Thursday, September 09, 2010

ஈத் முபாரக்

இங்கே சிங்கப்பூரில் நாளைய தினம் நோன்பு பெருநாள். மலாய் மொழியில் இந்த நாளை 'சலாமத் ஹரி ராயா ஈதுல் பித்ரி' என்று சொல்வார்கள். ஒரு மாதம் இறைவனை நினைத்து பசித்திருந்து நல்லவைகளை பழக்கப்படுத்தி பொறுமையாக இருந்து விட்டு நாளைய தினம் குடும்பத்தினரோடும் சகோதரர்களோடும் அண்டைய வீட்டினரோடும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கொண்டாடும் நாள்.

இன்றைக்கு ஒரு விருந்து என்றால் சிறப்பான நாள் என்றால் மதுபானம் தான் மூலதனம். சாராய வாடை இல்லாமல் சாதாரணமாக ஒரு கொண்டாட்டமும் கிடையாது, கூட்டமும் கிடையாது. ஆனால், இந்த பெருநாள் அப்படியல்ல, நோன்பிருந்து பொறுமையாக இருந்து விட்டு பெருநாளன்றும் இறைவனை நினைக்கவும் வணங்கவும் பள்ளிவாசலுக்கு வந்து விட வேண்டும்.

அடுத்த வருடத்தில் என்ன தேதியில் நோன்பு பெருநாள் வரும் என்று இந்த வருடத்திலேயே இங்கே சிங்கையில் கணித்து சொல்லி விடுகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் நாகூரில் அன்றைய இரவு நேரடியாக பிறை பார்க்கப்பட்டு அல்லது அக்கம் பக்கத்து ஊரில் பார்த்ததாக தகவல் வந்த பிறகு தான் நாகூர் தர்காவில் குண்டு போட்டு அடுத்த நாள் பெருநாள் என்று அறிவிப்பார்கள்.

ஒரு முறை அன்றைய தினம் தான் கடைசி நோன்பாக இருக்கும் என்று நினைத்து பிறை பார்க்க ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக் நின்று பிறையை வானில் தேட ஆரம்பித்தார்கள். எங்கள் ஊரில் யாரையாவது நீண்ட நாள் கழித்து சந்தித்தால், 'என்னா இது, பொறய பாக்குற மாதிரில்ல இருக்குது' என்று கூட சொல்வார்கள்.

அன்றைய தினம் பிறையே புலப்படவில்லை. வழக்கம் போல் நோன்பு நாளில் தொழும் சிறப்பு தொழுகையான திராவீஹ் தொழுகையை (20 ரக்கத்து தான் அப்பொழுதெல்லாம் 8 கூட்டம் தலையெடுக்காத குழப்பமில்லாத நாட்கள்) நிறைவேற்ற பள்ளிவாசலுக்கு சென்று விட்டோம். கிட்டதட்ட ஐந்து சலாம் முடிந்து விட்டது.  ஆறாவது  ஸலாமிற்குறிய  தொழுகையை நிறைவேற்ற தக்பீர் கட்டினோம் 'அல்லாஹு அக்பர்' குண்டு போட்டு நரகா கொட்ட ஆரம்பித்து பெருநாள் தக்பீர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அப்புறம் என்ன..? அந்த ஸலாத்தை முடித்து விட்டு பெருநாள் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. 
"நாளைக்கு பெருநாள்
நம்மளுக்கு ஜோக்.." என தொடங்கும் பாடல் தெருவெங்கும் சிறுவர்களின் வாயில் முனுமுனுக்க ஆரம்பித்தது. அந்த குழப்பமில்லாத நாட்களிலெல்லாம் நாகூரில் ஷாஃபி இமாமின் கருத்துக்களின் படி தொழுகையில் சில விதிகளை கடைபிடித்து தொழுபவர்களும் ஹனஃபி இமாமின் கருத்துக்களின் படி தொழுகையில் சில விதிகளை கடைபிடித்து தொழுபவர்களும் இருந்தார்கள்.

திராவீஹ் தொழுகை 20 ரக்கத்துகள் இரு விதிகளை பின்பற்றுபவர்களும் ஒன்றாக ஒரே வரிசையில் அருகருகே நின்று தான் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகை முடிந்ததும் வித்ரு எனும் தொழுகையில் அதன் முறையில் சில வித்தியாசங்கள் இருப்பதால் தனித்தனியே தொழுகையை நிறைவேற்றுவார்கள். யார் வேண்டுமென்றாலும் எந்த முறைப்படியும் தொழலாம். என் முறை தொழுகை தான் சரி என்ற எண்ணம் இந்த இரு பிரிவினருக்கும் இருந்ததே இல்லை.

உதாரணமாக நான் வந்து சங்கை மிகு ஹனஃபி இமாம் அவர்கள் வகுத்த  விதிகளின் படி தொழுகையை நிறைவேற்றுவேன். எனது மாமா சங்கை இமாம் அவர்கள் வகுத்த விதிகளின் படி தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகை முடிந்ததும் அனைவரும் ஸலாம் கொடுத்துக் கொள்வோம்.

அந்த நாட்களெல்லாம் வெறும் குழப்பமில்லாத நாட்கள் மட்டுமல்ல துப்பாக்கியில்லாத தோட்டாக்கள் இல்லாது உயிரிழப்பு இல்லாத அருமையான பசுமையான நாட்கள். பெருமானார் அவர்களின் கூற்றின்படி 'கூடாரங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக' இருந்த நாட்கள்.

இன்றைக்கு இந்த மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று தெரியவில்லை? பிரிவுகளாக பிரிந்து உள்ளுக்குள் குரோதத்தையும் விரோதத்தையும் வளர்த்து விட்டார்கள் சில குறை மதியுடைய ஆலிம்ஷாக்கள். அவர்களின் விஷமம் விஷத்தை பரவ செய்து வேருக்கே உலை வைத்து விட்டது. இவர்கள் மார்க்கத்தை போதிக்க வரவில்லை. குழப்பத்தை ஏற்படுத்த வந்து வெற்றியும் கண்டு விட்டார்கள்.

****************************************************************************

தவறி செய்த பாவங்களை மனம் வருந்தி திருந்தி கையேந்தினால் அல்லாஹ் மன்னிப்பான். தெரிந்தே செய்கின்ற குழப்பங்களை பூரா உம்மாவும் மன்னிக்காது.

சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்


**********************************************************************************************






************************************************************************************************




************************************************************************************





************************************************************************************





*************************************************************************************

குரான் ஷரீஃப்

ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)

வசன எண்: 19

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.

*****************************************************
இணைப்பு:

http://www.boston.com/bigpicture/2010/08/ramadan_2010.html 


**********************************************************************************

6 comments:

பூக்காதலன் said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
மனங்கள் ஒன்றுபட பிரார்த்திப்போம்.
இனிய ஈத் முபாரக்.

Selamat Hari Raya Aidil-Fitri.

nagoreismail said...

ஈத் வாழ்த்துகளுக்கு நன்றி பூக்காதலன்..

மதங்களை தாண்டிய மனங்கள் ஒன்றுபட எனது பிரார்த்தனைகள்..

கோவி.கண்ணன் said...

தங்களுக்கும், தங்கள் இல்லத்தினருக்கும், உறவினர் நண்பர்களுக்கும் பெருநாள் வாழ்த்துகள்.

(ஒரு இல்ஸாமிய இணையத் தளத்தில் இஸ்லாமியர்கள் பிறரிடம் வாழ்த்துப் பெறவோ, பிறரின் பண்டிகைகளுக்கு வாழ்த்தவோ இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்ப்பட்டதாகவும், இஸ்லாமியர்கள் அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது, அதைப் படித்ததிலிருந்து இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும் போது தயக்கமாகவே இருக்கிறது, வாழ்த்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, பெற்றுக் கொள்வதும் உங்கள் விருப்பம், சொல்லுவதற்கு எனக்கு எதேனும் தடை இல்லை என்பதால் வாழ்த்து சொல்லுகிறேன்)

nagoreismail said...

கோ.வி.கண்ணன் சார்,

Please kindly ignore that web sites and its stupid statements.

உங்கள் வாழ்த்துகளை நான் பெற்றுக் கொண்டேன்.

மிக்க நன்றிகள்.

Joe said...

Very well written article, Ismail.

Eid Mubarak!

nagoreismail said...

Many thanks for the comments and wishes, Joe