Wednesday, September 17, 2014

ஷஹிதான ஷஹித் அஜ்மியின் வாழ்க்கை துளிகள் - ஷஹித் இந்தி திரைப்படம் (விமர்சனம்)

உலக நாயகர்கள் இளைய தளபதிகள் முஸ்லிம்களை வில்லன்களாகவும் தீவிரவாதிகளாகவும் விஸ்வரூபம் எடுத்து துப்பாக்கி முனையில் பைசா பார்க்கும் இந்த சூழலில் அமைதியாக சென்ற ஆண்டு வெளியாகி இந்தி திரை என்றாலும் இதயத்தில் இடம் பிடித்து விட்டது ”ஷஹித்” என்ற திரைப்படம்.

உண்மைக்காக போராடி ஷஹீதான ஷஹித் அஜ்மியின் வாழ்க்கை கதை தான் இந்த திரைப்படம்.

ஷஹித் அஜ்மி தனது 13வது வயதில் பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நடந்த கலவரத்தில் கைது செய்யப்படுகிறார். காவல்துறையினரே முஸ்லிம்களை கொல்வதை பார்த்த பிறகு பாகிஸ்தான் வசமிருக்கும் ஆஸாத் கஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி பெறுகிறார். பின்னர் பிடிக்காமல் விட்டுவிட்டு ஊர் திரும்புகையில்  மீண்டும் தடாவில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுகிறார். 

ஆயுதங்களால் சாதிக்க முடியாததை கல்வி தான் சாதிக்கும் என்று புரிந்துக் கொள்கிறார்.  ஏழாண்டு சிறைவாசத்தில் சட்டப்படிப்பும் post graduate in creative writing படிப்பும் படித்து சரித்திரம் படைத்தார்.

சிறை வாசம் முடிந்து வெளியே வந்து  குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் கைதிகளாக இருப்பவர்களை ஒரு குற்றமும் அறியாத அப்பாவிகளுக்காக வாதாடி குற்றத்திலிருந்து விடுபட வைத்தார்.

தான் வக்கீலாக செயல்பட்ட குறைவான 6 ஆண்டுகளில் அவர் எடுத்துக் கொண்ட 17 வழக்கில் தீவிரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை விடுதலை பெற வைக்கிறார். 

இதற்கிடையில் வந்த ஏராளமான மிரட்டல்களுக்கு சொல்லொணா துன்பங்களுக்கும் பணியாமல் கண் முன்னால் நடக்கும் அநீதியை தனது வாத திறமையால் நீதியை நிலைநாட்டுகிறார்.

கொலையாளிகள்  அவரை அவரின் அலுவலகத்திலேயே இரண்டு குண்டுகளால் துளைத்து உயிரை பறித்தனர். ஷஹித் அஜ்மி தனது 33வது வயதில் பிப்ரவரி மாதம் 11ந் தேதி 2010ம் ஆண்டு ஷஹிதானார் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த உணமை சம்பவங்களை அடிப்படையாக வைத்து “ஷஹித்” என்ற படத்தை மதிப்பிற்குறிய ஹன்ஸல் மேத்தா அவர்கள் மிக தத்ரூபமாக படம் பிடித்து தந்திருக்கிறார்.

ஷஹித் அஜ்மியாக நடித்தவர் ராஜ்குமார் ராவ் என்ற அற்புத நடிகர். ஹன்ஸல் மேத்தா படப்பிடிப்பை ஷஹித் அஜ்மியின் அலுவலகத்திலேயே வைத்து படம் பிடித்திருந்தார்.

 ராஜ்குமார் தான் தன் மகனாக நடிக்கிறார் என்றது ஷஹித் அஜ்மியின் தாயார் ரேஹானா அவர்கள், ராஜ்குமாரை தனது வீட்டிற்கு அழைத்து அவரில் தனது மகனை பார்த்து மகிழ்ந்தார். 

ஆனாலும் “ஷஹித்” என்ற படத்தை ரேஹானா அவர்கள் பார்க்க மறுத்து விட்டாராம், காரணம், தனது மகன் இன்னொரு முறை இறப்பதை அந்த தாயிதயம் பார்க்க விரும்பவில்லையாம்.

ஷஹித் அஜ்மியின் தம்பியான காலித், இவரும் வக்கீல் தான், படம் 95 சதவிகிதம் உண்மை சம்பவம் என்றும் 5 சதவிகிதம் புனைவு என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஷஹித் அஜ்மியின் 18 ஆண்டு வாழ்க்கையினை இரண்டரை மணி நேரத்தில் நெகிழ்ச்சியான காட்சிகளின் மூலம் நெஞ்சத்தில் பதிகிறது, கலவரம் நடக்கும் போது வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டு அதன் பிறகு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீடு வந்து தாயாரிடம் அறை வாங்குவது, ராத்திரியில் படிக்கும் போது விளக்கை அணைக்க சொல்லி தம்பிமார்கள் சண்டையிட தாயார் தலையிடுவது, முதல் மாத சம்பளத்தை ஷாஹித் தனது தாயாரிடம் தருவது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீங்கள் குற்றம் இழைத்திருந்தால் நான் கேஸிலிருந்து விலகி விடுவேன் என்று சொல்வது, நீதிமன்றத்தில் திறமையாக கேஸை உடைப்பது, நீதிமன்ற வாசலில் முகத்தில் கறிபூசப்படுவது, இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

துணை கதாபாத்திரமான அண்ணன் ஆரிபாக வரும் முஹம்மது ஜீஷன் அய்யூப் மிக சாந்தமாக குடும்ப பொறுப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகி மர்யமாக வரும் பிரப்லீன் சந்து என்ற நடிகை மிக அற்புதமாக நடித்து இருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஒன்று, ஷஹித் ஒரு சிற்றுண்டி விடுதியில் தனது காதலை சொல்லும் போது, ஒரு குழந்தைக்கு தாயாகி விவாகரத்தான அவர் தரும் முக பாவங்கள்.

இரண்டாவது, ஷஹித் தனது தாயார் வீட்டிற்கு அழைத்து வரும் போது கண்ணாலேயே போகலாமா என்று கேட்பது, நடிப்பு மிக துல்லியம்.

இந்த படத்தில் ஷாஹித் அஜ்மியாக உண்மைக்கு வாதாடியதற்காக ராஜ்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது பொருத்தமானதே. இன்னும் இந்த படம் ஆஸ்கர் ரேஸிலும் இருக்கிறதாம். ஆஸ்கர் பெருமையடைகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Must Watch:



Resources:

http://en.wikipedia.org/wiki/Shahid_Azmi

http://archive.indianexpress.com/news/-my-family-lacks-courage-to-watch-shahid-cant-see-him-die-again-/1185052/0

http://en.wikipedia.org/wiki/Terrorist_and_Disruptive_Activities_(Prevention)_Act