ஒரு முறை எனது வகுப்பில் என்னை பற்றி நான் இப்படி அறிமுகப் படுத்தி கொண்டேன், “என் பேரு கூகுள் கிடையாது... அதனால.. எல்லாமே எனக்கு தெரியும்னு என்னால கிளெய்ம் பண்ண முடியாது..” என்று
நான் ஸ்பெஷலிஸ்ட்ன்னு நினைச்சுகிட்டு இருக்கிற சப்ஜெக்ட்லேயே கூட நான் எக்ஸ்பெர்ட் கிடையாது. இதுவே எனக்கு தோல்வி தானே.
எனக்கு நான் ‘பெரிய பருப்பு’ என்ற நினைப்பு வரும் போதெல்லாம் என் தோல்விகளை அழைத்து என் கூட சப்போர்ட்டாக சேர்த்துக் கொள்வேன். எனது ‘பெரிய பருப்பு’ எனும் நினைப்பு ‘எனது தோல்விகளிடம்” வெந்து போய் விடும்.
தோல்வியை தோல்வியடைய வைக்கிறது தான் உண்மையான வெற்றி.
தோல்வியை விட மோசமானது தோல்வியிடமிருந்து கற்றுக் கொள்ளாத பாடம்.
வெற்றியை விட ஆபத்தானது வெற்றியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தலைக்கனம்.
தோல்வி இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது.
என்னுடைய முதல் தோல்வி வந்து, நான் நடை கற்றுக் கொள்ளும் போது ஆரம்பித்தது. நடை பழகும் போது விழுந்தேன் பாருங்க... அது தான் எனது முதல் தோல்வி.
என்னைய கேட்டா எல்லோருமே இந்த தோல்வியை அடைந்து தான் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் முயற்சியே தோல்வி தான். விழுந்து விழுந்து தான் நடை கற்றுக் கொள்ளவே முடியும். அப்போ நாம வாழ்க்கையில கற்றுக் கொண்ட முதல் பாடமே தோல்வி பாடம் தான் அல்லது தோல்வியிலிருந்து ஆரம்பித்தவை தான்.
நான் பேச ஆரம்பித்த போது உளறினேன், வார்த்தைகள் சரியாக உச்சரிக்க வராது. இதுவும் தொல்வி தான்.
நான் எழுத ஆரம்பித்த போது கிறுக்கினேன், ‘அ’னா எழுத சொன்னா உலகத்துலே எந்த மொழியிலேயும் நான் எழுதுனத சேர்த்துக்க முடியாது, அப்படி எழுதினேன் நான் ‘அ’னா வை, ‘அ’னாக்கு மட்டும் ‘வாய்’ இருந்திருந்திருந்திச்சுன்னா ‘ஓ’ன்னு அழுது இருக்கும்.அவ்வளவு பெரிய தோல்வி.
சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது கீரை கார அம்மா மேல போய் மோதினேன். இது தான் தோல்வி மேல் தோல்வி என்பது.
சமீபத்துல ஒருத்தர் கேட்டார், நல்லா தமிழ் எழுதுறீங்களே.. என்று, நான் சொன்னேன், ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, பிளஸ் டூல நான் தமிழ்ல மட்டும் தான் ஃபெயில்’ன்னு
நீங்களே சொல்லுங்க, இலக்கணத்தில் ‘அதிசய அணி’ என்றால் என்ன என்று எழுத சொன்னதற்கு அதிசய அணி என்றால் ‘எப்போதாவது அதிசயமா அணிவது, உதாரணமா நகைகள் அணிவது, சாதாரணமா யாரும் அணிய மாட்டார்கள், ஏதேனும் கல்யாணம் காட்சிக்கு மட்டுமே அணிவார்கள்’ என்றெல்லாம் ஆசிரியரே/ ஆசிரியையே வியக்கும் படி எழுதினால் யாரு தான் மார்க் கொடுப்பார்கள், அப்படி மீறி கொடுத்தால் நான் எழுதியதோ அல்லது மதிப்பெண் வழங்கியதோ அதிசய அணியாக தான் இருக்கும்.
இன்னும் கேளுங்க எனது தோல்விகளை, நான் ஸ்கூட்டர் ஓட்டும் போது, பைக் ஓட்டும் போது எல்லாம் கீழே விழுந்து இருக்கிறேன். ஒரு தடவை அண்ணா நகர் ரவுண்டானால வேகமா போய் விழுந்தேன் பாருங்க...
வேலை கேட்டு பல இடங்களுக்கு விண்ணபித்தேன், வெளிநாட்டிற்கும் சென்றேன், வேலை தேடலில் தோல்வி,
நண்பர்களை தேர்ந்தெடுப்பதிலும் எனக்கு பெரிய தோல்வி கிடைத்துள்ளது, சில நண்பர்கள்/ நண்பிகள் என் சேமிப்புகளை ஹராமான வட்டிக் கடன்களாக மாற்றியிருக்கிறார்கள்.
(வட்டி என்றதும் என் குழந்தை ஃபஹ்மிதா அஃப்ஷீன் சொன்னது நினைவிற்கு வருகிறது: என் மனைவி கடையில் போய், ‘இந்த வட்டி எவ்வளவு? என்று கேட்டிருக்கிறார், அதற்கு என் குழந்தை, “ம்மா வட்டி வாங்க கூடாது ஹராம்ன்னு சொன்னீயேம்மா.. இப்ப நீயே வாங்குறீயேமான்னு கேட்டர். அவர் வாங்குவது ‘வட்டி’ ‘சட்டி’ என்று சொல்வோமே அதை, நாகூர் பேச்சு வராமல் இருக்குமா?)
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தோல்விகளை நான் எனது வாழ்வில் சந்தித்து கொண்டு தானிருக்கிறேன். எதிர்காலத்திலும் சந்திக்க நேரலாம்.
தோல்விகளில் பல வகைகள் உண்டு. ஒண்ணு நம்மளையே ஒரேயடியா அழிச்சுட்டு போற தோல்வி, இன்னொன்னு நம்மட்ட இருக்குற கெட்ட குணங்களை, ஈவில் எண்ணங்களை அழிச்சுட்டு போற தோல்வி.
இப்படியாக எனக்கு வெற்றி கிட்டும் போதெல்லாம் நான் எனது தோல்விகளை நினைத்து பார்ப்பதுண்டு. அப்படி தான் இப்போதும் நினைத்து பார்க்கிறேன்.
எங்க ஹஜ்ரத் சொன்னாங்க, ‘தோல்வி, அவமானம் இதெல்லாம் வரும் போது ஒரு எனர்ஜி வரும்.. உடம்புக்குள்ள... மனசு திரளும்... ஒரு புள்ளில குவிஞ்சு நிக்கும்... அதை சேமிச்சு வச்சுக்க தெரியணும்.. அது ரொம்ப முக்கியம்...” என்று