Friday, January 02, 2009

கஜினி (இந்தி)

தமிழில் பார்த்து பிரம்மித்து போன அதே கஜினி இந்தியில் அமீர்கான் தலைமையில் படையெ(டமெ)டுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பை ஒரு சதவிகிதம் கூட குறை சொல்ல முடியாத நிலையில் கச்சிதமாக நடிக்கும் அமீர்கான் எப்படி வித்தியாசம் காட்ட போகிறார் என்ற திரைப்பட ரசிகர்களுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வத்தை அமீர்கான் ஏமாற்றாமல் முத்திரை பதித்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் தான் தான் நம்பர் ஒன் என்று சொல்கின்றாரா?, சச்சின் தான் தான் நம்பர் ஒன் என்று சொல்கின்றாரா? நான் மட்டும் ஏன் அப்படி சொல்ல் வேண்டும்? நான் தான் நம்பர் ஒன் என்று சொல்கிறவர்கள் உண்மையில் நம்பர் ஒன்னாக இருக்கவே முடியாது..! என்று நீங்கள் தான் நம்பர் ஒன்னா..? என்ற ஒரு கேள்விக்கு அமீர்கான் மேற்கூறியவாறு பதிலளித்திருந்தார்.

ஆகவே, அவர் சூர்யாவை விட சூப்பரா..? என்றெல்லாம் பார்க்காமல் அமீர்கான் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் கடினமான உழைப்பு தெரிகிறது. சல்மான்கான் இந்த படத்தை பார்த்து விட்டு பிரம்மித்து போய் அமீர்கானின் உடலுக்காக கடுமையாக உழைத்திருந்தாலும் அதை விட படத்தில் முன்னால் நிற்பது அவர் நடிப்பு தான் என்றதுடன் நிற்காமல் அமீர்கானின் கஜினி பட தோற்றத்தில் ஒரு ஓவியத்தையே வரைந்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இது போல் நடக்குமா என்பது கேள்விக்குறி தான்.

தமிழில் இரு வேடத்தில் வந்த கெட்டவன் இந்தியில் ஒரு வேடத்தில் மட்டுமே வருகிறார். தமிழில் வரும் தேவையில்லாத கல்லூரி விடுதி இறுதி கட்ட சண்டை காட்சிகளையும் மாற்றி ஓரளவுக்கு நன்றாகவே அமைத்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புத இசை தமிழில் மிக பெரிய பலம். இதே போல் இந்தியில் மிக அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். குஜாரிஷ், கேய்ஸே முஜே பாடல்கள் தேன் சுவை. பிண்ணனி இசையும் பின்னி எடுத்திருக்கும் இசையாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் பார்ப்பதற்கு சொட்டு போல இருந்தாலும் பாலிவுட்டுக்கே போய் பெரிய வசூல் சாதனை புரிந்திருப்பது பாராட்டுக்குறியது

பொம்மலாட்டம்

நாற்றம் அடித்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு மண்வாசனையோடு முதல் மரியாதை தந்து கடலோர கவிதைகளையும் பாடிய பாசத்துக்குறிய பாரதிராஜா இனிய தமிழ் மக்களுக்காக இவர் கொடுத்திருக்கும் மாற்றம் தான் பொம்மலாட்டம்.

பாரதிராஜா கதை சொல்லும் விதமே குழப்பமாக தான் இருக்கும். நேரடியாக கதை சொல்லவே மாட்டார். பின்நினைவு காட்சிகள் கூட நேர்கோட்டில் வராது. முன்னாடி உள்ளதை பின்னாடியும் பின்னாடி உள்ளதை முன்னாடியும் காட்டுவார்.

மனைவி உள்பட உடன் பணியாற்றுபவர்கள் அனைவரும் கிறுக்கன் (eccentric) என்று கூறினாலும் தான் கிறுக்கன் அல்ல முழுமையானவன் அல்லது பிழையில்லாமல் கச்சிதமாக செய்பவன் (perfectionist) என்று தனக்கு தானே சான்றிதழ் வழங்கி கொள்ளும் ஒரு இயக்குனர்.

தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி தான் சொன்னபடி நடிக்காததால் அந்த கடல்நீரில் கால் நனைக்காத அந்த நடிகையை விலக்கிவிட்டு வேறு ஒரு நடிகை கிடைக்கும் வரை படப்பிடிப்பை ஒத்தி போடுகிறார்.

அதன் பின்னர் மக்கள் கடலில் மூழ்கி முத்து ஒன்றை கண்டெடுத்து படப்பிடிப்பை தொடங்குகிறார். பொத்தி பொத்தி வைத்து பாதுகாத்த அந்த நடிகையை பற்றி பத்திரிக்கைகாரர்களுக்கு பேட்டி கொடுக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலம் தாழ்த்துகிறார்.

அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு பத்திரிக்கைகாரர்கள் அந்த விடுதிக்கு செல்லும் போது அங்கிருந்து அந்த கதாநாயகியுடன் தப்பி ஓடி கதாநாயகியை காரில் வைத்து மலையிலிருந்து தள்ளி விடுகிறார்.

இந்த கொலையுடன் படப்பிடிப்பின் போது நடந்த இரண்டு கொலைகளையும் சேர்த்து மூன்று கொலைகளையும் விசாரிக்க சிபிஐ வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பதை உணர்வு பூர்வமாக ஆடியிருக்கும் படம் தான் பொம்மலாட்டம். வழக்கமான திகில் படங்களில் கொலைக்கான நியாயங்கள் சொத்து அல்லது பழைய பகை என்று இருக்கும். இந்த படத்தில் இது வரை கண்டிராத நியாயங்களும் இருக்கிறது.

டைனோசருக்கு தீனி போட பாரதிராஜாவால் தான் முடியும். காமோஷியில் (இந்தி படம் - மௌனம் என்று பொருள்) பேசாமலே நடித்து அனைவரையும் ஊமையாக்கிய நானா படேகரே அந்த டைனோசர். இவரின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு நடிப்பு பாடம். நிழல்கள் ரவியின் குரல் அப்பட்டமாய் பொருந்தியிருக்கிறது.

நல்ல ஒரு திரைப்பட அனுபவம் வேண்டுமா? பார்க்க வேண்டிய படம் பொம்மலாட்டம்.