Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, March 16, 2012

ஹஜ்ரத் வீடு - சிறுகதை


 1

தெருவாடிகள் சேர்ந்து கிட்டிபில்லு, கபடி, ஐஸ்பால் ரெடி விளையாடும் பருவம். பெருசா ஒண்ணும் வெளையாடி கிழிச்சதில்லை என்றாலும் தெருவாடிகள் யாவரும் ஒன்று கூடி ஆச்சிகனிமா வீட்டு வாசலில் கூடி பைசா பிரயோஜனம் இல்லாத - ஆனாலும் கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காத வீண் பேச்சுக்கள் பேசி மகிழ்ந்த காலமது.

சோத்தை விடவும் சினிமா முக்கியமாக தோன்றிய காலமது. வீடியோ வந்த புதுசு. சின்னாப்பாவுக்கு சினிமா காட்ட வேண்டுமென்பது ஆசை. வீட்டு வாசலில் அட்டையில் ‘இன்று புதுக்கவிதை” என்று எழுதி தொங்க விடப்படும். அதை பார்த்து விட்டு ஒரு ஜமா வீடியோவில் படம் பார்க்க வந்து விடுவார்கள். 

ஒரு முறை சங்கத்த பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு சுரேஷ் நாய் குட்டியோடு நடித்த 'செல்வி' எனும் படம் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக செவத்தை ஒட்டி ஒக்காந்து படம் பார்த்து கொண்டிருக்க, தூரத்திலிருந்து ம்மா பார்த்து விட, கிட்டே வந்து சட்டையை பிடித்ததும், ‘சும்மா வுடுங்கனி..’ என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க.. வுட்டேன் ஓட்டம்.. வாசல் பக்கம்.. 

மூச்சிறைக்க நின்ற இடம்.. சங்கத்த பள்ளி.. (நாகூர் முஸ்லீம் சங்கம், குஞ்சாலி மரைக்காயர் தெரு). நல்ல பிள்ளை மாதிரி ஓதிகிட்டு இருக்கும் போது துப்பட்டியோடு வாசலில் ம்மா வந்து நல்ல பிள்ளையாட்டம் ஓதிக்கிட்டு இருந்த என்னை ஒண்ணும் பேசாமல் வூட்டுக்கு கூட்டிட்டு வந்து.. வாங்க வேண்டியத வாங்கியது எல்லாம் சிரிப்பா சிரிச்ச கதைகள்.

அப்படி ஒரு நாள் ஆச்சிகனிமா வூட்டு வாசல்ல உக்காந்து இக்கிம் போது தான் ஒருத்தஹ வந்து இறங்குனாஹா, ‘கண்ணுல கண்ணாடி, ஒரு பெரிய மேஜர் ஜெனரல் மாதிரியான தோற்றம், கைலி தான், அரை கை சட்டை” இப்படி சகிதமா வந்திறங்கிய அவர்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை.

சின்னாப்பா யாரையும் சத்தம் போடக் கூடாது என்று சைகை காட்டி விட்டு மிகவும் பவ்யமாக அவர்கள் முன்னால் நடந்து சென்றார்கள். 

கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வீடியோ ஓடும் சத்தம் கேட்டு நாங்களும் வீடியோ பார்க்க ஓடினோம்.

வீடியோவில் ஓடிக் கொண்டிருந்த படத்தை விடவும் நான் வந்த அது புது மனுஷரை தான் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.

கையில் சிகரெட். 
நிலைத்த பார்வை.

மொத்த வீடும் கர்ச்சீஃப் விழுந்த சத்தம் கூட இல்லாமல் கப்சிப் என்று இருந்தது.

கொஞ்ச நேரம் காட்சி முடிந்ததும் வெளியே கிளம்பும் போது என்னிடம் வந்து கன்னத்தில் கை வைத்தார்கள்.

சின்னாப்பா இன்னாரின் மகனார் என்று என்னை அறிமுகப்படுத்தி சொன்னதும்..

“வாப்பா நல்லா இக்கிறாஹலா.. சலாம் சொல்லுங்க..”

அடுத்தடுத்த பிள்ளைகள்..

மறைந்து போனார்கள்.

எனக்கு யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

-------------------

2

ஹிலுரு (அலை) அவர்களை பற்றிய வரலாறு குரான் ஷரீஃபில் வருகிறது. அந்த பெயரோடு அல்ல.. ‘நம் அடியார்..’ என்ற அடைமொழியோடு வருகிறது. அவர்களின் பெயரில் தெருமுனையில் ஒரு பள்ளி இருந்தது.

தொழுவுற அந்த பள்ளிக்கு போய் பெண்கள் எல்லாம் கபுரடிக்கு ஜியாரத் செய்ய போவது போல் போய் வந்தார்கள்.

கேட்டால், “ஹிலுறு நபி அங்கே ஹாலிற் ஆகிறார்கள்’ என்று காரணம் சொன்னார்கள்.

சின்னாப்பா தான் டெய்லி பள்ளிக்கு போய் ஹிலுறு நபியின் நினைவாக ஃபாத்திஹா ஓதி வந்தார்கள்.

கொஞ்ச நாளாக போக வில்லை. ஏன் என்று கேட்டால், ‘ஹஜ்ரத் அங்கே போய் ஜியாரத் எல்லாம் செய்யக் கூடாது’ என்றார்கள் என்றும் ‘ஹிலுறு (அலை) அங்கே ஹாலிற் ஆக வில்லை என்றும் கூறுவதாகவும்’ சொன்னார்கள்.

ஹிலுறு (அலை) ஹாலிற் ஆகிறார்கள் என்பதை 101 சதவிகிதம் நம்பி வந்த எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னவர்கள் மீது எனக்கு ஆத்திரமாக வந்தது.

‘இவர்களுக்கு என்னா தெரியும்?’ என்று கேட்டேன்.

’அப்படி சொன்ன ஆள் யார்?’ என்ற தேடலின் விளைவாக தெரிந்து கொண்டது ‘கையில் சிகரெட்டோடு கன்னத்தில் தடவியவர்கள் தான் அது’ என்று தெரிந்த போது கலவரம் கண்ட எங்க ஊர் மாதிரி கதிகலங்கி போனேன்.

அப்படி கலவரமடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தது, அதில் முதன்மையானது, “இவர்கள் ஹஜ்ரத்தா?’ என்பதே அது.

தோற்றம் தான் காரணம்.

கையில் தஸ்பீஹ் இருக்க வேண்டிய இடத்தில் சிகரெட் இருந்தது
முகத்தில் தாடி இல்லை. கிளீன் ஷேவ் பண்ணி இருந்தது.
உட்காரும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்..’ இல்லை
எந்திருக்கும் போது, ‘அல்லாஹு அக்பர்’ இல்லை

இவர்களா ஹஜ்ரத்?

-------------------------

3

நண்பர்கள் ஹஜ்ரத் வீட்டில் நடப்பதை பற்றி கிண்டலடித்தார்கள்.

அவர்கள் வீட்டில் புர்தாஹ் ஷரீஃப் மஜ்லிஸ் ஓதப்பட்டது.

வாரா வாரம் ஞாயிறு இரவன்று ஓதப்படும் இந்த மஜ்லிஸுக்கு வீட்டை கழுவி சுத்தம் செய்யப்படும்.

வஹ்ஹாபிகள் எல்லாம் விரல் நீட்டாத தலையெடுக்காத காலத்தில், ஒரு பக்கத்து தெருவாசி இப்படி கேட்டார், “குரான் பெருசா? (பெருசு என்றால் அதன் சைஸால் அல்ல, புனிதமானதா என்ற அர்த்தத்தில்) புர்தா பெருசா?”

நான், “இதென்ன கேள்வி, ‘குரான் ஷரீஃப் தான் பெருசு..” என்றேன்

அவர், ‘குரான் ஓத கழுவி வுட மாட்டாஹலாம், புர்தாவுக்கு வூட்டையே கழுவி வுடுவாஹலாம்.. பாருங்க.. இதெல்லாம் பித்ஆவாக்கும்.. ஷிர்காக்கும்..’ - வஹ்ஹாபிகளுக்கே முன்னோடி நாங்கள்

இன்னும் ”அதாக்கும் இதாக்கும்” என்று கண்டபடி பேசி கலைந்து போனோம்..

கொஞ்ச நாள் கழித்து, எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, டாக்டர் ஊசி போட்டார், மருந்து மாத்திரை கொடுத்தார், எது கொடுத்தும் தேவலையா போகலை.

எனக்கு எடுத்த பிளட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், எல்லா டெஸ்டுகளுமே என்னை தவிர நார்மலாகவே இருந்தது.

அப்புறம் என்ன...? - ஓதி பார்த்தா என்ன...?

வேறு யார் கிட்டே ஓதி பார்க்குறது? அவங்கள விட்டா...?

கூட்டிட்டு போனார்கள்...

அங்கே உள்ளே போன போது எனக்கு என்னவோ போல இருந்தது.

என்னடா ‘எஹல பத்தி எஹ வூட்ல ஓதுற புர்தா ஷரீஃபை பத்தி அப்படி இப்படி பேசியிருக்கிறோம்.. இப்போ அஹல்ட்டயே ஓதி பாக்க வந்திருக்கிறோமே..” என்று

தெருவாடிகள் பார்த்து விட்டால் என்ன செய்வது? - யோசனையாக உள்ளே போன எனக்கு அதிர்ச்சி...

எந்த பக்கத்து தெருவாசி குரான் பெருசா? புர்தா பெருசா? என்றெல்லாம் கேள்வி கேட்டாரோ - அதே அவர் ஹஜ்ரத்தின் காலை தன் கண்ணில் வைத்து ஒத்தி கொண்டு இருந்தார் -

----------------------------------

4

அந்த பக்கத்து தெருவாசியான அவர் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது அவர் ரூம்மெட் ஒருவர் தூக்கு போட்டுக் கொண்டு உயிரை விட்டார்.

தன்னை சாகடித்துக் கொண்ட அந்த நண்பரிடன் உயிருக்கு உயிராக பழகியிருந்த அவர் அன்றிலிருந்து மனம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.

போகாத ஊரில்லை, பார்க்காத டாக்டரில்லை.. கொஞ்சம் கூட சரியாகாமல் இருந்து வந்தார்.

கடைசியாக அவரது வீட்டில் ஹஜ்ரத்திடம் கூட்டி வந்தார்கள்.

பத்து ஆளுடைய பலத்தோடு கட்டுக்கடங்காமல் கிடந்த அவரை பெரும் படையே கட்டி இழுத்து போய் அவர்கள் முன்னால் நிறுத்தியது.

ஹஜ்ரத் அவர்கள் அப்பொழுது தான் தூங்கி எழுந்த மாதிரி இருந்தார்கள்.

‘அவரை விடுங்கள்..” என்றார்கள்..

ஒரு பார்வை தான் பார்த்தார்கள்...

சுருண்டு விழுந்து விட்டார் அந்த நண்பர்.

அப்பொழுது விழுந்தவர் தானாம். எழுந்திருக்கும் போது புதிய மனிதராக எழுந்து இருந்தார்.

எனக்கு அவர்கள் தலை வைத்து ஓதி பார்த்தில் மருந்தில் காணாத நலம் அன்னாரின் மகத்துவத்தில் நலமாக தான் போயிருந்தேன்.

ஆனாலும் இவையெல்லாம் எனக்கு குழப்பத்தை அதிகரித்தனவே தவிர தெளிவான நிலைக்கு இன்னும் நான் வரவில்லை.

பொதுவாக சூஃபியிசம் வாயிலாக இஸ்லாத்திற்கு நுழைபவர்கள் முதலில் பெரும்பாலும் நோய் வாய்ப்பட்டிருப்பார்கள். யாராலும் குணமாக்க முடியாமல் போயிருக்கும். அதன் பிறகு ஒரு சூஃபியின் சகவாசத்தால் இவரது உடல் குணமாகியிருக்கும்.

இப்படி குணமாக்கும் சூஃபிகள் தங்களை குணமாக்கும் வைத்தியர்களாக விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. போஸ்டர் அடித்து ஒட்டுவதில்லை. அவர்கள் பாட்டுக்கு ஓரிடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களை பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.

இவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, முக்கியமாக மதம், ஜாதி இவைகள் ஒரு தடையே அல்ல. இது முழுமையான மனித சேவை.

சரி, நோய் என்றால் என்ன? அது குரான் ஷரீஃபின் ஒரு வாக்கியத்தையோ அல்லது அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமோ அந்த நோய் குணமாகி விடுமா என்ன? கெட்டுப் போன உடல் உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுமா? மேலே சொன்ன வாசகத்தையோ திருநாமத்தையோ இவர்கள் என்றூ அல்லாமல் வேறு யார் சொன்னாலும் குணமாகி விடுமா? அவ்வளவு சுலபமானது தான் நோய் குணமாகி விடும் என்றால் இவ்வளவு மருத்துவமனைகள் உயிரைக் காப்பாற்ற உயிரை எடுப்பது ஏன்?

- இப்படியாக தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து கொண்டிருந்ததில் மூன்று முடிவுகள் இருப்பதாக ஒரு முடிவுக்கு வந்தேன்.

1. இப்படியெல்லாம் குணமாக்க யாராலையும் முடியாது.

2. இப்படி குணமாக்க இவர்களால் மட்டுமே முடியும். நம்மாலெல்லாம் முடியாது.

3. இவர்களை போல் குணமாக்க நம்மாலும் முடியும்.

இந்த மூன்று முடிவுகளில் ஒன்றே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதை தேர்ந்தெடுப்பது?

5

இறுதியாக, மூன்றாவதை தேர்ந்தெடுத்தேன். ஏன் நாமும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை முயன்று பார்த்து அனுபவத்தில் சரி அல்லது தவறு என்று தெரிந்து கொள்ள கூடாது.

நீச்சல் கற்றுக் கொள்ள முடிவெடுத்தவுடன் டைனிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் எப்படி?

ஹஜ்ரத் அவர்களது வீட்டிற்கே புறப்பட்டேன்.

ஒவ்வொரு நாளும் போய் வாசலில் அமர்ந்து இருப்பேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு என்னை உள்ளே வர அனுமதி தந்தார்கள்.

உள்ளே போய் உட்கார்ந்து இருப்பேன்.

நான்கு மணி நேரம் போய் இருக்கும். நாலு வார்த்தை கூட சேர்ந்தாப்ல பேசியது கிடையாது.

இப்படியே ஒரு வாரம், ஒரு மாதம் கடந்தது.

ஒரு முறை ஒருவர் ஹஜ்ரத் வீட்டிற்கு வந்தார், ஒரு பேப்பர் கட்டிங்கை கொண்டு வந்திருந்தார்.

அதை கொண்டு வந்து, ஹஜ்ரத் அவர்களிடம் காட்டி, “இங்கே பாருங்க... ஹஜ்ரத்.. ஒரு மீனோட படம் இது... இதுல அல்லாஹ்ன்னு எழுதியிருக்கு... நம்ம மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்... இதெல்லாம் குதரத்..” - அது இதுன்னு பில்டப் கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.

எனக்கு அவர் பேச்சை கேட்ட போது புதிதாய் ஒரு வீரம் வந்த மாதிரி..”மாஷா அல்லாஹ்..” என்று பெருமை உணர்வோடு சொல்லிக் கொண்டே திரும்பி  ஹஜ்ரத் அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

அவர்கள் முகத்தில் ஒரு சொட்டு மாறுதல் கூட இல்லை. ஒரு பெருமிதம் இல்லை. இந்த செய்தியை கேள்விபடும் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்பவும் இருந்தது.

என்னா இது, இப்படி இருக்கிறார்கள்...? இதற்கு ஒரு சின்ன ஆச்சர்யம் கூட இல்லையே...?

- யோசித்துக் கொண்டிருந்த போது...

ஹஜ்ரத் அவர்கள் என் பக்கம் திரும்பி சொன்னார்கள், “இந்த மாதிரி செய்திலாம் கேள்வி பட்டுட்டு உங்க ஈமான வளர்த்துகாதீங்க... நாளைக்கு மாட்டுட கன்னுல இவர் உருவம் தெரியுதும்பாங்க... அப்போ அதையும் ஈமான் கொள்ளுவீங்களா...?”

- இப்படியாக இருந்தது அவர்களின் பேச்சு..

உடல் நோய் குணமாக்குவதில் அனுபவம் கிடைப்பது இருக்கட்டும்... எனக்குள் நிறைய மன நோய் இருக்கிறதே அதனை முதலில் குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பட்டது.

அதற்கு எங்கள் ‘ஹஜ்ரத் வீடு’ தான் சரியான இடம் என்பதே நான் கண்ட முதல் அனுபவம்.

Saturday, October 30, 2010

யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க - சிறுகதை

யுனூஸ் நானா கடைல ஒக்காந்திருந்த என்னையும் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே ஆச்சர்யம் தாங்க முடியலை. 'என்னா இது, ஷாஹாவா இப்படி சொன்னது' என்று

அப்படி என்னா ஷாஹா ஊர்ல இல்லாதத பெருசா சொல்லிட்டார்ன்னு கேட்டா ஒக்காந்திருந்த எல்லோருக்கும் 'சுலைமானி' சொல்லிட்டார். அவ்வளவு தான்.

டீக்கடை காரரிடம், 'இந்தாப்பா சலீம்.. நல்ல தக்வாவா சுலைமாணி போடு.. எல்லாருக்கும்.. இன்னைக்கி.. நம்ப செலவுல தான் சுலைமாணி..'

இதிலென்ன ஆச்சர்யம்ன்னு கேட்டா, அவருக்கு எப்போதுமே யுனூஸ் நானாட்ட தேத்தணி சொல்ல சொல்லி நச்சரித்து வாங்கி கேட்டு குடிப்பது தான் பழக்கம்.

ஒரு நாள் கூட தன் சட்டை ஜோப்புலேந்து எடுத்து பத்து பைசா செலவு பண்ணுனது கெடையாது.

ஆனா இன்னைக்கு என்னடான்னா ரொம்ப சந்தோஷமா இக்கிறாரே செலவுலாம் செய்றாரேன்னு என்னான்னு  தெரியலையேன்னு  நாகூர் யுனூஸ் நானா அலைவரிசைல ஒக்காந்திருந்த ஒட்டு மொத்த ஜமாவுக்கு இருந்த ஒரே ஆச்சர்யம்.

ஷாஹாக்குன்னு பெருசா வேலை வெட்டியெல்லாம் ஒண்ணுமில்லை, ஊர்ல, இவர் பொண்டாட்டிகிட்ட எப்பவோ நல்ல செம்மத்தியா அடி வாங்கினத அரசல் புரசலா தான் பேசுவாங்க.. ஆனா இவர் அன்னாடம் ஏச்சு வாங்குறத தான் அசராம பேசுவாங்க..

ஒரு தடவ ஷாஹாட புள்ள அவர வெளையாட கூப்டிச்சு, 'வாப்பா வாப்பா எங்கூட வெளையாடறீங்களா..?'

'வெளையாடாதேம்மா.. நீ வேற.. வெளையாடுற நெலமைலயா நான் இக்கிறேன்' ஷாஹா மறுத்தார்

'இல்ல இல்ல வாப்பா.. இது ரொம்ப ஈஸி.. நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டே இக்கணும்.. யாரு மொதல்ல சிரிக்கிறாஹலோ அஹ அவுட்..'

பல தடவ வெளையாடியும் ஷாஹா தான் ஜெயிச்சார்

'எப்படி வாப்பா... நீங்க சிரிக்காமலே இக்கிறீங்க..'

'ஒங்க ம்மாவ தாம்மா நெனைச்சிகிட்டேன்..'

தெனாலி கமலஹாசனும் இவரும் ஒண்ணு - ரெண்டு பேரும் எத பாத்தாலும் பயப்படுவாங்க.. ஆனா ஒரே ஒரு வித்தியாசம் இவருக்கு எத பாத்தாலும் அல்லது யார பார்த்தாலும் பொண்டாட்டியா தான் தெரியும்.


ஓரு முறை ஷாஹாவின் பொண்டாட்டியிடம் வேலைக்கார பெண்மணி ஒருத்தர் இப்படி கேட்டார், 'என்னம்மா காசு 2 ரூவா கூட கேட்டதுக்கு வேலக்காரியவே மாத்திட்டீங்களே..?' என்று

அவர் ரொம்ப கூலா ஜாய் ஐஸ் கிரீம் குடிச்சிகிட்டே இப்படி சொன்னார், "நீ வேற புள்ள,  1 ரூவா கூட கேட்டாக்கா இந்த நிக்கிறாஹலே (ஷாஹாவை கைகாட்டி) என் மாப்பிள்ளையையே மாத்திடுவேன்..'

ஷாஹா, 'நான் எப்போ கூட கேட்டேன்..?' என்று அலறினார்.

மாற்றம் ஒன்று தான் மாறாதது போலும்..!

டில்லி கா லட்டு
ஜோ காயேகா
ஓ போஸ்தாயேகா
ஜோ பி நஹி காயேகா
ஓ பி போஸ்தாயேகா

- அதாகப்பட்டது..

டில்லியில் கிடைக்கும் லட்டு -
இதனை சாப்பிட்டவர்கள் -
அவதிப்படுகிறார்கள் -
(இன்னும்) சாப்பிடாதவர்கள் -
(இவர்களும்) அவதிப்படுகிறார்கள்

ஷாஹாவின் புலம்பல் தான் இது -

டில்லி கா லட்டு தான் ஷாஹாவின் கல்யாணம்.

மதர்ஸ் டே, பாதர்ஸ் டே எல்லாம் கொண்டாடுவாங்க தெரியுமா? அதாவது அந்த நாளைக்கு மட்டும் ம்மாவ, வாப்பாவ போய் பாத்துட்டு வந்துடுறது, அந்த மாதிரி ஒய்ஃப் டேன்னு ஒண்ணு வந்தா ஷாஹாக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்.. ஏன்னா அந்த நாள்ல மட்டும் போய் பாத்துட்டு வந்துடலாம்ல.. அதனால தான்..

பேக் டு யுனுஸ் நானா கடை,  'என்னாங்கணி, ஷாஹா.. இன்னைக்கு என்னா ரொம்ப சந்தோஷமா இக்கிறீயோம்... என்னா விஷேஷம்..' என்று ஆளாளுக்கு கேட்டதுக்கு

'என் பொண்டாட்டிக்கு பல்லுல வலின்னு டாக்டர்ட்ட போனதுக்கு டாக்டர் பல்ல புடிங்கி ரெண்டு நாள் பேச கூடாதுன்னு டாக்டரு சீதேவி மனுஷன் அடிச்சி சொல்லிட்டாரு.. அதனால தான்..' என்று  சொன்னதோடு 'யார்ட்டயும் சொல்லிடாதீங்கள்வோ' என்று ஒரு பத்து பேரு இருந்திருப்போம் அத்தனை பேர் கிட்டேயும் சொல்லி விட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு, பஹ்ருதீன் வந்து, எல்லோரும் சிரிச்சிகிட்டு இருந்தத பார்த்து 'என்னா'ன்னு கேட்டதுக்கு, எல்லோரும், 'பஹ்ருதீண்ட்ட சொல்லிடலாமான்னு'  ஷாஹா பக்கம் திரும்பி ஷாஹாட்ட கேட்டதுக்கு ஷாஹா ஸ்டைலா வாயில இருந்த சிகரெட்ட எடுக்காமலே கையை அசைத்து அசைத்து ஏதேதோ சொன்னார், அதன் அர்த்தம் சொல்லலாம்.. வேற யார் கிட்டேயும் சொல்ல கூடாது என்று அர்த்தம்.

ஆனா ஒண்ணுங்க, யாரு சொல்றாங்களோ இல்லையோ, நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன்.

Friday, August 06, 2010

அது என் சொந்தக்காரர் தான்.. (சிறுகதை)

வெளிநாட்டிலிருந்து ஒருத்தர் ஊருக்கு வருகிறார் என்றால் அவரை ஏர்போர்ட்டுக்கு போய் இறக்கிட்டு வருவதும் வந்தவுடன் பொட்டி பிரிப்பதுமென ஊடே (வீடே) அல்லோலகல்லோலப் படும். 

அப்படி தான் என்னை என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் தன்னோட மகன் வெளிநாட்டிலிருந்து வருவதாக கூறி பஸ்ஸில் டிக்கெட் எடுத்துகிட்டு கூட்டிட்டு போனார். அவரு கிட்டே இருக்கிற காசுக்கும் பணத்துக்கும் அவர் கார அல்லது வேன புடிச்சேஎன்னய கூட்டிட்டு போவலாம். ஆனா அவருக்கு இருக்கிற மனசுக்கும் மூளைக்கும் பொடி நடையா கூட்டிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..!

என்னய கூட்டிட்டு போய் அவரோட சொந்தகாரங்க எடத்துல தங்க வைச்சார். நான் தங்கியது அவரோட சொந்தக்காரரின் வீடு எல்லாம் கிடையாது. அது ஏதோ குடோன் மாதிரின்னு வச்சுக்குங்களேன். அங்கே தான் தரையில் பழைய பாயில் என்னை படுக்க சொன்னார். இரவு சாப்பாடு.. அந்த சொந்தகாரர் கொடுத்த ரொட்டி எனும் புண்ணியத்துல கால் வயித்த ரொப்பியாச்சு.. அல்ஹம்துலில்லாஹ்..!

அடுத்த நாள் காலைல.. தேத்தணி குடிச்சதோட என்னய பஸ்ஸுல ஏத்தி ஏர்போர்ட்டுக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சார். நம்ம ஊர் விமானம் என்னக்கி சொன்ன நேரத்துக்கு வந்திருக்கு. அது எப்போதுமே விழாவுக்கு வர்ர விஐபி ங்க மாதிரி லேட்டா தான் வரும். டிவில போட்டுட்டான், ஃபிளைட் 4 மணி நேரம்.. லேட்.. 


10 30 அல்லது 11 மணிக்கு வர வேண்டிய பிளைட் 3 மணியாகியும் இன்னும் தரையிரங்கலை.. 


இது இப்படியே இருக்கட்டும்.. ஒரு சின்ன பிளேஷ் பேக்..


சின்ன வயசுல நாகூரிலிருந்து காரைக்காலுக்கு போற வழியில இருக்கிற மேலப்பள்ளியில எனக்கு பூட்டியா முறை வேண்டும் அவர் தங்கியிருந்த போது, காரைக்கால் வாசியான அவர்களை போய் பார்த்து விட்டு காரைக்காலில் உள்ள சாந்தி தியேட்டர்ல சிவாஜி நடிச்ச ‘என் மகன்’ படம் பார்க்க போவதாக பிளேன்.


எங்க பூட்டியா மேலபள்ளியில நேந்துகிட்டு வந்து தங்கியிருக்காஹா.. ஆனாலும் நாங்க போனோம்னு சொல்லி உடனே அங்கே இருந்த புள்ளைங்கள வுட்டு கடைல போய் காரம் வகைலேந்து இனிப்பு வகைலேந்து இன்னும் என்னென்னமோ வாங்கிட்டு வந்து நாளாம் நீருக்கு மாப்பிள்ளைக்கு பரத்துர மாதிரி பரத்திட்டாஹா..


நான் என்னா செய்யணும், என் தட்டுல வச்சிருக்கிறத பாதி மட்டும் சாப்டுட்டு மீதிய அப்டியே வச்சிருந்தா எனக்கும் விஜயகாந்த நடிச்ச மரியாதையும் சிவாஜி நடிச்ச கவுரவமும் கெடைச்சிருக்கும்


நான் என்னா செஞ்சேன், என் தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. எங்க ம்மா தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. ‘ம்மா இன்னும் கொஞ்சம்..’ என்று சொல்லியிருக்கேன்.. 


எங்க பூட்டியா, ‘புள்ள என்னா சொல்றாரும்மா..’ என்று கேட்டு வைக்க..


எங்க ம்மா ‘ஒண்ணுமில்லம்மா..’ என்று சொல்லி விட்டு தேத்தணிய கொடுத்து ‘இத குடி’ ண்டாஹா


நான் அதையும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ என்று கேட்ட வாசி எங்க ம்மா அஹ குடிக்க வச்சிருந்த டீயையும் கொஞ்சம் ஊத்தி கொடுத்திருக்காஹா.. நான் அதுலயும் சொட்டு கூட வுட்டு வைக்காம குடிச்சி முடிச்சிட்டு ‘ம்மா.. இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டதற்கு தேத்தணி கிளாஸ்ல கடைசில இருக்கும்ல ‘மண்டி’ன்னு சொல்வாஹா எங்க ஊர்ல, அத ஊத்தி கொடுத்து ‘குடி’ண்டாஹா..


புள்ள அதயும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ண்டு கேட்டிருக்கு.. ம்மாக்கு வந்துச்சு ஆத்திரம்.. தொடையை புடிச்சு ஒரு திருவு.. வச்சேன் அழுவை(கை)ய.. 


எங்க பூட்டியா, ‘ஏன்.. ஏன்’னு ஓடி வந்து என்னய சமாதானப்படுத்தி ஒரு வழியா அழுகையை நிறுத்தினாஹா..


அதன் பிறகு ஏன்னே தெரியல.. கார்ல வச்சு.. எனக்கு சரி ஏச்சு.. சரி கில்லு.. சரி அடி..


அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன், ‘சீக்கிரமா வாங்க.. படம் போட்டுற போறான்..’ ண்டு தானே சொன்னேன்.. இதுக்கு போய் ஏன் என்னய அந்த ரேஞ்சுக்கு அடிக்கணும்.. ஏசணும்..


சரி.. சரி.. 


விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்..


இப்படியா பட்ட நான், காலைலேந்து பல்லு வெளக்குன போது வாய்ல பட்ட பச்ச தண்ணியோட உட்காந்து இருக்கேன்.. என் வயிறு கடுமையா கூவ ஆரம்பிச்சுடிச்சு..


அந்த சொந்தக்காரர் ’சாப்பிடலாமா’ன்னு வந்து கேட்டாக்கா.. உடனே ‘பசிக்கிது’ன்னு சொல்லி நல்லா ஒரு புடி புடிக்கணும்னு நெனைச்சிகிட்டு அந்த சொந்தகாரரை தேட ஆரம்பிச்சேன்..


தேடுனப்போ வராம ஃபிளைட்ட மாதிரியே லேட்டா தான் வந்தார்.. வந்து என் பக்கத்துல ஒக்காந்தார், ஒக்காந்தவர் வாய தொறந்தார், ‘பெரிய ஆச்சர்யம் தம்பி.. கொஞ்சம் கூட பசிக்கவே இல்ல பாருங்களேன்..’ என்றாரே பார்க்கலாம்


நான் மனசுக்குள், ‘யோவ்.. யோவ்.. பசியே இல்லையா.. இப்போ எனக்கு இருக்கிற கொல பசிக்கி பழைய சோற கொடுத்தாலே மறு சோறு வாங்கி கேட்டு வெறும் மொளவு தண்ணிய (ரசம்) மட்டுமே ஊத்திகிட்டு ஒரு மரவ நெறயா உண்பேனய்யா.. யோவ்.. இதுலாம் அநியாயம்யா.. காசு பணம் இல்லேன்னா சரிங்கலாம்.. நீயெல்லாம் இப்படி பண்றியேய்யா..’ 


நான் நேரில், ‘ஆமா.. பசியே இல்ல.. ஆனா இதுல ஆச்சர்யம் ஒண்ணுமில்ல..’ என்றேன்..


அதனை தொடர்ந்து அவர் மகனார் வந்து அவர்ட சாமானெல்லாம் நானும் சேர்ந்து தூக்கி ஆட்டோ புடிச்சு நேரா ஏர்போர்ட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாச்சு..


அன்னாரின் மகனார், ‘மதியானம் என்னா சாப்டீங்க..?’ என்று கேட்டார். சத்தியமா சொல்றேன்.. அது அவரா கேக்கலங்க.. அல்லா தான் அவர அப்படி கேக்க வச்சான்..மாஷா அல்லாஹ்.. 


‘நான் ஒண்ணுமே சாப்டலே..’ என்றதும் அவர் பதறிப் போய் ஓடிப் போய் டீ ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட கொடுத்தார்


வாப்பாக்கு மகனார் தப்பி தான் பொறந்திருக்கார்..


தேத்தணி குடிச்சேன்.. ரொட்டிய கடிச்சேன்..


ஒட்டகத்துக்கு ஓமப்பொடி..


பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம்..


வாப்பாவும் மகனாரும் மொதோ சீட்ல ஒக்காந்துட்டாஹா


நான் தனியா நடுவுல உள்ள ஒரு சீட்டுக்கு போயிட்டேன்..


என் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார்.. 


நான் புன்னகைத்தேன்..


அவர் கை கொடுத்தார்..


இருவரும் பேசிக் கொண்டோம்.. கொஞ்ச நேரம் பேசிய போதே ‘நைஸ் மீட்டிங்..’ என்றார்.


நானாவது பரவாயில்லை.. நேத்து ஒரு ராத்திரி தான் புது எடங்கறதாலயும் கொசு கடிங்கறதாலயும் தூங்கலை.. 


அவர் பாவம்.. ஏதோ வேலையா அலைஞ்சு ஒரு வாரமாவே சரியா தூங்கலயாம்..


பஸ்ஸில் ஒரு சீட் கூட காலியில்லாமல் எல்லா இடமும் நிரப்பப்பட்டது..


பீயமானில்லாஹ்..


பஸ் கெளம்பிடிச்சு..


சற்று நேரத்தில் தூக்கமின்மையோட பசி மயக்கமும் பஸ்ஸின் ஆட்டமும் இப்படி எல்லாமா சேந்து ஒரு தாலாட்டு பாட தூக்கம் கண்களை தழுவிக் கொண்டது


திடீர்ன்னு நல்லா ‘நங்’குன்னு ஒரு சத்தம்.. ஒண்ணுமில்லை.. நான் தான் தூக்கத்துல என் பக்கத்துல ஒக்காந்திருந்த அவர நல்லா முட்டிட்டேன்..


திடுக்கிட்டு முழுச்சி, ‘சாரி.. சார்..’ என்றேன்.. அவர் தலையை தடவிக் கொண்டே ‘பரவாயில்ல.. பரவாயில்ல.. ரோட்ட பாருங்க.. பள்ளமும் படுகுழியுமா இருக்கு..’ என்று கவர்மெண்ட்டின் கரப்சனை திட்டிகிட்டே தூங்கி போனார்.. 


அவர் முடிக்கிறதுக்கு முன்னாடியே நான் தூங்கியிருந்தேன்..


கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா இந்த முறை ‘நச்’சுன்னு ஒரு சத்தம்.. 


அதே தலை.. 


தலையில அதே இடம்..


கொஞ்சம் கடுப்பா தான் ஆயிட்டார்.. 


நான் எந்திரிச்சிட்டேன்.. ‘சாரி சார்.. நான் வேணும்னு இடிக்கல..’ என்றேன்..


அவர் வாயே தொறக்கல.. அப்படியே சைகைலேயே ‘உட்காரு..’ என்பது போல் கையை கீழே ஆட்டினார்..


அந்த நேரத்துல இவ்வளவு வெபரமா எல்லாம் புரியல.. என்னய தான் பக்கத்துல கூப்ட்டு ஏதோ ரகசியம் மாதிரி சொல்ல போறாரு போலருக்குன்னு நெனைச்சுகிட்டு கிட்டே போனேன்.. என்ன புடிச்சு தள்ளி ‘உட்காருய்யா..’ என்றார் கோவமாக..


‘இப்படிங்கறேன்..’ ண்டு கையை மறுபடியும் ஆட்டி காண்பித்து ‘இது புரியலை..’ என்றார்..


நான் மறுபேச்சு பேசாம ஒக்காந்தேன்..


இனிமே தூங்கவே கூடாது.. கங்கணம் கட்டிக் கொண்டு நான்..


நானா தூக்கமா இன்னைக்கு யாருன்னு பார்க்கலாம்..?


கடைசில தூக்கம் தான் ஜாலியா ஜெயிக்கலாம்னு ஜெயிச்சிடிச்சு.. 


யெஸ்.. தூங்கி விட்டேன்..


இந்த முறை முன்னாடி ரெண்டு முறை உள்ள ‘நங்’கையும் ‘நச்’சையும் சேர்த்து ஒரு ‘நங்ச்’ன்னு இடிச்சா எப்படி இருக்கும்..


எவ்வளவு தான் பொறுப்பார் மனுஷன்.. 


“யோவ் நீயெல்லாம்.. எதுக்குய்யா பஸ்ஸ எடுக்குறே.. இப்படி தூங்குற ஆளு கார்ல வேன்ல போவ வேண்டியது தானே..” என்று காட்டமாய் கத்தினார்.


முன்னாடி சீட்டிலிருந்து ஒரு குரல், ‘ம்.. போருமே.. அதுக்கு (எதுக்கு..? காருக்கும் வேனுக்கும்..) நீம்பரா காசு கொடுப்பீயோம்..’ என்று 


பக்கத்துல ஒக்காந்திருந்தவர் ‘அது யார்டா அது?’ என்று முழிக்க நான் சொன்னேன்..


அது என் சொந்தக்காரர் தான்

Wednesday, November 25, 2009

பொட்டி சோறு - 2 (சிறு கதை - இரண்டாவது இறுதி பகுதி)

பொட்டி சோறின் முதல் பந்தி இங்கே பரிமாறப்படுகிறது

பூட்டி கெடந்த வூட்டை பாத்து கலவரமாகி போனான் சலீம். ரெண்டு விஷயம் மண்டைக்குள்ள நஹரா கொட்டியது. ஒண்ணு 'ம்மா வூட பூட்டிட்டு எங்கே, எப்போ போனாஹா..?' ரெண்டு, 'இந்த நிஜாம் பய வந்து சோத்த குடுத்துட்டானா, இல்லையா..?' -

அந்த சிறுமி 'இப்ப என்னா செய்றது..? எனக்கு அந்த சோறு வேணுமே..?' என்றாள்.

'வேணும் தான், தெரியுமே.. இப்ப ம்மா ஜேபா மாமி வூட்டுக்கு தான் போயிருப்பாஹன்னு நெனைக்கிறேன்.. நான் போய் பாத்துட்டு வந்துடறேன்,' என்று சொல்லி முடிக்கங் காட்டியும்

'நானும் உங்க கூட வர்ரேன்..' என்றாள்

'வாணா.. வாணா.. நீ வர வாணா.. நான் போய்ட்டு வர்ரதுக்கெடைல நிஜாம் சோற கொண்டுகிட்டு வந்துட்டாண்ணா நீ வாங்கி வச்சுக்க.. நான் இந்த ஓடியாந்துடுறேன்..' என்று ஓட்டமும் நடையுமாக நாலு தெரு தள்ளியிருந்த ஜேபா மாமி வீட்டுக்கு ஓடிநடைனான்

ஜேபா மாமி வீட்டு வாச கதவு உள்ளக்க பூட்டியிருந்ததால சலீம் வாச பில்லை அடிச்சான்

உள்ளே ஜேபா மாமி பேசும் சத்தம் கேட்டது, 'இந்தாம்மா ரஜியா.. வாச கதவ யாருன்னு கேட்டு தொறங்க..' என்றார்கள்

ரஜியா ஓடியாந்து 'யாரு?'ன்னு கேட்டுட்டு கதவை தொறந்து வுட்டு, 'சலீம் நானா..' என்று சொல்லி விட்டு ஓடிப் போய் அடுப்பங்கறையில் மறைந்து போனாள்.

'சலீமு.. வாயேன்.. ' என்றார் ஜேபா மாமி

'வூட்டு சாவி இங்கேயா இருக்கு.. ' என்று எப்போதும் சாவி இருக்கும் சாவி மாட்டுற கூடத்தறை வாச பக்கம் பார்வைய திருப்பி அங்கே இருந்த வூட்டு சாவிய பாத்ததும் 'அப்பாடா.' என்று எடுத்து திரும்பினான்..

'ம்மா.. நாவப்பட்டிணம் போயிருக்காஹா.. வூட்டுவொல்வோக்கு போயிட்டு கடத்தெருவுக்கும் போயிட்டு தான் வருவேண்டாஹா.. கூட பாத்திமா சபுரா போயிருக்கா..' என்றார் ஜேபா மாமி

'சரி.. நான் வூட்டுக்கு போயிட்டு வர்ரேன்.' என்று கெளம்பியதும்

'உட்காரு.. இப்ப தானே வந்தா.. அதுக்குள்ள கால்ல நெருப்ப அள்ளி கொட்டிகிட்டு எங்கே கெளம்புறா..? இங்கே சாப்புடேன்.. தர்ஹா சோறு கொஞ்சம் இருக்கு.. தொட்டுக்க மூளை இருக்கு.. முட்டை இருக்கு.. அப்டியே கடுவ பெரட்டிகிட்டு சாப்டா ரொம்ப ஜோரா இக்கும்.. ஒனக்கு புடிக்குமே.. சாப்டேன்..' என்றார்.

'தர்ஹா சோறா..?.. ம்மா எடுத்துட்டு வந்ததா..?' பதறினான்

'இல்ல.. இல்ல.. இப்ப தான் தர்ஹால இருப்பான்ல நிஜாம் அவன் வந்து கொடுத்துட்டு போனான்.. நம்ம வூட்டுக்கு எப்பவும் வரும்ல.. அதனால பரவால்லா.. நீ சாப்டேன்.. வச்சு தரவா..?' என்று கேட்டு முடிப்பதற்குள் போன் அடித்தது..

'செத்த போன எடும்மா..?' என்றார் ஜேபா மாமி

போன எடுத்து, 'ஹலோ.' என்றான் சலீம்

'யாரு சலீமா.. இங்கே தான் இக்கிறியா.. நல்லதா போச்சு.. அதான் சொல்லாம வந்துட்டேனேன்னு தான்.. ' என்றார் சலீமின் தாயார் ரஹ்மத்

'ஏம்மா.. எங்கேந்து பேசுறீங்க..' என்றான்

'நா ஹலிமா மாமி வூட்லேந்து தான் பேசறேன்.. காசிம் சொன்னாரா..?' என்று கேட்டார் சலீமின் தாயார்.

'நான் காசிம பார்க்கவேயில்லையே.. ஏன் என்னா சொல்வார்?' என்று கேட்டான் சலீம்

"ஒண்ணுமில்ல.. தர்ஹாலேந்து பொட்டி சோறு வந்துச்சு..  மேச மேல தான் துத்திப்ப போட்டு மூடி வச்சிருக்கேன்.. நான்  கொஞ்சம்  தப்ரூக்க வாயில  போட்டுகிட்டேன்.. எஜமாண்ட தலைக்கு மேல..  வாப்பாக்கும் தம்பிக்கும் கொஞ்சம் தப்ரூக் எடுத்து வச்சுட்டு நீயும் சாப்புடு.. அப்புறம் வூட்லேயே இருந்துக்க காசிம் ஒரு சாமான் கொண்டு வந்து கொடுப்பார்.. வாங்கி அலுமாரில வச்சுடு..' என்று படபடன்னு பேசிட்டே போவ சலீம், 'ம்மா.. ம்மா..' ன்னு இழுத்து விஷயத்தை சொன்னான்.

ம்மா விஷயத்தை பொறுமையா கேட்டுட்டு 'ம்'ன்னு சொன்னவொடனே சாவிய எடுத்து சட்ட ஜோப்புல போட்டுகிட்டு ஜேபா மாமிட்ட 'கதவ கொலுக்கு போட்டுகுங்க.. இந்த வந்துடறேன்னு..' சொல்லிட்டு தெரு வாச பக்கம் தலை தெறிக்க ஓடினான்.

மூச்சு முட்ட, வேர்வை சொட்ட, கண்ணு கட்ட, காலு கடுக்க ஓடி வந்தான்.

வாசல்ல இருந்த படில ஓரமா ஒக்காந்துட்டு ஓடி வர்ரத பாத்து எந்திரிச்சு நிக்கிற அந்த சிறுமியிடம், 'இன்னும் ஒரு நிமிஷத்துல ஒன் கைல பொட்டி சோறு.. எங்கே சிரி..' என்று சொல்லி விட்டு ஜோப்புல கைய வுட்டான்.. சாவிய காணோம்..

'அல்லாஹ்வே.. இது என்னா இது.. அதாபு.. எங் கூடவே அலையுது.. சாவிய எங்கே போட்டேன்..' என்று கீழே பார்த்தான்.. வாச படி கிட்டே கீழே இறங்காமலே பார்வையை நீட்டி அலைய விட்டான்.

'சாவிய எடுத்துட்டே வரலயா..?' கவலையோடு கேட்டாள்

'இல்ல.. எடுத்து ஜோப்புல வச்சேன்.. நல்லா தெரியும்.. வழில தான் எங்கேயோ வுழுந்திருக்கணும்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. நான் போய் தேடி பார்க்கிறேன்..' என்று வாசல வுட்டு எறங்கிய விநாடி 'டுப்..' கரண்ட் கட்டாயிடுச்சு..

'அல்லாஹ்வே.. இந்த இருட்டுல எங்கேந்து போய் சாவிய தேடுறது..கொஞ்சம் பொறு.. இப்ப கரண்ட் வந்துடும்.. எங்கேயும் போயிருக்காது நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்..' என்று இருட்டில் நின்ற அந்த சிறுமியை பார்த்து பேசினான்

போன கரண்ட் செத்த நேரத்துலேயே அதிசயம் ஆனால உண்மையாக வந்து விட்டது. 'இங்கேயே இரு.. சாவியோட வர்ரேன்..' என்று சொல்லி விட்டு ஓடி மறைந்த திசையையே வெறிச்சு வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்த அவளை, 'யாரும்மா நீ.. என்னா வேணும்..? இங்கே ஏன் ஒக்காந்து இருக்கிறே..?' - என்று ஒரு குரல் கேட்டு திரும்பினாள்.

அவள் பதில் சொல்ல வாயெடுத்த விநாடி சலீம் வந்து விட்டான் சாவியோடு 'இங்க பக்கத்துல தான் விழுந்திருக்கு..' என்று கூறிக் கொண்டு.

'சலீமு.. யாரிது?' - என்று கேட்டார் காசிம் என்ற பெயருடைய அவர்

'நமக்கு தெரிஞ்ச புள்ள தான்.. அது இருக்கட்டும்.. ம்மா ஏதோ சாமான் கொடுப்பியோம்னு சொன்னாஹலே..' என்றான்

'ஆமா.. இந்தாரும்..' என்று அந்த பையை எடுத்து தந்து, 'இத அப்டியே பத்தரமா வச்சுடும்.. நான் வந்து ம்மாட்ட பேசிக்கிறேன்..' என்று போய்ட்டு ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்ப வந்து, 'சொல்ல மறந்துட்டேனே.. ம்மா சொல்ல சொன்னுச்சு.. பொட்டி சோறு மேசைல இருக்காம்.. கொஞ்சம் தப்ரூக் எடுத்துக்கிட்டு வாப்பாக்கும் தம்பிக்கும் வக்க சொன்னுச்சு.. நா வரட்டுமா..?.. சாமான் பத்தரம்..' என்று போய் விட்டார்

சலீம் கதவை திறந்தான். 'உள்ளே வா..' என்று அவளையும் கூப்டுகிட்டு உள்ளே போய் வெளக்க அடிச்சு வுட்டு மேச மேல இருந்த பொட்டி சோற எடுத்து அந்த சிறுமி கைல கொடுத்து, 'அப்பாடா..! இப்ப சந்தோஷமா..? இது ஒன்னோட ரிஜ்க்' என்று கையில் கொடுத்தான்

அந்த சிறுமி அப்படியே நின்றாள், 'ஏன்.. அப்டியே நிக்கிறே? போய் உங்க ம்மா கூட சாப்டேன்.. தேடிகிட்டு இருப்பாஹல்ல..' என்றான்

'உங்க ம்மா வந்தா திட்டுவாங்க..' என்றாள்.

'நான் ம்மாட்ட டெலிபோன்ல சொல்லிட்டேன்.. நீ எடுத்துட்டு போ..' என்றான்.

'இல்லை.. நான் போறேன்..' என்று பொட்டி சோறை மேச மேலேயே வச்சுட்டு விறுவிறுவென திரும்பி பார்க்காமல், 'நில்லு..' ன்னு சலீம் கூப்ட்டு கத்துவதை காதுல வாங்காமல் ஓடிப் போய் மறைந்து போனாள்.

சலீம் 'ப்ச்ச்..' என்று அலுத்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு , பிறகு காசிம் கொடுத்த சாமானை அலமாரியில் வைத்தான்.

திரும்பவும் பள்ளிக்கு தொழுவ போவலாம்னு வாச கதவ பூட்டி தர்ஹாக்கு வந்தான். அலங்கார வாச கிட்டே வந்ததும் நவாப் சிரித்து கொண்டே  தர்ஹா உள்ளேயிருந்து வெளியே வந்தான்.

'ஏன்.. என்னா அது.. ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..' என்றான் சலீம்

'இப்ப தான்.. உம்பர் கூட வந்துச்சுல்ல அந்த புள்ளைய பாத்து பொட்டி சோற கொடுத்துட்டு வர்ரேன்..' என்றான் நவாபு

'அப்டியா..?.. உம்பர்க்கு ஏது..? உங்க வூட்றேயா?' - என்று ஆச்சர்யம் மேலிடவும் மகிழ்ச்சி பொங்கவும் கேள்வியையும் பதிலையும் கேட்டான் சலீம்

'ஆமா.. நீம்பர் கொடுக்க சொன்னதா சொல்லி கொடுத்துட்டேன்.சரி.. நான் ஹாரீஸ் நானா கடைக்கு போறேன்.. வர்ரீயமா..?' என்றான் நவாப்

'ம்.. வர்ரேன்.. இந்த போய் இஷா தொழுவிட்டு வந்துர்ரேன்..' என்று சொல்லிவிட்டு நவாப் பள்ளி என்கிற பெரிய ஹொத்துவா பள்ளில உள்ளே பூந்து செருப்பை வச்சிட்டு சட்டை கைல உள்ள பொத்தானை விடுவித்து கையை மடிச்சு வுட்டுகிட்டே ஹௌதை நோக்கி ஒலு செய்றதுக்காக போன போது பள்ளில இருந்த போர்ட்ல சாக்பீஸால் எழுதியிருந்த ஹதீஸ் சலீமின் கண்களில் பட்டது

'உங்களில் எவர் பெரியவர் மீது மரியாதையும் சிறியவர் மீது அன்பும் பாராட்டவில்லை அவர் என்னை சேர்ந்தவர் அல்ல.. - நபிமொழி"

Monday, November 23, 2009

பொட்டி சோறு - 1 (சிறு கதை - இரண்டு பகுதிகளாக வரும்)

பெரிய ஹொத்துவா பள்ளில மஹ்ரிபு தொழுவைய முடிச்சிட்டு வெளியே வந்து மனாராக்கு கீழே சாஞ்சு ஒக்காருரது தான் சலீமுக்கு வழக்கம். பருவே இல்லாத பளிங்கு முகம் அவனுடையது. தலையில அஜ்மீர் தொப்பி. வெள்ளை கைலி, ஊதா கலர்ல பிளேய்ன் சட்டை சகிதமாக மருவண்டி உடுற ராவண்ணக்கி ஒக்காந்திருக்கிற மாப்பிள்ளை மாதிரி உக்காந்திருந்தான்

அவன நாகூர்காரங்க பாத்தா 'வெளியூரா?..' ன்னு கேப்பாஹா..ஏன்னா வெளி தெருவு பழக்கம் அதிகமில்ல.. ஒரே ஒரு கூட்டாளி நவாபுன்னு பேரு.

வெளியூர் காரங்க பாத்தா நாகூரான்னு கேப்பாஹா..  மடிப்பு கலையாம கைலி உடுத்துர அழகும் ஒரு காரணம்.

தாழிச்ச சோறின் வாசம் காத்துல கலந்து வந்து பசியை கெளப்பி விட்டது சலீமுக்கு. தர்ஹால எப்போதும் யாரு பேர்லயாவது பாத்திஹா ஓதி சோறு கொடுத்துகிட்டே தான் இருப்பாஹா. ஒண்ணு தர்ஹாலயே சோறு ஆக்கி போடுவாஹா. இல்ல தர்ஹாக்கு வர்ர பக்தர்கள் யாராவது சோறு ஆக்கி போடுவாஹால்வோ. வருஷம் பூரா இப்படி தான், சோத்து மழை தான் பெய்யும்.

சோறை பொட்டில போட்டு பவுந்துகிட்டு இருந்தாஹா. அதுக்கு பொட்டி சோறுன்னு அல்லது தர்ஹா சோறுன்னு பேரு.

சின்ன புள்ளைல்வோலேந்து பெரிய மனுஷர் வரைக்கும் பெரும் கூட்டம். நான் நீன்னு  கையை நீட்டிகிட்டு முண்டியடிச்சிக்கிட்டு நிக்க கூகூன்னு சத்தத்துக்கு நடுவே அந்த கூட்டத்துலேயே சின்னதா இருந்த அந்த சிறுமியை கிட்டேயே நெருங்க வுடாம தடுத்து கொண்டிருந்தது அந்த கூட்டம்.

அந்த பொட்டி சோறு பசியும் பக்தியும் சம்மந்தப்பட்டது, அதை தர்ஹா  சோறு என்பார்கள்.  அதே சோறை அதே பண்டாரி வச்சு அதே பதத்துக்கு எடுத்து பார்த்தாலும் தர்ஹா சோத்து வாசத்துல பாதி வாசம் கூட வராது. எல்லா ஊருக்கும் மண் வாசனை என்றால், நாகூர்ல இந்த சோத்து வாசனை தான்.

'ஏம்மா.. நீ தான் மொதோவே வாங்கிட்டீல்ல..' - ஒரு சிறுமியை தடுத்து நிறுத்தினார் தர்ஹாவில் பணிபுரியும் ஒருவர்.

'இல்ல.. நான் வாங்கவே இல்ல..' என்றதும் 'சரி.. சரி.. இந்த கூட்டத்துல எங்கேத்து கெடைக்கிறது..' - அவர் வாய் முகூர்த்தம் சொன்ன மாதிரியே மொதோலேந்து டிரை பண்ணிக்கிட்டிருந்த அந்த சிறுமிக்கு பொட்டி சோறு கிடைக்கவேயில்லை.

தூரத்திலிருந்து சலீம் இதை கவனித்து கொண்டே இருந்தான். அந்த சிறுமியின் முகம் டிசம்பர் மாத மேகமாய் மாறியிருந்தது. சலீம் இருக்கும் திசையை நோக்கி அவள் நடந்து வந்தாள். அவன் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு சைடுல இருந்த திண்ணைல இருந்த ஒரு பொம்பள பக்கத்துல போய் உக்காந்தாள். கண்ணெல்லாம் கலங்கி இந்தோ இப்ப வந்துடுவேன் என்பது போல தயாரா ஒட்டுல நிண்டு கொண்டிருந்தது.

படுத்திருந்த அந்த பெண் எழுந்தார், 'ஏன்ம்மா..? என்னாச்சு..?..' ன்னு கேட்டார்
அந்த பெண் அந்த சிறுமிட தாயார இருக்கணும்னு தோன்றியது சலீமுக்கு.

அந்த சிறுமி பதில் ஏதும் சொல்லாமல் போகவே, 'பசிக்குதா..?... சாப்பிடுறியா?..' என்றவர், ஒரு பொட்டணத்தை பிரித்து அதிலிருந்த கொத்து புரோட்டாவை காட்டி, 'இந்தா இத சாப்பிடு..?' என்றார்

'வேண்டாம்..' தலையை ஆட்டி மறுத்தாள் அந்த சிறுமி

'ஏன்ம்மா..?' - பொட்டண கையோடு அந்த தாயார் கேட்டார்

'எனக்கு அந்த சோறு தான் வேண்டும்..' என்று கொஞ்சம் தள்ளி ஒக்காந்து பொட்டி சோத்துல எல்லா கோவத்தையும் காட்டிக் கொண்டிருந்த அந்த கூட்டத்தை கைகாட்ட.. அந்த அம்மா அந்த கூட்டத்தை திரும்பி பார்த்ததை தொடர்ந்து சலீமும் அந்த கூட்டத்தை ஒரு முறை பார்த்தான், அந்த சோத்தை பற்றி பசியும் பக்தியும் கலந்தது என்றேனல்லவா, இந்த கூட்டத்துக்கு பசி மட்டுமே காரணம்  என்பது  போல்  தோன்றியது  சலீமுக்கு - சலீம் திரும்ப அந்த சிறுமியிடமே தன் பார்வையை திருப்பினான். அவர்கள் பேசிக் கொள்வது நன்றாக கேட்டது அவனுக்கு.

அந்த அம்மாவுக்கு புரிந்து விட்டது, 'அல்லாஹ்வே, சோறு முடிஞ்சிருக்கும், நாளைக்கு சொல்லி வச்சு வாங்கி தர்ரேன்.. இப்ப இத சாப்பிடு..' என்றார்

பிடிவாதம் எதிர்வாதம் செய்தது, 'முடியாது, எனக்கு இப்ப தான் வேணும்..'

அந்த அம்மா எவ்வளவோ சொல்லி பார்க்கிறார், அந்த சிறுமி கேட்டா தானே, ஆனால் இத்தனைக்கும் அந்த அம்மா கொஞ்சம் கூட கோவமே படலை. பொறுமையாவே சொல்லிகிட்டு இந்தாங்க.

சலீம் எழுந்தான், மெதுவாக நகர்ந்து அந்த சிறுமியிடத்தில் வந்தான், இருவரும் விவாதத்தை நிறுத்தி 'இது யாரு?' என்று அதிசயமாக பார்த்தார்கள்,

அந்த அம்மா, 'என்னா தம்பி?' என்றார், தன் புடவை தலைப்பை எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னமும் சரி செய்து கொண்டு,

சலீம் மெதுவா பேச ஆரம்பித்தான், 'நான் அப்போலேந்து பாத்துகிட்டு தான் இருந்தேன், இந்த புள்ள கூட்டத்துல நிண்டது, எல்லாம்.. நான் வேண்ணா வாங்கிட்டு வந்து தர்ரேன்..' என்றான்

'அதெல்லாம் வேணாம் தம்பி, இவ இப்படி தான்..' என்றார் அந்த அம்மா

'நானும் வர்ரேன்.. எனக்கு வாங்கி தாங்க..' என்றாள் அந்த சிறுமி

சலீம் அந்த அம்மாவிடம், 'ஒண்ணும் பெரச்சனை இல்லம்மா.. நான் போய் வாங்கிட்டு வர்ரேன்..' என்றவன் அந்த சிறுமியிடம், 'நீ வர வாணா.. இங்கேயே இரு..' என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

சலீம் நேராக தனக்கு தெரிந்த தாவுது பாயிடம் போய் - தாவுது பாய் தான் பொட்டி சோறு பவுந்துகிட்டு இருந்தவர் - 'எங்க வூட்டுக்கு சோறு போயிடுச்சா..? - இருந்தா அத கொடுங்க.. நா கொடுத்துடறேன்.' என்றான்.

தர்ஹாலேந்து செல வூடுவோல்வோக்கு இந்த மாதிரி பொட்டி சோறு போவது உண்டு, தாவுது சொன்னார், 'உங்க வூட்டுக்கு கொடுத்து வுட்டாச்சு.. இப்ப தான் நாஜிம் கொண்டு போனான்..' என்றார்.

'வேற எதுவும் பொட்டி இருக்கா..? ஒரே ஒரு பொட்டி தேவைப்படுது..' என்றான்

அவர் பழைய தரோகா அறை உள்ளே போய் பார்த்துட்டு வந்து 'கொஞ்சம் முன்னாடி சொல்ல கூடாது தம்பி, எல்லாம் முடிஞ்சு போச்சு, என்னட தான் இக்கிது.. அத வேண்ட தரவா?..'

'இல்லல்ல வேணா.. பரவாயில்ல..' என்று எச்சில் விழுங்கி 'அல்லாஹ்வே..' என்று திரும்பியவன் காலை இடிச்சிகிட்டு பக்கத்துல நிண்டு கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து திடுக்கிட்டான், பயந்து போய், 'அல்லா வச்சு காப்பாத்த..' என்று தனக்கு தானே சொல்லி நெஞ்சுல ஊதிக் கொண்டு, 'ஏன்ம்மா.. இப்படியா வந்து காலுகிட்ட பின்னுறது..?'

"பொட்டி சோறு இல்லையா..?'- என்று கேட்டாள்

'ஏன் இல்லை..? - இருக்கு இருக்கு, சரி நான் என்னா செய்றேன்.. இப்ப எங்க வூட்டுக்கு போய் பொட்டி சோற எடுத்துகிட்டு வர்ரேன்.. நீ இங்கேயே ம்மா கிட்டே இரு..' என்றான்

'நானும் வர்ரேன்..' அடம் பிடித்தாள்

'வாணா.. வாணா... ம்மா ஏசுவாஹா..' என்று நெசமாவே பயந்தான் சலீம்

'அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல.. நான் சொல்லிட்டேன்.' உறுதிபட சொன்னாள் அந்த சிறுமி

செத்த நேரம் அப்டியே யோசிச்சிட்டு 'சரி வா..' ன்னு பெரிய ஹொத்துவா பள்ளில பூந்தான், அங்கே  மக்ரிப்  தொழுகையை  ஜமாத்தோடு  குறிப்பிட்ட நேரத்துக்கு தொழுவதை தவற விட்டவர்கள் இன்னொரு ஜமாத் நடத்திக் கொண்டிருக்க ரெண்டு பேர் ஒலு செஞ்சுட்டு ஓடிப் போய் கரெக்டா ருகுவில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

செருப்பை எடுத்துகிட்டு தெரு வாசலுக்கு போற இன்னொரு கதவு வழியா படில இறங்கி சின்ன சாப்பிங் காம்ப்ளாகஸை கடந்து அலங்கார வாசலுக்கு வெளியே வந்து செருப்பை கீழே போட்டான், செருப்பை கால்ல மாட்டிகிட்டு தர்ஹா பக்கம் திரும்பி சலாம் சொல்லிட்டு நடந்தான். அந்த சிறுமி பின் தொடர்ந்தாள்.

இசை முரசு தனது சிங்கக் குரலில், 'அருள் மழை.. ' பொழிய ஒரு கடையில் ரஹ்மானிடம் (இறைவனிடம்) வேண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு கடையில் 'சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே கொஞ்சம் சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே..' என்று சிந்திக்க தூண்டிக் கொண்டுமிருந்தார்.

அந்த கடலை கடையில் கடலை போட்டுக் கொண்டிருந்த - வாயில் தான் - நவாப் சலீமை பார்த்து விட்டு ஊருக்கே கேப்பது போல் கத்தினான், 'சலீமு.. நில்லுங்கணி..'ன்னு - நவாபும் சலீம் ஒன்றாக படித்தவர்கள். சலீமின் ஒரே நண்பன் இந்த நவாப் தான். நவாபுக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் கண்டபடி கண்ட எடத்துல எச்சி துப்புவது.

குரான் ஷரீஃபை ராகமாக ஓதுபவர்களை 'காரி' என்று அழைப்பதுண்டு, சலீம் அப்படி தான் பிராமாதமாக ராகமாக ஓதுவான். அவன் ஒரு காரி. அதனால் நாகூர் பார்ட்டிகள் சலீமை 'காரி' என்று மரியாதையாக அழைப்பதோடு நவாபை 'துப்பி' என்று சொல்வதுமுண்டு. அதாவது இப்படி சொல்வார்கள், 'சலீம் காரி.. நவாபு துப்பி'

சலீம் நின்று விட்டான், நவாப் சலீமுடன் இருந்த அந்த சிறுமியை பார்த்த ஒடனே அவன் சொல்ல வந்த சேதியை மறந்து போனான், 'யாருங்கணி இது..? வூட்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கா..?' என்றான்

'இல்ல.. இல்ல' என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னான், 'சரி, பொட்டி சோறு இல்லாகட்டி என்னா..? நான் வந்து கடைல பராட்டா வாங்கி தர்ரேன், ஒக்கேயா?' என்று நவாபு கேட்டான்

சிறுமி வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்

'பிரியாணி..' என்றான்

'எனக்கு அந்த சோறு தான் வேணும்..' என்றாள்

சலீம் நவாபுடன் 'அப்புறம் பார்ப்போம்னு' சொல்லிட்டு வூட்டுக்கு வந்தான்.

வூடு பூட்டி கிடந்தது.

Wednesday, July 23, 2008

ராத்திரி சாப்பாடு - சிறுகதை

எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,

மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்,

எல்லோருக்கும் முன்னாடி கேட்டே விட்டார், சோறு திங்குறியா? இல்லை வேற ஏதாவதா? என்று வேற ஏதாவதா என்றால் வேறு என்ன பீ தான். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ‘சோறு திங்குறீயா..?’ என்று அவர் என்னை கேட்ட 2 மணிக்கு கூட எனக்கு சாப்பாடு ஞாபகம் வரவில்லை என்பது தான். இத்தனைக்கு காலையிலே காலம் கடந்து விட்டது என்பதற்காக பசியாறாமல் அவசரமாக புறப்பட்டு வந்தேன்.

எல்லாத்தையும் உட்கார்ந்து சரி பார்த்து என் தவறுகளள சரி செய்த போது மணி 4. நண்பர்கள் இடையில் தேநீர் அருந்த அழைத்தார்கள், உணவு உண்ண போனார்கள், சாயங்காலம் மீண்டும் தேநீர் அருந்த கூப்பிட்டார்கள், வாங்கி வரவா என்று கூட கேட்டார்கள். ம்கூம்.. போக வில்லை. பசி நினைப்பு கூட இல்லை. ஐந்து மணி இருக்கும், வேலை பலு குறைந்த போது தான் அதை உணர்ந்தேன். வயிறு குழந்தையாய் அழுதது.

அடடே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, என்று ஞாபகப் படுத்திக் கொண்டு உடனே வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தேன், எடுத்தது அவளே தான்.

‘யாரு?’ - குழலினிது யாழினிது என்பர் தம் மனைவி சொல் கேளாதார் - வள்ளுவர் பெருந்தகை மன்னிப்பாராக - அவர் மன்னிக்கா விட்டால் கூட பராவாயில்லை, நான் இப்படி சொல்ல வில்லை என்றால் என் மனைவி என்னை மன்னிக்க மாட்டள், எனக்கு வேறு நல்ல பசி..

‘கண்மனி (இது அவள் பேரல்ல.. நான் கொஞ்சுகிறேனாம்) ராத்திரிக்கு என்ன சாப்பாடு’

‘உங்களுக்கு என்னா வேணும் சொல்லுங்க?’ -

‘தாழிச்ச சோறு’

‘அப்புறம்’

‘தாழிச்சா’

‘அப்புறம்’

‘கோழி பொறிச்சிடு’

‘அப்புறம்’

‘அப்பளம் பொறிக்க முடியுமா?’

‘ஓ..!’

யோசித்தேன்..

‘அவ்வளவு தானா..?, போதுமா..? என்னங்க இது இப்படி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும், ஒரு காய்கறியாவது..’

‘காலி பிளவர் எனக்கு புடிக்கும்.. எல்லாம் முடியுமா?’

‘கண்டிப்பா முடியும்.. காலி பிளவரும்.. உருளை கிழங்கு பொறியலும் செஞ்சு வைக்கிறேனே.. சரியா?’

தொலைபேசி துண்டிக்கப்பட்டது

மக்களே, நான் சொல்றத கேளுங்க.. நீங்கள் நல்ல சாப்பாட்டுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கனும்,.. பாருங்க பேசிக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி மணி அடிக்கிறது, கொஞ்சம் இருங்க’

‘ஹலோ’ - நான்

‘என்னங்க.. (என் மனைவி தான்) வீட்ல எண்ணெய் இல்ல.. நீங்க போய் கடைல சாப்டுட்டு வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு எண்ணெயும் வாங்கிட்டு வந்துடுங்க..’