Thursday, January 21, 2010

சில டைரி குறிப்புகள்

என் கூட ராஜகோபால்ன்னு ஒரு ஐயர் வீட்டு பையன் படித்தான். சோடா புட்டி கண்ணாடி போட்டிருப்பான். நாங்க எல்லாம் நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல் நிலை பள்ளியில் அதாவது தமிழ் புரியாதவர்களுக்கு நேஷனல் ஹை ஸ்கூலில் தான் ஒன்றாக படித்தோம்.

ஒன்றாக படித்தது மட்டுமல்ல ஒரே வாத்தியார்ட்ட தான் டியுசனும் படித்தோம். அப்போ நான் எனது மச்சான் ராஜா என்கிற ஃபாருக் மற்றும் பல முஸ்லீம் இந்து நண்பர்கள் யாவரும் பள்ளிகூடம் விட்டதும் நாகை கடைத்தெருவில் உள்ள கமாலிய்யா பள்ளிக்கு சென்று அங்கேயே டியுசனில் கொடுத்த ஹோம் ஒர்க எல்லாத்தையும் முடித்து விடுவது வழக்கம்.

ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசலில் தொழுகைக்கு ’அதான்’ (அழைப்பு) விடுப்பார்கள். நாங்கள் முஸ்லீம் நண்பர்கள் யாவரும் உடனே அங்க சுத்தி செய்து விட்டு அதாவது கை, கால், முகம், காது, வாய், தலை முடி எல்லாத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவோம்.

தொழுகையில் ஒருவர் பின் ஒருவர் அல்ல ஒருவர் தோலை உரசிக் கொண்டு ஒருவர் வரிசையாக நிற்பது, ஒரே மாதிரி குனிவது, நிமிர்வது, தொழுகை முடிந்தவுடன் கை கொடுத்து வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்வதை கவனித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்ற ஐயர் ஒரு நாள் என்னிடம் அந்த கேள்வியை கேட்டே விட்டான்.

“நானும் உங்க மதத்து வந்துடவா?’ என்று

இதை நான் இங்கே பொய்யாகவோ கொஞ்சம் கூட இட்டுகட்டியோ சொல்லவில்லை.

அவன் அப்படி கேட்டான்.

நான் உளம் மகிழ்ந்து, ’தாராளமா வந்துடு.. ஆமா, என்னா புடிச்சிருக்கு?’ என்று கேட்டேன்

‘நீங்கள்லாம் ஒரே மாதிரி ஒத்துமையா செய்றது பாக்குறதுக்கே அழகா இருக்கு’ என்றான்

இன்னைக்கு முஸ்லீகளுக்குள் இருக்கின்ற ஒத்துமையா எல்லாம் பார்த்திருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டான் என்றே தான் தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------
எங்க ஹஜ்ரத் அவர்களிடம் நான் சேர்ந்த புதிதில் கேள்விகளாக கேட்டு தள்ளுவேன். அந்த ஹதீஸ்ல அப்படி போட்டிருக்கே? இந்த ஹதீஸ் கிதாப்ல இப்படி போட்டிருக்கே என்று எனது கேள்விகள் தாறுமாறாக இருந்தது. ஆது, சமூது கூட்டத்தை பத்தி, சாலிஹ் நபியின் ஒட்டகத்தை பத்தி கேட்டிருக்கிறேன்.

சைத்தானுக்கு உருவம் இருக்கிறதா என்று கூட கேட்டிருக்கிறேன். சைத்தான் தொஹீது வாதியா என்றும் கேட்டிருக்கிறேன். பிர் அவுனிலிருந்து மூஸா நபி வரை, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பற்றி, நூஹ் நபியின் கப்பலை பத்தி, அன்னை மர்யம் (மதர் மேரி) அவர்களை பத்தி அவர்களின் புதல்வர் ஈஸா நபி பற்றி இப்படி ஒரு கேள்வியையும் விட்டது கிடையாது.

பெருமானாரிலிருந்து நாகூர் நாயகம் முதற்கொண்டு நான் கேட்காத கேள்விகளே கிடையாது எனலாம்.

ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை ‘ஹதீஸ்’ என்றே அழைத்தார்கள்.


‘இந்த வந்துட்டாரே ஹதீஸ்’ என்றார்கள்.

எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொன்னார்கள், ‘ஏன்ப்பா, பொண்ணை வுட்டுபுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுகிட்டு இருக்கிறீயே’ என்று
-------------------------------------------------------------------------------------

ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இந்த முஸ்லீம்களெல்லாம் மறுமைக்காக தொழுவுறோம், மறுமைக்காக சகாத் கொடுக்கிறோம் மக்கா யாத்திரைக்கு போறோம் உடலை வருத்திகிட்டு நோன்பு பிடிக்கிறோம்ன்னு சொல்றீங்களே.. மறுமையே வரலைன்னா என்னா செய்வீங்க..?’ என்று உலகத்திலேயே அதி முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்

நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்

அவர் நினைச்சிருப்பாரு, ’ஆனா வந்துட்டான்னு.. சொல்லி நிறுத்திட்டானே.. இவன் என்ன சொல்ல வந்திருப்பான்..? வந்துட்டாலும் வராவிட்டாலும் அவனுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்ல.. வரலேன்னா எனக்கும் நஷ்டமில்லை ஆனா மறுமைன்னு ஒண்ணு உண்மையிலே வந்துட்டா நான் தான் நஷ்டப்பேடுவேன்னு சொல்ல வந்திருப்பேன்னு அவர் நினைச்சிருப்பார்’

ஆனா அதான் இல்ல, நான் சொல்ல நினைச்சது அப்படியே மறுமை வந்துட்டாலும், முஸ்லீம்களுக்கு தான் கஷ்டம்’ன்னு சொல்ல தான் நினைச்சேன்.

2 comments:

Pebble said...

//நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்//.


Ithu Ali Rali, avarhal sonnathuthane.

nagoreismail said...

"Ithu Ali Rali, avarhal sonnathuthane"

- எனக்கு உண்மையிலேயே அலி (ரலி) அவர்கள் சொன்னது தானா என்பது தெரியாது.

ஆனா நான் எதை வைத்து அப்படி என் நண்பருக்கு பதில் சொன்னேன் என்றால் எங்க ஹஜ்ரத் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்று உள்ளது.
அந்த புத்தகத்தின் பெயர் "அறிவும் தெளிவும்" - அந்த புத்தகம் இமாம் கஸ்ஸாலி அவர்களின் 'இஹ்யா உலூமித்தீ'னின் தமிழாக்கம்.

அற்புதமான அந்த புத்தகத்தில் அறிஞர்கள், பக்தர்கள், பணக்காரர்கள் என்று அவர்களின் படித்தரங்களை பற்றி விளக்கப்பட்டிருக்கும்.

அந்த புத்தகத்தில் எனக்கு அப்படி ஒரு கருத்தை படித்த ஞாபகம். அதன் அடிப்படையில் தான் நான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன்

எங்களது ஹஜ்ரத்தை பற்றி ஆபிதீன் நானா அவர்களின் வலைத்தலத்திலிருப்பவை:

http://abedheen.googlepages.com/wahabsahib.html

உங்களை பற்றிய விபரம் தெரிந்து கொள்ள விபரம், முடிந்தால் பெயரும் ஊரும் மற்றுமாவது சொல்லவும்..?