Wednesday, July 18, 2012

உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் இறந்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள்

சத்தியம் அவர்களிடம் வந்த போது எதை அவர்கள் வேண்டுமென்றே சத்தியம் என்று தெரிந்த நிலையிலும் கூட அவர்கள் பிடிவாதத்திற்காகவும் கௌரவத்திற்க்காகவும் கேட்க அல்லது ஏற்றுக் கொள்ள மறுத்தார்களோ அவர்களை தான் இறந்தவர்கள் - அவர்கள் பிஸிக்கலாக உயிருடனே இருந்தாலும் கூட அவர்கள் இறந்தவர்கள் - என்று திருமறை கூறியிருப்பதாக நான் புரிந்து வைத்ததை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

http://nagoreismail786.blogspot.com/2012/05/blog-post.ht

இனி..

பிஸிக்கலாக இறந்தவர்கள் உயிரோடு இருக்க முடியுமா என்ற கேள்விக்கான விடை..

மனிதன் மட்டுமல்ல, ஆடு, மாடிலிருந்து பூச்சி புழுவுக்கு கூட இனப்பெருக்க உறுப்பு இருக்கத் தான் செய்கிறது, பிறக்கிறது வாழ்ந்து மடிகிறது.

மனிதர்கள் எல்லோரும் தனியாக எடுத்துக் கொண்டால் கூட அனைவருக்கும் ஒரே மாதிரி பிறப்பு, வாழ்வு, இறப்பு இருக்கத்தான் செய்கிறது.

(குறிப்பு: ஒட்டு மொத்த மனிதர் அனைவருக்கும் பிறப்பு ஒரே மாதிரி இருந்தாலும் ஈஸா நபியவர்களுடைய (அலை) பிறப்பில் ஒரு பெரிய அற்புதம் இருக்கிறதை பார்க்கிறோம். இதை பற்றி பிறிதொரு இடத்தில் பேசுவோம்)

மரணம் எல்லோருக்கும் அனுபவித்தே தீர வேண்டிய ஒன்று. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்பது திருமறையின் வாக்கு தான்.

ஆனால் குரான் ஷரீஃபில் ஒரு வசனம் வருகிறது. அதை கவனியுங்கள்.

39. ஸூரத்துஜ்ஜுமர் - கூட்டங்கள்  - 39வது வாக்கியம்


அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் மற்றொரு) மனிதரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் -  எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.


39. ஸூரத்துஜ்ஜுமர் - கூட்டங்கள்  - 40வது வாக்கியம்


நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.

மேலே கண்ட வசனத்தில் அல்லாஹ் ஒரு உதாரணம் மூலம் சொல்கிறான், பல எஜமானர்களுக்கு (இங்கே எஜமான் என்ற வார்த்தை ஒரு உதாரணமாக தரப்பட்டிருக்கிறது. எஜமான் என்ற வார்த்தை எல்லாவற்றையும் குறிக்கும், பணம், பதவி, கோபம், சோம்பல், எரிச்சல், புகைச்சல், குழப்பம் விளைவித்தல், குடி, பெண் மோகம், இன்னும் எண்ணில் அடங்கா எஜமானர்களை குறிக்கும்) சேவகம் செய்யும் ஒருவரும், ஒரே எஜமானுக்கு (இங்கே எஜமான் என்ற வார்த்தை அல்லாஹ்வை மட்டும் குறிக்கும்) சேவகம் புரிபவரும் சமமாவார்களா? என்று கேட்கிறான்.

அவ்வாறு கேட்டு விட்டு ”சமமில்லை” என்று சொல்லாமல் சொல்லி ”ஆனாலும் இதனை யாரும் அறிய மாட்டார்கள்” என்று சொல்கிறான்.

இதற்கு அடுத்த வசனத்தில் “நிச்சயமாக நீரும் மரிப்பவர் - யாரு? ஒரே எஜமானுக்கு சேவை புரிபவரும் மரிப்பவர் தான், நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்கள் தான் - யாரு? பல எஜமான்களுக்கு சேவை புரிபவர்களும் இறந்து போக கூடியவர்கள் தான்.

இப்படி கூறியிருப்பதை ஒரு வஹ்ஹாபிய உளவியல் படைத்த ஒரு மனம் படிக்கிறது என்றால், என்ன நினைக்கும்? - பார்த்தீங்களா? யாருக்கு சேவகம் புரிந்தாலும் சரி, எல்லோரும் இறந்து போக கூடியவர்கள் தான் என்று தான் படித்து புரிந்து கொள்ளும், ஆதாரம் வைக்கும், வாதாட முற்படும்.

ஆனால் சஹ்ஹாபிய அதாவது சுஃபிய சிந்தனை படைத்த ஒரு மனம் படிக்கிறது என்று வையுங்களேன், அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்றால் ரஸுலுல்லாஹ்வும் தான் இறந்து போனார்கள் மற்றவர்களும் தான் இறந்து போனார்கள் ஆனால் இவர்கள் ஒரே எஜமானுக்கு சேவை புரிந்தவர்கள் - மற்றவர்கள் பல எஜமானர்களுக்கு சேவை புரிந்தவர்கள் - இரு வேறு மரணமும் எப்படி சமமாகும் என்று சிந்திப்பார்கள், இவ்வகை சிந்தனையோடு ஒத்து வருகிறவர்களுக்கு மட்டும் எடுத்து புரிய வைப்பார்கள், விளக்கம் கொடுப்பார்கள்.

வாழ்வில் சமமாகாத இரண்டு பேரும் மரணத்திலும் சமமாக மாட்டார்கள், ஏனெனில் கீழே வரும் வசனத்தை கவனியுங்கள். இந்த முறை நேரடியாக மரணித்தவர்களை பற்றியே கூறுகிறான்.

2. ஸூரத்துல் பகரா - பசுமாடு - 154 வது வாக்கியம்


இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை (யுக்தலு என்ற அரபி வார்த்தை) “இறந்துவிட்டவர்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.


3. ஸூரத்து ஆல இம்ரான் - இம்ரானின் சந்ததிகள் - 169 வது வாக்கியம்


அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை (குதிலு என்ற அரபி வார்த்தை) மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் (யுர்ஜகுனா என்ற அரபி வார்த்தை).

மேலே கண்ட இரண்டு வசனங்களையும் கூர்ந்து கவனித்தால் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள் என்றும் மரித்தவர்கள் என்று எண்ணுவது கூட கூடாது என்றும் கூறுகிறான். அதோடு மட்டுமல்லாது அவர்கள் உணவளிக்கப்படுவதாகவும் கூறுகிறான்.

ஆனாலும் ரிஜ்க் என்ற வார்த்தை உணவு என்ற நேரடி அர்த்தத்தை கொடுத்தாலும் அதற்குள் அனைத்தும் அடங்கி விடுகிறது. ‘எனக்கு ரிஜ்க் எங்கே இருக்குன்னு தெரியலை” என்றால் ரிஜ்க் என்ற வார்த்தை மொத்த வாழ்க்கையையுமே குறிக்கும்.

அதாவது என் புரிதலின் படி அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர்கள் என்று சொல்வதோ எண்ணுவதோ ஹராம் ஆகும். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு அல்லாஹ்வின் புரத்திலிருந்து நேரடியாக அனைத்து தேவைகளும் all the provisions பூர்த்தி செய்யப்படுகிறது.

இது அப்படியே இருக்கட்டும்... பிறகு மீண்டும் இதை பற்றி பேசுவோம். இதற்கிடையில் இன்னொன்றை சிந்திப்போம்.

அல்லாஹ் சிலவற்றை சாப்பிடக் கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறான். நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

பார்க்க:

குரான் ஷரீஃப்


2. ஸூரத்துல் பகரா - பசுமாடு - 173வது வாக்கியம்


5. ஸூரத்துல் மாயிதா - உணவு மரவை - 3வது வாக்கியம்


6. ஸூரத்துல் அன் ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம் - 145வது வாக்கியம்


16. ஸூரத்துந் நஹ்ல் - தேனி - 115வது வாக்கியம்

மேலே கண்ட வசனங்களில் அல்லாஹ் முக்கியமாக நான்கு உணவுகளை தடுத்திருக்கிறான்.


1. தானாக இறந்தது


2. இரத்தம்


3. பன்றியின் மாமிசம் 
(குறிப்பு: இதை வைத்து ஒரு வஹ்ஹாபிய சிந்தனைவாதி மாபெரும் தலைவர் ஒரு காமெடி செய்ததை காண நேரிட்டது. பன்றியின் இதயமாம், மனிதனுக்கு 70 பெர்சண்ட் சூட் ஆகுதாம், எழவு, ஏன் இதெல்லாம்... எனக்கு பன்றி சூப் குடிக்க ஆசை என்று சொல்லி தொலைக்கலாமே என்று நினைத்தது இந்த பதிவுக்கு தேவையில்லாதது)


4. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது.


மேலே சொன்ன நான்கு உணவு வகைகள் தான் அவை.


இங்கே நமது கவனத்தை ஈர்ப்பது நான்காவது வகை தான். இப்போ ஒரு உதாரணத்திற்காக வேண்டு கோழியை எடுத்துக் கொள்வோம்.


கோழி ஹலால் தான்.


1.ஆனால் கோழி தானாக செத்து விட்டால் ஹலால் கிடையாது.

2. அதே கோழியை இஸ்லாமிய முறைப்படி அறுத்து கொள்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் உதாரணத்திற்கு வேறு ஒரு கடவுளாக கருதப்படுபவரின் பெயரை உச்சரிக்கிறார்கள். அப்போதும் ஹலால் கிடையாது.

3. ஆனால் கோழி அறுக்கப்படுகிறது, அவ்வாறு அறுக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹ்’ன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னவுடன் அது ஹலால் ஆகி விடுகிறது.

நன்றாக கவனியுங்கள். நான் மேலே எழுதியிருக்கும் 3 முறையிலும் அந்த கோழி இறந்து விட்ட ஒன்று தான். இறந்து போன கோழிக்கே இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுக்கப்பட்டவுடன் மற்ற முறையில் இறந்து போன கோழிக்கும் இதற்கும் ஒரு சம்மந்தமுமில்லை இரண்டும் சமமாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆக, நான் என்னா சொல்றேன், சாதாரணமாக ஒருவர் இறந்து போவதும், அல்லது பல எஜமானர்களிடம் (கோபம், பொறாமை, திமிர், எடுத்தெரிந்து பேசுவது, மேதாவித்தனம், மரியாதை கெட்டத்தனம், எக்ஸட்ரா எக்ஸட்ரா) சேவகம் புரிந்தவரும் அல்லாஹ்வின் பாதையில் இறந்தவரும் அதாவது ஒரே எஜமானிடத்தில் (அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்) சேவகம் புரிந்தவரும் சமமாகவே மாட்டார்கள்.


இங்கே இன்னொன்று “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர்” என்று வருவதை வைத்து போரில் சண்டையிட்டு கொல்லப்படுபவர்களை மட்டும் தான் குறிக்கும் என்று நினையாதீர்கள்.


அல்லாஹ்வின் பாதையில் தங்களை அழித்துக் கொண்டவர்கள் யாவரையும் இது குறிக்கும்.


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே போரில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுபவன் வீரனல்ல, தன்னுடைய நஃப்ஸை அடக்கியாள்பவனே வீரன் என்று.

அவர்கள் மேலும் சொன்னார்கள், களத்தில் வாளோடு வாள் மோதிய பேர் முடிந்திருக்கும் தருவாயில் சொன்னார்கள், பெரிய போருக்கு தயாராகுங்கள் என்று.

ஆகவே ஒரு வேளை போரில் கொல்லப்பட்டவர்களை மட்டும் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டாலும் சின்ன போரில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களையே இறந்தவர்கள் என்று சொல்ல வேண்டாம், நினைக்க வேண்டாம் என்கிறான் இறைவன்.

பெருமானார் (ஸல்) அவர்கள் பெரிய போர் என்று அறிவிப்பு செய்த நப்ஸூடனான போரில் வெற்றி கண்டவர்களுக்கு மரணம் என்ன செய்து விடப் போகிறது.

அவர்கள் இறந்தாலும் உயிருடன் தான் இருக்கிறார்கள். ரூமி (றஹ்) அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால்...

Everyone is so afraid of death,

but the real sufis just laugh:
nothing tyrannizes their hearts.
What strikes the oyster shell
does not damage the pearl.

RumiRumi Daylight: A Daybook of Spiritual Guidance by Camille & Kabir Helminski



http://www.towardtheone.com/PirZia/Hayy.htm

No comments: