Sunday, November 29, 2009

தமிழன் டிவியில் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் ஹஜ் பெருநாள் சொற்பொழிவு

அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.


என்னுடைய குர்பான் பதிவின் இறுதியில் ஹமீது ஜாபர் நானா அவர்களின் பதிவில்    இஜட்.ஜபருல்லாஹ் அவர்களின் தமிழன் டிவியில் ஒளிபரப்பான பேச்சை பற்றி படிப்பதற்கு இணைப்பை கொடுத்திருந்தேன். அது எனக்கு போதவில்லை. அவர்களிடம் என் வலையில் பதிய சம்மதம் கேட்டிருந்தேன். அதே போல் ஆபிதீன் நானா அவர்களின் இந்த பதிவின் மூலமாக தான் அந்த பதிவிற்கு சென்றேன், ஆகையால் அவர்களிடமும் சம்மதம் பெற்று விட்டேன் (யாரும் தமிழன் டிவியிடமும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களிடமும் சம்மதம் வாங்கி விட்டீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்)

நன்றிகள்:


  • ஆபிதீன் நானா
  • ஹமீது ஜாபர் நானா
  • தமிழன் டிவி
  • இஜட்.ஜபருல்லாஹ் நானா


இனி அந்த கட்டுரை.. படியுங்கள்.. பயன்பெறுங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.

 ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

 ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை)

தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.

 அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும்.

அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள்.

 அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.

 பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)

 குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம்.

 தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது.

இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.

 அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.

மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று.

 குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது.

ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும்.

 ***

 நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி

 ***

 சுட்டி : ஈ.எம். ஹனிபா அவர்களின் 'ஹஜ்ஜுப் பெருநாள்' (MP3)

Thursday, November 26, 2009

குர்பான்

முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும்.




'கஅபா' என்ற இறையில்லம் அகிலத்தின் அருட்கொடை ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு மட்டும் சம்மந்தப்பட்ட இடமல்ல. நாயகம் அவர்களுக்கு முன்னால் தோன்றிய பல நபிமார்களுக்கும் அது தொடர்புடைய இடமாகும். குறிப்பாக இப்ராஹீம் நபி (ஸல்) மற்றும் இஸ்மாயில் நபி (ஸல்) அவர்களோடும் சம்மந்தப்பட்ட இடமாகும்.



இப்ராஹீம் நபியவர்கள் அவர்களுடைய எண்பத்தாறாவது வயதில் இஸ்மாயில் என்ற பிள்ளை கனியமுதை பெற்றெடுக்கிறார்கள். முதுமை பருவத்தில் பிறந்த குழந்தையின் மீது தந்தையின் பாசமானது எப்படி இருந்திருக்கும் என்று எதுவும் எழுதாமலே எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியும். அந்த பிள்ளையை தவிர வேறு ஒரு உவப்பான பொருள் எதுவும் எந்த தந்தைக்கும் இருக்க முடியாது என்பது தெளிவு.



இந்த கட்டத்தில் தான் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஒரு மிகப் பெரிய சோதனை காத்திருந்தது. நெஞ்சை உலுக்கும் அந்த சோதனை இறைவனிடமிருந்து சமிக்ஞை மூலமாக இப்ராஹீம் நபியவர்களுக்கு வருகிறது. அதாவது தனது அருந் தவப் புதல்வனை ஆருயிர் செல்வனை குழந்தை இஸ்மாயிலை அறுத்து பலியிட வேண்டும் என்பது தான் அது.



இந்த இடத்தில் சற்று உணர்ந்து சிந்தித்தல் நல்லது. இப்ராஹீம் நபியவர்கள் உள்ளம் எப்படி இருந்திருக்கும்..? நினைத்து பார்க்கையில் ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது.



இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர வேறு எதையும் நாடிராத இப்ராஹீம் நபியவர்கள் இறைவனின் செய்தியை இஸ்மாயிலிடம் வெளியிடுகிறார்கள். குணக்குன்றான இஸ்மாயில் அவர்கள் சொன்னார்கள், 'இறைவனின் கட்டளையை தயக்கமின்றி நிறைவேற்றுங்கள்.. அல்லாஹ் அருள் கூர்ந்தால் அவற்றைப் பொறுத்து கொண்டு உறுதியாக இருப்பவனாகவே என்னைக் காண்பீர்கள்..' என்று. இப்ராஹீம் நபியவர்கள் திருவாயிலிருந்து, 'அல்ஹம்து லில்லாஹி ஹம் தன் கதீரா..' என்ற நன்றிமொழி வெளிவந்தது.



இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் இறைவனுடைய கலீல் என்பதற்கு பொருத்தமான இப்ராஹீம் நபியவர்களது கூரிய வாள் மினா எனுமிடத்தில் கழுத்தை உறுதி படக் காட்டிக் கொண்டிருந்த தமது அருமை மைந்தன் இஸ்மாயிலை குறி பார்த்தது.



அப்போது தான் வல்ல இறைவன் கூறினான், 'இப்ராஹீமே! நீர் கண்ணுற்றதை மெய்ப்பித்து காட்டி விட்டார். நல்லவர்களுக்கு யாம் இவ்வாறே வெகுமதி அளிப்போம் திட்டமாக் இஃது ஒரு தெளிவான பெரும் சோதனையாகும்!' என்று.



அதன் பிறகு இறைவன் இஸ்மாயில் அவர்களுக்கு பதிலாக ஒரு ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இதை தனது திருமறை குரானில் 'மகத்தான பலியின் மூலம் அவரை மீட்டோம். அவருடைய புகழை அவருடைய வழித்தோன்றல்களின்கண் நிலைத்திடவும் செய்தோம். இப்ராஹீமுக்கு சாந்தி உண்டாவதாக!' என்று மிக அழகிய சொற்களால் எடுத்துரைக்கின்றான்.



'மகத்தான பலி' என்றால் சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இகபர உலகில் நாடியது நிறைவேற வேண்டி கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான்.



'முஸ்லீம்' என்றால் இறைவனுக்கு முற்றிலும் வழிபடுதல் என்று பொருள். எனவே இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட ஒரு உண்மை முஸ்லீமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே இந்த மகத்தான பலியாகும்.



இந்த 'மிருக பலியான' குர்பான் எனப்படுவது புறச் சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து ஊன் உருக, உளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும்.



இதை தான் இறைவன் தனது அற்புத திருமறையில் '(இவ்வாறு குர்பான் செய்த போதினும்) அதன் மாமிசமோ அதன் இரத்தமோ இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே அவனை அடையும்' என்று அத்தியாயம் 22 வசனம் 37ல் மிக அற்புதமாக விளக்குகின்றான்.



திருமறையின் இந்த வசனங்கள் இஸ்லாமிய தியாகத்தின் தத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்கி விடுகின்றன.



இப்ராஹீம் நபியவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி தியாகத்தை நெஞ்சில் நிறுத்திடவும் நிறுத்திய தியாகம் நிலைத்திடவும் வல்ல அல்லாஹ்(ஜல்)விடம் பிரார்த்திப்போம்
 
 
பின் குறிப்பு:
 
ஹஜ்ஜு பெருநாள் பற்றிய நாகூர் கவிக்குரிசில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்களின் தமிழன் டிவி ஒளிபரப்பிய சொற்பொழிவை இங்கே படிக்கலாம். ஹமீது ஜாபர் என்பவர்களின் வலை தளத்தில் மேற்கண்டதை படிப்பதோடு இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் ஹஜ் பெருநாள் பற்றிய பாடலின் இணைப்பும் உண்டு

உலக முஸ்லீம் சகோதரர்கள் அனைவருக்கும் (ஈத் முபாரக்) தியாக திருநாள் வாழ்த்துகள்

Wednesday, November 25, 2009

நம் கையில் என்ன இருக்கிறது?

நம்ம தமிழ் படத்தின் ஹீரோக்கள் வில்லனிடம், 'இனிமே என் வாய் பேசாது என் கை தான் பேசும்..' என்று மிரட்டுவார்கள்

ஒரு ஹிந்தி படத்தில் சன்னி தியோல் சொல்வார், 'ஏ ஹாத் தாயி கேஜி ஹேய்ன்.. அகர் முக்கா படேகா தோ.. உட் நஹி.. ஜாவோகே.. ' (தவறிருக்கலாம்)
அதாவது இந்த கை இரண்டரை கிலோ இருக்கும், ஒரு குத்து உட்டேன்னா எந்திருக்க மாட்டே அப்படியே (இறந்து) போயிடுவே" (அதாவது நான் அடிச்சா நீ செத்துடுவே.. அந்த கான்செப்ட்)

வெண்ணிற ஆடை மூர்த்தியின் கையை (ஜோசியம்) பார்த்து சுஹாசினி 'உங்களுக்கு நல்லது நடக்க போகிறது' என்கிற ரீதியில் சொல்ல 'அப்படியா?' என்று ஆச்சர்யமாக கேட்பவரிடம், சுஹாசினி சொல்வார், 'கை பேசுதே..' என்று

அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படி பதில் சொல்வார், 'அது பேசுதுங்க, ஆனா காதுல தான் விழ மாட்டேங்குது..' என்று

- மகேந்திரன் இயக்கத்தில் மோகன் சுஹாசினி பிரதாப் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே என்ற அருமையான படத்தில் வரும் வசனம் தான் மேற்கண்டது.

நம்ம கை ரொம்ப ஆச்சர்யமான விஷயம், மனுஷனை தவிர எந்த இனத்துக்கும் கைகள் என்பதே இல்லை என்று தான் நினைக்கிறேன்.

உங்க கையை அப்படியே எடுத்து செத்த நேரம் பாருங்க.. ஒரு கையை மட்டும் வீசி பாருங்க.. ரெண்டு கையும் ரொம்ப முக்கியம், கை தட்ட மட்டுமல்ல.. வாழ்க்கையை ஓட்டவும்..

ஊர்ல ஆட்டோவில், 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று எழுதி வைத்திருப்பார்கள்.

இந்தியாவில் காங்கிரஸின் தேர்தல் சின்னம் கை தான்

'உழைக்கும் கைகளே..' என்ற எம்ஜிஆர் நடித்து வாயசைத்த பிரபலமான பாடலும் உண்டு

சின்னப்பூவே மெல்லபேசு படத்தில் காலேஜ் காட்சியில் பேராசிரியர் 'கை.. கை' என்று நிறைய கையை பத்தி பேசுவார், அதை பார்த்து சின்னி ஜெயந்த அழுவார்.

அதற்கு அந்த பேராசிரியர், 'ஆனந்த கண்ணீரா.. என் கிட்ட இந்த மாதிரி கை கைன்னு நிறைய கை இருக்கிறது.. எதுகை.." என்பார்

சின்னி ஜெயந்த், 'நீங்க வேற சார்.. எங்க பிரண்ட் ராஜாவ ரௌடி பசங்க அடிச்சு போட்டதால .. இப்ப ஆஸ்பத்திரில இருக்கான்.. டாக்டர் கைய எடுக்கணும்னு சொல்லிட்டார்.." என்பார்

பேராசிரியர், 'எக்கையை..?' என்று கேட்பார்

'வலக்கையை..' என்பார் சின்னி..

'உலக்கை போல் வலக்கை..' என்று 'உச்..' கொட்டிவிட்டு 'இது தான் வாழ்க்கை..' என்பார் பேரா..

இப்படி சுவாரஸ்யமான வசனம மறைந்த பிரபல வசனகர்த்தா பிரச்சன்னகுமாருடையது

கை சம்மந்தமான முல்லா கதை கூட ஒன்றுள்ளது..

முல்லா மீது 'அவர் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி விடுகிறாரே.. அவரை மட்டம் தட்ட வேண்டும்..' என்ற பொறாமை எண்ணம் கொண்ட சிலர் ஒரு பறவையை புடிச்சு கையில பின்னாடி கட்டி மறைச்சி வைத்து கொண்டு முல்லாவிடம் வந்தார்கள்

வந்தவர்கள், 'முல்லாவே.. என் கையில் ஒரு பறவை இருக்கிறது, அது உயிரோடு இருக்கிறதா? இல்லை செத்து போய் விட்டதா?' என்று கேட்டார்கள்.

அதாவது அவர்களது திட்டம் என்ன என்றால், முல்லா பறவை உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அந்த பறவையில் கழுத்தை நெறித்து கொன்று விட வேண்டியது.

அந்த பறவை இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விட்டு விட வேண்டியது, இது தான் திட்டம்

இதனை விளங்கி கொண்ட சூஃபி முல்லா, 'அந்த பறவை உயிரோடு இருப்பதும் இறந்து போறதும் உன் கையில் தான் இருக்கிறது'  என்று சொன்னாராம்.

பொட்டி சோறு - 2 (சிறு கதை - இரண்டாவது இறுதி பகுதி)

பொட்டி சோறின் முதல் பந்தி இங்கே பரிமாறப்படுகிறது

பூட்டி கெடந்த வூட்டை பாத்து கலவரமாகி போனான் சலீம். ரெண்டு விஷயம் மண்டைக்குள்ள நஹரா கொட்டியது. ஒண்ணு 'ம்மா வூட பூட்டிட்டு எங்கே, எப்போ போனாஹா..?' ரெண்டு, 'இந்த நிஜாம் பய வந்து சோத்த குடுத்துட்டானா, இல்லையா..?' -

அந்த சிறுமி 'இப்ப என்னா செய்றது..? எனக்கு அந்த சோறு வேணுமே..?' என்றாள்.

'வேணும் தான், தெரியுமே.. இப்ப ம்மா ஜேபா மாமி வூட்டுக்கு தான் போயிருப்பாஹன்னு நெனைக்கிறேன்.. நான் போய் பாத்துட்டு வந்துடறேன்,' என்று சொல்லி முடிக்கங் காட்டியும்

'நானும் உங்க கூட வர்ரேன்..' என்றாள்

'வாணா.. வாணா.. நீ வர வாணா.. நான் போய்ட்டு வர்ரதுக்கெடைல நிஜாம் சோற கொண்டுகிட்டு வந்துட்டாண்ணா நீ வாங்கி வச்சுக்க.. நான் இந்த ஓடியாந்துடுறேன்..' என்று ஓட்டமும் நடையுமாக நாலு தெரு தள்ளியிருந்த ஜேபா மாமி வீட்டுக்கு ஓடிநடைனான்

ஜேபா மாமி வீட்டு வாச கதவு உள்ளக்க பூட்டியிருந்ததால சலீம் வாச பில்லை அடிச்சான்

உள்ளே ஜேபா மாமி பேசும் சத்தம் கேட்டது, 'இந்தாம்மா ரஜியா.. வாச கதவ யாருன்னு கேட்டு தொறங்க..' என்றார்கள்

ரஜியா ஓடியாந்து 'யாரு?'ன்னு கேட்டுட்டு கதவை தொறந்து வுட்டு, 'சலீம் நானா..' என்று சொல்லி விட்டு ஓடிப் போய் அடுப்பங்கறையில் மறைந்து போனாள்.

'சலீமு.. வாயேன்.. ' என்றார் ஜேபா மாமி

'வூட்டு சாவி இங்கேயா இருக்கு.. ' என்று எப்போதும் சாவி இருக்கும் சாவி மாட்டுற கூடத்தறை வாச பக்கம் பார்வைய திருப்பி அங்கே இருந்த வூட்டு சாவிய பாத்ததும் 'அப்பாடா.' என்று எடுத்து திரும்பினான்..

'ம்மா.. நாவப்பட்டிணம் போயிருக்காஹா.. வூட்டுவொல்வோக்கு போயிட்டு கடத்தெருவுக்கும் போயிட்டு தான் வருவேண்டாஹா.. கூட பாத்திமா சபுரா போயிருக்கா..' என்றார் ஜேபா மாமி

'சரி.. நான் வூட்டுக்கு போயிட்டு வர்ரேன்.' என்று கெளம்பியதும்

'உட்காரு.. இப்ப தானே வந்தா.. அதுக்குள்ள கால்ல நெருப்ப அள்ளி கொட்டிகிட்டு எங்கே கெளம்புறா..? இங்கே சாப்புடேன்.. தர்ஹா சோறு கொஞ்சம் இருக்கு.. தொட்டுக்க மூளை இருக்கு.. முட்டை இருக்கு.. அப்டியே கடுவ பெரட்டிகிட்டு சாப்டா ரொம்ப ஜோரா இக்கும்.. ஒனக்கு புடிக்குமே.. சாப்டேன்..' என்றார்.

'தர்ஹா சோறா..?.. ம்மா எடுத்துட்டு வந்ததா..?' பதறினான்

'இல்ல.. இல்ல.. இப்ப தான் தர்ஹால இருப்பான்ல நிஜாம் அவன் வந்து கொடுத்துட்டு போனான்.. நம்ம வூட்டுக்கு எப்பவும் வரும்ல.. அதனால பரவால்லா.. நீ சாப்டேன்.. வச்சு தரவா..?' என்று கேட்டு முடிப்பதற்குள் போன் அடித்தது..

'செத்த போன எடும்மா..?' என்றார் ஜேபா மாமி

போன எடுத்து, 'ஹலோ.' என்றான் சலீம்

'யாரு சலீமா.. இங்கே தான் இக்கிறியா.. நல்லதா போச்சு.. அதான் சொல்லாம வந்துட்டேனேன்னு தான்.. ' என்றார் சலீமின் தாயார் ரஹ்மத்

'ஏம்மா.. எங்கேந்து பேசுறீங்க..' என்றான்

'நா ஹலிமா மாமி வூட்லேந்து தான் பேசறேன்.. காசிம் சொன்னாரா..?' என்று கேட்டார் சலீமின் தாயார்.

'நான் காசிம பார்க்கவேயில்லையே.. ஏன் என்னா சொல்வார்?' என்று கேட்டான் சலீம்

"ஒண்ணுமில்ல.. தர்ஹாலேந்து பொட்டி சோறு வந்துச்சு..  மேச மேல தான் துத்திப்ப போட்டு மூடி வச்சிருக்கேன்.. நான்  கொஞ்சம்  தப்ரூக்க வாயில  போட்டுகிட்டேன்.. எஜமாண்ட தலைக்கு மேல..  வாப்பாக்கும் தம்பிக்கும் கொஞ்சம் தப்ரூக் எடுத்து வச்சுட்டு நீயும் சாப்புடு.. அப்புறம் வூட்லேயே இருந்துக்க காசிம் ஒரு சாமான் கொண்டு வந்து கொடுப்பார்.. வாங்கி அலுமாரில வச்சுடு..' என்று படபடன்னு பேசிட்டே போவ சலீம், 'ம்மா.. ம்மா..' ன்னு இழுத்து விஷயத்தை சொன்னான்.

ம்மா விஷயத்தை பொறுமையா கேட்டுட்டு 'ம்'ன்னு சொன்னவொடனே சாவிய எடுத்து சட்ட ஜோப்புல போட்டுகிட்டு ஜேபா மாமிட்ட 'கதவ கொலுக்கு போட்டுகுங்க.. இந்த வந்துடறேன்னு..' சொல்லிட்டு தெரு வாச பக்கம் தலை தெறிக்க ஓடினான்.

மூச்சு முட்ட, வேர்வை சொட்ட, கண்ணு கட்ட, காலு கடுக்க ஓடி வந்தான்.

வாசல்ல இருந்த படில ஓரமா ஒக்காந்துட்டு ஓடி வர்ரத பாத்து எந்திரிச்சு நிக்கிற அந்த சிறுமியிடம், 'இன்னும் ஒரு நிமிஷத்துல ஒன் கைல பொட்டி சோறு.. எங்கே சிரி..' என்று சொல்லி விட்டு ஜோப்புல கைய வுட்டான்.. சாவிய காணோம்..

'அல்லாஹ்வே.. இது என்னா இது.. அதாபு.. எங் கூடவே அலையுது.. சாவிய எங்கே போட்டேன்..' என்று கீழே பார்த்தான்.. வாச படி கிட்டே கீழே இறங்காமலே பார்வையை நீட்டி அலைய விட்டான்.

'சாவிய எடுத்துட்டே வரலயா..?' கவலையோடு கேட்டாள்

'இல்ல.. எடுத்து ஜோப்புல வச்சேன்.. நல்லா தெரியும்.. வழில தான் எங்கேயோ வுழுந்திருக்கணும்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. நான் போய் தேடி பார்க்கிறேன்..' என்று வாசல வுட்டு எறங்கிய விநாடி 'டுப்..' கரண்ட் கட்டாயிடுச்சு..

'அல்லாஹ்வே.. இந்த இருட்டுல எங்கேந்து போய் சாவிய தேடுறது..கொஞ்சம் பொறு.. இப்ப கரண்ட் வந்துடும்.. எங்கேயும் போயிருக்காது நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்..' என்று இருட்டில் நின்ற அந்த சிறுமியை பார்த்து பேசினான்

போன கரண்ட் செத்த நேரத்துலேயே அதிசயம் ஆனால உண்மையாக வந்து விட்டது. 'இங்கேயே இரு.. சாவியோட வர்ரேன்..' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்த திசையையே வெறிச்சு வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்த அவளை, 'யாரும்மா நீ.. என்னா வேணும்..? இங்கே ஏன் ஒக்காந்து இருக்கிறே..?' - என்று ஒரு குரல் கேட்டு திரும்பினாள்.

அவள் பதில் சொல்ல வாயெடுத்த விநாடி சலீம் வந்து விட்டான் சாவியோடு 'இங்க பக்கத்துல தான் விழுந்திருக்கு..' என்று கூறிக் கொண்டு.

'சலீமு.. யாரிது?' - என்று கேட்டார் காசிம் என்ற பெயருடைய அவர்

'நமக்கு தெரிஞ்ச புள்ள தான்.. அது இருக்கட்டும்.. ம்மா ஏதோ சாமான் கொடுப்பியோம்னு சொன்னாஹலே..' என்றான்

'ஆமா.. இந்தாரும்..' என்று அந்த பையை எடுத்து தந்து, 'இத அப்டியே பத்தரமா வச்சுடும்.. நான் வந்து ம்மாட்ட பேசிக்கிறேன்..' என்று போய்ட்டு ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்ப வந்து, 'சொல்ல மறந்துட்டேனே.. ம்மா சொல்ல சொன்னுச்சு.. பொட்டி சோறு மேசைல இருக்காம்.. கொஞ்சம் தப்ரூக் எடுத்துக்கிட்டு வாப்பாக்கும் தம்பிக்கும் வக்க சொன்னுச்சு.. நா வரட்டுமா..?.. சாமான் பத்தரம்..' என்று போய் விட்டார்

சலீம் கதவை திறந்தான். 'உள்ளே வா..' என்று அவளையும் கூப்டுகிட்டு உள்ளே போய் வெளக்க அடிச்சு வுட்டு மேச மேல இருந்த பொட்டி சோற எடுத்து அந்த சிறுமி கைல கொடுத்து, 'அப்பாடா..! இப்ப சந்தோஷமா..? இது ஒன்னோட ரிஜ்க்' என்று கையில் கொடுத்தான்

அந்த சிறுமி அப்படியே நின்றாள், 'ஏன்.. அப்டியே நிக்கிறே? போய் உங்க ம்மா கூட சாப்டேன்.. தேடிகிட்டு இருப்பாஹல்ல..' என்றான்

'உங்க ம்மா வந்தா திட்டுவாங்க..' என்றாள்.

'நான் ம்மாட்ட டெலிபோன்ல சொல்லிட்டேன்.. நீ எடுத்துட்டு போ..' என்றான்.

'இல்லை.. நான் போறேன்..' என்று பொட்டி சோறை மேச மேலேயே வச்சுட்டு விறுவிறுவென திரும்பி பார்க்காமல், 'நில்லு..' ன்னு சலீம் கூப்ட்டு கத்துவதை காதுல வாங்காமல் ஓடிப் போய் மறைந்து போனாள்.

சலீம் 'ப்ச்ச்..' என்று அலுத்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு , பிறகு காசிம் கொடுத்த சாமானை அலமாரியில் வைத்தான்.

திரும்பவும் பள்ளிக்கு தொழுவ போவலாம்னு வாச கதவ பூட்டி தர்ஹாக்கு வந்தான். அலங்கார வாச கிட்டே வந்ததும் நவாப் சிரித்து கொண்டே  தர்ஹா உள்ளேயிருந்து வெளியே வந்தான்.

'ஏன்.. என்னா அது.. ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..' என்றான் சலீம்

'இப்ப தான்.. உம்பர் கூட வந்துச்சுல்ல அந்த புள்ளைய பாத்து பொட்டி சோற கொடுத்துட்டு வர்ரேன்..' என்றான் நவாபு

'அப்டியா..?.. உம்பர்க்கு ஏது..? உங்க வூட்றேயா?' - என்று ஆச்சர்யம் மேலிடவும் மகிழ்ச்சி பொங்கவும் கேள்வியையும் பதிலையும் கேட்டான் சலீம்

'ஆமா.. நீம்பர் கொடுக்க சொன்னதா சொல்லி கொடுத்துட்டேன்.சரி.. நான் ஹாரீஸ் நானா கடைக்கு போறேன்.. வர்ரீயமா..?' என்றான் நவாப்

'ம்.. வர்ரேன்.. இந்த போய் இஷா தொழுவிட்டு வந்துர்ரேன்..' என்று சொல்லிவிட்டு நவாப் பள்ளி என்கிற பெரிய ஹொத்துவா பள்ளில உள்ளே பூந்து செருப்பை வச்சிட்டு சட்டை கைல உள்ள பொத்தானை விடுவித்து கையை மடிச்சு வுட்டுகிட்டே ஹௌதை நோக்கி ஒலு செய்றதுக்காக போன போது பள்ளில இருந்த போர்ட்ல சாக்பீஸால் எழுதியிருந்த ஹதீஸ் சலீமின் கண்களில் பட்டது

'உங்களில் எவர் பெரியவர் மீது மரியாதையும் சிறியவர் மீது அன்பும் பாராட்டவில்லை அவர் என்னை சேர்ந்தவர் அல்ல.. - நபிமொழி"

Monday, November 23, 2009

பொட்டி சோறு - 1 (சிறு கதை - இரண்டு பகுதிகளாக வரும்)

பெரிய ஹொத்துவா பள்ளில மஹ்ரிபு தொழுவைய முடிச்சிட்டு வெளியே வந்து மனாராக்கு கீழே சாஞ்சு ஒக்காருரது தான் சலீமுக்கு வழக்கம். பருவே இல்லாத பளிங்கு முகம் அவனுடையது. தலையில அஜ்மீர் தொப்பி. வெள்ளை கைலி, ஊதா கலர்ல பிளேய்ன் சட்டை சகிதமாக மருவண்டி உடுற ராவண்ணக்கி ஒக்காந்திருக்கிற மாப்பிள்ளை மாதிரி உக்காந்திருந்தான்

அவன நாகூர்காரங்க பாத்தா 'வெளியூரா?..' ன்னு கேப்பாஹா..ஏன்னா வெளி தெருவு பழக்கம் அதிகமில்ல.. ஒரே ஒரு கூட்டாளி நவாபுன்னு பேரு.

வெளியூர் காரங்க பாத்தா நாகூரான்னு கேப்பாஹா..  மடிப்பு கலையாம கைலி உடுத்துர அழகும் ஒரு காரணம்.

தாழிச்ச சோறின் வாசம் காத்துல கலந்து வந்து பசியை கெளப்பி விட்டது சலீமுக்கு. தர்ஹால எப்போதும் யாரு பேர்லயாவது பாத்திஹா ஓதி சோறு கொடுத்துகிட்டே தான் இருப்பாஹா. ஒண்ணு தர்ஹாலயே சோறு ஆக்கி போடுவாஹா. இல்ல தர்ஹாக்கு வர்ர பக்தர்கள் யாராவது சோறு ஆக்கி போடுவாஹால்வோ. வருஷம் பூரா இப்படி தான், சோத்து மழை தான் பெய்யும்.

சோறை பொட்டில போட்டு பவுந்துகிட்டு இருந்தாஹா. அதுக்கு பொட்டி சோறுன்னு அல்லது தர்ஹா சோறுன்னு பேரு.

சின்ன புள்ளைல்வோலேந்து பெரிய மனுஷர் வரைக்கும் பெரும் கூட்டம். நான் நீன்னு  கையை நீட்டிகிட்டு முண்டியடிச்சிக்கிட்டு நிக்க கூகூன்னு சத்தத்துக்கு நடுவே அந்த கூட்டத்துலேயே சின்னதா இருந்த அந்த சிறுமியை கிட்டேயே நெருங்க வுடாம தடுத்து கொண்டிருந்தது அந்த கூட்டம்.

அந்த பொட்டி சோறு பசியும் பக்தியும் சம்மந்தப்பட்டது, அதை தர்ஹா  சோறு என்பார்கள்.  அதே சோறை அதே பண்டாரி வச்சு அதே பதத்துக்கு எடுத்து பார்த்தாலும் தர்ஹா சோத்து வாசத்துல பாதி வாசம் கூட வராது. எல்லா ஊருக்கும் மண் வாசனை என்றால், நாகூர்ல இந்த சோத்து வாசனை தான்.

'ஏம்மா.. நீ தான் மொதோவே வாங்கிட்டீல்ல..' - ஒரு சிறுமியை தடுத்து நிறுத்தினார் தர்ஹாவில் பணிபுரியும் ஒருவர்.

'இல்ல.. நான் வாங்கவே இல்ல..' என்றதும் 'சரி.. சரி.. இந்த கூட்டத்துல எங்கேத்து கெடைக்கிறது..' - அவர் வாய் முகூர்த்தம் சொன்ன மாதிரியே மொதோலேந்து டிரை பண்ணிக்கிட்டிருந்த அந்த சிறுமிக்கு பொட்டி சோறு கிடைக்கவேயில்லை.

தூரத்திலிருந்து சலீம் இதை கவனித்து கொண்டே இருந்தான். அந்த சிறுமியின் முகம் டிசம்பர் மாத மேகமாய் மாறியிருந்தது. சலீம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடந்து வந்தாள். அவன் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு சைடுல இருந்த திண்ணைல இருந்த ஒரு பொம்பள பக்கத்துல போய் உக்காந்தாள். கண்ணெல்லாம் கலங்கி இந்தோ இப்ப வந்துடுவேன் என்பது போல தயாரா ஒட்டுல நிண்டு கொண்டிருந்தது.

படுத்திருந்த அந்த பெண் எழுந்தார், 'ஏன்ம்மா..? என்னாச்சு..?..' ன்னு கேட்டார்
அந்த பெண் அந்த சிறுமிட தாயார இருக்கணும்னு தோன்றியது சலீமுக்கு.

அந்த சிறுமி பதில் ஏதும் சொல்லாமல் போகவே, 'பசிக்குதா..?... சாப்பிடுறியா?..' என்றவர், ஒரு பொட்டணத்தை பிரித்து அதிலிருந்த கொத்து புரோட்டாவை காட்டி, 'இந்தா இத சாப்பிடு..?' என்றார்

'வேண்டாம்..' தலையை ஆட்டி மறுத்தாள் அந்த சிறுமி

'ஏன்ம்மா..?' - பொட்டண கையோடு அந்த தாயார் கேட்டார்

'எனக்கு அந்த சோறு தான் வேண்டும்..' என்று கொஞ்சம் தள்ளி ஒக்காந்து பொட்டி சோத்துல எல்லா கோவத்தையும் காட்டிக் கொண்டிருந்த அந்த கூட்டத்தை கைகாட்ட.. அந்த அம்மா அந்த கூட்டத்தை திரும்பி பார்த்ததை தொடர்ந்து சலீமும் அந்த கூட்டத்தை ஒரு முறை பார்த்தான், அந்த சோத்தை பற்றி பசியும் பக்தியும் கலந்தது என்றேனல்லவா, இந்த கூட்டத்துக்கு பசி மட்டுமே காரணம்  என்பது  போல்  தோன்றியது  சலீமுக்கு - சலீம் திரும்ப அந்த சிறுமியிடமே தன் பார்வையை திருப்பினான். அவர்கள் பேசிக் கொள்வது நன்றாக கேட்டது அவனுக்கு.

அந்த அம்மாவுக்கு புரிந்து விட்டது, 'அல்லாஹ்வே, சோறு முடிஞ்சிருக்கும், நாளைக்கு சொல்லி வச்சு வாங்கி தர்ரேன்.. இப்ப இத சாப்பிடு..' என்றார்

பிடிவாதம் எதிர்வாதம் செய்தது, 'முடியாது, எனக்கு இப்ப தான் வேணும்..'

அந்த அம்மா எவ்வளவோ சொல்லி பார்க்கிறார், அந்த சிறுமி கேட்டா தானே, ஆனால் இத்தனைக்கும் அந்த அம்மா கொஞ்சம் கூட கோவமே படலை. பொறுமையாவே சொல்லிகிட்டு இந்தாங்க.

சலீம் எழுந்தான், மெதுவாக நகர்ந்து அந்த சிறுமியிடத்தில் வந்தான், இருவரும் விவாதத்தை நிறுத்தி 'இது யாரு?' என்று அதிசயமாக பார்த்தார்கள்,

அந்த அம்மா, 'என்னா தம்பி?' என்றார், தன் புடவை தலைப்பை எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னமும் சரி செய்து கொண்டு,

சலீம் மெதுவா பேச ஆரம்பித்தான், 'நான் அப்போலேந்து பாத்துகிட்டு தான் இருந்தேன், இந்த புள்ள கூட்டத்துல நிண்டது, எல்லாம்.. நான் வேண்ணா வாங்கிட்டு வந்து தர்ரேன்..' என்றான்

'அதெல்லாம் வேணாம் தம்பி, இவ இப்படி தான்..' என்றார் அந்த அம்மா

'நானும் வர்ரேன்.. எனக்கு வாங்கி தாங்க..' என்றாள் அந்த சிறுமி

சலீம் அந்த அம்மாவிடம், 'ஒண்ணும் பெரச்சனை இல்லம்மா.. நான் போய் வாங்கிட்டு வர்ரேன்..' என்றவன் அந்த சிறுமியிடம், 'நீ வர வாணா.. இங்கேயே இரு..' என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

சலீம் நேராக தனக்கு தெரிந்த தாவுது பாயிடம் போய் - தாவுது பாய் தான் பொட்டி சோறு பவுந்துகிட்டு இருந்தவர் - 'எங்க வூட்டுக்கு சோறு போயிடுச்சா..? - இருந்தா அத கொடுங்க.. நா கொடுத்துடறேன்.' என்றான்.

தர்ஹாலேந்து செல வூடுவோல்வோக்கு இந்த மாதிரி பொட்டி சோறு போவது உண்டு, தாவுது சொன்னார், 'உங்க வூட்டுக்கு கொடுத்து வுட்டாச்சு.. இப்ப தான் நாஜிம் கொண்டு போனான்..' என்றார்.

'வேற எதுவும் பொட்டி இருக்கா..? ஒரே ஒரு பொட்டி தேவைப்படுது..' என்றான்

அவர் பழைய தரோகா அறை உள்ளே போய் பார்த்துட்டு வந்து 'கொஞ்சம் முன்னாடி சொல்ல கூடாது தம்பி, எல்லாம் முடிஞ்சு போச்சு, என்னட தான் இக்கிது.. அத வேண்ட தரவா?..'

'இல்லல்ல வேணா.. பரவாயில்ல..' என்று எச்சில் விழுங்கி 'அல்லாஹ்வே..' என்று திரும்பியவன் காலை இடிச்சிகிட்டு பக்கத்துல நிண்டு கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து திடுக்கிட்டான், பயந்து போய், 'அல்லா வச்சு காப்பாத்த..' என்று தனக்கு தானே சொல்லி நெஞ்சுல ஊதிக் கொண்டு, 'ஏன்ம்மா.. இப்படியா வந்து காலுகிட்ட பின்னுறது..?'

"பொட்டி சோறு இல்லையா..?'- என்று கேட்டாள்

'ஏன் இல்லை..? - இருக்கு இருக்கு, சரி நான் என்னா செய்றேன்.. இப்ப எங்க வூட்டுக்கு போய் பொட்டி சோற எடுத்துகிட்டு வர்ரேன்.. நீ இங்கேயே ம்மா கிட்டே இரு..' என்றான்

'நானும் வர்ரேன்..' அடம் பிடித்தாள்

'வாணா.. வாணா... ம்மா ஏசுவாஹா..' என்று நெசமாவே பயந்தான் சலீம்

'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல.. நான் சொல்லிட்டேன்.' உறுதிபட சொன்னாள் அந்த சிறுமி

செத்த நேரம் அப்டியே யோசிச்சிட்டு 'சரி வா..' ன்னு பெரிய ஹொத்துவா பள்ளில பூந்தான், அங்கே  மக்ரிப்  தொழுகையை  ஜமாத்தோடு  குறிப்பிட்ட நேரத்துக்கு தொழுவதை தவற விட்டவர்கள் இன்னொரு ஜமாத் நடத்திக் கொண்டிருக்க ரெண்டு பேர் ஒலு செஞ்சுட்டு ஓடிப் போய் கரெக்டா ருகுவில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

செருப்பை எடுத்துகிட்டு தெரு வாசலுக்கு போற இன்னொரு கதவு வழியா படில இறங்கி சின்ன சாப்பிங் காம்ப்ளாகஸை கடந்து அலங்கார வாசலுக்கு வெளியே வந்து செருப்பை கீழே போட்டான், செருப்பை கால்ல மாட்டிகிட்டு தர்ஹா பக்கம் திரும்பி சலாம் சொல்லிட்டு நடந்தான். அந்த சிறுமி பின் தொடர்ந்தாள்.

இசை முரசு தனது சிங்கக் குரலில், 'அருள் மழை.. ' பொழிய ஒரு கடையில் ரஹ்மானிடம் (இறைவனிடம்) வேண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு கடையில் 'சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே..' என்று சிந்திக்க தூண்டிக் கொண்டுமிருந்தார்.

அந்த கடலை கடையில் கடலை போட்டுக் கொண்டிருந்த - வாயில் தான் - நவாப் சலீமை பார்த்து விட்டு ஊருக்கே கேப்பது போல் கத்தினான், 'சலீமு.. நில்லுங்கணி..'ன்னு - நவாபும் சலீம் ஒன்றாக படித்தவர்கள். சலீமின் ஒரே நண்பன் இந்த நவாப் தான். நவாபுக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் கண்டபடி கண்ட எடத்துல எச்சி துப்புவது.

குரான் ஷரீஃபை ராகமாக ஓதுபவர்களை 'காரி' என்று அழைப்பதுண்டு, சலீம் அப்படி தான் பிராமாதமாக ராகமாக ஓதுவான். அவன் ஒரு காரி. அதனால் நாகூர் பார்ட்டிகள் சலீமை 'காரி' என்று மரியாதையாக அழைப்பதோடு நவாபை 'துப்பி' என்று சொல்வதுமுண்டு. அதாவது இப்படி சொல்வார்கள், 'சலீம் காரி.. நவாபு துப்பி'

சலீம் நின்று விட்டான், நவாப் சலீமுடன் இருந்த அந்த சிறுமியை பார்த்த ஒடனே அவன் சொல்ல வந்த சேதியை மறந்து போனான், 'யாருங்கணி இது..? வூட்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கா..?' என்றான்

'இல்ல.. இல்ல' என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னான், 'சரி, பொட்டி சோறு இல்லாகட்டி என்னா..? நான் வந்து கடைல பராட்டா வாங்கி தர்ரேன், ஒக்கேயா?' என்று நவாபு கேட்டான்

சிறுமி வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்

'பிரியாணி..' என்றான்

'எனக்கு அந்த சோறு தான் வேணும்..' என்றாள்

சலீம் நவாபுடன் 'அப்புறம் பார்ப்போம்னு' சொல்லிட்டு வூட்டுக்கு வந்தான்.

வூடு பூட்டி கிடந்தது.

Tuesday, November 17, 2009

ஜப்பானியர்கள் - புதுமை பித்தர்கள்

நான் இதுவரை ஜப்பானுக்கும் மட்டுமல்ல, இங்கே சிங்கையில் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஜப்பானீஸ் கார்டனுக்கு கூட போனதில்லை.

நாம ஏதோ உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலமாக எம்.ஜி.ஆரோடு ஜப்பானை சுற்றி பார்த்ததுண்டு. 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்' என்ற அழகிய பாடல் நினைவிலிருந்து நீங்காதவை.

ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன் அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை.

அப்புறம் கிருஷ்ணன் வந்தான் எனும் படத்தில் தேங்காய் சீனிவாசன் ஜப்பான் பாஷை பேசுவார்

விவேக் ஒரு படத்தில் ஜப்பான் பாஷையில் ஒரு பாடலே பாடுவார்

ஜப்பான் என்றாலே எலக்ட்ரானிக்ஸ் சாமான்கள், சோனி,  வாகனங்கள் டொயோட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரலாம்

எதிலும் புதுமை, வித்தியாசம் என்று வாழ்பவர்கள்.

அவர்களின் புதுமை ஆர்வம் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை போலும்

புதுமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா!

சிரிப்பதற்கு மட்டுமே!



Friday, November 13, 2009

ஜட்ஜப்பா - பகுதி 2

ஜட்ஜ் அப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்

நாடோடிகள் படத்தில் சசிகுமார் வரலாறு பாடத்தின் பெருமையை அப்பா பேரு அப்பாவோட அப்பா பேரு அப்பாவோட அப்பாவோட அப்பா பேரு ... என்று கேட்டு அழகாக விளக்கம் சொல்லுவார், அவர் கொடுத்த தைரியத்தில் எங்கள் குடும்ப வரலாற்றையும் இங்கே எழுதிட விழைகிறேன்.

குலாம் மெய்தீன் - இவர் ஒரு பிஸினஸ் மேக்னட் - பிறந்தது குன்னூர், ஊட்டி அந்த பக்கம் - வசித்தது நாகூர் - துணிமணி (துணி தான்) வியாபாரம் செய்தது மற்றும் திருமணம் செய்தது தாய்லாந்த் நாட்டில் - ஆமாம், வியாபார நிமித்தமாக அந்த காலத்தில் சியாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்த் நாட்டிற்கு சென்ற போது அங்கே யாயி என்ற  சீயத்து பெண்ணை (தாய்லாந்த் நாட்டு பெண்ணை) மணமுடித்ததோடு 2 பெண் பிள்ளைகள் 5 ஆண் பிள்ளைகள் என அந்த காலத்து நடைமுறையில் குறை வைக்காமல் நிறைவாய் பெற்றெடுத்தார்.

அவர் அனைத்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நாகூர் வந்த போது தனக்கு இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் தனது உறவினரான அப்துல் அஜீஸ் என்பவரிடம் (அப்போது அவர் தையல் கடை வைத்திருந்தார்) எல்லா சொத்துக்களையும், பிள்ளைகளையும் அமானிதமாக கையை பிடித்து கொடுத்து விட்டு கண்ணை மூடினார்.

சொத்துக்கள், குலாமின் பிள்ளைகள் என்பது மட்டுமல்லாமல் அப்துல் அஜீஸுக்கு 3 பிள்ளைகள், அப்துல் அஜீஸின் சகோதரியின் பிள்ளைகள் என ஒரு பெரும் தோப்பே அந்த தனி மரத்தின் முன் பாதுகாவலில் வைக்கப்பட்டது.

அப்துல் அஜீஸ் வியாபாரத்தை சிறு துள்ளியிலிருந்து ஆரம்பித்து பெரு வெள்ளமாக்கினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். தன் பிள்ளைகளாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவர்கள் வேலையை அவர்களே தான் பார்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் உதாரணமாக வீடு வாசல் பெருக்கி சுத்தம் செய்வதிலிருந்து கொள்ளையில் இருக்கும்  மாட்டு கொட்டகையை தொடைச்சு சுத்தம் செய்வது வரை இப்படி எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.

மேலும் அரபு பாடத்தில் சரியாக ஓதா விட்டால் சாவி கொத்தால் அடி கொடுப்பார். ஒரு முறை ஜட்ஜ் அப்பா தமிழ் பாடத்தில் 98 மார்க் வாங்கியதற்கு அஜீஸ் அவர்கள், "மத்த பாடமா இருந்தாலும் பரவாயில்லை, நம்ம தாய் மொழி தமிழ்ல்ல போய் இப்படி 2 மார்க் கொறைச்சி வாங்கிட்டு வந்திருக்கியே.." என்று கேட்டிருக்கிறார்கள். ஜட்ஜ் அப்பா அவர்கள் தான் சரியாக எழுதியதாகவும் வாத்தியார் தமிழுக்கு 100க்கு 100 மார்க் போட மாட்டார்களாம் என்று எடுத்து விளக்கினார்கள்.

குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் படிப்பு (அதாவது ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை), அதன் பிறகு பிழைப்பு. அதாவது தாய்லாந்த் நாட்டில் பேங்காக் நகரில் வாட்கோ லாவின்ச் (Watco Lavinch) என்ற முக்கிய வியாபார இடத்தில் அமைந்திருந்த "நாகூர் ஸ்டோர்ஸ்" என்ற கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் வேலை பார்க்க சென்று விட வேண்டும். அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் வேலை இருக்கும்.

நாகூர் ஸ்டோர் (பின்புறம் போர்டில் தெரிகிறது) , பேங்காக் நகரம் (போட்டோவில் கம்பி கேட்டை ஒட்டி நிற்பவர்கள் எனது மாமனார் ஹாஜா மொய்தீன் அவர்கள்)

இந்த சூழ்நிலையில் தான் ஜட்ஜ் அப்பா வளர்கிறார்கள். மியா தெரு முனையில் இருந்த நாகூர் முஸ்லீம் பாட சாலையில் படிக்க போவது, பள்ளிகூடம் விட்டு வந்தவுடன் மாட்டை குளிப்பாட்டுவது, கடைகளுக்கு போய் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வருவது, ஒரு நிமிஷம் ஓய்வு இருக்காது.

ஜட்ஜ் அப்பாவுக்கு அப்போதே தெரியும் நம்மள இன்னும் கொஞ்ச நாள்ல கப்பலேத்தி சீயத்துக்கு அனுப்பி விட்டுடுவாஹாண்டு. அவர்களின் தம்பி ஜக்காப்பா கூட (ஜக்காப்பா அவர்கள் வேறு யாருமல்ல, அவர்கள் எழுத்துலகில் பிரபலமான (இவரின் கதையை அப்படியே நம் பேர் போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தாலும் பிரபலாமாகலாம்),   நகைச்சுவையில் சோகம், சோகத்தில் நகைச்சுவை, இப்படி கலந்து தனது அனுபவங்களை எழுதும் எழுத்தாளரும் ஓவியருமான ஆபிதீன் நானா அவர்களின் மாமனார், அதாவது அன்னாரின் மகளை தான் ஆபிதீன் நானா அவர்கள் நிகாஹ் செய்துள்ளார், ஆக ஒரு முறையில் ஜட்ஜ் அப்பாவின் மருமகனும் ஆவார் ) அப்படி தான் நாகூர் ஸ்டோர்ஸின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள சீயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.  ஜக்காப்பா தான் அந்த கடையின் மேனேஜர்.

பேங்காக்
(மேலே உள்ள படத்தில்: இடதிலிருந்து இரண்டாவது: சேத்தப்பா (என் தாயாரின் தந்தை), கடைசியில் தொப்பி போட்டு இருப்பது ஜக்காப்பா (ஜட்ஜப்பாவின் தம்பியும் ஆபிதீன் நானாவின் மாமானாருமாவார்))
(கீழே உள்ள படத்தில் முதலாவது: முஹம்மது தம்பி (எனது தந்தையின் தந்தை), கடைசியில் ஹாஜா மொய்தீன் (எனது தாயாரின் நானாவும், எனது மாமனாரருமாவார்))

ஆனால் ஜட்ஜ் அப்பாவுக்கு அப்படி சீயத்துக்கு போய் வேலை செய்யணும் என்ற ஆர்வம் இல்லை. ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இருந்தாலும் அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு கூடவே படித்துக் கொண்டும் (எப்படி தான் முடிந்ததோ?)  - அதுவும் படிக்கிறது என்றால் சும்மா ஏனோ தானோ படிப்பல்ல, ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்பிற்கு போகாமாலே மூன்றாவது வகுப்பிற்கும் மூன்றாவது வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பிற்கு போகாமலே ஐந்தாவது வகுப்பிற்கு டபுள் புரோமஷனையே டபுள் டைம்ஸ் (இரண்டு முறை) வாங்கி படித்தார்கள். (ஹேட்ரிக் டபுள் பிரமோஷன் வாங்க வேண்டியது ஒரு சில காரணங்களால் அவர்களே வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்)

இப்படி படிப்பில் அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் அவர்களின் மாமாவான அப்துல் அஜீஸை ஜட்ஜ் அப்பாவை சீயத்துக்கு (பேங்காக் நாடு) அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட வைத்தது.

--------------------------------------------------------------------------

அப்புறம் அவர்களின் சிறு பிராயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி சொல்ல வேண்டும்.

தொடரும்

Tuesday, November 10, 2009

கைத்தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தானதா?

இன்றைக்கு ஒரு மெயிலை படித்தேன், அதில் கைத்தொலைபேசியை (ஹேண்ட் போன் அல்லது செல்லுலர் போன் அல்லது செல்) பேண்ட்டில் மாட்டிக் கொண்டு போனால் இடுப்பு எலும்பு நொறுங்கி விடும் என்று துருக்கி நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். 150 பேர்களிடம் நடந்த சோதனையில் 122 பேர்களின் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் அந்த மெயில் சொன்னது.

இது போல் பல சுவாரஸ்ய மெயில்களும் ஹேண்ட் போனை பற்றி வந்ததுண்டு. இரண்டு பக்கமும் ஹேண்ட் போனை வைத்து முட்டை பொறிப்பது போல் எல்லாம் வந்து நம்மை பயமுறுத்தியதுண்டு. அதாவது நம்முடைய காதும் அதோடு சேர்ந்து மூளையும் சேர்த்து சமைக்கப்பட்டு விடுமோ என்று நினைத்து பார்த்தது உண்டு.

ஆனால் நினைத்து தான் பார்த்தோமே தவிர, அதற்காக கலங்கியதெல்லாம் கிடையாது, அது உண்மையாக இருக்குமோ என்று கவலையாவது பட்டிருப்போமா என்றால் அதுவும் கிடையாது என்றே நினைக்கிறேன்.

சரி ஒரு வேலை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட யாரும் ஹேண்ட் போன் பேசுவதை நிறுத்த போவதில்லை என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் உடம்புல இடுப்பு எலும்பு எப்படி ஒரு பாகமோ அது போலவே ஹேண்ட் போனும் ஒரு பாகமாகவே ஆகி விட்டது. yes, hand phone is not our belonging, it is part of our body.

சிகரெட் குடிச்சா கேன்சர் வரும்னு சொன்னாங்க, அதுக்காக சிகரெட் குடிக்கிறதை யாரும் நிறுத்திட்டாங்களா, என்ன? - அதுவும் தவிர சிகரெட் கம்பெனி ஆரம்பித்து நஷ்டமா போன முதலாளி யாருமே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

சிகரெட் அட்டை பெட்டியில் சிகரெட் கம்பெனி காரர்கள் போடுவது போல் "சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது" என்று ஹேண்ட் போன் கம்பெனி காரர்கள் "ஹேண்ட் போன் பயன்படுத்துவது தீங்கானது" என்று போடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில் இது வரை ஹேண்ட் போனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்கள் என்ற ஆதாரம் இல்லை (there is no conclusive evidence for adverse effects) என்று உலக சுகாதார மையம் (WHO) உள்பட அனைவருமே சொல்லுகின்றனர்.

(long long ago so long ago no body can say how long ago) சிகரெட் கண்டுபிடிக்கப்பட்ட போது கூட இத்தனை பேர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஆதாரம் இருந்திருக்குமா? - யோசிக்க வேண்டிய விஷயம். விஞ்ஞானிகள் ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப மாட்டார்கள் (நம்ம தௌஹீது வாதிகள் அல்லது வஹ்ஹாபிகளை போல என்று இங்கே யாரும் அநாவசியமாக ஒப்பிட வேண்டாம்)

ஹேண்ட் போனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கதிர்வீச்சு (ரேடியேசன்) பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

ரேடியேசன் இரண்டு வகைப்படும்.
1. (ionising radiation - alpha, beta, gamma, neutron and x-ray)
அயனைசிங் ரேடியேசன் (ஆல்பா, பீட்டா, காம்மா, நியுட்ரான் மற்றும் எக்ஸ் ரே)
2. (non-ionising radiation - ultraviolet, visible, infrared, microwave/rf, laser, ultrasound)
நான் - அயனைசிங் ரேடியேசன் (அல்ட்ராவயலட், விசிபிள், இன்ப்ராரெட், மைக்ரோ வேவ் அல்லது ஆர்.எஃப்., லேசர், அல்ட்ரா சவுண்ட் ரேடியேசன்)

இதில் அயனைசிங் ரேடியேசன் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக எக்ஸ்ரே வை எடுத்து கொள்வோம். தொழிற்சாலைகளில் பல பயன்பாடுகளுக்காக இதனை பயன்படுத்துகிறோம். உதாரணமாக, வெல்டிங் வைத்த பிறகு உள்ளே தெறிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்கு இதனை பயன்படுத்துகிறோம்.

இதனை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது, இதன் டோஸேஜை சிவர்ட் என்ற அளவில் நாம் அளக்கிறோம். இங்கே சிங்கப்பூரில் ஒரு ஆண்டுக்கு ரேடியேசனில் வேலை பார்க்கும் ஊழியர்கள் (National Environmental Agency - NEA Regulations)சட்டப்படி 20 மில்லி சிவர்ட்டுக்கு மேல் டோஸேஜை உடம்பில் பெறக் கூடாது.  இதுவே அனுமதிக்கப்பட்ட அளவு.

அயனைசிங் ரேடியேசன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும் போது உடனடி பாதிப்பு (acute effect), அல்லது நீண்ட நாட்கள் கழித்து தெரியும் பாதிப்பு (chronic effect) மற்றும் தலைமுறை சார்ந்த பாதிப்பு (genetic effect) ஏற்படலாம். கேன்சர் கூட வரலாம்.

ஆனால் நான் அயனைசிங் ரேடியேசன் என்பது தோல் எறிச்சல் (skin burn) அல்லது கண் பாதிப்பு (eye injury), இந்த இரண்டு பாதிப்புகளை தவிர வேறு எந்த பாதிப்புகளும் இருப்பதாக அறியவில்லை. ஆனால் நான் - அயனைசிங் ரேடியேசன் வகையை சேர்ந்த அல்ட்ராவயலட் எனும் ரேடியேசன் தோல் புற்று நோயை உருவாக்கலாம்.

இப்போது ஹேண்ட் போன் மேட்டருக்கு வருவோம். அது மைக்ரோவேவ் வகையை சேர்ந்தது. இத்தகைய ரேடியேசன் கேன்சரை உருவாக்குவது என்பதெல்லாம் நம்ப முடியாத அல்லது நிரூபிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஹேண்ட் போனின் பவர் அவுட் புட் 6.3 மில்லி வாட்ஸிலிருந்து 600 மில்லி வாட்ஸ் வரை. இந்த பவரை வைத்துக் கொண்டு முட்டையை எல்லாம் வேக வைப்பது சாத்தியமே இல்லை என்று தான் நான் அறிகிறேன்.

என்றாலும் தலைவலி, உறக்கமின்மை, மறதி, சோர்வு போன்ற பாதிப்புகள் வரலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

SAR (Specific Absorption Rate) - என்று சொல்கிறார்களே அது என்ன என்றும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது 'சார்' என்றால் நம் உடலில் எவ்வளவு மைக்ரோவேவ் அல்லது ஆர்.எஃப் ரேடியேசன் உள்ளே செல்கின்றது என்பதை கணக்கிடும் அளவு.

'சார்' அளவு எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கு நல்லது என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக 2 க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று the International Commission on Non-Ionising Radiation Protection (ICNIRP) பரிந்துரை செய்துள்ளது.

இது போக, என் நண்பர் ஒருவர் இங்குள்ள மருத்துவமனைக்கு அவரின் தாயாரை காண சென்றார். அங்கே அவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். அந்த மருத்துவமனையில் போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். அங்கே அவரின் தாயாருக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவருக்கு போன் மூலம் முக்கிய அழைப்பு வந்தது. அவர் மெதுவாக நகர்ந்து போன் பேச போனார். இங்கே தண்ணீர் இறங்குவது திடீரென்று நின்று விட்டது. நர்ஸ் வந்து பார்த்து விட்டு, "இங்கே போன் பேசக் கூடாது என்று போட்டிருக்கோம்ல.." என்று சொன்னதும் அவர் ஆடிப் போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.