதுமக்களிடத்தில் வைக்கும் போது பிளவுகள் ஏற்படும் என்ற பட்சத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றிய அறிஞர்களுக்குள்ளாகவே தனிமையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து அதை மக்களிடத்தில் வைத்தால் என்ன..?
எல்லாத்துக்கும் மேல ஒற்றுமை தான் முக்கியம் என்பதால் தான் இந்த கருத்தை வைக்கிறேன். சரி ஹைர்..
இங்கே விவாதத்திற்குறிய ஒரு நடைமுறையை, அதாவது இஸ்லாமிய ஆலிம்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய நாடுகளில் சில அல்லது பல தண்டனை என்ற பெயரில் செய்ய துணிந்த ஒரு கொடூரத்தை பற்றிய தன் கருத்தை தனது ஆய்வின் முடிவை நாகூர் ரூமி அவர்கள் முன்வைத்தார்கள்.
இதை அப்படியே கையெழுத்து போட்டு ஏற்று கொள்கிறேன் என்று சொன்னவர்களும் உண்டு. இதை ஏற்க முடியாது என்று வீண் வாதம் புரிபவர்களும் உண்டு.
நாகூர் ரூமி அவர்களின் அனுமதியுடன் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன். இதை அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.
உண்மையின் உண்மையான அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
*******************************************************************
இனி, உங்களோடு நாகூர் ரூமி பேசுகிறார்கள்..
****************************************************************
கற்காலம்
நாகூர் ரூமி
முன்னுரை
தலைவர்கள் கொல்லப்பட்ட நாட்கள், மதக்கலவரம் வெடித்த நாட்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாட்கள், நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்பட்ட நாட்கள் என கறுப்பு நாட்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்ற காலமாகிவிட்டது நமது தற்காலம். இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக இடம் பிடித்திருப்பது ஒரு கொடூரமான செயல். கல்லால் அடித்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை வாங்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அதைச் செய்வது தனி மனிதர்களோ, தீவிரவாதிகளோ, சமூக விரோத சக்திகளோ அல்ல. அரசாங்கங்கள்! ஆம், அதுவும் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தின் பெயரால்!
கறுப்பு நாட்களின் வரிசையில் ஜூலை 11ம் இப்போது சேர்ந்து விட்டது. காரணம், கடந்த 2001ம் ஆண்டு, இதே தேதியில்தான் மர்யம் அய்யூபி என்ற ஈரானியப் பெண், கூடா உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக இஸ்லாமிய ஷரியத் சட்ட தண்டனை என்ற பெயரில் கற்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்த நாளைத்தான், கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு நாளாக (International Day Against Stoning to Death) மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்று அனுஷ்டிக்கிறார்கள்.
ஒரு மனிதன் என்ற முறையிலும், ஒரு முஸ்லிம் என்ற முறையிலும், இந்த விஷயம் பற்றி என் கருத்த வெளிப்படையாக முன் வைப்பது எனது கடமை. அதற்கு முன் கல்லால் அடித்துக் கொல்வது என்றால் என்ன என்று கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது.
நீ போய் நேரில் பார்த்திருக்கிறாயா என்று கேட்டால், இல்லை என்பது மட்டுமல்ல, அந்த மாபாதகச் செயலைப் பார்க்கின்ற தைரியம் எனக்கில்லை என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டதை நாம் அறிவோம். இணையத்தளங்கள் மூலமாக எல்லா விஷயங்களைப் பற்றிய உண்மைகளும் அவற்றுக்கே உரிய காட்சிகள், ஒலிகள், வண்ணங்களுடன் நமது வீட்டுக்குள் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படித் தெரிந்துகொண்டதுதான்.
சில நாட்களுக்கு முன் திண்ணையில் நண்பர் ஆசாரகீனன் இந்த விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதி, கல்லால் அடித்துக் கொல்வதற்கான கண்டனத்தை நைஜீரிய ஈரான் அரசுகளின் அதிபர்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு வேண்டுகோள் வைத்து, அதற்கான ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்திருந்தார். அதோடு, ஈரானில் நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனையின் வீடியோப் பதிவு கிடைக்கும் சுட்டியையும் கொடுத்திருந்தார். அது இதுதான் : www.iran-e-azad.org/stoning/video.html
நான் கடின மனம் கொண்டவன் இல்லையென்றாலும் வேண்டுமென்றே பார்த்தேன். நல்லவேளையாக வீடியோ தெளிவாக இல்லை. ஒரு அனுமானத்தின் பேரிலேயே நடந்தது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் என் இதயம் வேகமாகத் துடிப்பதிலிருந்தும் என் உடல் ஜில்லிடுவதிலிருந்தும் ரொம்ப நேரம் விடுபட முடியவில்லை.
அதை நான் பார்த்ததிலிருந்தும், அதைப்பற்றி படித்ததிலிருந்தும் புரிந்துகொண்டதை உங்கள் முன் வைக்கிறேன். இது ரொம்ப அவசியம் என்றும் நான் கருதுகிறேன்.
கல்லால் அடித்துக் கொல்லுதல் எப்படி நடக்கிறது?
தரையில் ஒரு ஆழமான குழி வெட்டப்படுகிறது. ஒரு 30 வயதுப் பெண் காலிலிருந்து தோள்வரை கட்டப்பட்டவளாக, இறந்தபின் உடலில் போர்த்தப்படும் தையலில்லாத வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு அந்த குழிக்குள் உயிருடன் இறக்கப்படுகிறாள். அவளுடைய கழுத்தும் தலையும் மட்டும்தான் வெளியில் தெரிகின்றன.
குற்றப்பத்திரிக்கை நீதிபதி(!)யால் வாசிக்கப்படுகிறது. அரபி மொழியில். உத்தரவு கொடுக்கப்பட்டவுடன், அல்லாஹ¤ அக்பர் என்ற கோஷம் கூடி நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து கிளம்புகிறது. கை முஷ்டி அளவுள்ள கல்லை நீட்டிக்கொண்டிருக்கும் அப்பெண்ணின் தலையை நோக்கி ஒருவன் வீசுகிறான். டக்கென அந்தக் கல் அவள் தலையில் அடிக்கிறது. வலி பொறுக்க முடியாமல் அவள் அலறுகிறாள். (ஈரானிய கல்லடித்துக் கொல்லும் சட்டத்தின் பிரிவு 104ன் படி, அடிக்கப் பயன்படுத்தப்படும் கற்கள் ரொம்ப பெரிதாக இருக்கக் கூடாது. ஓரிரு அடிகளில் மரணத்தை வரவழைத்துவிடக் கூடாது. ரொம்ப சின்னதாக கூழாங்கற்களைப் போலவும் இருக்கக் கூடாது! அதாவது, உயிர் போவது மட்டும் முக்கியமல்ல, வலியும் வேதனையும் சித்ரவதையும் முழுமையாக உணரப்பட வேண்டும், மெல்லச் சாகவேண்டும்!)
முகத்தின் கீழ்ப்பகுதிவரை ரத்தம் வழிந்தோடி வருகிறது. இன்னொருவன் ஒரு கல்லால் அவள் பொட்டைப் பதம் பார்க்கிறான். அங்கும் ரத்தம். மறுபடியும் அவளின் அலறல். எல்லாருக்கும் அது இலவச வாய்ப்பாகையால், ஒரு இளைஞன் ஒரு கல்லை எடுத்து அடிக்கிறான். ஆனால் அவன் குறி தப்பிவிடுகிறது. ஆனால் இன்னொருவனின் கல் தன் இலக்கை சரியாக அடைந்துவிடுகிறது. அவள் நெற்றி! கருணைக்காக அவள் கதறுகிறாள். இப்போது ரத்தம் நெற்றியிலிருந்து பொங்கி வருகின்றது. கண்கள், மூக்கு, கன்னம், வாய், தரை என.
நிமிஷங்கள் ஊர்ந்து ஒரு மணி நேரமாகிறது. இதற்கிடையில், குறி தவறுதல்கள், இலக்கை கற்கள் அடைவது, அலறல், ரத்தம் -- இந்த வரிசையில் தொடர்ந்து நடக்கிறது.
அவள் மூக்கை ஒரு கல் உடைக்கிறது. இப்போது மூக்கின் உள்ளிருந்தும் ரத்தம் ஓடிவருகிறது. ஆனால் இப்போது அவளுடைய அலறல்கள் முன்னைப்போல பெருங்குரல் கொண்டதாக இல்லை. கொஞ்சம் அடங்கிப் போயிருக்கிறது. அவளுடைய கண்ணீர் கொஞ்சம் ரத்தத்தை அவளுடைய முகத்திலிருந்து கழுவ உதவுகிறது. ரத்தம் ஆங்காங்கே கட்டிக் கட்டி, அவளுடைய பார்வை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அடுத்த கல்லின் அடியில் கொஞ்சம் முகச்சதை பெயர்ந்து விழுகிறது. அது அவள் விழிக்கோளங்களா?! சரியாகத் தெரியவில்லை.
அவளுடைய முகம் முழுவதையும் ரத்தம் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இன்னும் அவளிடமிருந்து முனகல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. கல்லால் அடித்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அவள் முகமற்றவளாகிவிடுகிறாள். ஒரு மனித முகம் இருந்த இடத்தில் பார்க்கச் சகியாத ஒரு சதைக் கொத்து இருக்கிறது. தலைமுடியைப் போல ஆங்காங்கு முகச் சதைகளும் தலைச்சதையும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. கல்லடிப்பு தொடர்கிறது.
கடைசியில் மரணம் அவளை வந்தடைகிறது. ஆனால் அதன் பிறகும் ஒரு சில மணி நேரங்கள் அவள் அங்கேயே விடப்படுகிறாள். கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டால் என்னாகும் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்காக!
கடைசியில் அவளுடைய தந்தையோ, உறவினர்களோ அவளை குழியிலிருந்து விடுவித்து, உடம்பை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். (அவள் அடிபட்டுச் சாவதைப் பார்ப்பதற்காக அவர்கள் வற்புறுத்தி அழைத்துவரப்படுகின்றனர்)! தரையில் சிதறிக் கிடக்கும் அந்த மகளின் முகத்துண்டுகளை பொறுக்கிக் கொண்டு, அந்த உடம்பை எடுத்துக்கொண்டு அவர்கள் செல்கின்றனர்.
இந்தப் பெண் உங்களுடைய தாயாக, சகோதரியாக, தோழியாக இருக்கும் பட்சம் உங்களுக்கு எப்படியிருக்கும்?
ஏன் இந்த தண்டனை?
ஈரான், நைஜீரியா, ஆ·ப்கனிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான் போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக, இஸ்லாமிய சட்டம் என்று சொல்லி கல்லால் அடித்துக் கொல்லும் இந்தக் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது.
என்ன குற்றம்?
- தொடரும்
0 comments:
Post a Comment