Wednesday, May 02, 2012

உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் இறந்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள்

நாகூரில் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதுஷா நாயகமவர்களின் நினைவு தினம்  அவர்களை பெரிதும் மதித்து போற்றும் என் போன்றவர்களால் நேற்றைய/ இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

யாரையுமே மதிக்காமல் பேசும் போக்கு இன்று நம்மில் பலரிடையே வந்திருக்கிறது. இவர்களின் கேலி பேச்சு யாரையும் விட்டு வைக்கவில்லை, அவர்கள் அலி (றலி) அவர்களையே “எடுப்பார் கைப்பிள்ளை” என்று மிக சாதாரணமாக சொல்லி விட்டார்கள்.

இவர்களுக்கு இறை நேசர்கள் எல்லாம் எம்மாத்திரம்? இவர்கள் தொடுக்கும் கேள்விக் கனைகளில் சில..

குரான் ஷரீஃபிலோ பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீதிலோ ஒருவரை இறை நேசர் என்று அடையாளப் படுத்தியிராவிட்டால் நாங்கள் ஒருவரின் வரலாற்றையோ அல்லது வாழ்க்கை குறிப்பையோ படித்து விட்டு இவர் இறை நேசர் என்ற முடிவுக்கு வர முடியாது?

ஒருவர் இறைநேசர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அதை அல்லாஹ் தான் சொல்ல வேண்டும், அதாவது ஆதாரம் வேண்டும்? 

துறவி எனும் போர்வையில் ஒரு நடிகையிடம் சல்லாபம் புரிந்த நித்தியானந்தாவை போல் இறை நேசர்கள் எனும் பெயரோடு மண்ணறைகளில் உள்ளவர்கள் வாழ்ந்திருந்தால்...? 

அப்படியே அவர்கள் இறை நேசர்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இறந்து விட்டார்கள்.. ஆகையினால் இந்த உலகத்தோடு அவர்களுக்கு தொடர்பு இல்லை.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். இறந்தவர்களிடம் சென்று உயிரோடிருப்பவர்களிடம் உதவி தேடுவது போல் உதவி தேடக் கூடாது. இறந்த பிறகும் ஒருவருக்கு உயிரோடிருந்து உதவி செய்ய முடிகிறது என்று நம்பினால் அது ஷிர்க் ஆகும்.

மண்ணறைகளில் உள்ளவர்களை பெருமானார் (ஸல்) அவர்களே கூட செவியேற்க வைக்க முடியாது.

(இதற்கு ஆதாரம்:

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது)

ஆக, பெருமானாராலேயே (ஸல்) அவர்களாலேயே கேட்க வைக்க முடியாத மண்ணறை வாசிகளிடம் போய் ‘எனக்கு இத செஞ்சு கொடுங்க..” என்று அல்லாஹ் அல்லாதவர்களிடம் அல்லாஹ் மட்டுமே முடித்து கொடுக்கக் கூடிய காரியங்களை ஒப்படைப்பது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.

- எனக்கு இவர்கள் அலி (றலி) அவர்களை அப்படி பேசியதையோ இன்னும் கௌது நாயகம் (றஹ்) அவர்களை ஏக வசனத்தில் அவர் இவர் என்று பேசியதையோ இறை நேசர்களை நம்பாமல் போவதை பற்றியோ அல்லது வேறெதையும் பற்றியோ நமக்கு விமர்சனம், எதிர்ப்பு இருந்தாலும் அதை பற்றி பேசப் போவதில்லை.

ஆனால் மேலே வரும் குரான் ஷரீஃபில், “நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..” என்ற வாக்கியத்தை எப்படி விளங்க வேண்டும் என்பதில் எனது புரிதலை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன்.

குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை மட்டும் மறுபடியும் எழுதுகிறேன்..

நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..

- இது தான் அந்த வாக்கியம். 

இப்படி நினைத்து பாருங்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்து போனவர்களிடம் அதாவது கப்ரில் அடங்கியிருப்பவர்களிடம் நான் போய் இஸ்லாத்தை போதிக்கலாமா? என்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் என்று வையுங்கள்.

உடனே இறைவன் மேலே கூறிய வசனத்தை சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி கேட்டு இருப்பார்களா என்று இந்த வசனம் தொடர்பான தப்ஸீர்களை படித்து பார்த்தால் அப்படி ஏதும் அவர்கள் கேட்கவில்லை.

அல்லது இப்படி இருக்குமோ...?

”கப்ரில் உள்ளவர்களை நான் பேச வைக்கிறேன்” என்று யாரிடமாவது வாக்குறுதி அளித்து விட்டு ”அப்படி நான் கேட்க வைக்க வேண்டும்” என்று இறைவனிடம் துவா ஏதும் கேட்டுள்ளார்களா என்று பார்த்தால் அப்படியும் ஏதும் நடைபெறவில்லை.

பிறகு ஏனிந்த வாக்கியம், “நீர் மரித்தோர்களை கேட்கும்படிச் செய்ய முடியாது...”

இதற்கு முந்தைய வாக்கியங்களை தொடர்பு படுத்தி பார்ப்பதோடு பெருமானார் (ஸல்) அவர்களின் குணங்களையும் தொடர்பு படுத்தி சிந்தித்து பார்த்தால் ஒரு வேளை விளங்கி விடும் என்று நினைக்கிறேன்.

உதாரணமாக இதற்கு முந்தைய 79வது வாக்கியத்தை படித்து பார்ப்போம்.

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 79வது வாக்கியம்

எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான் உண்மையின் மீது இருக்கின்றீர்.

இந்த வாக்கியத்தில் இரண்டு செய்திகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சொல்கிறான்.

1. எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக

 - அதாவது, உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் ’நேரான வழிக்கு’ அழைப்பது என்பதை பலரும் தட்டி கழிக்கிறார்கள் என்று கவலை கொள்ள வேண்டாம், அல்லாஹ்வின் மீதே உங்களின் எல்லா காரியங்களிலும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அழைப்பு பணி விடுத்துக் கொண்டே இருங்கள்.

2. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்

- அதாவது அவர்களிடம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளோடு வந்த போது அவர்கள் எதிர்ப்பதனால் உங்களை (பெருமானார் (ஸல்) அவர்களை) பொய்யை கொண்டு வந்திருக்கிறீர் என்று சொல்வதனால் எல்லாம் நீங்கள் பொய்யுரைத்தவர் ஆக மாட்டீர்கள், மாறாக, நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் இஸ்லாத்தின் மீது இருக்கின்றீர்.

ஆக, பெருமானார் (ஸல்) அவர்கள் ரொம்ப கவலைப்படுகிறார்கள், ‘என்னா இது? மக்கள் நேரான பக்கம் வர மாட்டேங்கிறார்களே.. நம்மை ஏற்காததோடு நமக்கு எதிராக சூழ்ச்சியும் அல்லவா செய்கிறார்கள்..” என்று..

இதே அத்தியாயத்தில் 70 வது வாக்கியத்தை கவனியுங்கள்

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 70வது வாக்கியம்

அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியை பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்

இதை அப்படியே வச்சுகிட்டு நாம் மேலே எடுத்துக் கொண்ட வாக்கியத்தை படித்து பாருங்கள்

இந்த கட்டத்தில் தான் இறைவன் சொல்கிறான்..

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது




குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 81வது வாக்கியம்


இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்வர்.

ஆக, 80ம் வாக்கியத்தையும் 81வது வாக்கியத்தையும் கவனித்து படித்து பாருங்கள். 

”நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது” என்றால் என்ன அர்த்தம் என்றால், உங்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் அல்லவா அவர்கள் மரித்தவர்கள் போலாவார்கள்.

உங்கள் பேச்சை எவர்கள் புறங்காட்டித் திரும்பி விடுகிறார்களோ அவர்கள் தான் செவிடர்கள்.

உங்களின் அத்தாட்சிகளை எவர்கள் காண வில்லையோ அவர்கள் தான் குருடர்கள்

இந்த மரித்தவர்களை, செவிடர்களை, குருடர்களை - அதாவது முத்திரை வைக்கப்பட்டவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த முடியாது.

நீங்கள் யாரை நேர்வழியில் செலுத்த முடியும், உங்கள் பேச்சை கேட்க வைக்க முடியும் என்றால், இறைவனின் வசனங்களை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்க வைக்க, விளங்க வைக்க, புரிய வைக்க (hear, listen and understand) முடியும் என்பதாக சொல்கிறான்.


இந்த வசனத்தில் physical ஆக இறந்தவர்களை பற்றியோ,  physical ஆன செவிடர்களை பற்றியோ, அல்லது  physical ஆன குருடர்களை பற்றியோ பேசவில்லை என்பது தான் நான் விளங்கி வைத்திருப்பது ஆகும்.


இது தான் உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் என்ற இந்த கட்டுரையில் தலைப்பில் வரும் பாதிக்கான விளக்கம்.


அப்போ இறந்து விட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது எப்படி?


இன்ஷா அல்லாஹ் பிறகு...

No comments: