Monday, January 17, 2011

பேச்சு தீவிரவாதிகள்

இறைவனையும் இறுதி நாளையும் நம்புகிறவர்கள் ஒன்று நல்லதைப் பேசட்டும் - அல்லது வாயை மூடிக் கொண்டு மௌனமாயிருக்கட்டும் - பெருமானார் (ஸல்)

எடை என்னவோ சிறியது தான், ஆனால் அது செய்யும் பாவமோ பெரிது - ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்.

--------------------------------------
பேச்சினால் விளைந்த தீமைகள் எத்தனை எத்தனை. நல்லா இருந்த குடும்பம் ரெண்டா பிரிஞ்சிருக்கு. குழாயடி சண்டை ஆரம்பித்து மாமியார் மருமகள் கேஸ் அடுப்பு பற்றி எறிந்த கதைகள் எல்லாம் பேச்சினால் விளைந்த தீமைகள் தான்.

எனக்கு தெரிந்து ஒரு விவாதம் நடந்தது. மிக காரசாரமான விவாதமது. நீ தான் நான் தான் என்று விவாதம் செய்ததில் நீயா நானாவெல்லாம் தோற்று போய் இருந்தது.

சுமார் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அந்த விவாதம் இரண்டரை மணி நேரமாகியும் முடிவு தெரிந்த பாடில்லை. ஆரம்பித்த இடத்திலிருந்து ஒரு புள்ளி கூட நகராமல் இருந்த இடத்திலேயே இருண்டு கிடந்தது.

அப்புறமாக இன்னொரு ஒன்றரை மணி நேர விவாதத்திற்கு பிறகு ஒரு மனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. நாளை மறுபடியும் விவாதத்தை தொடரலாம் என்பதே அது.

கல்லாய் இருந்து சாதித்த அந்த பிரச்சினை வேறொன்றுமில்லை. ‘அலுவலக பாத்ரூம் சாவி யார் கையில் இருப்பது?’ என்பது தான் அது.

இது ஏதோ வேடிக்கைக்காக எழுதியது தான் என்றாலும் நமக்கான செய்தி குறைந்த பட்சம் எனக்கான செய்தி இருக்கவே செய்கிறது.

அது என்னவென்றால், பேச்சை குறை என்பது தான் அது. பேச்சுக்களில் பல மாதிரி பேச்சுக்கள் இருக்கிறதாம். வீண் பேச்சு, தேவைக்கு மிஞ்சிய பேச்சு, தப்பான பேச்சு, கண்டனப் பேச்சு, வழக்கு பேச்சு, அடுக்கு பேச்சு, நிந்தனைப் பேச்சு, கவிதை, ஹாஸ்யப் பேச்சு, கேலியும் கிண்டலும், பொய்ப் பேச்சு, பாராட்டு பேச்சு, இப்படி அந்த பட்டியல் நீளுகிறது.

மேலே கண்ட அத்தனையையும் நான் சொல்லவில்லை. மாபெரும் அறிஞர் இமாம் கஜ்ஜாலி அவர்களே சொல்லியிருக்கிறார்கள். எங்கள் ஹஜ்ரத் அவர்கள் இதனை ‘நாவின் விபரீதங்களா(ஆபாதுல்லியான்)’க்கி எங்கள் கைகளில் தவழ விட்டார்கள்.

இந்த கிதாபை படித்து விட்டு நான் கொஞ்ச நாள் பெரும்பாலான நேரங்களில் மௌனமாகவே இருக்க முயற்சி செய்தேன். என் முயற்சி தோல்வியில் முடிந்தது.

"Do not speak unless you can improve the silence" - என்பது ஆங்கில பழமொழி.


இமாம் அபூஹனிபா தாவுத் தாயி அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கினார்கள், “மனப் பயிற்சிக்காக நீர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, நாலு பேருக்கு மத்தியில் உட்கார்ந்து கொள்ளும். பேசப்படும் விஷயத்தை கூர்ந்து கவனியும். ஆனால் மறுத்தும் ஒரு வார்த்தை பேசாதீர்” என்று.


ஒரு முறை நான் எங்கள் நாகூர் தலைமாட்டு தெருவில் இருந்த ஹஜ்ரத் வீட்டிற்கு எப்போதும் போல் சென்றேன், அங்கே ஊரிலிருந்த ஒரு பணக்காரர் ஹஜ்ரத் முன்னால் உட்கார்ந்து இஸ்லாம் மார்க்கம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். 


ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை பற்றியும் பஞ்சா எப்படி வந்தது என்பது பற்றியும்  கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்கள் பேசுவதையே வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஹஜ்ரத் அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 


வாய்க்கு சிறிது நேரம் கூட ஓய்வு கொடுக்காமல் பேசி முடித்த அவர்கள் அப்பொழுது புறப்படுகிறேன் என்று விடை கொடுத்தார்.


அதன் பிறகு நானும் கிளம்பி வந்து விட்டேன். அடுத்த நாள் ஹஜ்ரத் வீட்டிற்கு போன போது ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள், ‘நேத்து நீ கேட்டதில் உண்மையில்லை’ என்று.


‘மக்களுடன் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..’ என்று சொன்ன பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் பேசினார்கள்.


‘ஒரு மனிதனின் உள்ளம் மற்றொரு மனிதனின் உள்ளத்தோடு தொடர்புகொண்டு உரையாடுகிறது. இத்தகையவர்கள் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. இந்த ஆற்றல் இல்லாதவர்கள் வார்த்தைகளை கட்டிக் கொண்டு அழுது தான் தீரவேண்டும்’ - மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் அருளியது.


அப்போது நான் ஒரு முடிவெடுத்தேன், வேலைக்கு போனால் பேசுவதை குறைக்க வேண்டும் என்று, அப்புறமாக எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ஒரு மாதத்திற்கு குறைந்தது 100 மணி நேரம் பேச வேண்டுமெ என்பதே அந்த வேலை.

"Harms of Tongue" - இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.lightofihsan.com/index.php?option=com_content&view=article&id=105:harmstongue&catid=29:islam&Itemid=37

No comments: