Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Tuesday, December 20, 2011

சிங்கப்பூர் எம.ஆர்.டியில் ஏற்பட்ட தடை

”சுத்தம் சோறு போடும்” என்று எதை வைத்து சொன்னார்களோ எனக்கு தெரியாது. ஆனால் சுத்தமான சிங்கப்பூர் நாடு தான் எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் என்றாலே பெரிய கட்டடங்கள், சுத்தமான சாலைகள், சுகாதாரமான உணவங்காடிகள், குற்றங்கள் மிக குறைவான நிலை, அரசியல் நிலைத்தன்மை, சரியான வழிகாட்டக் கூடிய தலைவர்கள், அத்தோடு முக்கியமாக அதிக அபராதம் விதிக்கப்படும் நாடு இவையெல்லாம் நினைவுக்கு வரக்கூடும்.

சிங்கப்பூர் இஸ் எ ஃபைன் சிட்டி என்று சொல்வார்கள்.

இதில் ”ஃபைன்” என்றால் “ஹவ் ஆர் யு?” - “அயம் ஃபைன்” அந்த “ஃபைன்” அல்ல - அபராதம் விதிப்பதற்கு ஃபைன் அடிப்பார்கள் அல்லவா அந்த “ஃபைன்” என்று இங்கே சொல்வது உண்டு.

உதாரணமாக,

குடியிருப்பு பகுதியில் புறாவுக்கு தீனி போடக் கூடாது - மீறி போட்டால் $1,000 வெள்ளி ஃபைன். அதாவது ஊரு காசுக்கு 39,000 ரூபாய்.

ரோட்டில் டிராஃபிக் லைட்டில் பச்சை விளக்கு எரியாத போது சாலையை கடக்கக் கூடாது. மீறி கடந்தால் (Jay Walking) 1000 வெள்ளி அபராதம்.

இப்படி ஏராளமான சட்ட திட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் இந்த நாட்டுடைய பொருளாதார வளர்ச்சிக்கே உதவியாக இருந்து வருகிறது.

சவுத் பிரிட்ஜ் ரோடு என்று ஒரு சாலை உள்ளது. மஸ்ஜித் ஜாமியா சூலியா என்றொரு இந்திய முஸ்லீம்கள் நிர்வகிக்கும் ஒரு பள்ளிவாசல் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. இவை இரண்டும் எங்கே உள்ளது தெரியுமா? சைனா டவுன் என்ற இடத்தில்.

இந்த குறிப்பு ஒன்று போதும் இங்கே எப்படி பல இனத்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு.

சிங்கப்பூரின் இன்னொரு சிறப்பு இதன் போக்குவரத்து வசதிகள்.

சாலை விதிகளை பற்றி சொல்லி மாளாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய வேகத் தடை இருக்கும் அல்லவா? 90 கி.மீ வேகத்திற்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம். அப்படி மீறி வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.

அதுவும் எப்படி என்றால் சர்பிரைஸிங்ஙாக வந்து அல்ல, சாலையிலேயே தகவல் பலகை இருக்கும், பக்கத்தில் கேமரா உள்ளது, மெதுவாக செல்லவும் என்று.  அதாவது கேமராவை ஒலித்து வைத்து படமெடுத்து ஃபைன் அடிப்பது எல்லாம் கிடையாது.

‘இங்கே கேமரா இருக்கு’ என்று சொல்லி விட்டு மீறி வேகமாக போகிறவர்களை தான் ஃபைன் அடிப்பார்கள்.

சாலை வசதிகள் எல்லாமே யூசர் பிரண்ட்லி என்று சொல்வோமே அந்த வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எங்கு நோக்கினும் தகவல்கள், தகவல்கள், தகவல்கள்.

இங்கே ‘யு-டர்ன்’ செய்யக் கூடாது என்பதற்கு மட்டுமல்ல, இங்கே ‘யு-டர்ன்’ வசதி உண்டு என்று சொல்வதற்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.

வாழைப்பழத்தை உரிச்சு வாயில் திணித்ததோடு மட்டுமல்லாமல் வாயை புடித்து அழுத்தி கடிக்கவும் வைத்தால் எப்படி இருக்கும்..? - அப்படி தான் இங்கே தகவல்கள் இருக்கும்.

சிங்கப்பூர் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் என்ற அமைப்பு 1987 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் தனது சேவையை தொடங்கியது. அதாவது எம்.ஆர்.டி. என்றழைக்கப்படும் இரயில் சேவை தான் அது.

அது இப்போது படிப்படியாக வளர்ச்சிகள் கண்டு இன்றைக்கு மிகப்பரந்த அமைப்பாக உருப்பெற்று உள்ளது.

இதில் நான்கு வழிதடங்களில் செயல்பட்டு வருகிறது

1. 

நார்த் - சவுத் லைன்: 

இது ஜூரோங் ஈஸ்ட் எனும் நிலையத்திலிருந்து புறப்பட்டு யிஷுன், உட்லண்ட்ஸ் வழியாக சென்று மெரினா பே வரை செல்லும்.

இதில் மொத்தம் 25 நிறுத்தங்கள் உள்ளன.

44 கி.மீ தூர அளவை உடையது.

2.

ஈஸ்ட் - வெஸ்ட் லைன்:

இது ஜூ கூன்  எனும் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜுரோங்க் ஈஸ்ட்,   புவனா விஸ்தா, யுனூஸ், தானா மேரா வழியாக பாஸிர் ரிஸ் வரை செல்லும்.

இதில் மொத்தம் 29 நிறுத்தங்கள் இடையில் உள்ளன.

இதில் இன்னொரு சேவையும் இணைக்கப்பட்டிருக்கும். சாங்கி விமானம் நிலையம் வரை செல்லும் சேவை தான் அது.

இதில் மொத்தம் 2 நிறுத்தங்கள் மட்டுமே இருக்கும். 

சாங்கி விமான நிலையம் செல்ல வேண்டுமானால் ஈஸ்ட்-வெஸ்ட் லைனில் வரும் தானா மேரா நிறுத்தத்தில் இறங்கி பக்கத்திலேயே இருக்கும் நடு பிளாட்பார்முக்கு மாறி இடையில் வரும் ஒரே ஒரு நிறுத்தமான எக்ஸ்போவை கடந்தால் சாங்கி விமான நிலையம் தான்.

எல்லாம் சேர்த்து 49.2 கி.மீ தூர அளவை உடையது.

3.

நார்த் - ஈஸ்ட் லைன்

இது ஹார்பர் பிராண்ட் எனும் நிறுத்தத்தில் தொடங்கி சைனா டவுன், லிட்டில் இந்தியா வழியாக புங்கோல் வரை செல்லும்.

இதில் மொத்தம் 16 நிறுத்தங்கள் இருக்கும்

20 கி.மீ தூர அளவை உடையது.

4.

சர்க்கிள் லைன்

டோபி காட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றி நிகல் ஹைவே, ஸ்டேடியம், மெக் பெர்ஸன், சிராங்கூன், பொட்டானிக் கார்டன், தெலுக் பிளாங்கா வழியாக ஹார்பர் பிராண்ட் வரை செல்லும் இந்த சேவை.

இதில் மொத்தம் 28 நிறுத்தங்கள் இருக்கும்.

33.3 கி.மீ தூர அளவை உடையது.

இப்பொழுது டவுன்டவ்ன் லைன் (Downtown Line), தாம்ஸன் லைன் என்று இன்னும் பல லைன்கள் கட்டுமான பணியில் உள்ளன.


இந்த சேவைகள் யாவும் பொதுவாக காலை 5 30 மணிக்கு தொடங்கி விடும். இப்படி ஆரம்பிக்கப்படும் இந்த சேவை இரவு 12 மணிக்கு மேல் தான் நிறுத்தப்படும்.

இடையில் வழிதடங்களை ஆய்வு செய்ய, பராமரிக்க, புதுப்பிக்க என குறைவான கால அளவே உள்ளது. இந்த கால அளவு பத்தாது என்பதே என் கணிப்பு.

இது அல்லாமல் வேறு என்ன காரணமோ தெரியவில்லை, சென்ற வாரம் 15 ந்தேதி வியாழக்கிழமை நார்த்-சவுத் வழி தடத்தில் தடை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று வரை நீடித்திருக்கும் இந்த தடையும் தடங்களும் மக்களிடையே பெரும் பாதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.

(இப்பொழுது இயங்க ஆரம்பித்து விட்டதாக தகவல்)

இது போல் தடைகள் ஏற்படாமல் எம்.ஆர்.டி. நிறுவனம் பார்த்துக் கொள்ள தான் வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் இது போல் தடங்கள் ஏற்பட்டால் சரி செய்யும் வரை வரும் அசௌகரியங்களை பொறுத்துக் கொண்டு மக்கள் வாழ தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.

இது போல் தடங்கள்கள் எல்லா நாடுகளிலும் ஏற்படத் தான் செய்கிறது. எனது நண்பர் ஜப்பானில் ஒரு வருடம் வசித்து இருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், ‘ஜப்பானிலும் இது போல் தடைபடுவதுண்டு..” என்று.

எம்.ஆர்.டி நிறுவனமும் சும்மா சொல்லக் கூடாது, இது போன்ற நேரத்தில் அவர்களால் என்ன சேவையை வழங்க முடியுமோ உதாரணமாக, தகவல் தருவது, ஷட்டுல் பஸ் ஏற்பாடு செய்தது என்று அவர்களால் இயன்றதை உடனடியாக செய்தார்கள்.

பராமரிப்பு என்பது ஒன்று. அதே சமயத்தில் தொடர்ந்து பராமரித்து கொண்டே இருக்க உ முடியாது. ஆங்கிலத்தில் "Predictive Maintenance" என்று ஒன்று உள்ளது. அதாவது பராமரித்து வரும் தளவாடங்களுக்கு எப்பொழுது மாற்று தேவைப்படும் என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து அது முற்றிலுமாக பழுதாகி நிற்கும் வரை காத்திராமல் மாற்றுவது.

சிங்கப்பூர் பிரதமர் ஃபுல் பப்ளிக் இன்குய்ரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். ரூட் காஸ் என்ன என்று கண்டு பிடித்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட பாதிப்பா அல்லது சிஸ்டமிக் எஃபெக்டா (மொத்த வழி தடங்களிலும் ஏற்பட இருக்கும் முன்னறிவிப்பா இது என்று) ஆய்வு செய்து சரி செய்து விடுவார்கள்.

இது போன்ற தடைகளை எல்லாம் மீறி மக்கள் ஒத்துழைப்புடன் தனது பாதையில் உலகிற்கு வழிகாட்டியாக சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறி செல்லும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை.