1948 அக்டோபர் 13ல் பாகிஸ்தான் நாட்டின் லைலாப்பூர் என்ற நகரில் இசையின் உருவம் இப்புவி மீது அழுது கொண்டே பிறக்கிறது. (லைலாப்பூர் என்ற ஊர் இப்போது ஃபைஸலாபாத் என்ற பெயருடன் விளங்குகிறது).
உஸ்தாத் பதேஹ் அலி கான் எனும் இசை மேதையின் குடும்பத்தில் ஐந்து பெண் மக்களுக்கு பிறகு ஆறாவதாக அந்த இசையின் பெரு உருவம் (பெரு உருவம் என்றால் பெருத்த உருவம் மட்டுமல்ல பெருமைக்குறிய உருவமும் கூட) முதன் முதலாக அழுகையின் ஊடாக இசைத்தது.
உஸ்தாத் பதேஹ் அலி கான் மற்றும் அவரது சகோதரர் உஸ்தாத் முபாரக் அலி கான் மற்றும் சலாமத் அலி கான் ஆகியோர்களின் இசைக் குழுவில் சிறு வயதிலேயே இசை உருவம் தன்னை இணைத்து கொண்டு செயல் பட தொடங்கியது.
தபேலாவில் விரல்கள் படர ஆரம்பித்து பாகிஸ்தானின் பாரம்பரிய இசையான 'கயால்' எனும் இசையை சரி வர உள்வாங்கி கொண்டது.
1964ல் தந்தையாரின் மறைவும், 1971ல் தந்தையின் சகோதரரின் மறைவுக்கு பிறகும் அந்த இசை உருவம் தலையெடுக்க ஆரம்பித்தது.
'கவ்வாலி' என்றால் 'உரக்க சொல்வது' என்றே பொருளாம். யாரிடம் எதை சொல்வது? - உண்மையில் இறைவன் மீதும் அவனது தூதர் முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதான் அன்பை உரக்க சொல்வது. அடுத்து யாரிடம் சொல்வது? அல்லாவிடத்திலா? ஊர் உலகத்துக்கா? - என்றால் அதுவும் இல்லை, தனக்கு தானே சொல்லி கொள்வது.அதை உரக்க சொல்வதற்கு பெயர் தான் கவ்வாலி.
கவ்வாலி என்பது சூஃபி இசையின் ஒரு வடிவம். சூஃபி என்றால் இறைவனை தவிர்த்த வேறு சிந்தனையே இல்லாதவர் என்று பொருள்.
இறைவனை நினைவு கூர்வதால் உள்ளம் அமைதி பெறும் என்ற திருமறை வாசகத்தில் வருவதற்கேற்ப கவ்வாலி இசைக் கலைஞர்கள் தான் உச்சஸ்தாயியில் பாடும் போது இறைவனையே நினைவு கூர்கிறார்கள். இதனால் அவ்வாறு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் உள்ளம் அமைதி பெறுகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த இசை உருவம் 'கயாலை'யும் 'கவ்வாலியையும்' கலக்கியது உலகத்தையே ஒரு கலக்க இருப்பதற்கு ஒரு முன்னோட்டம் தான்.
அவரின் ஒரே கனவு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்காவில் அடங்கியிருக்கும் 'ஏழைகளின் பங்காளர்' (கரீபே நவாஜ்) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யினுத்தீன் அவர்களின் தர்பாரில் ஒரு இசை தர்பார் படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.
இந்த கனவு கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறியது. பாலிவுட்டில் ராஜ்கபூர் என்ற ஷோமேனின் அழைப்பை ஏற்று ரிஷிகபூர் - நீட்டுசிங்கின் திருமண விழாவில் பாடுவதற்காக அந்த இசை உருவம் அழைத்து கௌரவிக்கப்பட்ட போது தான் அந்த கனவு நிறைவேறியது.
(குறிப்பு: ராஜ்கபூரும் பெஷாவர் எனும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு நகரில் பிறந்து லைலாப்பூர் என்ற ஃபைஸலாபாத்தில் வளர்ந்தவர் தான். அதனால் தான் ஒரே ஊர் காரர் என்ற காரணத்தால் ரிஷி-நீட்டு திருமணத்திற்கு அழைத்தார். ராஜ்கபூர் ரஸ்ஸியாவில் தான் பிரபலம். ரஸ்ஸிய மக்களுக்கு காந்தி, நேரு எல்லாம் தெரியாது, ஆனால் ராஜ்கபூர், நர்கீஸ் என்றால் தான் தெரியும்)
பாலிவுட்டே அந்த இசை உருவத்தின் இசை கோர்வையை கேட்டு வியப்பில் மூழ்கியது. இந்த இசை உருவம் உர்து தொடங்கி பஞ்சாபி, பாரசீகம் கடந்து இந்தியையும் விட்டு வைக்காமல் இசைத் தேனால் குளிப்பாட்டியது. உண்மையை சொன்னால் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் நம் அழகிய தமிழிலும் இந்த இசை உருவத்தின் குரலை ஏ.ஆர்.ரஹ்மானின் புண்ணியத்தால் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
(குறிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை தொகுப்பில் இந்த இசை உருவம் ஏ.ஆர்.ஆரோடு சேர்ந்து 'போறாளே பொண்ணுத்தாயி..' என்ற கருத்தம்மாவில் வந்த இசையை ரீமிக்ஸ் வடிவத்தில் கேட்டிருக்கலாம்)
இன்னும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து சோதனை முயற்சி செய்து பார்த்த செய்திகளும் உண்டு. கின்னஸ் ரெக்கார்டில் கவ்வாலி இசை வடிவத்தின் அதிக தொகுப்புகளை படைத்தவர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெற்றதுமுண்டு.
தமிழில் பாடவில்லையே என்ற கவலை எனக்கிருந்தாலும் அவரின் இசையையும் விட்டு வைக்காமல் தமிழ் படத்துக்கு காப்பி அடித்த சம்பவமும் இருக்கவே செய்கிறது.
காப்பியடிப்பதில் சாதனை புரிந்த சுந்தர்.சி யின் முதல் படமான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி வாயசைக்க கார்த்திக் பின்னாடி ஒளிந்து கொண்டு பாடும் வைஜெயந்திமாலாவின் 'வாழ்க்கை' காலத்து காட்சிகள் நிரம்பிய 'மாமா நீ வாம்மா.. புத்தம் புது பாட்டு..' என தொடங்கும் பாடல் 'கின்னா சோனா தெய்னு ரப்னே பனாயா..' என்ற இவரின் பாடலின் இசை திருட்டு அல்லவா அது.
இன்றும் இசை பிரியர்களால் குறைந்த பட்சம் கவ்வாலி இசை பிரியர்களால் மதிக்கப்படும் அந்த இசை உருவம் 'நஸ்ரத் பதேஹ் அலி கான்' என்ற பெயர் தாங்கி உருவம் தன்னுடைய 48வது வயதில் ஆகஸ்ட் 16ல் 1997ஆம் ஆண்டில் காலத்தை முடித்துக் கொண்டு புகழோடு கரை சேர்ந்தது.
பின் குறிப்பு:
'கயால்' இசை வடிவத்தை 'கயல்' என்று தவறாக எழுதியதற்காக வருந்துகிறேன்
திருத்திய ஆபிதீன் நானா அவர்களுக்கு என் நன்றிகள்..
அதற்காக ஆபிதீன் நானா அவர்களை இந்த 'அல்லாஹூ அல்லாஹூ'வில் கரையுங்கள் என்று வாழ்த்துகிறேன்



No comments:
Post a Comment