முடிவுகள் தொடரும்..
2
ஜப்பார் என்பவர் அந்த அயல் நாட்டிற்கு கூலியாக தான் விசாவுடன் உள்ளே நுழைந்தார், ஆனால் பின்னாளில் அவர் சொந்தமாக வைத்திருந்த மிகப்பெரிய அங்காடியில் மாதா மாதம் லட்சத்துக்கு மேலே கல்லா கட்டுவதாக ஊரில் எல்லோரும் கதை கதையாக கொடியேற்றி காது வழியே பறக்க விட்டார்கள்.
காசை கையெடுத்து கும்பிடும் சமூக கூட்டத்தின் நடுவே இவர் மட்டும் கல்லா பெட்டி மேலே தான் காலையே வைத்து உட்கார்ந்து இருப்பாராம் திமிறாக அல்ல, அதை பெரிதாக மதிப்பதில்லை அவர். ஆனாலும் இந்த காசு பணம் அவர் மீது அதற்காக எந்த கோபமோ வருத்தமோ அடையாமல் அவர் காலடியில் தான் தஞ்சமடைந்தது.
ஜப்பார் அந்த அயல் நாட்டிற்கு தனது இரு மகன்களான காதரையும் சுல்தானையும் அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அழைத்து வந்து படிப்பு உள்பட வியாபார நுணுக்கங்கள் அனைத்தையும் (கல்லா பெட்டியில் மீது காலை வைப்பதை சொல்லவில்லை) கற்றுக் கொடுத்தார்.
பெரு நகரில் இருந்த கடை பத்தாது என்று இன்னொரு சிறு நகரில் சிறியதாக ஒரு கடை கடனே இல்லாமல் வாங்கினார். காசு பாட்டுக்கு வட்டி இல்லாமல் குட்டி மட்டும் போட்டுக் கொண்டிருந்தது.
பெருநகரில் இருந்த கடையின் அருகிலேயே சொந்தமான வீடும் இருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களின் மௌலுது மாதத்தில் ஊரிலிருந்து நன்கு ஓத தெரிந்த ஏழை எளியவர்கள் அழைக்கப்பட்டு 12 நாளும் மௌலுது ஓதி பெரிதாக வாசம் மணமணக்க தாழிச்ச சோறு தாழிச்சா கறியாக்கி அனைவருக்கும் வழங்கி வருவதை வழக்கமாய் வைத்திருந்தார்.
அப்படி ஒரு முறை மௌலுது ஓதி கொண்டிருக்கும் போது நன்றாக வந்து கீழே அமைதியாக உட்கார்ந்து விட்டு மேலே மாடிக்கு எழுந்து போனார். போனவர் போனவர் தான்.
மௌலுது ஓதி முடித்தவர்கள் ‘வாப்பாவ பாருங்களேன்..” என்று காதரிடம் சொல்ல, காதர் எழுந்து மேலே போனார். அறைக்கு சென்று பார்த்த போது ஜப்பார் கட்டிலில் மயக்கமாய் கிடந்தார்.
மருத்துவமனையில் இறப்பதற்கு சில் நொடிகளுக்கு முன்பாக, ”தம்பி.. சுல்தான் ஒரு வெபரமும் தெரியாம இருக்கான்.. பார்த்துக்க.. அவண்ட பொண்டாட்டியும் சரியில்லை... எல்லாம் இனிமே ஒன் தலையில தான் விடிய போவுது..” என்று காதரின் காதில் பச்சை குத்தி விட்டு இறைவனிடமே மீண்டும் சென்று விட்டார்.
காதர் ஊருக்கு வந்தார், மனைவி ஐசாம்மாவிடம் விபரத்தை சொன்னார். அவர் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார், ”தேத்தணி சாப்டுறீங்களா?” என்று எழுந்து விட்டார். ஒரு கருத்து எதுவும் சொல்லவில்லை, சொல்லவும் தெரியாவில்லை அவருக்கு.
சுல்தான் சினிமா பைத்தியம் நிறைய சினிமா நடிகர்கள் நடிகைகளோடு நல்ல பழக்கம் (நிசமாவே நல்ல பழக்கம் தான்) இருந்தது. சொந்த மாமி மகளான பர்வீனுடனான திருமண பந்தத்தில் இக்பால் என்ற மகன் பிறந்திருந்தான். அஸ்லத்தின் வயது தான் இவனுக்கும்.
பர்வீன் அன்று காதரை பார்க்க வந்திருந்தார், முகத்தில் நெருப்பு தொட்டில் கட்டி ஆடிக் கொண்டிருந்தது. ஒரு பெரும் திட்டத்தோடு தான் வந்திருந்தார்.
ஒரு முறை ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பர்வீன் திரும்பும் போது வாசல் வரை வந்து விட்டு “ஐசாம்மா எங்கே?” என்று தான் கேட்டிருக்கிறார், அடுப்பாங்கரையில சோறு உண்டுகிட்டிருந்த ஐசாம்மா அப்படியே சோத்து கையோட வாசலுக்கு ஓடியாந்து வந்து வழியனுப்பி வைத்தார்.
ஐசாம்மா பவ்யமாக வெளியே சென்ற வரப்போகிற கணவரை தேடி வாசலையே பார்த்து கொண்டிருந்தார். காதர் உள்ளே வந்ததும், “தங்கச்சி.. வந்திருக்காஹா..” என்றார்.
“யாரு..?” - காதர்
“நான் தான் மச்சான்..” - பர்வீன் அழுத்தம் திருத்தமாக
“வாங்கமா... எப்போ வந்தீங்க.. ஏதாச்சும் சாப்டீங்களா?”
“ஒரு முடிவு தெரிஞ்சப்புறம் சாப்டுக்கலாம்னு எதையும் வாய்ல வய்க்காமலே காத்துகிட்டிருக்கேன்..”
”முடிவா.. என்ன முடிவு..?”
”எஹலுக்கு பெரிய கடைய பிரிச்சு குடுத்துடுங்க... தனியா பார்த்துகட்டும்..” கோடாலிய எடுத்து ஒரே போடாக போட்டார். அவர் யாருக்கு பயந்துகிட்டு இருக்கார்.
“சரியா வருமாமா இது...” காதர் யோசிச்சு யோசிச்சு சொல்ல முயற்சித்த போது -
“எல்லாம் சரியாத்தான் வரும் மச்சான்... நீங்க நல்லா பொழைச்சுக்குவீங்க... எஹல தான் மாமா ஒண்ணுமே விபரம் இல்லாம வளர்த்து என் தலையில கட்டுவுட்டுட்டாஹலே... இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்க வழியில்லை... நான் சொல்றது தான் சரியா வரும்... எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்...” - படபடவென பேசிக் கொண்டே போன பர்வீனுக்கு இடை மறிக்காமல் பேசி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு காதர் வாயை திறந்தார்...
“அப்டியே செஞ்சிடலாம்மா...”
“சொல்றது பெரிசில்லை... மச்சான்... சொல்ற மாதிரி செய்யணும்... என்னடா இவ இப்படி பேசுறாளேன்னு நெனைக்காதீங்க... எனக்கு யாரையும் மாதிரி.. - என்று முத்துகனியை ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார் - கூடத்துல ஒரு பேச்சு தாவாரத்துல ஒரு பேச்சுன்னு பேச வராது.. நெனைச்சா அத கேட்டுடுவேன்..”
முத்துகனியை பார்த்ததால் அவர் வாயை திறந்தார், “நல்லா இருக்கே... அதெல்லாம் சொல்ல முடியுமா.. கூடத்துலயும் அதே பேச்சு தான்... தாவாரத்துலயும் அதே பேச்சு தான்... ஆனா என்னா எதுவும் நல்லா பேசுனா நல்லா இருக்கும்?”
“என்னா திமுறா... வாய அடக்கிட்டு மூளைல போய் ஒக்காரு...” என்றதும்
காதர் குறுக்கிட்டு, “நல்லதும்மா... அப்படியே செஞ்சிடலாம்..”
முறைத்துக் கொண்டே விடை பெற்றார் பர்வீன்.
ஆரம்பத்தில் வைத்து நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருந்த கடை சுல்தானுக்கும், அப்போது தான் ஆரம்பித்த கடை காதருக்கும் குடும்பத்தில் மேலும் ஒரு பிரச்சினையும் குழப்பமும் வராமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் காதர் பர்வீன் கேட்டுக் கொண்டபடி பிரித்து கொடுத்து விட்டார்.
சுல்தான் பார்த்துக் கொண்டிருந்த கடையில் ஆரம்பத்தில் கொஞ்ச நாளுக்கு மட்டும் நன்றாக வியாபாரம் நடந்தது, பிறகு சுமாராக நடந்தது, பிறகு மோசமாக நடந்தது, பிறகு நஷ்டத்தில் நடந்தது.
“ஒரு கணக்கு வழக்கா.. வியாபார நுணுக்கமா.. ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது..”
“ஜனங்க கூடுற சரியான நேரத்துல் கடய சாத்திட்டு படம் பாக்க போறாரு..”
“வாப்பா ஓயா ஒழைச்சு கடய தொறந்தா.. புள்ள.. ஓய்வா இருக்க கடய மூடுறேங்குறாரு..”
இப்படி பல பேர்கள் சுல்தானை பற்றி காதரிடம் சொல்ல... காதர் சுல்தானை பார்க்க வந்தார். தன் கடையை விட்டு விட்டு சில காலம் இங்கேயே இருந்தார். ஏழு லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கிட்டு பணம் தராமல் போனவரை தேடி புடிச்சு அலைஞ்சு திரிஞ்சு ஆள் பேர கூட்டிட்டு தெரிஞ்ச ஆள வச்சு பேசி ஐந்து லட்சம் ரூபாய் வரைக்கும் மீட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
சுல்தான் சரண்டர் ஆகி விட்டார், “நானா நீயே இந்த கடய பார்த்துக்க யார் பேச்சையும் கேட்காதே... எனக்கு ஏதாவது சம்பளம் மாதிரி கொடுத்தா கூட போதும்..”
காதருக்கு வாப்பாட எடமாச்சே என்றும் வாப்பா பச்சை குத்திட்டு போன செய்திகளும் ஞாபகம் வரவே என்ன வந்தாலும் வரட்டும் என்று தன் கடையை விட்டு விட்டு தம்பி கடையையே கவனிக்க தொடங்கினார்.
வியாபாரம் நஷ்டத்திலிருந்து மீண்டது. மீண்டும் பழைய வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.
ஒரு முறை ஊருக்கு வந்திறங்கிய போது, பர்வீன் புயல் அவர் வீட்டில் கரை சேர்ந்தது.
“வாம்மா நல்லா இக்கிறியா..?”
எல்லா விபரமும் தெரிந்த பர்வீன், “எஹ இப்பல்லாம் ஊருக்கே வர்ரதில்லையே..”
“கடைல யாராவது இருக்கணும்ல...” - காதர் முடித்தார்
“நீங்க போன மாசம் தானே வந்துட்டு போனீங்க... அதுக்குள்ள மறுபடி வந்திருக்கீங்க.. ஆனா எஹ ஒரு வருஷத்துக்கு மேலாச்சு.. இன்னும் ஊர் பக்கமே வரலை.. எஹல கடைல ஒரு அடிமை மாதிரி வச்சிருக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்காதீங்க.. கடைக்கு வர வேண்டிய ஏழு லட்சத்துல ரெண்டு லட்சத்த முழுங்குனது வரைக்கும் எல்லா விஷயமும் எனக்கு தெரியும்..”
இதய ஆபரேசனுக்காக வந்த காதரோ ஒன்றும் பேசுவதறியாது தொட்டி கம்பியை பிடித்துக் கொண்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்..
முத்துகனிக்கு பொறுக்காமல், “சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க.. பர்வீன்... நல்லா இல்ல....”
பர்வீன், “யார் வாய்க்கு வந்த படி பேசுறா... யாருக்கு நாக்கு அழுகி போயிடும்.. (என்னா பார்க்குறீங்க... இவர் இப்படி தான்.. எதிராளி சொல்லாததையெல்லாம்.. சொல்லியதாக பேசி சண்டை போடுவார்) என் நாக்கு அழுகி போயிடுன்னு சொல்றியே ஒன்னோட கத தான் ஊரு பூறா அழுவி(கி) போயிருக்கே.. நான் என்னோட மாப்பிள்ள ஏன வரலன்னு கேட்டுட்டு போவ வந்தேன்... நீ ஒன் கள்ள மாப்ள வர முடியாம போயிடுமோன்னு கவலைப்பட்டு என்கிட்டே வம்புக்கு வர்ரீயா..”
முத்துகனி வாயை திறக்கு முன், காதர், “இன்னும் ஒரு வாரத்துல தம்பி வருவாரும்மா..” சொல்லி விட்டு அடுத்த நாளே ஆபரேசன் எதுவும் பண்ணாமல் பயணம் புறப்பட்டார், இந்த முறை ரோம்ப தூரமான பயணம்.
முடிவுகள் தொடரும்....
3
முத்துகனி தொழுவுற பாய் இருக்காமான்னு சபுரா கிட்டே கேட்டு வாங்கி ஒலு செஞ்சுட்டு வந்து அறை வாசல்லேயே தொழுவ ஆரம்பித்து விட்டார்.
சபுராவால சும்மா இருக்க முடியாது போலிருக்கு, “நீங்க புள்ளைக்கி (ஜமிலா) ம்மா.. எஹ (முத்துகனி) யாரும்மா...?” - கேக்குற அழக பாருங்க... அஹ அப்படி தான் கேட்டாஹா..
“எஹ தாம்மா ஜமிலாவ அஸ்லத்த தூக்கி வளர்த்தது.. என்னய விட எஹலுக்கு தான் புள்ளைல்வோ மேல ரொம்ப பிரியம்..”
“தங்கச்சி (ஜமிலாவ தான் சொல்றாங்க.. ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு மாதிரி கூப்பிட்டு நம்மள கொழப்புவார்) மாப்பிள எங்கே வரலயா?” - சபுரா ஒரு செய்தி விடாம கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார்.
“தம்பி (ஜமிலாவின் மாப்பிள்ளை) சவுதில தமாம்ல இருக்காஹா...” - ஐசாம்மா
“தமாமா சொன்னீங்க... (மலர்ந்த முகத்தோடு).. என்னா வேலைல இருக்காஹா...? - ஆர்வம் காட்டினார் சபுரா
”டிரைவரா இருக்காஹா... ஏன்ம்மா..” - ஐசாம்மா ஒரு கேடும் விளங்காமல் கேட்டார்
“என்னமா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சொல்லலை.. என் மாப்பிள சவுதில தான் இருக்காஹான்னு... அஹலும் தமாம்ல தான் இருக்காஹா.. நீங்க வேணா தம்பியோட நம்பர்லாம் கொடுங்களேன்... நான் நம்ம கடைக்கு கூட டிரைவர் தான் தேவைன்னு சொன்னாஹா.. நான் வேணா கேட்டு சொல்றேன்..” - படபடவென பொறிந்து தள்ளினார் சபுரா..
யாராவது இப்படி இருப்பாஹலா? - என்ற ஆச்சர்யம் மேலிட என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தார் ஐசாம்மா.
“இந்த பாருங்கம்மா... நான் வந்து எஹல்ட கேட்டு பார்க்குறேன்.. என்னா சொல்றாஹன்னு தெரியலை.. ஆனா கேட்டுகிட்டு இருந்தாஹா.. நாளைக்கே வேணாலும் டெலிபோன்ல கேட்டு சொல்லிடறேன்..” - விடமாட்டார் போலிருக்கே, உதவி செய்வதில் விடாப்பிடியான ஆள்..
ஐசாம்மா என்ன சொல்வதென்றே தெரியாது விழித்த போது, தொழுது முடித்திருந்த முத்துகனி, சபுராவின் கையை பிடித்துக் கொண்டு, “இந்த அறுவத்தி நாலு வயசாச்சு எனக்கு... ஒங்கள மாதிரி ஒருத்தர பார்த்ததேயில்ல..”
”இருக்கட்டும்மா.. இதுல என்னா இருக்கு.. புள்ள வர்ர நேரம் வாப்பாக்கு நல்ல நேரமா கொண்டுட்டு வரட்டும்” சபுரா சொன்ன போது உள்ளே புள்ளை அழும் குரல் கேட்டது.
நர்ஸ் மேரி புள்ளைய தூக்கிக் கொண்டு வந்து, “ரொம்ப அழகான பொம்பள் புள்ள பொறந்திருக்கு...” என்றார்.
முத்துகனி “எங்கே தாய் மாமன்... எங்கே என் புள்ள அஸ்லம்... வாப்பா..” என்றதும்
வாசலிலிருந்து ஓடியாந்தான் அஸ்லம்..
“புள்ளைய மாமாட்ட காட்டணுமே... மாமா எங்கே போயிட்டாரு... மாமாவல மொதொ மொதொ புள்ளைட கண்ணுக்கு தெரியும்..” என்றதும் அஸ்லம் ஒரு பேச்சு பேசாமல் குழந்தையை சிறிது நேரம் பார்த்து விட்டு அஹ ம்மாவை ஒரு பார்வை பார்த்தான்.
‘ஒடனே சொல்லணுமே.. புள்ளைட வாப்பா காரஹட்ட... யாரு சொல்லுவா..?” என்று முத்துகனி அஸ்லத்தை பார்க்க
“எவண்ட்டயும் நான்லாம் சொல்ல மாட்டேன்..” என்றான் கடுங் கோபமாக
முத்துகனி அழாத கொறயா, “ம்மாடி அப்படி சொல்ல கூடாதும்மா.. என் புள்ளைல..”
“அதெல்லாம் முடியாது...” பிடிவாதம் பிடித்தான் அஸ்லம்
முத்துகனி ஐசாம்மாவிடம் திரும்பி, “தங்கச்சி நீங்க சொல்லுங்க.. நீங்க சொன்னா தான் கேட்கும்..”
ஐசாம்மா அஸ்லத்திடம் கிட்டே போய், “வாப்பா... செத்த ம்மாக்காக டெலிபோன் போட்டு சொல்லிடும்மா..” என்று அழாத குறையே இல்லாமல் சொல்ல..
அஸ்லம் அதை பார்க்க முடியாமல், வாசல் பக்கம் நடந்து கொண்டே, “நான் சொல்றேன்..” என்று மறைந்து போனான்.
ஜசாம்மா, ‘இன்னும் இவருக்கு (அஸ்லம்) ஜமிலாட கல்யாணத்துல வருத்தம் தான்..’ என்று முத்துக்கனியிடம் சொல்ல
‘அதுக்கு என்னா செய்றது?, புள்ள ஆசைப்பட்டுட்டால்ல..’ என்றார் முத்துகனி
முடிவுகள் தொடரும்
4
அஸ்லம் தனக்கு படிப்பு மண்டையில் ஏறாமல் போகவே புத்தகத்தை எறக்கி வைத்துவிட்டு தனது ம்மாவிடம் கார் வாங்கி கேட்டான்.
வான்கி கொடுத்த காரை வைத்துக் கொண்டு பக்கத்துல நாகப்பட்டினம், காரைக்கால் என்றில்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சென்னை என்று தமிழ்நாட்டோடு முடிக்காமல் பேங்களூர், ஹைதரபாத் சவாரி எல்லாம் சவாரி போய் வந்திருக்கிறான்.
தெரியாத இடங்களில் கூட கேட்டு கேட்டு தெரிந்து போய் விடுவான்.
தெரியாத மொழிகளை கூட பேசி பேசி தெரிந்து பேசி விடுவான்.
எல்லோருக்கும் இவனை பிடித்திருந்தது, இவனது காரில் சவாரி போவதையே விரும்பினார்கள். கனியா (கன்னியான) பிள்ளைகள் காரில் இருந்தால் பின்னாடி சீட்டில் ஒரு ஸ்கிரீனை வைத்து மூடி விடுவான்.
வயசானஹ வந்தார்கள் என்றால் அவர்களை கை தாங்கலாக பிடித்து தலை இடிக்காமல் கை வைத்து மறைத்து அழகாக அரவணைத்து ஏற்றி உட்கார வைப்பான்.
ஹாஸ்பிடலுக்கு உடல் நலமில்லாமல் வந்தால் அவர்களோடு இருந்து மருந்து மாத்திரை எல்லாம் கேக்குறதையும் வாங்கி கொடுப்பான்.
இப்படியாக அவன் இருக்க, ம்மாவிடம், ’இன்னும் ரெண்டு கார வாங்கி போடலாம்னு இருக்கேன்..” என்றான்.
”தாராளமா வாப்பா.. உங்க பாட்டனாவும் இப்படி தானாம்.. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து தான் பெரிய ஆளா ஆனாஹலாம்..”
ஒரு காருக்கு மூன்று கார்கள் ஆனது. இரண்டு கார்களுக்கு வேறு ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தினான்.
அப்படி வேலைக்கு சேர்ந்தவர் தான் நாசர்.
நாசரிடம் சொன்னான், “ஓய் கனியா புள்ளைல்வோலாம் கார்ல வருவாஹல்வோ... சும்மா தொண தொணன்னு பேசிட்டு இருக்க புடாது.. ஸ்கிரீன இழுத்து விட்டுடணும்.. பெரியவஹல்வோ வருவாஹல்வோ.. மரியாதயா நடந்துக்கணும்..”
நாசரும் அஸ்லத்தின் லாத்தாவான ஜமிலாவும் ஒன்றாக படித்தவர்கள், ஒன்றாக பள்ளியில் ஓதியவர்கள்.
நாசர் கார் சாவியை கொடுக்க அஸ்லத்தின் வீட்டுக்கு ஒரு முறை போன போது ரொம்ப நாள் கழித்து ஜமிலாவை பார்த்த போது,”நல்லா இருக்கீங்களா.. புள்ள..” என்று கேட்டான்.
ஜமிலா, “நீங்க பள்ளில ஓதுனீங்க தானே.. “ என்றாள்
நாசர், “பள்ளில மட்டுமா... பள்ளிகூடத்துலயும் தான் ஒங்க கூட படிச்சேன்.. எனக்கு எல்லா புள்ளையும் விட ஒங்கள தான் ரொம்ப புடிக்கும்..”
அவ்வளவு தான்..
நாசருக்கும் ஜமிலாவுக்கும் மலர்ந்தும் மலராமல் காதல் மலர்ந்து விட்டது.
அடிக்கடி பார்க்குறது, அப்புறம் பார்க்காம இருக்கவே முடியலைங்குறது.. இப்படியாக காதல் வசனம் பேசும் போது.. ஒரு முறை நாசர் உடல் நிலை சரியில்லாமல் வராமல் போகவே, நாசர் ஓட்டும் காரை அஸ்லம் எடுக்க நேர்ந்தது.
அப்போது காரின் டேஷ் போர்டில் நாசருக்கு ஜமிலா எழுதுன லட்டரை அஸ்லம் பார்த்து விட்டார்.
கரண்ட்ட கையில வச்ச மாதிரி இருந்தது அஸ்லத்திற்கு. கோபத்தின் உச்சிக்கே போனான்.
நேராக கார எடுத்துகிட்டு நாசர் வீட்டுக்கு போனான்.
”நாசர் மருந்து கடைக்கு போயிருக்காரு..” என்ற பதிலுடன் வீட்டுக்கு வந்தான்.
வாசல் படி ஏறப்போனவன் தூரத்தில் தெரிந்த கடைத் தெருவில் நாசரை போல் ஒரு உருவம் நிற்பதை பார்த்து விட்டு ‘டேய்..” என்று கத்தினான்.
அது நாசர் தான் என்று தெரிந்ததும், கையில் லட்டரை வைத்துக் கொண்டே வெறித்தனமாக ஓடினான்.
நாசர் தூரத்திலிருந்து அஸ்லம் ஓடி வருவதை கவனித்து விட்டு மருந்துகளை வைத்துக் கொண்டு உடல் நிலையை பொருட்படுத்தாது ஓட துவங்கினான்.
‘ஒன்ன வெட்டாம உட மாட்டேண்டா.. ஹராம்ல பொறந்தவனே..” என்று கடைத்தெருவில் கத்திக் கொண்டே ஓட... ஊரார் அனைவரும், “என்ன நடக்குது?” என்று தெரியாமல் வச்ச கண் வாங்காமல் பார்க்க..
சில பேர் ஜாடை மாடையாக பேச ஆரம்பித்து விட்டார்கள், “இது தெரியாதா.. இந்த பயலுக்கும் அந்த பெரிய வீடு இருக்குல்ல.. அஹ வூட்டு அந்த பொண்ணுக்கும்... ஒரே இதுவாம்.. இவனெலாம் சேர்க்கலாமா...” என்றவாறு அன்னைக்கி முழுக்க பேசிக் கொண்டே இருந்தார்கள்..
முத்துக்கனி ஜமிலாக்கு படு சப்போர்ட்டாக, ‘புள்ள ஆசைப்பட்ட படியே முடிச்சுடுவோம்’ என்று சொல்ல
ஜமிலா ‘இவன் யாரு என் கல்யாணத்த பத்தி பேசறதுக்கு... பெருசா சொல்ல வந்துட்டாரு..’ என்று அஸ்லத்தை கேட்க
ஐசாம்மா பல குழப்பத்திற்கு பிறகு அஸ்லத்திடம் வந்தார், “வாப்பா... என்னட புள்ள இல்ல... அவ ஆசைப்படுறாளேம்மா...நாம ஏதாவது சொன்னா அத செஞ்சிடுவேன்.. இத செஞ்சிடுவேன்னு பயமுறுத்துறா வாப்பா... எனக்கு என்னா தெரியும்... சொல்லும்மா.. சரின்னு சொல்லும்மா...”
நிகாஹ்..
கல்யாணம் முடிந்த மறுநாளே ஜமிலா, ‘ம்மா எஹ இனிமே இந்த காரெல்லாம் ஒட்ட மாட்டாஹா’ என்றாள்
நாசர் ‘எனக்கு சவுதிக்கு விசா எடுத்து கொடுங்க மாமி..’ என்ற வற்புறுத்தலின் பேரில் ஐசாம்மா தெரிந்த ஒரு ஏஜண்டிடம் சென்றார்,
டிராவல்ஸ் வைத்திருந்த அவரோ, ‘லாத்தா (ஐசாம்மா) அஸ்லத்துட வாப்பா எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காஹா, அஹல்ட நல்ல மனசுக்காக சொல்றேன், எனக்கு ஒரு சல்லி காசு வேணாம், விசா காசும் பயண காசும் தந்தால் போதும்’ என்று கூறவே 55,000 கொடுத்து டிரைவர் விசா வாங்கி பயணம் ஏற்றி விட்டார்கள். போன 8 மாசத்துக்கு நாசரால் மொத்தமா 30,000 தான் அனுப்ப முடிந்தது பெரிய விசயம்.
சம்பளம் சரியில்லை, சாப்பாடு சரியில்லை, முதலாளி சரியில்லை என்று வெளிநாட்டு ஆஸ்தான கஷ்டங்களை துயரங்களை வாரம் தவறாமல் நாசர் போனில் தனது கஷ்டங்களை ஜமிலாவிடம் இறக்கி வைத்து விட்டு தான் ஆறுதலடைந்து கொண்டிருந்தார்.
ஜமிலா கஷ்டங்களை கேக்க கேக்க உடைந்து போனாள், “நீங்க வந்துட்டா என்னா...? காசு போனா போவுது”
”அப்டி இல்ல.. புள்ள... ஒடனே வந்தா மரியாத இல்லாம போயிடும்.. ஓடட்டும்.. பாப்போம்...” என்றார்
தொடரும் முடிவுகள்...
5
சபுரா நிஷாவிடம், ‘ஏன்ம்மா.. இன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு வாயேன், ம்மணம்மா ஒன்ன கூட்டிட்டு வர சொன்னுச்சு..’ என்றார்.
நிஷா, ‘சரிம்மா.. நான் வர்ரேனே.. எனக்கும் ம்மணம்மாவ பார்க்கணும் ரெண்டு நாளா பார்க்க வரவே இல்லை..’ என்றாள்.
அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாலும் கல்யாண பொண்ணுக்கு உள்ள அழகோடு சிலை மாதிரி அழகாய் இருந்தாள் நிஷா.
மருத்துவமனை வளாகத்தில் சுல்தான், தாட்பூட் தஞ்சாவூர்ன்னு கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார், “நேத்து ராத்திரி புள்ளக்கி வலி வந்திருக்கு.. ஒரு போனு.. எங்கிட்டே சொல்லல... இருக்கட்டும்.. நானா இருந்தா இப்படி நடக்குமா..? நான் படிச்சு படிச்சு சொன்னேன்... இந்த டாக்டரே வேணாம்னு... டாக்டர் சீதா பெஸ்ட் தான்.. ஆனா.. அஹ மாப்பிள்ளை இருக்காரே.. பாபுவாம்.. பாபு.. அவன் தான் சரியில்லை..”
நிஷா அறையில் இருந்தாள், சுல்தானின் சத்தத்தை கேட்டு “யாரும்மா இது ஆஸ்பத்திரில போய் இப்படி சத்தம் போடுறது” என்று பார்க்க வேண்டி கதவை திறந்தாள். எதிரே அஸ்லம் தான் தெரிந்தான். பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
கதவு திறந்ததும் சட்டென்று திரும்பி பார்த்தான். வாசலில் நிஷா நின்றிருந்தாள். நிஷா அஸ்லத்தை பார்த்து விட்டு ஆர்வம் இல்லாதவளாய் கத்துவது யார் என்று தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தாள்.
முத்துகனி சுல்தானிடம் கேட்பது தெளிவாக தெரிந்தது, “ஏங்கனி.. ஏன் இப்படி டாக்டர் பாபு மேல ஒம்பருக்கு அப்படி ஒரு கோவம்.. அவர் அப்படி என்னா தான் செஞ்சாரு உம்பர..”
சுல்தான், “அப்படி கேளுங்க... லாத்தா.. இப்ப நீங்க கேட்டீங்களே.. நல்ல பெஸ்ட்டான கேள்வி.. இந்த டாக்டர் பாபு இருக்கானே.. அவன் என்ன எங்க பார்த்தாலும்.. ’என்னா ஆளையே பாக்க முடியலை’ங்குறான்..!”
”ஏங்கனி.. ஒம்பர் மேல ஒரு புரியம்.. அதான் அப்படி கேக்குறாரு.. தேடுறாரு போலருக்கு..” என்று நக்கலாக சொல்ல..
“ஆமா.. தேடுறாரு.. மொஹர கட்ட.. டாக்டர் யாரையும் பாத்து கேட்க கூடாத கேள்வி என்னான்னா.. என்னா ஆளையே பாக்க முடியலைங்குறது தான்.. என்னா நெனைச்சுகிட்டு இருக்கான் இந்த ஆளு.. நான் என்னா சீக்காளியாம்மா..? இவர வந்து பார்க்குறதுக்கு..?”
”ஏங்கனி.. கத்துறீயோம்.. நீம்பர் நின்னு பேசிக்கிட்டு இருக்குற இடம் நீம்ப ஏசுறியமே.. அந்த டாக்டர் பாபுட தான்.. மேரி டாக்டர்ட்ட சொல்லிட போவுது..” - முத்துகனி பயந்தார்
“அதெல்லாம் சொல்லாது.. தங்கம்... இப்ப தான் ராஜேஷ்குமார்ட கதை விரைந்து வா.. விவேக்.. வாங்கிட்டு வந்து கொடுத்தேன்..ரொம்ப சூப்பரான கதை..” இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் செய்த வேலைகளை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்க..
நர்ஸ் மேரி உள்ளே வந்தார், “சத்தம் போடாதீங்க.. டாக்டர் வர்ராங்க..”
டாக்டர் பாபு தொடர்ந்து உள்ளே வந்ததும் சுல்தானை பார்த்து விட்டு, “அடடே... சுல்தானா இது.. என்னா சுல்தான்.. உங்கள பார்க்கவே முடியல.. அடிக்கடி வாங்க... உங்கள மாதிரி ஒரு பத்து பேரு எனக்கு இருந்தா போதும் வேற யாரும் வேணா..” என்று எதார்த்தமாக சொல்லிவிட்டு நகர..
நிஷா சத்தம் போட்டு சிரித்து விட்டாள்.
’யார்ரா அது?’ என்று திரும்பி பார்த்த சுல்தானுக்கு அறை வாசல் கதவை பிடித்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்த நிஷாவிடம், “ஏன் புள்ள ஒங்களுக்கு... என்னா சிரிப்பு..” - கேட்டது தான் தாமதம், தடாலென்று உள்ளே புகுந்து கதவை தாழிட்டாள்.
சுல்தான் அஸ்லத்திடம் வந்தார், நிஷா மீதான கோவம் இன்னும் தணியவில்லை “சிரிக்கிறத பாரு... மகா கெட்டவ.. இப்ப வெளிய வரட்டும்.. நல்லா கேட்டு உட்டுடறேன்...”
அஸ்லம் பதிலுக்கு சொன்னான், “நீங்க இங்கே எல்லாம் கேட்டு வுடுங்க.. வூட்ல வாயே தொறக்காதீங்க..”
ஐசாம்மா, “தம்பி.. அப்டிலாம் சொல்ல கூடாதும்மா.. சின்னாப்பாட்ட இப்படியா பேசுவாஹா..”
சுல்தான் தடுத்தார், “அட வுடுங்க.. மச்சி.. எல்லாம் சரியா தான் சொல்றான் புள்ள... நான் எப்ப பேசணுமோ அப்ப பேசாம தானே இருந்தேன்.. ஆனா நான் ஏதாவது பேசியிருந்தேன்னு வைங்க.. என்னய உங்கள.. எல்லாத்தையும்ல தப்பா பேசியிருப்பா.. நம்மள எல்லாரும் ஒண்ணும் வெளங்காதஹன்னு எல்லாரும் நெனைச்சிகிட்டு இருக்காஹா.... போவ போவ தெரியும்” என்று அஸ்லத்தின் தோளில் தோழமையோடு கையை போட்டார்.
தொடரும் முடிவுகள்...
6
நாசருக்கும் ஜமிலாவுக்கும் மாலை நிகாஹ்
அன்றைய மதியம் சோத்து களறி நடந்து முடிந்த நேரம்.
பொண்டுவள்வோ கூட்டமா ஒக்காந்து டேப்பாவை எடுத்து வச்சு வெத்தல பாக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஜமிலா பொண்ணோட அறையில் இருந்தார்.
ஐசாம்மா அடுப்பங்கறையில் வேலையாக இருந்தார்.
முத்துகனி உள்ளே பாயை சுற்றி கொண்டிருந்தார்.
பர்வீன சுத்தி அவரின் அடிபொடிகளின் கூட்டம். பர்வீன் சொல்லி கொண்டிருந்தார், “சும்மா சொல்ல கூடாது.. சரியான மாப்பிள்ளைய தான் புடிச்சிருக்காஹல்வோ.. இப்போ தேவை இருக்கு.. கடைக்கு போவணும், அவசரம்.. ஆஸ்பத்திரிக்கு போவணும்.. கவலையே இல்லை.. மாப்பிள்ளை கார எடுங்கன்னா போச்சு..” என்று சொல்லி விட்டு சிரித்த வாறே வெத்தலையில் இருந்த காம்ப தூக்கி வீசி எறிய வெறுப்புடன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முத்துகனி அங்கு வந்த ஒரு சிறுமியிடம், “இந்தாம்மா.. வெத்தலய எடுத்துகிட்டு.. காம்ப மட்டும் நம்ம வீட்ல தூக்கி போட்டிருக்காஹல்வோ.. அது வேணா.. குப்ப தொட்டில போட்டுடுமா..” என்றார்.
“அடி செருப்பால.. எதடீ குத்திக் காட்டுறே.. பேசாம பாய சுருட்டிட்டு ஒன் வேலய பார்த்துகிட்டு இரு.” என்றவுடன்..
“நான் இந்த வூட்ல பாய மட்டும் தான்மா நான் பாட்டுக்கு சுருட்டிகிட்டு இக்கிறேன்.. செல பேரு.. இந்த வூட்டுக்கு வர வேண்டிய காசு பணம் சொத்தைல சுருட்டியிருக்காங்க.. அத யாரு சொல்றது.. யாரு கேக்குறது” என்று அலுத்துக் கொள்வது போல் சொல்லி வைக்க..
“என்னாடி சொன்னே.. இருடீ.. ஒனக்கு.. இன்னக்கி முடிவு கட்டுறேன்.. எங்கே ஐசா.. கூப்டு..”
அடுத்த செகண்ட் ஐசாம்மா பர்வீன் முன்னாடி பவ்யமாக நின்று கொண்டிருந்தார்.
“இப்போ இந்த கழுத இந்த வூட்ல இருக்க கூடாது.. ஒடனே வெளியே தூக்கி எறியணும் நீங்க.. அவள போ சொல்லுங்க..” என்று கத்த
அனைவரும் கப்சிப்பென்று ஐசாம்மாவையே பார்க்க, ஐசாம்மா முத்துகனியை பார்க்க, “அதெல்லாம் அஹல்லாம் வெளியே போ மாட்டாஹா... நீங்க வேணும்னா வெளியே போங்க..” சத்தம் வந்த திசையை கேட்டு அனைவரும் திரும்ப அஸ்லம் பர்வீன் நோக்கி வந்து கொண்டிருந்தான்
“நீ வாய மூடுறா.. ஒன் ம்மாவ பேச சொல்லு..” - பர்வீன் இடியை இறக்க
“ம்மா என்னக்கி பேசியிருக்காஹா.. வாப்பாவ கண்டபடி பேசுனப்போ பேசியிருக்கஹலா.. கடய பிரின்னு சொன்னப்போ பேசுனாஹலா.. வாப்பா 2 லட்ச ரூபா கையாண்டுட்டாஹான்னு வாய் கூசாம சொன்னப்போ பேசுனாஹலோ.. எல்லாத்துக்கும் மேல... வாப்பா மௌத்தா போனதோட ஒங்க மாப்ள கூடவே அவசர அவசரமா பயணத்துக்கு ஓடி அங்கே இருக்குற சொத்த எல்லாம் வித்துட்டு எக்கச்சக்கமான காச போட்டுகிட்டு ஏதோ போனது வந்தத மட்டும் தூக்கி எறிஞ்சீங்களே அதான்.. வெத்தலய முழுங்கிட்டு காம்ப தூக்கி எறியிற மாதிரி வேண்டாதத தூக்கி எறிஞ்சீங்களே... அப்ப தான் எதாச்சும் பேசுனாஹலா..” அஸ்லம் மூச்சு விடாமல் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருக்க
மொத்த கல்யாண வூடும்.. பொறட்டி போட்ட மாதிரி ஆகி போனது.
பர்வீன், “என்னா புள்ள.. ஐசா... ஒனக்கு பேச வராதுன்னு.. புள்ளைட்ட பேச கொடுத்து பேச சொல்லியிருக்கிறீயா..”
அஸ்லம், “எங்க ம்மாட்ட எல்லாம் மரியாதையா பேசணும்.. இல்லன்னா நல்லா இருக்காது..” என்றதும்
“நீ எப்படி நல்லா இருக்கேன்னு பார்த்துடறேண்டா.. இனிமே இந்த வூட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்..” அவரின் அடிபொடியில் ஒருவரிடம் திரும்பி, “.. எடுடீ.. அந்த பைய..” ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார்.
அஸ்லம் எதுவும் நடக்காதது போல், முத்துகனியிடமிருந்து பாயை வாங்கிக் கொண்டே, “நீங்க இன்னும் சாப்பிடல.. நீங்க போங்க.. சாப்டுங்க.. போங்க..” என்றான்.
தொடரும் முடிவுகள்...
7
‘ஏன்ம்மா..
எதுக்கு அவசரமா வர முடியுமான்னு கேட்டீங்க?’ என்றான்
அஸ்லம்.
‘தஞ்சாவூர் வரைக்கும் உடனடியா போயிட்டு
வரணும், செத்த போயிட்டு வந்துடு வாப்பா..?’ என்றார் ஐசாம்மா.
‘தஞ்சாவூரா,
காருக்கு சவாரி இருக்கு, இப்ப முடியாதேம்மா... ஒடனே என்னா அவசரம்...’ என்றான் அஸ்லம்.
‘ரொம்ப
அவசரம்தாம்மா.., ஒரு மருந்து வாங்கணும், தஞ்சாவூர்ல மட்டும் தான் கெடைக்குமாம், உடனே
வேணும், நீதான்ம்மா போய் வாங்கிட்டு வரணும்..’ என்றார்
‘அப்புடி
என்னா மருந்து, யாருக்கு? ’ என்றான்
‘எதுத்த அறைல இக்கிறாஹல்ல அந்த பாட்டியாவுக்கு தான்’ என்றார்.
‘அந்த அறைல உள்ளஹலுக்கா.. தஞ்சாவூரா.. நம்ம கார் ஒண்ணு கூட இல்லையே’ என்றதும்
‘நம்ம
கார் தேவை இல்ல வாப்பா.. அஹ கார் தர்ராஹா’ என்றதும் வாசல் பக்கம் குரல் கேட்டது,
‘எங்கே போறதுக்கு?’ என்று. - கேட்டவர் சுல்தான் தான்.
சுல்தானிடம்
சொல்லப்பட்டதும், தஞ்சாவூர்ல எனக்கு தெரிஞ்ச ஒரு மருந்து கட இருக்கு ரயில்வே
ஸ்டேஷன் எருத்தாப்லேயே இருக்கு. தெரிஞ்ச புள்ளைல்வோ தான்.. ஒலகத்துல உள்ள எல்லா மருந்தும் அங்கே கெடைக்கும்.
நானும் வர்ரேன். வா போவலாம்..’ அடுத்த
சில மணி நேரங்களில்..
சுல்தானின் தொண தொணப்பை சகித்துக் கொண்டு அஸ்லம் காரை
விரட்டிக் கொண்டிருந்தான். மருந்து
வாங்கியதும் ஒரு திரைப்பட போஸ்டரை பார்த்து விட்டு சுல்தான், ‘அடடே இந்த படம்
இன்னைக்கு தான் ரிலீஸா.. வெளிநாட்டுலேலாம் போய் ஷூட்டிங் எடுத்திருக்கான்வோலாம்ல.. நம்ம கடய
காட்டுனாலும் காடுவான்.. என்ன சாந்தி தியேட்டர் வாசல்ல எறக்கி வுட்டுடு..’ என்றார்.
‘ரொம்ப
நல்லது’ என்று நினைத்து சுல்தானை இறக்கி விட்டு விட்டு தனியாக காரை விரட்டினான். தஞ்சாவூரிலிருந்து
திரும்பி வந்து ஜமிலா இருக்கும் அறையை திறந்த போது நிஷா ஜமிலாவுடன் பேசிக்
கொண்டிருந்தாள்.
நிஷாவின் மடியில் ஜமிலாவின் குழந்தை படுத்து கிடந்தது. ஜமிலாவும் நிஷாமாவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அஸ்லம்
நிஷாவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
ஜமிலா வாயே திறக்கவில்லை.
நிஷா, “எல்லாம் ஊருக்கு போயிருக்காஹல்வோ.. உங்கள இங்கே சாப்ட சொன்னாஹல்வோ..”
நிஷாவிடம் பேச சங்கோஜப்பட்டான், ஜமிலாவை ஏறெடுத்து பார்த்தான், அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அஸ்லாம், “நான் வர்ரேன்.. இந்த இருக்கு மருந்து..” என்று மருந்தை அங்கே இருந்த மேசையில் வைத்து விட்டு கிளம்பிய அவனை..
நிஷா தடுத்தாள், “எங்கே போறீங்க.. இருங்க.. உங்களை அவசியம் இங்கே சாப்பிட சொன்னாஹா.. போயிடாதீங்க.. இருங்க.. எடுத்துட்டு வர்ரேன்...”
குழந்தையை அழகாக ஜமிலாவின் பக்கத்தில் படுக்க வைத்தாள், விறுவிறுவென்று ஓடினாள், ஒரு நிமிஷத்தில் பரத்தி விட்டாள்.
வேறு வழியில்லாமல் கை கழுவிட்டு வந்து உட்கார ஆரம்பித்தான்.
ஒரு பேச்சு பேசவில்லை.
அவன் பாட்டுக்கு சாப்பிட்டான்.
பொறை ஏறியது. “மெதுவா சாப்பிடுங்க..” என்றாள் நிஷா
சொன்னதும் குனிந்திருந்த அஸ்லம் ஜமிலாவை பார்த்தான்.
அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திரும்ப குனிந்து விட்டு சாப்பிட்டான்.
தண்ணியை ஊற்றி வந்து “இந்தாங்க... குடிங்க..” என்றாள் நிஷா
குடித்தான்.
கை கழுவினான்.
”நான் வர்ரேன்..” என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.
பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வந்து பாக்கெட்டில் கையை விட்ட போது தான் - அஹ வீட்டு கார் சாவி பாக்கெட்டில் இருப்பதை உணர்ந்தான்.
“அடடா.. ஒடனே போய் திரும்ப கொடுத்துடுவோம்..” என்று ஓட்டமும் நடையுமாக திரும்ப வந்து ஆஸ்பிடலின் உள்ளே வருவதற்கும் நிஷா ஜமிலா இருந்த அறையை விட்டு வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது.
நிஷா நின்று விட்டாள், “என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வர்ரீங்க...?” என்று கேட்டாள்.
“இல்ல.. உங்க வூட்டு கார் சாவி..” திக்கி திக்கி பேசி பாக்கெட்டில் கையை தட்டு தடுமாறி உள்ளே விட்டு சாவியை எடுத்து நிஷா அருகில் வந்து “இந்தாங்க” என்றான்.
”ரொம்ப தேங்கஸ்.. இந்த மருந்த நீங்க வாங்கிட்டு வந்ததுக்கு..” - அஸ்லம் நிஷாவின் இந்த வார்த்தைகளை எதிர்பார்த்திருக்கவில்லை.
“ம்ம்ம்..” ஒரு மாதிரி தலையை மட்டும் ஆட்டிவிட்டு திரும்பியவனை.. நிஷா, “உங்க கூட உங்க சின்னாப்பாவும் வந்தாஹலே.. அங்கே ஏதாவது படம் பார்க்க போயிட்டாஹலா..” என்றாள்.
“ஆ.. ஆமா..” என்று ஒடனே சொல்லிவிட்டு ஆச்சர்யமாக பார்த்தான்.
“உங்க கிட்டே ஒண்ணு கேக்கலாமா... நீங்க உங்க லாத்தா கூட பேச மாட்டீங்களா?.. சண்டை போட்டிருக்கீங்களா...? இன்னும் அவங்க விருப்பப்படி கல்யாணம் நடந்ததுல அவங்க மேல கோவமா இருக்கீங்களா?” என்றதும்,
“இவங்களுக்கு எப்படி..?” என்பது போல் ஆச்சர்யமாக பார்த்தவனிடம், “எல்லாம் எனக்கு தெரியும்.. ” என்றதும் ஸ்தம்பித்து போய் நின்று விட்டான்.
நிஷா தொடர்ந்தாள், “அப்புறம்.. எனக்கு உங்கள பத்தி இன்னொன்னும் தெரியும்.. ” சற்று நிறுத்தி தன்னையே கவனித்து கொண்டிருக்கும் அஸ்லத்தை பார்த்து விட்டு, “..உங்களுக்கு பேசி வச்சிருந்தாங்கள்ள.... அந்த கல்யாணம் நின்னு போனது..” என்றதும்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தாங்கிக் கொண்டு நிஷாவை ஒரு அதிசய பிறவியை பார்ப்பது போல் நகரவே முடியாமல் கட்டி போட்டது போல் நின்று கொண்டிருந்தான்.
தொடரும் முடிவுகள்...
8
சாரா பொறந்த வூட்லேயே பேசி வச்சது.. சாரா அஸ்லத்திற்கு தான் என்று
சாரா அஸ்லத்தின் தந்தையார் காதரின் நண்பரான தஸ்தகீரின் மகள்.
தஸ்தகீர் மதரஸால ஓதி மவ்லவி பட்டம் பெற்றவர். அவரோட மகளான சாராவும் பெண்கள் மதரசாவில் ஓதி வந்து கொண்டிருந்தார்.
ஆனா அந்த நிச்சயம் பண்ணி வைத்த கல்யாணம் நிச்சயமா இப்ப நடக்க வாய்ப்பே இல்லன்னு ஆயிடுச்சு..
அஸ்லமும் அஸ்லத்தின் சின்னாப்பா சுல்தானின் மகனார் இக்பாலும் ஒரே வகுப்பில் தான் படித்து வந்தார்கள். ஒன்றாக தான் ஓத பள்ளிக்கு சென்றும் வந்தார்கள்.
அஸ்லத்திற்கு படிப்போ ஓதுவையோ அவ்வளவாக அல்ல அவ்வளவும் வரவில்லை, ஆனால் இக்பால் நன்றாக படித்து நல்ல ரேங்க் வாங்குபவன்.
ஒரு நாள் அஸ்லம் இக்பால் மற்றும் பெருநா அன்னக்கி நண்பர்களாக கடற்கறைக்கு சென்றனர்.
அங்கே ஒரு வாடா விற்கின்ற கடையில் ஒரு அழகிய பெண்மணி இருப்பார். அவரை பார்வை நோக்கிடுவதற்காக ஒரு கூட்டம் அலையும்.
அந்த பெண்ணை பார்ப்பதற்காகவே அந்த கடைக்குள் எல்லோரையும் இழுத்துக் கொண்டு நுழைந்தான் இக்பால்.
அந்த பெண்ணிடம், ‘உங்க கையால பத்து வாடா கொடுங்க’ என்றான் இக்பால்
மறு பேச்சு பேசாமல் வாடா கொடுக்கப்பட்டது.
உள்ளடம் (துணை கறி) கொடுக்கவில்லல.
உடனே இக்பால், ’தொட்டுக்க உள்ள எடம் இருக்கா, தனியா சாப்ட முடியல சேர்ந்து சாப்டா ருசியா இருக்கும்’ இரட்டை அர்த்ததில் பேச
கடையை ஒட்டியிருந்த வீட்டின் உள்ளேயிருந்து, “மரியாதையா பேசுங்க, தம்பிகளா..?’ என்று ஒரு பெரிய உருவம் பனியன் கைலியோடு வெளியே வந்தது.
வெளியே வந்ததும் அவருக்கு கையில் அருகிலிருந்த அஸ்லத்தின் சட்டை காலரை தான் பிடிக்க முடிந்தது, ‘ஒங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே... நீங்க அந்த பெரிய வூட்டு புள்ளைங்க தானே...” என்றதும்
அஸ்லம், “நான் ஒண்ணுமே சொல்லலை..” என்றான்.
இக்பால், “இனிமே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு வந்துடுங்கனி..” என்றதும்
அஸ்லத்திற்கு தூக்கி வாரி போட்டது.
இக்பால் முன்னாடி வந்து, “இனிமே இது மாதிரி நடக்காது, தயவுசெய்து விட்டுடுங்க... இனிமே இந்த பக்கமே வர மாட்டோம்..” என்றான்
“இப்படி ஒழுங்கு மரியாதையா சொன்னதுக்காக உங்கள்வொல வுடுரேன்... இல்லைன்னா.. நடக்குறதே வேற...” என்றதும்
வாடாவாச்சு உள்ளடமாச்சு என்று எடுத்தார்களே ஓட்டம்.
ஆனால் அந்த பெரிய உருவத்தினர் நேராக போய் அஸ்லத்திற்கு பெண் பார்த்து வைத்திருக்கும் சாராவின் தகப்பனார் தஸ்தகீரிடத்திலேயே விபரத்தை சொல்லியிருக்கிறார்.
தஸ்தகீர் நேராக அஸ்லத்தின் வீட்டிற்கே போய் விட்டார்.
”இந்த மாதிரி நடந்திருக்கு” என்று விஷயத்தை சொல்லி ”இப்படி இருந்தா எப்படி நம்ம வூட்டு புள்ளய கொடுக்க முடியும், ஓதுவையும் இல்லை... தொழுவையும் இல்லை,.. நல்ல படிப்பு இல்ல...
எனக்கு ஒரு புள்ள இந்த மாதிலாம் இருந்து உங்க வீட்டு புள்ள வாழ்க்க கெடும்னா அதையும் தான் நான் வேணாம்னு தடுத்திருப்பேன்... அப்புறம் நீங்களே சொல்லுங்க... வாக்கு கொடுத்தது... மாற முடியலை அதனால தான் கல்யாணம் முடிக்கிற மாதிரி இருக்குமே தவிர எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை..”
தொடரும் முடிவுகள்...
9
‘ஒரு
நல்ல சேதி..’ என்று சபுரா சொன்னதும்
முத்துக்கனி ‘சொல்லுங்க.. வாய்க்கு சீனியே போடுறேன்..’ என்றார்
‘நான்
தம்பிக்கு (நாசர்) வேலைக்கு சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல.. எஹ சரின்னு
சொல்லிட்டாஹா.. எஹட அட்ரஸ் டெலிபோன் நம்பர் எல்லாம் தர்ரேன் தம்பிய போய் பாக்க சொல்லுங்க..’ என்று கொடுத்தார்,
‘அப்புறம்..’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவர் சரி வேண்டாம் என்பது
போல் வாயை மூடிக் கொண்டார். ‘என்னம்மா..
என்னமோ சொல்ல வந்தீங்களே’ என்றார் முத்துகனி ‘இல்ல..
தம்பி அஸ்லத்த ம்மனம்மா பார்க்க பிரியப்படுறாஹா...’
”அப்டியா ஏன்..” ஆச்சர்யமானார் முத்துகனி
“தம்பி மருந்து வாங்கிட்டு வந்ததெல்லாம் சொன்னேன்... அதான் தம்பிய பார்க்கணும்னு ம்மா பிரியப்படுறாஹா...”
அஸ்லம் ம்மா வந்து பார்க்க சொன்னாஹன்னு வந்து பூட்டியிருந்த எதிரே உள்ள ரூமை தட்டியபோது திறந்தது நிஷா.
பார்த்ததும் மலர்ந்தாள், “உள்ளே வாங்க..” கதவை நன்றாக திறந்து.. உள்ளே வரவழைத்து உட்கார் இடம் காட்டினாள்.
காட்டிய இடத்தில் உட்கார்ந்து கொண்டான்..
ம்மணம்மா கண்ணை மூடி படுத்து கிடந்தார்கள். சுருக்கம் விழுந்த முகத்தில் வியாதியின் வலி எழுதப்பட்டு இருந்தது.
”ம்மா சொன்னாஹா... பாட்டியா பாக்கணும்டாஹலாம்.. தூங்குறாஹா போல... நான் அப்புறம் வர்ரேனே..” எந்திரித்து கொண்டான்.
“இல்ல ஒக்காருங்க... இப்ப முழிச்சிடுவாஹா...” என்றதும்.
.நிதானித்து மறுபடியும் உட்கார்ந்து கொண்டான்.
”ஒங்கள பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறாஹா... என்னன்னே தெரியலை...” என்று அவனை பார்த்தாள், அவன் எந்த சலனமும் இல்லாமல் குனிந்தவாறே இருந்தான்.
“டீ ஊத்துறேன்.. உங்களுக்கு தான்...” என்றாள்.
வேணுங்களை வேணாங்கள.. கொடுத்ததும் வாங்கி கொண்டான்.
குடித்தான்.
“நல்லா இருக்கா.. சீனிலாம் கரெக்டா இருக்கா..? - கேட்டாள்
நிஷாவை பார்த்து ‘நல்லா இருக்கு’ என்பதாக தலையை ஆட்டினான்.
”நான் அன்னைக்கி சொன்னேன்ல... உங்களுக்கும் லாத்தாக்கும் சண்டய பத்தி.. அதாவது நீங்க கோச்சிகிட்டு அவங்க கிட்ட இன்னும் பேசாம இக்கிறத பத்தி.. அப்புறம்.. சாராவோட ஒங்க கல்யாணம் நின்னு போனத பத்தி..எல்லாம் நான் சொன்னேன்ல.. அது எனக்கு எப்படி தெரியும்னு.. நீங்க கேப்பீங்கன்னு நெனைச்சேன்.. கேக்கவே இல்லையே..”
அஸ்லம் ‘என்னா இது இவங்க ஒவ்வொரு அதிர்ச்சியா கொடுத்துகிட்டே இருக்காங்க... சாராவ எப்படி இவங்களுக்கு தெரியும்..?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே
’சாரா எங்கூட ஓதுன புள்ள தான்... என்னோட தோழி தான்... அவளுக்கு தெரியும் உங்க மேல தப்பு இருந்திருக்காதுன்னு... இத அவளே எங்கிட்டே சொன்னா.. ஆனா அஹ வாப்பா உங்கள்ட்ட ஓதுவ தொழுவ படிப்பு இல்லங்குறதனால தான் வேணாம்னு பிடிவாதமா சொல்லிட்டாஹலாம்”
ம்மணம்மா லேசாக உடலை அசைத்து தான் விழிக்க போவதை உணர்த்தினார்.
நிஷா, ‘ம்மணம்மா.. இதோ வந்திருக்காஹா.. மருந்து.. மருந்து..” கத்தினாள் காது கிட்டே போய்.. “வாங்கிட்டு வந்தாஹல்ல... அஹ இஹ தான்..”
ம்மணம்மாக்கு அஸ்லத்தை பார்த்ததும் ஏனோ முகமெல்லாம் சந்தோஷம் வலியை மறந்த மாதிரி உனர்வு.
அவன் கையை கேட்டு பிடித்துக் கொண்டார்.
‘அல்லாஹ் உதவி செய்வான்... ரொம்ப சந்தோஷம்.. நீங்க வாங்கிட்டு வந்தீங்கள்ள மாத்திர... அத போட்டா தான்.. கொஞ்சம் வலி ஒரு மாதிரி இருக்கும்..இங்கே சொல்லிவச்சு இப்போ வரும் நாளைக்கி வரும்னு வரவே இல்ல... சீக்கிரமா அல்லாஹ் கூப்டுக்க மாட்டேங்குறான்.. மருந்து மாத்திரை எல்லாம் எவ்வளவு செலவு.. காசு காசாவா இக்கிது.. புளியாங்கொட்ட மாதிரி தான் இக்கிது..” - பேசிக் கொண்டே போனவர் திடீரென்று நிறுத்தி ‘நிஷா... இங்கே வாம்மா..” என்றழைத்தார்.
அஸ்லத்திடம் திரும்பி “ஏன் தம்பி.. என் பேத்திய புடிச்சிருக்கா.. நிகாஹ் செஞ்சுக்கிறீங்களா?’ தைரியமாக கேட்டே விட்டார்.
இது என்னா இது இந்த வீட்டுல பட்டுபட்டுன்னு போட்டு உடைக்கிறாஹா.. வாழ்றது கொஞ்சம் இதுல யோசிச்சு ஏன் நேரத்த வீணாக்கணும்னு மனசுல படுறத பட்டவொடனே பட்டுன்னு கேட்டுடறாஹா போலருக்கு..
அஸ்லம் நிஷாவை பார்த்தான், அவள் இதை எதிர்பார்த்த மாதிரி அஸ்லத்தின் பதிலுக்கு காத்திருந்தாள், “ம்மாட்ட பேசுங்களேன்.. எனக்கு ஒண்ணும் சொல்ல தெரியல.. ”
சற்று நிறுத்தினான். பேச்சை மாத்தினான்.
“..மருந்துன்னு இல்ல.. எப்ப எதாவது வேலைன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க.. நான் வந்து செய்றேன்... ” எழுந்து கொண்டான்.
“இருங்களேன் தம்பி...போவாதீங்க.. டீ சாப்டீங்களா?” - ம்மணம்மா கேட்டார்
“இப்ப தான் கொடுத்தாங்க.. குடிச்சேன்..“ நிஷா பக்கம் திரும்பி,
“வர்ரேங்க..” என்று கிளம்பினான்.
நிஷா, “ம்மணம்மா இருக்க சொல்றாஹலே.. செத்த உட்கார்ந்துட்டு தான் போங்களேன்....”
உட்கார்ந்து விட்டான்.
“நான் நிஷா ம்மாட்ட சொல்லி பேச சொல்றேன்.. ஒங்க ம்மா சொன்னா எதுவா இந்தாலும் கேப்பீங்கன்னு சொன்னாஹல்வொலே...’
கொஞ்சம் நேரம் ஒக்காந்து விட்டு கிளம்பிய போது நிஷா கேட்டாள், “ம்மணம்மா சொல்ற மாறி நடந்தா ஒங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே..”
அஸ்லம் ரொம்ப நாளைக்கு பிறகு அப்போது தான் லேசாக புன்னகைத்தான்.
தொடரும் முடிவுகள்...
10.
ஜமிலா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் தேதியும் நேரமும் வந்தது.
ம்மணம்மா சபுராவிடம் அஸ்லம் நிஷா திருமண செய்தியை ஐசாம்மா முத்துகனியிடம் சொல்ல சொல்லி வலியுறுத்த அது வரை சொல்லுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே இப்போ ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பும் நேரத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“லாத்தா.. ம்மணம்மா ரொம்ப ஆசைப்படுறாஹா.. எல்லாம் நல்ல செய்தி தான்.. நம்ம நிஷாவ தம்பி அஸ்லத்துக்கு பேசலாம்னு..தம்பி வந்த போது கூட சொன்னாஹலாம்.. ம்மாட்டய கேக்க சொல்லிடுச்சாம்... என்னா சொற்றீங்கம்மா... உங்கள்வொலுக்கு புரியம் தானே...”
ஐசாம்மா முகம் வளர்ந்து வார்த்தை வழக்கம் போல் வராமல் போகவே, முத்துகனி, “எங்களுக்கு இத விட சந்தோஷம் வேற என்ன தங்கச்சி... அல்லாஹ்ட ஒதவியால பெரியோர்கள் துஆ பரக்காத்தால நல்ல படியா நடந்துச்சுன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்..”
“நான் இன்னும் எஹல்ட்ட கேக்கல.. மொதல்ல உங்கள்வொல்ட்ட கேட்டுக்கலாம்ன்னு தான்..” என்றார் சபுரா
“பரவாயில்லைம்மா... பேசிட்டு சொல்லுங்களேன்.. அவசியம் வூட்டுக்கு வரணும்“ முத்துகனி
ஐசாம்மா நிஷாவை கூப்பிட்டு நெற்றியில் முத்தமிட்டார், நிஷா ஐசாம்மாவின் மீது சாய்ந்து விட்டாள்.
ஐசாம்மாவுக்கு கண் கலங்கியது, கண்களை துப்பட்டியால் துடைத்துக் கொண்டார்.
”வர்ரேன்ம்மா.. வர்ரேன்ம்மா..”ன்னு பத்து தடவை கூறி விட்டு விடை பெற்றார்கள்
தொடரும் முடிவுகள்...
11
நாசர் சவுதியில் சபுராவின் கணவரை போய் பார்க்கவும், அவர் சபுராவுக்கு மேல் உதவும் மனப்பான்மையோடு உடனே விசா மாத்தி வேலை போட்டு கொடுத்து விட்டார்.
நாசர் சவுதியிலிருந்து தான் இப்போது மிக நன்றாக இருப்பதாக சொல்லி பூரித்து போனார்.
ஜமிலா, “நம்ம புள்ள வந்த நேரம் தாங்க.. பரக்கத்..” என்றாள்
நாசர் அப்போது ஒரு குண்டை தூக்கி போட்டார்.
“ஜமிலா.. இந்தாங்க.. புள்ள.. ரெண்டு விசயம் சொல்றேன்.. நீங்க கண்டிப்பா மறுக்காம செய்யணும்..” என்றார்
“என்னமா அது... ஏன் பயமுறுத்துற மாதிரி பேசறீங்க..” பதற்றமானாள் ஜமிலா
“செய்வீங்களா.. மாட்டீங்களா.. புள்ள..” நாசர் உஷாராக கேட்டான்.
“செய்றேன்.. என்னன்னு மொதல்ல சொல்லுங்க..”
”நான் எங்க தெருவுல ஒரு தனி வூடு பாத்திருக்கேன்.. அங்கே நீங்க தனியா வந்துடணும்..” முதல் குண்டு
“என்னம்மா.. ஏன்ம்மா... நான் எப்படி தனியா வர்ரது.. புள்ளய தனியா வச்சுகிட்டு..” விளக்கம் கேட்டாள் ஜமிலா
”அதுக்கெல்லாம்.. கவலைப்படாதீங்க.. எங்க ஊட்ல இக்கிறாஹல்ல சாலாச்சி.. அஹ ஒங்க கூடவே இரிப்பாஹா..”
“அப்படியா... ரொம்ப நல்லஹலாச்சே... எம்மேல ரொம்ப பிரியம்.. சரி சரி.. அப்பப்ப முத்துகனிமாவும் வந்து பார்த்துகிட்டா ஒண்ணும் பிரச்சினையேயில்லை..” - ஜமிலா ஒத்துக் கொண்டாள்
“அது தான் பெரிய பிரச்சினையே.. முத்துகனி எந்த காரணத்த கொண்டும் அந்த வூட்டு வாசற்படி ஏறக்கூடாது..” இரண்டாவது குண்டு
“என்னம்மா சொல்றீங்க.. ஏன்.. அஹ ஏன் வரக்கூடாது.. நான் எப்படி அஹல்ட்ட சொல்வேன்.. என்ன வெளையாடறீங்களாம்மா நீங்க...?” கோபப்பட்டாள்
“அதெல்லாம் எனக்கு தெரியாது புள்ள.. நீங்க தான் எப்படியாவது எனக்காக இத செய்யணும்... நான் மறுபடி நாளைக்கே டெலிபோன் போடுறேன்.. பதில சொல்லுங்க புள்ள..”
ஜமிலா போறதுக்கு தயாராக இருந்தாள். எப்படி இங்கே சொல்றது என்பது தான் இவளின் கவலையாக இருந்தது.
“என்ன புள்ள ஒண்ணுமே.. சொல்ல மாட்டேங்குறீங்க...”
”இல்ல.. இல்ல.. அதான் யோசிக்கிறேன்.. சரிம்மா நீங்க நாளைக்கி போன் பண்ணுங்க..”
“புள்ளைய பார்க்க ரொம்ப ஆசயா இக்கிது புள்ள..” என்று பிள்ளையின் ஏக்கத்தின் புள்ளைட்ட சொன்னான்
அப்புறம் கொஞ்சிவிட்டு போனை வைத்த மறுவிநாடி நாசர் சவுதியிலிருந்து இன்னொரு நம்பருக்கு டெலிபோன் போட்டான்.
ரிங் போனது.
டெலிபோன் எடுக்கும் சத்தம் கேட்டது, “ஹலோ..” பர்வீன்
“மாமி.. நீங்க சொன்ன மாதிரியே ஜமிலாக்கு டெலிபோன் போட்டு சொல்லிட்டேன்..” என்றான் நாசர்.
“நல்ல வேளை செஞ்சீயோம் தம்பி.. இங்கே நீம்பர் ஒண்ணும் கவலைப்படாதியோம்... நான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறேன்..”
”ரொம்ப சந்தோஷம் மாமி... அப்புறம் மாமி.. இந்த பாருங்க.. ரொம்ப முக்கியமான செய்தி.. நல்லா கேட்டுகுங்க.. “ என்று வைக்க இருக்கும் மூன்றாவது குண்டை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
தொடரும் முடிவுகள்.
12
ஜமிலா வீட்டை விட்டு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது.
'வாப்பா.. இன்னக்கி மறந்துடாதே, பைப் ரிப்பேர் பாக்க மாலிம் காக்கா வருவாஹா, இருந்து பார்த்துக்க, ஏதாவது சாமான் கேட்டா அலமாரில மே தட்டுல காசு வச்சிருக்கேன், எடுத்துட்டு போய் வாங்கி குடு, நீ எங்கேயும் போய்ட வேணாம்' என்றார்
அவசர அவசரமாக காரைக்கால் கிளம்பி கொண்டிருந்தார்
“நீங்க எப்பம்மா வருவீங்க...?” அஸ்லம் கேட்டான்.
“லேட்டாவும் வாப்பா.. வூட்டுவொல்வொளுக்கு போறேன்.. வந்துடுவேன்.. வரட்டுமா.. காரில் இவருக்கு தெரிந்த பொண்டுவள்வோ காத்திருக்க புறப்பட்டு போனார்.
கொஞ்ச நேரங்கழித்து தொலைபேசி சிணுங்கவே வெறுப்புடன் எடுத்து, 'ஹலோ யாரு?' என்றான்
'ஏன் நான் தான் நிஷா பேசறேன்' என்றாள்
'சொல்லுங்க' என்றான்
'ஏன்ம்மா.. இன்னைக்கி ஆஸ்பத்திரிக்கு வருவியாம்மா?' என்றாள்
'இல்ல வரமுடியாது..., பைப் ரிப்பேர் பார்க்க ஆள் வருது' என்றான்
'பைப் தானே அது நாளைக்கி பாத்துக்கலாமே ஒரு முக்கியமான செய்தி இருக்கு’' என்றாள்
'என்னாது?' அஸ்லம்
'என்னான்னு சொன்னாதானா, இப்ப நான் ஆஸ்பத்திரிக்கி கிளம்பரேன், நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாதும்மா, உடனே கெளம்பி வர்ரீங்க, ரொம்ப முக்கியமான செய்தி ஒண்ணு இக்கிது..”
”அஸ்ஸலாமு அலைக்கும்' நிஷா
”அலைக்கும் ஸலாம்” அஸ்லம்
டொக்.. வைத்துவிட்டாள்
தொடரும் முடிவுகள்...
13
மாலிம் காக்காவிடம் கடையில் போய் அப்புறமா வர சொல்லிவிட்டு அப்படியே ஆஸ்பத்திரிக்கு போய் விட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டு கிளம்பிய...
... அதே நேரம் 'கிர்ரிங்ங்ங்ங்ங்..' வாசலில் அழைப்பு மணி அடித்தது கதவை திறந்தான், வாசலில் சாட்சாத் மாலிம் காக்காவே தான்.
அஸ்லத்திற்கு மாலிம் காக்காவை பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது.
மாலிம் காக்கா கொட்டாவி விட்டுக் கொண்டே, 'என்னங்கனி.. ம்மா எங்கே?' என்றார்
'ம்மா, ஆஸ்பத்திரியில இக்கிறாஹா..” என்றான்
”என்னாங்கனி ஒளற்றீயோம்.. ம்மா ஏன் இப்போ ஆஸ்பத்திரிக்கு போறாஹா..” மாலிம்காக்கா தெளிவாய் இருந்தார்
”இல்ல... இல்ல.. வூட்டுவொல்வோக்கு போயிருக்காஹா.. சரி சரி... காக்கா.. சீக்கிரம் வேலய முடிங்க, நா வெளிய போவனும்' என்றான்
'உம்பர் இஸ்டத்துக்கு எல்லாம் நான் பாக்க முடியாது, தெரியுதா?' என்றவர் அவர் பாட்டுக்கு உள்ளே வந்தார்.
வந்தவொடனே வேலய பாக்க ஆரம்பிப்பார்ன்னு பாத்தாக்கா, அவருக்குன்னு வைத்திருக்கும் மூல அலமாரியின் - அவர் அடிக்கடி இந்த வீட்டிற்கு வருவார், போவார், அவரோட சாமான்வோ போட்டு வைக்க அந்த வீட்டில் அவருக்கென்று ஒரு தனி அலமாரியே இருந்தது - மேலே உள்ள பாயை எடுத்து வந்து, “ஓய் இப்போ தூங்குறேன்.. ஒரு அரை மணி கழிச்சு எழுப்பி வுடும்..” என்றார்.
”என்னாது.. அரை மணி நேரமா... ம்ஹூஹூம்... அதெல்லாம் முடியாது... நான் இப்போ வெளியே போ...” அஸ்லம்
”ஙொர்..” குறட்டையில் மாலிம் காக்கா
அரை மணி கழித்து எழுப்பி விட்ட போது , 'போய் சூப்பர் டீ ஒண்ணு வாங்கிட்டு வாருமே”' என்றார்.
‘டீயா அதுலாம் முடியாது’ என்ற அஸ்லம் வெறுப்புடன் வேறுவழியின்றி டீ வாங்க புறப்பட்டான்.
வேகவேகமாக போய் டீ வாங்கி விட்டு ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்து பார்த்தால் மாலிம் காக்கா மறுபடியும் தூங்கி கொண்டிருந்தார்
அஸ்லம் டீயை விட கொதித்தான், 'தூங்குறீங்க..' என்று
மாலிம் காக்கா, 'டீயை பிளாஸ்க்குல ஊத்தி வைச்சிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு எழுப்பி விடும், என்று புரண்டு படுத்தார்...
டெலிபோன் மணி அடித்தது..
ஒரே தாவலாக தாவி போய் டெலிபோனை எடுத்தான் அஸ்லம்.
“ஹலோ” பேசியது இவனின் சின்னாப்பாவான சுல்தான்
“ஏன்ம்ப்பா... தெருவுல.. (பேர சொல்லி) எஹ மௌத்தா போயிட்டாஹா... மய்யித்துக்கு வர்ரியா..” என்றார்.
அஸ்லம், “அடடே.. எப்போ மய்யித்... எப்போ மய்யித்..நல்லா இந்தாஹலே.. ”
“ஒனக்கு தெரியுமாப்பா..”
“ஏன் தெரியாது..ஒரு வக்து தொழுவ வுட மாட்டாஹா... மக்ரிபுக்கு பாங்கு சொல்றதுக்கு முன்னாடி டெய்லியும் தர்ஹாக்கு போவாஹா.. எப்போதும் தொப்பி தஸுவ மணி கைல...” - பேசிக்கொண்டிருக்கும் போதே..
“அப்போ நான் சொல்றது வேற ஆளுப்பா... இது.. ஒனக்கு தெரியாது..” போனை வைத்து விட்டார்.
மாலிம் காக்கா இரண்டரை மணி நேரம் தூங்கி எழுந்தார்.
எந்திரித்து எதிரே அவரையே கோபமாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அஸ்லத்திடம் கேட்டார், 'ஏங்கணி, நீம்பர் ஆஸ்பத்திரிக்கு போவல' என்று சொல்லி அவராகவே சிரித்தார்..
தொடரும் முடிவுகள்...
14
மாலிம் காக்கா வேலை பார்க்கும் போதே தன் முதல் வெளிநாட்டு பயண அனுபவங்களை சொல்லி கொண்டிருந்தார், ‘சரியா படிக்கலங்கணி, கூலிக்கு ஆளா தான் நான் சவுதிக்கு போனேன்,
“அப்பலாம் சவுதில பயமுறுத்துனாஹல்வோம்... ஓய் ஊருக்கும் போவும் போது ஒம்பர்ட சாமானெல்லாம் கஸ்டம்ஸ் காரன் புடுங்கிக்கு வாங்கனி.. அது இதுன்னு..”
’ டீயை குடித்து விட்டு,
‘நான் பயந்துகிட்டே தான் வந்தேன்.. பெரிய பொட்டி.. தொறந்து பார்க்கணும்ண்டான்.. இந்தா பார்த்துக்கன்னு சாவிய கொடுத்தேன்.. நீயே தொறன்னான்.. பெரிய இதா.. இந்த தொறக்குறேன்னு தொறந்தேன்.. பொட்டிய பார்த்தான்ல பேயறஞ்ச
மாதிரி போச்சு அவனுக்கு..”
அஸ்லம் அதை கேட்க கொஞ்சங் கூட பிடிக்கவில்லை என்றாலும் அப்படி என்ன தான் அந்த கஸ்டம்ஸ் காரர்கள் பார்த்தார்கள் என்று அறிய ஆவலாக, “ஏன்.. பேயறஞ்ச மாதிரி போயிட்டன்.. “
“வேற போவாம என்ன செய்வான்.. அவனும் பாவம்.. ஒரே ஒரு கோடாலி பாட்டுல் தைலம் யூஸ் பண்ணுணதும், டைகர் பாம் டப்பா மட்டுமும்... இத தான் கொண்டு வந்தேன்..”
”அப்போ தான் கஸ்டம்ஸ் காரன் கிட்டே நான் சொன்னேன், நீம்பர் எவர்ட்ட வேணும்னாலும் சாமான எடுக்கலாம்.. ஆனா எங்கிட்ட முடியுமான்னு..’ என்று நாக்கை வெளியே
நீட்டி தலையை ”முடியுமான்னு..”ஆட்டினார், “நாளாம் யாரு... ஒங்க பாட்டன் காலத்துலேந்து வேல பார்க்குற ஆளு..”
அஸ்லம் செய்வதறியாது தவித்தான்.
தொடரும் முடிவுகள்...
15
ஒரு வருடம் கழித்து...
சுகம் மருத்துவமனையின் வாசலில் அந்த கார் வந்து நின்றது..
“பாத்து பாத்து... ஜாக்கிரதை... மெதுவா.. “
“படி.. படி.. இங்கே இருட்டா இருக்கு..”
மெதுவாக அழைத்து வரப்பட்டாள் நிஷா..
வயிற்றில் கொஞ்ச நேரத்தில் பிறக்க இருக்கும் பிள்ளை..
நர்ஸ் மேரி பெஞ்சை காட்டி, “இங்கே ஒக்காருங்கம்மா.. ரூம் இப்போ ரெடியாயிடும்..” என்றாள்
நிஷா சபுராவிடம் கேட்டாள், “படுத்துக்கவா...?” என்று..
“அடடே தலைவாணி இல்லையே..”
எதிரே இருந்த ரூமில் லைட் போடப்பட்டது.
கதவு திறக்கப்பட்டது.
திறந்தது அஸ்லம்.
வெளியே வந்தான். திகைத்து போனான்.
நிஷா நோக்காட்டில் துடித்துக் கொண்டிருந்தவள் இவனை பார்த்ததும் அதிர்ச்சியானாள்.
அஸ்லத்தின் கையில் தலைவாணி..
சபுரா கேட்டார், “யாருக்கு என்னா தம்பி..?”
அஸ்லம் கண்ணில் நீர் தழும்ப சொன்னான், “ம்மாக்கு தான் திடீர்ன்னு நெஞ்சு வலி..” சொல்லி விட்டு தலையணையை கொடுத்தான்...
நிஷாவை பார்த்துக் கொண்டே ”வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க..” என்று சொல்லி விட்டு அறையின் உள்ளே சென்று கதவை சாத்தினான்.
தொடரும் முடிவுகள்...
16
பின் குறிப்புகள்:
இந்த ஒருவருட கேப்பில்...
1. முத்துகனி மௌத்தாகிவிட்டார்
2. ம்மணம்மா மௌத்தாகிவிட்டார்.
3. பர்வீன் நாசரின் உதவியோடு அஸ்லத்தை பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி அஸ்லம் நிஷா கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.
4. பெரிய பிளான் போட்டு நிஷாவுக்கும் இக்பாலுக்குமே திருமணம் நடத்தி வைத்திருந்தார்.
தொடரும் முடிவுகள்...
முடிவுகள் தொடராது...