Sunday, January 31, 2010

இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்

குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம் 

இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....



இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.

நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை,  அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).

இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.

அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது  நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.

அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும்  அந்த நபருடன் உள்ளே நுழைகிறான். அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின்  ராஜிவ்  காந்தியின்  புகைப் படத்தையும்   'எ  டயலாக்  வித்  ராஜிவ்  காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.

அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.

எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.

இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது 
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப்  பார்க்கிறான்,  உறங்கிக்  கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க  அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்

பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.

இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.

ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.

மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.

கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.

'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.

அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.

'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்

அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று

அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.

முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு 

பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.

இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,

'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.

இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான  'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!

அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.

தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.

அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.

அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.

மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.

இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்

மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.

இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.

'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.


அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.

அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.

அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.

தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.

'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்

'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்

போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்

அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்

ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.


மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!

அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.

மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது

மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'

தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்

இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்

இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.

அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்

மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.

இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.

சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.

சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு..  என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.

மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்

'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.

'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்

அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.

Thursday, January 21, 2010

சில டைரி குறிப்புகள்

என் கூட ராஜகோபால்ன்னு ஒரு ஐயர் வீட்டு பையன் படித்தான். சோடா புட்டி கண்ணாடி போட்டிருப்பான். நாங்க எல்லாம் நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல் நிலை பள்ளியில் அதாவது தமிழ் புரியாதவர்களுக்கு நேஷனல் ஹை ஸ்கூலில் தான் ஒன்றாக படித்தோம்.

ஒன்றாக படித்தது மட்டுமல்ல ஒரே வாத்தியார்ட்ட தான் டியுசனும் படித்தோம். அப்போ நான் எனது மச்சான் ராஜா என்கிற ஃபாருக் மற்றும் பல முஸ்லீம் இந்து நண்பர்கள் யாவரும் பள்ளிகூடம் விட்டதும் நாகை கடைத்தெருவில் உள்ள கமாலிய்யா பள்ளிக்கு சென்று அங்கேயே டியுசனில் கொடுத்த ஹோம் ஒர்க எல்லாத்தையும் முடித்து விடுவது வழக்கம்.

ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசலில் தொழுகைக்கு ’அதான்’ (அழைப்பு) விடுப்பார்கள். நாங்கள் முஸ்லீம் நண்பர்கள் யாவரும் உடனே அங்க சுத்தி செய்து விட்டு அதாவது கை, கால், முகம், காது, வாய், தலை முடி எல்லாத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவோம்.

தொழுகையில் ஒருவர் பின் ஒருவர் அல்ல ஒருவர் தோலை உரசிக் கொண்டு ஒருவர் வரிசையாக நிற்பது, ஒரே மாதிரி குனிவது, நிமிர்வது, தொழுகை முடிந்தவுடன் கை கொடுத்து வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்வதை கவனித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்ற ஐயர் ஒரு நாள் என்னிடம் அந்த கேள்வியை கேட்டே விட்டான்.

“நானும் உங்க மதத்து வந்துடவா?’ என்று

இதை நான் இங்கே பொய்யாகவோ கொஞ்சம் கூட இட்டுகட்டியோ சொல்லவில்லை.

அவன் அப்படி கேட்டான்.

நான் உளம் மகிழ்ந்து, ’தாராளமா வந்துடு.. ஆமா, என்னா புடிச்சிருக்கு?’ என்று கேட்டேன்

‘நீங்கள்லாம் ஒரே மாதிரி ஒத்துமையா செய்றது பாக்குறதுக்கே அழகா இருக்கு’ என்றான்

இன்னைக்கு முஸ்லீகளுக்குள் இருக்கின்ற ஒத்துமையா எல்லாம் பார்த்திருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டான் என்றே தான் தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------
எங்க ஹஜ்ரத் அவர்களிடம் நான் சேர்ந்த புதிதில் கேள்விகளாக கேட்டு தள்ளுவேன். அந்த ஹதீஸ்ல அப்படி போட்டிருக்கே? இந்த ஹதீஸ் கிதாப்ல இப்படி போட்டிருக்கே என்று எனது கேள்விகள் தாறுமாறாக இருந்தது. ஆது, சமூது கூட்டத்தை பத்தி, சாலிஹ் நபியின் ஒட்டகத்தை பத்தி கேட்டிருக்கிறேன்.

சைத்தானுக்கு உருவம் இருக்கிறதா என்று கூட கேட்டிருக்கிறேன். சைத்தான் தொஹீது வாதியா என்றும் கேட்டிருக்கிறேன். பிர் அவுனிலிருந்து மூஸா நபி வரை, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பற்றி, நூஹ் நபியின் கப்பலை பத்தி, அன்னை மர்யம் (மதர் மேரி) அவர்களை பத்தி அவர்களின் புதல்வர் ஈஸா நபி பற்றி இப்படி ஒரு கேள்வியையும் விட்டது கிடையாது.

பெருமானாரிலிருந்து நாகூர் நாயகம் முதற்கொண்டு நான் கேட்காத கேள்விகளே கிடையாது எனலாம்.

ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை ‘ஹதீஸ்’ என்றே அழைத்தார்கள்.


‘இந்த வந்துட்டாரே ஹதீஸ்’ என்றார்கள்.

எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொன்னார்கள், ‘ஏன்ப்பா, பொண்ணை வுட்டுபுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுகிட்டு இருக்கிறீயே’ என்று
-------------------------------------------------------------------------------------

ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இந்த முஸ்லீம்களெல்லாம் மறுமைக்காக தொழுவுறோம், மறுமைக்காக சகாத் கொடுக்கிறோம் மக்கா யாத்திரைக்கு போறோம் உடலை வருத்திகிட்டு நோன்பு பிடிக்கிறோம்ன்னு சொல்றீங்களே.. மறுமையே வரலைன்னா என்னா செய்வீங்க..?’ என்று உலகத்திலேயே அதி முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்

நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்

அவர் நினைச்சிருப்பாரு, ’ஆனா வந்துட்டான்னு.. சொல்லி நிறுத்திட்டானே.. இவன் என்ன சொல்ல வந்திருப்பான்..? வந்துட்டாலும் வராவிட்டாலும் அவனுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்ல.. வரலேன்னா எனக்கும் நஷ்டமில்லை ஆனா மறுமைன்னு ஒண்ணு உண்மையிலே வந்துட்டா நான் தான் நஷ்டப்பேடுவேன்னு சொல்ல வந்திருப்பேன்னு அவர் நினைச்சிருப்பார்’

ஆனா அதான் இல்ல, நான் சொல்ல நினைச்சது அப்படியே மறுமை வந்துட்டாலும், முஸ்லீம்களுக்கு தான் கஷ்டம்’ன்னு சொல்ல தான் நினைச்சேன்.

குஷ்பு - (நறுமணம் - Fragrance) - பழைய இந்தி பட விமர்சனம்

”குஷ்பு" என்றதும் நடிகை குஷ்பு நடித்த படமோ என்று நினைக்க வேண்டாம். இது ஹேமா மாலினி அற்புதமாக நடித்த படம் அல்லது அவரை குல்சார் அவ்வாறு அற்புதமாக நடிக்க வைத்த படம். இந்த படம் என்னுடைய ஞாபகசக்தி எனக்கு ஒழுங்காக சேவை செய்தால் ஷோலே படம் வந்த காலகட்டத்தில் தான் இந்த படமும் வந்தது. ஆனால் ஷோலேவில் வரும் பசந்திக்கும் குஷ்புவில் வரும் குசுமுக்கும் தீச்சுடருக்கும் (ஷோலே) நறுமணத்துக்கும் (குஷ்பு) உள்ள வித்தியாசம்.

குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.

அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை  சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.

ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.

குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.

சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.

இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.

குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.

இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.

குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.

இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.

படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.

பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.

அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.

அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.

இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.

அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.

அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.

சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.

இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.

பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.

குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று

தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று

குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று

தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று

குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று

ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க  இருக்கின்ற  தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.

தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்

சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்

பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்

சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.

உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.

‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்

பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்

குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.

குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.

ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து




சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?

பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?

இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!

நடிப்பு

பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்

இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.

-----------------------------------------------------------------------------------------------------------

அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!