நாகூரில் இந்து முஸ்லீம் கலவரம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். நான் லுகாஸ் டிவிஎஸ் ஸில் வேலையில் சேர ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு பயணமானேன். சென்னையில் நான் தங்கியிருந்த வீடு மிக பிரம்மாண்டமான, கம்பீரமான வீடு. மயிலாப்பூரில், ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் இருந்த அந்த வீட்டிலிருந்து அண்ணா நகரில் இருந்த இன்னொரு வீட்டிற்கு இரவு சாப்பாட்டிற்கு பிறகு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தேன்.
இறைச்சி கறியை கேள்வி கணக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த போது அங்கே அவர்கள் வந்தார்கள், "இந்து, முஸ்லீம்ன்னு சண்டைலாம் போட்டுகிட்டிருக்க கூடாது, வேலைய மட்டும் பார்க்கணும்.." என்று என் கிட்டே வந்து இத மட்டும் சொல்லி விட்டு இல்லை இல்லை சிங்கம் போல் கர்ஜித்து விட்டு நகர்ந்து போகிறார். வாயில் இறைச்சி துண்டோடு எழுந்து நின்று ஒரு பேச்சு பேசாமல் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நான் எவ்வளவோ சொல்லியும் என் வயிற்றுக்குள்ளே இறைச்சி போகவே இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு லுகாஸ் டிவிஎஸ்ஸில் நேர்முக தேர்வு நடந்த போது சென்னையில் எங்கே தங்குவாய்? என்று பாலாஜி என்ற பார்ப்பனர் வாயில் வெத்தலையை போட்டுக் கொண்டே கேட்க,
நான் "மயிலாப்பூரில்.." என்று சொன்னேன்.
"மயிலாப்பூரில் உனக்கு யாரிருக்கா..?" என்று கேட்க
நான் எனக்கு தாத்தா முறையுடைய அன்னாரின் பெயரை சொன்னதும், ஒரு கனம் அவர் பேசவே இல்லை, "அவர்கள் உங்களுக்கு என்ன உறவு..?" என்றார்
நான், "என்னோட தாத்தா" என்று சொன்னேன்
அதற்கு அந்த பாலாஜி என்பவர், "நான் அவரோட படத்த என் பூஜ ரூம்ல வச்சிருக்கேன், தெனமும் கையெடுத்தும் நம்ஸ்காரம் பண்ணிட்டு தான் வேலைக்கே வருவேன்.." என்று பக்தி பெருக்குடன் இணைவைக்க நான் கண் விழி பெருசாவதை உணர்ந்தேன்
-------------------------------------------------------------------------------------------------------------
எனது சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பிடிக்காது என்பதை விட எனக்கு ஒரு கேடும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பள்ளிகூடத்தில் படிக்கிற பசங்க பாகிஸ்தான் வெற்றி பெற்றால் "நீங்க ஜெயிச்சிட்டீங்க.." என்றும் இந்தியா வெற்றி பெற்றால், "என்ன பாய்.. மண்ண கவ்விட்டீங்க போல.." என்பதும் என்னை அவர்கள் மீது பெரிதாக கோவம் வருவதற்கு பதிலாக கிரிக்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆவலை மட்டுமே தூண்டியது.
நாளடைவில் முஸ்லீம்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக பாகிஸ்தான் அணியினருக்கு இரசிகனாகவும் ஆகி போனேன். அதன் பிறகு பாகிஸ்தான் வெற்றி பெற்றால், "எப்படி..? தவுடு பண்ணிட்டான்வோ..?" என்று பீற்றிக் கொள்வதும் உண்டு. இதற்காக நான் தேச துரோகி என்று வர்ணிக்கப் பட்டேன். சில நண்பர்கள் (?) "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடந்தால் நீ பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே, நீயெல்லாம் பாகிஸ்தானுக்கு போ" என்று மிகுந்த அன்புடன் என்னை வற்புறுத்துவார்கள்.
அதையெல்லாம் நினைக்கையில், எனக்கு மர்ஹூம் பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது, "பாகிஸ்தான், காலிஸ்தான், ஏண்டா எங்களுக்கு என்ன கபுருஸ்தானா?" என்று கேட்பார்.
சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன், மேலே சொன்ன மயிலாப்பூர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது, மரியாதைக்குறிய அவர்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்றோடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த ஆவலோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அப்போது சயீது அன்வர் வேகமாக வந்த பந்தை ஒரே விளாசு விளாச அது தென்னை மர உயரத்துக்கு பறந்து போய் காய்ஞ்சு போய் விழுற மட்டையாட்டம் ஒரு பீல்டரின் கைக்கு லட்டு போல் வந்து கொண்டிருக்க, நான் சும்மா இல்லாமல், பாகிஸ்தான் அணி ஏனக்கு விருப்பத்திற்குறிய அணியாக இருந்த காரணத்தினால் "போச்சு.. போச்சு.." என்று என்னை மறந்து கத்தி விட, அவர்கள் என்னை திரும்பி பார்த்தார்கள். நான் எச்சில் விழுங்கினேன்.
அன்னாரின் மகளார் வேறு சும்மா இல்லாமல், "இவரு பாகிஸ்தானுக்கு தான் சப்போர்ட்.." என்று மாட்டி விட்டு விட்டார்.
நான் பதறி போய், "இல்ல..இல்ல.." என்று கத்தி வைக்க
"விளையாட்டு தானே.. இருந்து போவட்டும்..." என்று சொன்னதும் "அப்பாடா.." என்றிருந்தது எனக்கு. இது பாகிஸ்தான் அந்த மேட்சில் தோற்று போய் நான் வருத்தப்பட்டது சம்மந்தமில்லாத செய்தி
-------------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உட்கார்ந்து இருக்கிறார்கள். முக்கிய நபர்கள் வர வேண்டி இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நேரமும் வந்து விட்டது.
அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களிடம் சென்று, "ஐயா, இன்னும் முக்கிய புள்ளிகள் வரவில்லை.. என்ன செய்ய?' என்பது போல் கேட்க, நிகழ்ச்சியை குறித்த நேரத்துக்கு தொடங்கியாக வேண்டும் என்று உத்திரவிட்டார்கள். "அப்ப கரெக்ட் டயத்துக்கு வந்து ஒட்கார்ந்து இக்கிறவன்லாம் என்ன கேனையனா..?" என்பது போல் கேட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.
இதன் காரணத்தினால் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூட அன்னாரின் வீட்டு திருமணத்திற்கு வந்த போது, கடிகாரத்தை காட்டி, "குறித்த நேரத்துக்கு சரியா வந்துட்டேன்.." என்று அன்பொழுக சொல்லி தழுவிக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------
மேலே தொகுக்கப்பட்ட அத்தனை செய்திகளிலும் நாயகர் யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஜட்ஜ் அப்பா என்று எங்கள் குடும்பத்தார்கள் எல்லோரும் மரியாதையுடன் அழைக்கும் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்ம்மாயீல் அவர்கள் தான்.
தொடரும்...
4 comments:
நான் உங்களின் தொடர் வாசகன். ஆனால் நீங்கள் பாக்கிஸ்தான் பிரியர் என்று அறிந்தபின் எனக்கு இனி இங்குவர மனமில்லை. உங்கள் பிரியம் வெறும் விளையாட்டிற்காகவே மட்டும் இருந்தாலும்கூட எனக்கு மனம் ஒப்பவில்லை. இங்கு இதுவே என் இறுதி வருகை.நன்றி.வஸ்சலாம்.
இது வரை தொடர் வாசகனாக இருந்ததற்கும் இனிமேல் தொடராத வாசகனாக இருப்பதற்கும் சமமான நன்றிகள்
Can you please write more about Justice Iyya? I think he is the master in Kamba Ramayanam and is that book available? Few judge I respect and he is the First one.
திரு சவுரி ஐயா அவர்களுக்கு, ஜஸ்டிஸ் ஐயாவை பற்றி எனக்கு தெரிந்த படித்த பழகிய கேட்ட என அனைத்தையும் இதில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஆமாம், ஜஸ்டிஸ் அவர்கள் கம்பராமாயனத்தில் மாஸ்டர் தான், கம்பராமாயணமும் கம்பரும் கூட இவர்கள் மூலமாக தான் புகழடைந்தார்கள் என்று நான் கருதுகிறேன்.
இவர்கள் ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். கம்பராமாயனத்தை பற்றி கம்பன் கண்ட சமரசம் என்ற புத்தகம் மிகவும் பிரபலம். இந்த புத்தகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்கள் படித்து பாராட்டியுள்ளார்கள். அரியும் சிவனும் ஒன்று என்று கம்பன் கொள்கையாக இருந்தது என்று விளக்கியிருப்பார்கள்.
அது தவிர மூன்று வினாக்கள் என்ற ஒரு புத்தகம் உள்ளது. அது ராமன் வாலியை கொன்றது நியாயம் தான் என்று தீர்ப்பளித்திருப்பார்கள். இந்துக்களிடையே அதுவும் குறிப்பாக பிராமனர்களிடையே இந்த புத்தகம் வரவேற்பை பெற்றது.
கம்பராமாயணமே தமிழின் சிறந்த இலக்கியம் என்பது ஜஸ்டிஸ் ஐயா அவர்களின் கருத்து.
அவர்களின் அனைத்து புத்தகங்களையும்
வானதி பதிப்பகம், 13, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை - 17 என்ற முகவரிக்கு சென்றால் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி
Post a Comment