Sunday, June 15, 2014

அப்கெ நா சாவன் பர்ஸே - கினாரா பட குல்ஜார் சாப் பாடல்






Taaliyon Ke Shor Mein Ek Gumsum Khamoshi Bhi Thi
Ek Aisi Khamoshi Jo Ghataon Ke Barasne Se Pehle Sunayi Deti Hai
Aarti Ki Chhalki Hui Aankhon Mein Wo Khamoshi Yun Theher Gayi Thi
Jaise Keh Rahi Ho


கைதட்டலின் இறைச்சலுக்கு நடுவே ஒரு நிசப்தம் மறைந்தபடி உள்ளது
அந்த நிசப்தமானது மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னர் உள்ள 
அமைதியை ஒத்திருக்கிறது
அந்த நிசப்தமானது ஆர்த்தியின் (கதையின் நாயகி) ஈரவிழிகளை நிறுத்தி விடுகிறது
அது யாது சொல்கிறதென்றால்...

Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse

இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..

(வடநாட்டிலெல்லாம் வேலைக்கு வேறு மாநிலத்திற்கு செல்லும் கணவன் மழை மாதமான "சாவன்" எனும் மாதத்தில் வீட்டிற்கு மனைவி மக்களை காண வருவதுண்டு... ஆனால் கணவன் இறந்து விட்ட படியால் மழைமாதமே வரப்போவதில்லை என்று பாடுகிறார்)

Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse

இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..

jaane kaise ab ke mausam beete
beetegi jo tere bin wo kam beete
tere binaa saawan soone
ae tere binaa ab to ye man tarse


எப்படி வரும்
நீயில்லாத
இந்த மழைக்காலம்
என்று
அறியவில்லை
நீயில்லாத
மழைக்காலம்
என்பது
ஒரு அழிவுக்காலமே...
நீயின்றி
இப்போது
இந்த மனம்
ஏங்கி தவிக்கிறது

jaane kab aaye din, din dhal jaaye
tere bin ankhiyon se raat naa jaaye
tere binaa raat naa jaaye
ae tere binaa ab to ye din tarse


ஒவ்வொரு பகலும்
எப்படி வருகிறது
எப்படி செல்கிறது
என்பதை நான்
அறிவதேயில்லை
நீயின்றி
இரவானது
என்னை விட்டு
செல்வதே இல்லை

Friday, March 01, 2013

பகைச் செயல் குற்ற தடுப்பு சட்டம்

உலகெங்கிலும் இன்றைக்கு பல் வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கிடையே பகைமை உணர்வு மேலோங்கி கிடக்கிறது. ஆனால் சிங்கப்பூர் மட்டும் எந்த வித பகைமை உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் அரசாங்கத்தின் திறமையான நிர்வாகத்தால் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சிங்கப்பூரில் Inter-Religious Organisation (IRO) எனும் அமைப்பு இயங்கி வருகிறது. மனித வள அமைச்சில் என்னுடைய பழைய மேலதிகாரியான் திரு. அமீர் அலி அப்தே அலி என்பவர்கள் தான் இதன் முந்தைய தலைவராக இருந்து வந்தார்கள்.

அண்டை நாடுகளிலெல்லாம் மதப் பூசல்கள் ஏற்படும் போது IRO அமைப்பு பல் வேறு நிகழ்வுகளை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்த தேசிய கடமையாற்றி வருகிறது.

தேசிய தொழிற் சங்க காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் மலாய் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரே ஒரு ரேசியல் கமெண்டை தனது ஃபேஸ் புக்கில் பதிவு செய்து விட்டார். பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான கமெண்டுகளே பதிவு செய்யப்படுகிறது. உடனே அந்நிறுவனம் அவரை பதவி நீக்கம் அதிரடியாக செய்து விட்டது. அதன் பிறகு அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது வேறு விஷயம்.

எங்களுக்கு எல்லாம் தகவல் அனுப்பப்பட்டது, தகவல் அல்ல கட்டளை என்று தான் சொல்ல வேண்டும்,  எந்த மத ரீதியான கமெண்டும் எந்த மீடியத்திலும் பதிவு செய்யக் கூடாது. 

எனக்கு பல்வேறு மதங்கள் பிடிக்காமல் போகலாம், ஆனால் சிங்கப்பூர் வாசியான எனக்கு என் மதத்தின் அருமை பெருமைகளை பற்றி பேச மட்டுமே இடம் உண்டு, அடுத்த மதத்தை பற்றி விமர்சிக்கவோ அவமதிக்கவோ இடம் கிடையாது. 

என் வகுப்பிற்கு வரும் பெரும்பாலானவர்கள் என் மதத்தை சாராதவர்கள் தான், ஒரு முறை எனது வகுப்பிற்கு இங்கே சிங்கையில் கோயில் கட்டுவதற்கு சிற்பிகள் எல்லாம் வந்தார்கள். வேட்டி சட்டை தான் அணிந்து வந்தார்கள். எல்லோரையும் அன்புடன் தம்பி அல்லது அண்ணன் என்று தான் அழைத்து பழகினேன்.

மத ரீதியான மனதை புண்படுத்தும் பதிவுகளை எவராகிலும் பதிவு செய்தால் சிங்கப்பூர் பகைச் செயல் குற்ற தடுப்பு சட்டத்தின் படி முதல் தடவை குற்றத்துக்கு 5,000 சிங்கப்பூர் வெள்ளி அபராதம் 3 வருட சிறை தண்டனை (அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டு தண்டனையும்) இரண்டாவதும் அதை தொடர்ந்து செய்யும் குற்றத்துக்கும் 5 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும்.

நான் என் பதிவில் எங்கேனும் யார் மனதையும் புண்படுத்தும் படி எழுதியிருந்ததாக குறிப்பிட்டால் எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்பு கேட்டு நீக்க கடமைப்பட்டுள்ளேன்.

எல்லோரும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் காரணம்.

Sunday, February 03, 2013

சினிமா தீவிரவாதிகள்

சிறு வயது முதல் கமல் ரசிகர் தான் நான், பேசும் படம், ஜெமினி சினிமா போன்ற சினிமா பத்திரிக்கைகளில் வரும் கமல் படங்களை கத்திரித்து பெரிய அட்டை வாங்கி அதில் கோந்து வைத்து ஒட்டி “சகலகலா வல்லவன் கமல்ஹாசனின் இத்திரைக் காவியத்தை காண வந்து அன்பு ரசிக உள்ளங்களுக்கு நன்றி” என்று பெரிதாக ஸ்கெட்சில் எழுதி நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் உள்ள கண்ணாடி அலமாரியில் வைப்பதற்கு கொடுப்போம்.

அதனை காண வீட்டிற்கு தெரியாமல் காலில் செருப்பு கூட போடாமல் (ஏனென்றால் செருப்பு வீட்டில் இல்லை என்றால் எங்கோ வெளியே போயிருப்பது வீட்டிற்கு தெரிந்து விடும் என்பதால், எங்க வீடு கான்வெண்ட் மாதிரி பயங்கர ஸ்ட்ரிக்ட்) கமல்ஹாசன் படத்திற்கு நாங்கள் வைத்த ரசிகர் மன்ற அட்டையை காண சென்று வருவதுண்டு.

நான் தெரிந்தோ தெரியாமலோ “வாப்பாக்காக” என்று ஒரு கதை எழுதி திண்ணை இணைய இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த கதையில் கூட எனது கதாநாயகனான அஸ்லம் என்பவர் கமல்ஹாசனின் ரசிகராக தான் வருவார். கமல்ஹாசனின் படங்களான, பேர் சொல்லும் பிள்ளை, உன்னால் முடியும் தம்பி, உயர்ந்த உள்ளம் போன்ற படங்களை எல்லாம் கதையில் அங்கங்கே வருவது போல் எழுதியிருந்தேன்.

கமல்ஹாசனின் லஞ்சம் வாங்க கூடாது என்ற கருத்துடைய ‘இந்தியன்’ படத்தை சென்னை சத்யம் தியேட்டரில் ‘பிளாக்கில் டிக்கெட்” வாங்கி பார்த்து இருக்கிறேன். (நல்ல வேளை ஷங்கரின் இந்தியன் தாத்தா பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களை, பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்து படம் பார்ப்பவர்களை எல்லாம் வர்மக் கொலை பண்னவில்லை)

சிங்கப்பூர் தொலைகாட்சிக்கு பல வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது அவர்களுக்கு அளித்த பேட்டியில் ’தனது தந்தையாருக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம் அதனால் தான் இஸ்லாமிய பெயர் தொனியில் தனது பெயர் அமைந்ததன் காரணம்” என்று அவர் கூறிய போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

சிங்கப்பூர் கேத்தே எனும் திரையரங்கில் ஹேராம் படம் பார்க்கும் போது கூட ஒருத்தர் கத்தினார், “இது தமிழ் படமா? இந்தி படமா?” என்று - பதிலுக்கு திரையரங்கிலேயே நானும் பதில் கூற கத்தினேன், “இது இந்திய படம்” என்று.

காஃபி வித் அனுவில் திலிப் குமாரை யுசுஃப் கான் என்று அழைத்த போது சபாஷ் சொன்னேன்.

சுருக்கமாக சொல்லப் போனால் நான் கமல்ஹாசனின் ஒரு தீவிரவாத ரசிகனாக தான் இருந்தேன் எனலாம்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பரிட்சைக்கு போற பையன் படிச்சிட்டு போனா போதும் சாமி கும்பிட தேவையில்லை என்று சொல்வது, கடவுள் சிலை வாங்கும் போது ‘இது தான் விலையா?’ என்று கிண்டலாக கேட்பது நம்மவர் படத்தில் ‘யாராவது அவசரமா கும்பிடணும் கோயில் எங்கே இருக்குன்னு கேட்டிருக்காங்களா? ஆனா அவசரமா டாய்லெட் போவணும்னு கேப்பாங்க.. அதனால் நம்ம டாய்லெட் தான் அதிகம் கட்டணும்னு..’ இன்னும் எவ்வளவோ படங்களில் தன்னை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும்  ஒரு சிறந்த பகுத்தறிவாளராக காட்டிக் கொண்ட கமல் ஹாசன் அவர்கள் இப்போது ஹே ராம், தசாவதாரம், உன்னை போல் ஒருவன் என எடுத்து விட்டு விஷ்வரூபம் எடுத்து வந்திருக்கிறார்.

இடையிலே கூட ஒரு பேட்டியில் ‘இஸ்லாமியர்களுக்கு சந்தேகம் வந்து உங்கள் படத்தை போட்டு காட்டும் படி கேட்கிறார்களே” என்ற கேள்விக்கு ‘அவர்கள் கேக்கத்தான் செய்வார்கள்...   உயர் சாதிக்காரர்கள் எல்லாம் ஆங்கிலேயரின் அடிவருடிகளாக மாறிய பின்பும் அவர்களின் மொழியான ஆங்கிலத்தை கற்பதே பாவம் (ஹராம்) என்று (ஃபத்வா) கற்காமல் பின் தங்கியவர்கள், அவர்கள் வாழ இறந்த பின்பு புதையுற இந்த மண்ணை தேர்ந்தெடுத்தவர்கள், அவர்களை சுதந்திர இந்தியாவில் முதல் தர குடிமகனாக அல்ல ஐந்தாம் தர குடிமகனாக நடத்துகிறார்கள்..... ஒரு ஐம்பது ஆண்டு காலம் அத்து மீறி (பாலஸ்தீன மண்ணில்) குடியேறிய இஸ்ரேலுக்கே இவ்வளவு தேசப்பற்று இருக்கும் போது.. பல நூற்றாண்டுகாலமாக இங்கேயே வாழ்ந்து வரும் இவர்களின் தேசப்பற்றை சந்தேகிக்கும் போது கோவம் வரத் தான் செய்யும்...” என்பது போல் எல்லாம்  இஸ்லாமியர்களின் தோளில் கைபோட்டு ஒரு சகோதர குரலில் அம்பேத்கார் பேசியதை எல்லாம் கமல்ஹாசன் அந்த பேட்டியில் ஆறுதலாக ஆதரவாக பேசியிருப்பார்.

ஆனால் பிரபல பதிவர் பைத்தியக்காரன் என்பவர் (இப்பொழுது இவர்கள் எழுதுவதே இல்லை போலும்) தசாவதாரம் படத்தின் விமர்சனத்தை படித்ததும் கமல்ஹாசனின் நுண்ணரசியலை அவர் புட்டு புட்டு வைத்திருப்பார். அதே போல் அடுத்து நான் படித்தது சுகுணா திவாகரின் கமல் படத்தை பற்றிய விமர்சன பதிவு.

உன்னை போல் ஒருவன்: http://suguna2896.blogspot.sg/2009/09/blog-post_19.html

தசாவதாரம்: http://suguna2896.blogspot.sg/2008/06/blog-post.html

தோழர் வே.மதிமாறன் தனது பதிவில் சொல்லியிருப்பது போல் கமல்ஹாசனுக்கு அரசியலும், மதமும் கிடையாது ஆனால் ஜாதி இருக்குமோ என்ற நிலைக்கு வரவேண்டியிருக்கிறது அல்லது தான் ஆடாவிட்டாலும் தனது ஜாதி சதை ஆடி வருகிறதோ என்ற கேள்வி எழுகின்றது.

விஸ்வரூபம் படம் வெளி வரும் முன்பே அது இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தியலை மனதில் பதிய வைக்கும் படமாகத் தான் இருக்கும் என்று வே.மதிமாறன் கவுண்டமணியின் டயலாக்கோடு எழுதியிருப்பார்கள்.

சமீபத்தில் விஸ்வரூபம் படத்திற்கு எதிரான டி.என்.டி.ஜே. நடத்திய கூட்டத்தில் பேசிய பி.ஜே. அவர்கள் பாரதிராஜாவையும் மனுஷ்யபுத்திரனையும் கமல்ஹாசனையும் கொஞ்சம் தரக்குறைவாக பேசியிருப்பார். அதன் பிறகு தன் வலைத்தளத்தில் அதற்கான காரணத்தை சொல்லி காமெடி பண்ணியிருப்பார். அப்புறம் தொலைகாட்சி பேட்டியில் நாகரீகமாக பேசியிருக்கிறாராம்.

இதை பற்றி ஒருவர் முகபுத்தகத்தில் எழுதும் போது அவர் பொதுமேடையில் ஒரு மாதிரியும் (அதாவது தனக்கு ஆதரவான பெரும் கூட்டத்தை பார்த்தவுடன் உணர்ச்சி பிழம்பில் ஒரு மாதிரியும்) தொலைக்காட்சி பேட்டியில் ஒரு மாதிரியும் பேசுவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

எனக்கு இதே கருத்து தான் கமல்ஹாசனின் தொலைகாட்சி பேட்டியில் இஸ்லாமிய ஆதரவு குரலோடு பேசுவதும் படங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை கதையினூடே மக்கள் மனதில் பதிய வைப்பதுமாக நடந்து கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது.

இந்த இடத்தில் பி.ஜே அவர்களின் வலைதளத்தில் ஒரு விளக்கம் அளித்திருப்பார், அதாவது மனுஷ்ய புத்திரனை மிருக புத்திரன் என்று அழைத்ததற்கு அவர் தரும் ஆதாரங்கள், அலி (றலி) அவர்கள் மீது மண் ஒட்டியிருந்ததை பார்த்து விட்டு ‘மண்ணின் தந்தை’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அழைத்தது, அபுஹுரைரா (றலி) அவர்களை அதாவது பூனையை மிகப் பிரியமாக வளர்த்ததற்காக பூனையின் தந்தை என்று அழைக்கப்பட்டதை எல்லாம் குறிப்பிட்டு அதே அடிப்படையில் தான் மிருகபுத்திரன் என்று அழைத்தேன் என்று செம காமெடி பண்ணியிருப்பார்.

மண்ணின் தந்தை என்பதோ பூனையின் தந்தை என்பதோ அவர்களின் தோழமையோடு உரிமையோடு நட்போடு சொல்லிய வார்த்தைகள். அடுத்தவர் மனதை புண்படுத்திய வார்த்தைகள் அல்ல.. பூனையின் தந்தை என்று சொல்வதற்கும் மிருகத்தின் மகன் (மிருக குணம் படைத்தவனின் மகன்) என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது.

அன்னாரின் வார்த்தைகளை ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் பல பேர் என்றால் சில பேர் அன்னாரை இனி மேல் அப்படியெல்லாம் பேசாமல் இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார்கள், ஒருத்தர் கூட இந்த தவறுக்கு மன்னிப்பு கேக்க வேண்டும் என்று கேட்க வில்லை.

இது என்னுடைய கருத்து தான், தவறாக கூட இருக்கலாம், ஆனால் அது தவறாக இருக்கும் பட்சத்தில் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பெறும் வரை அல்லாஹ்விடம் எந்த மன்னிப்பும் கிட்டாது என்றே நம்புகிறேன்.

அடுத்து பார்த்தீங்கன்னா, கமல்ஹாசன் யார் யாரோடு இருந்தார் வாழ்கிறார் என்று பட்டியல் போடுகிறார், செந்தில் தேடுற ஆள் இவர்கள் தான் போலிருக்கிறது, கரகாட்ட நண்பர்கள் வைத்திருந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை வைத்திருந்தது யார் என்று அறிந்து கொள்ள செந்தில் ஆவலாக இருந்தார். அதெல்லாம் கணக்கெடுக்குறதா உங்கள் வேலை...?

சரி போய் தொலையட்டும், நமக்கு வேலையில்லை...

சில நண்பர்களின் பதிவை பார்த்தேன், ஒருவர் கேட்டிருந்தார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்திருப்பது பற்றி, அதாவது பேராசியருக்காக ஓட்டு போட்ட மக்கள் பின் லேடன், முல்லா உமர் எல்லா தீவிரவாதிகளையும் தெரிந்த பிறகு தான் இவர்களையும் தேர்ந்தெடுத்தார்களாம்.

அதாவது அரேபியரான் பின் லேடனும் முஸ்லிம் தான் ஆஃப்கானியரான முல்லா உமரும் முஸ்லிம் தான் தமிழரான ஜவாஹிருல்லாஹ்வும் முஸ்லிம் தான் - இந்த ஒற்றுமை தெரிந்திருந்தும் தமிழரான இவரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்கிறார்கள்.

அப்படி பார்த்தால் காந்தியை சுட்டது கூட ஒரு இந்து தான், அதுக்காக இந்து நண்பர்களுக்கு ஓட்டு போடக் கூடாது என்று முஸ்லிம்களை சொல்லி விட முடியுமா? -

இன்னொரு பதிவில் வேறொரு நண்பர், ஆப்கானில் அன்பின் வடிவான புத்தர் சிலையையே குண்டு வைத்து தகர்த்தவர்கள் தலிபான்கள், அவர்களை படத்தில் காட்டும் போது அவர்கள் குரான் ஷரீஃப் ஓதுவதையோ, தொழுகை செய்வதையோ காட்டுவதை எவ்வாறு விட முடியும் என்று கேட்கிறார்கள்.

சிலையை குண்டு வைத்தவர்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களே, எத்தனையோ குழந்தைகள் உள்பட சிவிலியன்களை மேலிருந்து குண்டு போட்டு சிலையாக்கினார்களே அவர்களை பற்றி உலக மகா உத்தமர்கள் போல் காட்டியிருக்கிறீர்களே அது ஏன்..? என்று கேட்கிறோம்.

எனக்கு இன்னும் நாகூரில் நடந்த இந்து - முஸ்லீம் கலவரம் நடந்த சமயம் என் கண்ணால் பார்த்த காட்சி ஒன்று ஞாபகமிருக்கிறது, ரயிலடிக்கு அந்த பக்கம் மீனவ நண்பர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கம்பையும் கட்டையையும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள், ரயிலடிக்கு இந்த பக்கமாக முஸ்லிம்கள் கம்பும் கட்டையுமாக காத்து கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது மிகவும் தைரியமாக ஒரு மீனவ நண்பர் முஸ்லிம் தெருவில் நடந்து போனார், அப்பொழுது அவர் சொன்னார், “நாங்க விக்கிறோம்.. நீங்க வாங்குறீங்க... நம்ம அடிச்சிகிட்டா நாம வாழவே முடியாது... எனக்கு எல்லாம் தெரிஞ்சவங்க... என்னய எவரும் எதுவும் செய்ய முடியாது அப்படி செய்யவும் மாட்டாங்க...: என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து போனார்.

ரோஜா படத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு முஸ்லிம் தீவிரவாத வில்லன்கள் தேவைப்படுகிறார்கள், அதுவும் அவர்களை ஒழிக்கும் ஹீரோக்கள் எல்லாம் பெரும்பாலும் அக்ரஹாரத்திலிருந்து தான் வருகிறார்கள்.

குரான் ஷரீஃபின் கூற்றுப்படி நாம் அனைவரும் ஆண் பெண் உள்பட யாவரும் ஒரே ஆன்மாவிலிருந்து வந்தவர்கள், சகோதர சகோதரிகள். இறைவனின் குடும்பங்கள், யார் இறைவனின் குடும்பத்தை நேசிக்கிறார்களோ அவர்களை இறைவனும் நேசிக்கிறான் என்று அகிலங்களின் அருட்கொடை (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

எங்களுக்கு ஐந்து கடமைகள் மட்டுமே உண்டு. அவை...

1. கலிமா (அல்லாஹ்வை தவிர அல்லாஹ் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதார் ஆவார்கள் என்று சாட்சி பகர்வது)

2. ஐவேளை தொழுகை - அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அசைவுகளை செய்து குறிப்பிட்ட குரான் ஷரீஃப் வாக்கியத்தை உச்சரிப்பது.

3. நோன்பு - குறிப்பிட்ட மாதத்தில் பசி, தாகம் முதல் அனைத்து கெட்ட உணர்வுகளையும் உருவாவதை கவனித்து கட்டுப்படுத்தும் ஒரு மகத்தான சுய பயிற்சி

4. ஜகாத் - எத்தகைய வருமானமுடையவருக்கும் சேமிப்பில் இருக்கும் செல்வத்தில் இரண்டரை விகிதம் ஏழை வரியாக உற்றார் உறவினர் ஆரம்பித்து ஏழை எளியோர் அநாதைகள் உள்பட யாவருக்கும் பகிர்ந்து கொடுப்பது.

5. ஹஜ் பயணம் - ஆயுளில் ஒரு முறையேனும் குறிப்பிட்ட மாதத்தில் இனம், மொழி, நாடு, பாலினம், நிறம், இன்னும் என்னென்ன பிரிவினைகள் மனிதர்களிடையே பொறாமையினால் ஏற்பட்டதோ அவையனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு உண்மை முஸ்லிமாக (இறைவனுக்கு வழிபட்டவனாக) ஒரே குடும்பமாக ஒரே மாதிரியான சீருடையோடும், ஒரே மாதிரியான முழக்கத்தோடும் உடல் சுத்தத்தோடும் இஸ்லாமிய ஆன்மீக மையமான கஃபா ஆலயம் சென்று கிரியைகள் செய்து மன சுத்தம் பெற்று திரும்புவது.

மேற்கூறிய ஐந்து தான் எங்கள் கடமையாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர நீங்கள் படம் காட்டுகிற தீவிரவாதம் எங்கள் கடமையில் இல்லை என்பதை சினிமா தீவிரவாதிகளுக்கு ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள இதை பதிவாக்கியிருக்கிறேன்.

வஸ்ஸலாம்...

Friday, December 14, 2012

மருத்துவரும் நல்ல மனிதருமான மோகன் அவர்களின் மரணம்


நம் உடல் மிகவும் முக்கியமானது, கவனிக்கப்பட வேண்டியது, குரான் ஷரீஃபின் கூற்றுப்படி இறைவன் தன்னுடைய ரூஹை ஊதுவதற்கு அந்த ரூஹை தாங்குவதற்கு ஏற்ற ஒரு பையாக ரூஹு தங்கி செல்லும் ஒரு வசிப்பிடமாக இந்த உடலே உள்ளது.

நம் உடலுக்குள் எத்தனையோ சங்கதிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நான் ஒரு வலைத்தளத்தோட லிங்கை பார்த்தேன். அந்த லிங்கை கீழே தருகிறேன். போய் பாருங்கள்.

http://www.innerbody.com/htm/body.html

எவ்வளவு நுணுக்கமான நெட்வொர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உடலுக்குள். நரம்பு, எலும்புகளிலிருந்து மூளை, இதயம், நுரையீரல், கல்லீரலிருந்து, இரத்தம், நீர், ஆகாரத்திலிருந்து, கண், காது, மூக்குகளிலிருந்து இப்படி இருந்து இருந்துன்னு முடிவில்லாம போய்கிட்டே இருக்கும்.

ஒரு நாள் வரும், அந்த நாளில் யார் சொல்லியும் கேக்காமல் எந்த முறையீடுக்கும் கட்டுப்படாமல் அது பாட்டுக்கு இந்த இயக்கத்தை எல்லாம் ஒரேயடியாக நிறுத்தி விட்டு  நீங்க அழுதா அழுதுகிட்டு இரிங்க, எனக்கென்னா? என்ற ரீதியில் அது பாட்டுக்கு போய் கிட்டே இருக்கும்.

ஆனால் அந்த நாள் வரும் வரைக்கும், அல்லது அந்த நாளையே தள்ளி போடலாம் என்ற அவாவில் அல்லது அந்த நாள் வரும் வரைக்கும் கொஞ்சநஞ்சம் வேலை செய்துக் கொண்டிருக்கிற உடல் இயக்கங்களை கொண்டு நோகாமல் வலி வராமல் இருப்பதற்காக நம் உடலை நலமுடன் வைத்திருப்பதற்காக உடல் கூறுகளின் வித்தைகளை அறிந்த ஒரு நிபுணரை சோ கால்ட் டாக்டரை நாம் சந்திக்க செல்வதுண்டு.

அப்படி ஒரு மருத்துவரை நாம் அணுகும் போது என்னென்ன எதிர்ப்பார்ப்புகளோடு அணுகுவோம் அல்லது அணுக வேண்டும் (not limited with):

1. நல்ல அறிவாளி - Brainy
2. கைராசிக்காரர் - Lucky Person
3. இரக்க உணர்வு - Compassionate
4. மனிதாபிமானம் - Humanity
5. புர்ந்துணர்வு - Empathy
6. அர்ப்பணிப்பு - Dedication
7. தியாக உணர்வு - Sacrifice
8. பொறுமை - Tolerant
9. பரிவு - Considerate
10. தாராள உள்ளம் - Generous

இப்படி இன்னும் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளோடு தான் ஒரு உடல் வைத்தியரை நாம் அணுகுவோம். 

ஒரு வைத்தியராக பணியாற்ற academic excellence மட்டுமே போதுமானது அல்ல, அதையும் தாண்டிய extra miles செல்லக்கூடிய ஒரு அணுகு முறையை தனக்கே உரியதாக்கி இருக்க வேண்டும்.

மருத்துவர் தனது உடலை காட்ட வந்தவர்களிடம் கெட்ட செய்தியை சொல்ல வேண்டியது வரும், எனக்கு ஒரு தடவை கடுமையான வயிற்று வலி வந்தது, ஒரு மருத்துவரிடம் காட்டினேன், அவர் தவறாக டயக்னைஸ் செய்தது மட்டுமல்லாது அதை அவர் சொல்லிய விதம், எடுத்த எடுப்பிலேயே,

“கிட்னி ஃபெயிலியர், அறுத்து எரிஞ்சிட வேண்டியது தான்...”

- என்னா இது? - இப்படியா? சொல்ற முறைன்னு ஒண்ணு இருக்கு, body language, tone இதெல்லாம் எவ்வளவு முக்கியம்.

என்னோட வகுப்புல நான் பாடம் நடத்தும் போது மாணவர்களை பார்த்து கேட்டேன், “ஒரு டாக்டரை பார்க்க போனீங்கன்னா மொதொ மொதோ அவர் உங்கள பாத்து கேக்குற கேள்வி என்னா..? என்று

நான் இப்படி பதில் வரும்னு எதிர்ப்பார்த்தேன்,

 “வாங்க... உங்க ஒடம்புக்கு என்னா செய்யுது?”

“உடல்ல என்ன பிரச்சினை..?’

இப்படிலாம் வந்திருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை தான், ஆனா... பாருங்க... ஒரு பையன் சொல்றான்...”

”வாங்க... பாக்கெட்ல (அல்லது பர்ஸ்ல) எவ்ளோ காசு வச்சிருக்கீங்க...”

- அப்டின்னு கேக்குறாங்களாம்... காசு தான்.. சுபஹானல்லாஹ்...

ஆனால் நான் மேலே சொன்ன பத்து குணங்களையும் தன்னகத்தே கொண்ட மருத்துவர் ஒருத்தர் இருந்தார், அவர் பெயர் மோகன். அவர் குடும்ப டாக்டரெல்லாம் கிடையாதுங்க... எங்களது குடும்பத்தில் ஒருவர்...

இன்னை ரத்த உறவுகளே சொத்து சண்டையில் சந்தியில் நிக்கிது. ஆனால், ஒரு டாக்டருக்கும் பேஷண்டுக்கும் உள்ள ரிலேசன்ஷிப்பை தாண்டி அதாவது ஆங்கிலத்தில் bedside manners என்று சொல்வார்களே அதனையும் தாண்டி 
ஒரு இரத்த சொந்தம் மாதிரியான உறவு எங்களுடையதாக இருந்தது.

மருத்துவர் மோகன் எனது மகளின் உருவத்தை வரைகிறார்.

ஒரு நாள் தொலைபேசியில் எனது தகப்பானார் என்னை அழைத்து, “மோகன் டாக்டருக்கு ஆக்ஸிடெண்ட்ப்பா.. பயங்கர அடி... சென்னைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க..”

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, ”..சேலத்துக்கு கூட்டிட்டு போயிருக்காங்க...”

யாரை..? எங்களுக்கெல்லாம் சொந்தம் மாதிரி இருந்தவரை.. எங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒருத்தருக்கு உடல் நலமில்லை என்றால் ராத்திரி பகல் பாராது வந்திருந்து வைத்தியத்தோடு தைரியத்தையும் கொடுத்தவரை, எனது சிறிய தாயார் கேன்ஸரின் பிடியில் மரணத்தின் மடியில் இருந்த போது.. அருகில் நின்றவர்களை யாசீன் ஓத சொல்லி நினைவூட்டியவரை...”

அப்புறம் மெஸேஜ் வருது, “மோகன் டாக்டர் மவுத்..”

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

இனி, எங்கே போய் தேடுவது?

மருந்தோடு மனிதநேயத்தையும் கலந்து தரும் அந்த மாமனிதரை

என்ன ஒரு aptitude, என்ன ஒரு aptitude, என்ன ஒரு character, என்ன ஒரு commitment, என்ன ஒரு demeanour... 

ஒரு மருத்துவருக்கு limitation உள்ளது, அவரை ‘எப்படியாவது காப்பாத்துங்க...” என்று நோயுற்றவரின் சொந்தபந்தங்கள் அழுதாலும், அனைவருக்கும் நன்றாக தெரியவே செய்யும், “இவர் இறைவன் அல்ல...” என்பது.

என்றாலும், அந்த நிமிடம், சில நேரங்களின், நோயுற்றவரின் உயிர் மருத்துவரின் கையில் இருக்கும், எல்லா நோயுக்கும் மருந்துள்ளது. 

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த சதைத்துண்டு மனித இருதயமே” என்று கூறியுள்ளார்கள்.

மருத்துவர் உள்பட எந்த மனிதரானாலும் இருதயம் சீரழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல மருத்துவரை இழந்த பிறகு தான் உடலை பற்றிய கவலையே வரும். இப்போது எனக்கு வந்திருக்கிறது.

அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, எத்தனையோ ஏழை எளியவர்களிடம் காசை கராராக கேட்டு அறுத்தெடுக்காமல் இல்லாதவர்களிடம் எதுவும் வாங்காமலேயே வைத்தியம் செய்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது Patientகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உளமாற பதிவு செய்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாள் ஒரு மாதிரியாக மூச்சு விட முடியாமல் சிரமம் வந்தது, எனது தாயார் சொல்வார்கள், சின்ன வயசுலேயே கெனைப்பு மாதிரி வருமாம, அவர்கள் அப்படி தான் சொல்வார்கள், அப்படி மறுபடி வந்த போது மருத்துவர் ராஜேந்திரன் என்பவரிடம் எனது மாமா (நாகப்பட்டினம் சர் அஹ்மத் தெரு கமால் மாமா) அவர்கள் அழைத்து சென்றார்கள்.

அவர் ஏதேதோ டெஸ்ட் எடுத்தார். எல்லாம் நார்மலாக இருக்கிறதே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஓடிபோச்சு என்றார்.

நான் நேராக எங்கள் ஹஜ்ரத்திடம் ஓடினேன்,

“நாளைக்கி வா..” என்றார்கள்

ஒரு தாளில் அவர்கள் கைப்பட எழுதிய இஸ்மை (குரான் ஆயத்து) எழுதி வைத்திருந்தார்கள். (அந்த தாளை உயிருக்கும் மேலாக வைத்திருக்கிறேன்)

இதை டெய்லி ஓதி வர வேண்டும் என்றார்கள்.

வாங்கினேன்,,,, ஓதினேன்... 

வியாதி ஓடினேன் என்று அப்போது தான் ஓடிப்போனது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மருந்து சிகிச்சை சம்மந்தமான சில குரான் ஷரீஃப் வசனங்கள்:

1.

9. ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
14வது வாக்கியம்

... இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்

2.

10. ஸூரத்து யூனுஸ் (நபி) 
57வது வாக்கியம்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது

3

16. ஸூரத்துந் நஹ்ல் (தேனி)

69வது வாக்கியம்

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

4. 

17. ஸூரத்து  பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் (Israel) சந்ததிகள்)
82வது வாக்கியம்

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால், அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

5.

26. ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
80வது வாக்கியம்

“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்தினன்.”

(இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக வருகிறது)

6.

41. ஸூரத்து ஹாமீம் ஸ்ஜ்தா
44வது வாக்கியம்

நாம் இதை (குர்ஆனை) அரபில்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

இஸ்லாமிய சூஃபியிச சிகிச்சை சம்மந்தமான சில இணைப்புகள்:

http://en.wikipedia.org/wiki/Islamic_medicine

http://www.ishim.net/ishimj/2/02.pdf

http://www.mysticsaint.info/2008/07/spiritual-healing-in-islamic-sufi.html

http://www.nurmuhammad.com/Meditation/EnergyHealing/harvardhealinglecture.htm

Wednesday, December 12, 2012

உம்ராவ் ஜான் பட பாடல் வரிகள்

கய்யாம் சாபின் இசையில் உம்ராவ் ஜானின் பாடல் தெவிட்டாத தேன்...

இந்த பாடலை பாடியவர் தாலாத் அஜிஸ்

http://en.wikipedia.org/wiki/Talat_Aziz




zindagi jab bhi teri bazm mein laati hai hamen
ye zamin chand se behatar nazar aati hai hamen
வாழ்க்கை என்னை உனதருகில் கொண்டு வரும் போது
இந்த பூமி அந்த நிலவை விட தெளிவாக தெரிகிறது
surkh phulon se mahak uthati hain dil ki rahen
din dhale yun teri aawaz bulaati hai hamen
இதயத்தின் பாதையில் கருஞ்சிவப்பு மலர்கள் மலர்கின்றன
இரவுகளின் முடிவின் பொழுதில் உனது குரல் உனதருகில் எனை அழைக்கிறது
yaad teri kabhi dastak kabhi saragoshi se
raat ke pichhale prahar roz jagaati hai hamen
உனது நினைவுகள் சில நேரங்களில் கரவொலி சத்தமாய் காதில் ஒலிக்கிறது சில சமயங்களில் மௌனமாய் கிசுகிசுக்கிறது
ஒவ்வொரு நாளும், இரவின் இறுதி நிமிடங்கள் என்னை தட்டி எழுப்புகிறது
har mulaqat ka anjaam judai kyun hai
ab to har vaqt yahi baat satati hai hamen
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் எப்படி இந்த பிரிவு வந்து அட்டையாய் ஒட்டிக் கொள்கிறது
இந்த பிரிவெனும் துயரம் மட்டும் என்னை தொடர்ச்சியாய் விடாமல் கடுமையான நோவினை செய்கிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------

பாவப்பட்ட உம்ராவ் ஜான் அதா எனும் பெண் ஒரு செல்வந்தனை உண்மையான நேசத்துடன் காதலித்தாள், ஒரு கொலையை செய்து விட்டு தலைமறைவான அவனை நீண்ட நாட்களுக்கு பிறகு தான் சந்திக்க நேர்கிறது, அதுவும் அவனது திருமண கோலத்தில், அவன் முன்னால் கவிஞரும் பாடகியுமான அவள் பாடுகிறாள். அவளின் சோகம் நம்மிலும் தொற்றிக் கொள்கிறது

அவளுக்காக பாடுபவர் ஆஷா போஸ்லே...


justajoo jis kee thee us ko to naa paayaa hum ne 
is bahaane se magar dekh lee duniyaan hum ne 

நான் தேடிக் கொண்டிருந்த ஒன்று
எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை
என் மனதிடம் ஏதொ சாக்கு போக்கு சொல்லி தான்

இவ்வுலகிலிருந்து பிரியாதிருக்க உயிரை கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்

tujko rusawaa naa kiyaa khud bhee pashemaan na huye 

ishk kee rasm ko is tarah nibhaayaa hum ne 

நான் உன்னை ஒருபோதும் மதிப்பிழக்க செய்ய மாட்டேன், நான் எனக்குள் வருத்தங்களை புதைத்துக் கொள்கிறேன்.                                                                      அப்படி புதைத்து கொள்வதன் மூலம், நான் நமது காதலை கண்ணியம் செய்கிறேன்.
kab milee thee kahaa bichhadee thee humei yaad nahee 
jindagi tuz ko to bas khwaab mein dekhaa hum ne 

எனக்கு சரியாக நினைவிலில்லை - எப்போது சந்தித்தோம் - எப்போது பிரிந்தோம் - எனக்கு நினைவிலில்லை நான் தேடிய உன்னுடனான அந்த வாழ்க்கையை என் கனவில் மட்டுமே பிடித்து வைத்திருக்கிறேன்.
aye adaa aaur sunaaye bhee to kyaa haal apanaa 
umar kaa lanbaa safar tay kiyaa tanahaa hum ne 

நான் எனது நிலையை பற்றி எப்படி எடுத்துரைப்பேன்? - நான் என்னோடு சமரசம் செய்து கொண்டு விட்டேன் - இனி எனது வாழ்க்கை முழுவதும் தனியாகவே பயணம் செய்வதென்று 

Tuesday, December 11, 2012

ஹுஜுர் இஸ் கதர் பி - மாசும் இந்தி பட குல்ஜார் சாபின் பாடல்

இது கதைப்படி பார்ட்டியில் பாடும் பாடல்

அழகான கஜல்

செவிக்கு இனிமை சேர்ப்பவர்கள்: சுரேஷ் வாட்கரும் புபிந்தர் சிங்கும்



Hujoor is kadar bhee naa itaraake chaliye
Khule aam aanchal naa laharaa ke chaliye
ஓ மங்கையே.!
இவ்வளவு அலட்சியமாக
நீ செல்லலாகாது..!
உன் தலைதுண்டு (ஸ்கார்ப்)
காற்றில் விலகி ஓடுவதறியாமல்
இவ்வளவு மிடுக்காக
நீ நடக்கலாகாது..!
Koee manachalaa agar pakad legaa aanchal
Jaraa sochiye aap kyaa kijeeyegaa
Lagaa de agar, badh ke julfon mein kaliyaan
To kyaa apanee julfe zatak dijeeyegaa
ஒரு வம்பன்
உன் துப்பட்டாவை
பிடித்திழுத்தால்
நீ என்செய்வாய்..?
கன நேரம்
யோசித்து பார்..!
பருவ மங்கையே..!
உன் கூந்தலில்
ஒரு வம்பன்
பூவை வைத்து
சென்றால்
நீ தூர எரிந்து விடு..?
Badee dilanashee hain haseen kee ye ladeeyaan
Ye motee magar yoo naa bikharaayaa kije
Udaa ke naa le jaaye zonkaa hawaa kaa
Lachakataa badan yoo naa laharaayaa kije
வழியில் வருவோரிடமெல்லாம்
சிரித்து வைத்து
உன் விலைமதிப்பற்ற
சிரிப்பை வீணாக்கிவிடாதே
ஒரு புயல்காற்று 
உன்னை அடித்து
சென்று விடுமென்று
அஞ்சுகிறேன்
ஆதலால் நவீன மங்கையே
அலட்சிய நடை 
வேண்டாம்

Bahot khubasoorat hain, har baat lekin
Agar dil bhee hotaa, to kyaa baat hotee
Likhee jaatee fir daastaan-ye-mohabbat
Vek afasaane jaisee mulaakaat hotee
வாய்பேச்சு அனைத்தும்
அழகாய் தான் இருக்கிறது
ஆனால்
அழகாய் இருக்க வேண்டிய
ஒன்றுண்டு
அது தான் இதயம்
(அது அழகாய் இருந்தால் தான் அனைத்தும் அழகாய் இருக்கும், அப்படி அழகாய் இருக்கும் பட்சத்தில்)
நம் காதல்கதைகள்
தொடரும்
இவ்வளவு ஏன்..?
நம் ஒரு சந்திப்பின்
காதல்கதை கூட
உலா வரும்
நாளைய உலகில்...


Saturday, December 08, 2012

ஹஜ்ரத் வீடு - இரண்டாம் பகுதி

தொடர்புடையவை:

ஹஜ்ரத் வீடு - முதல் பகுதி இங்கே:

http://nagoreismail786.blogspot.com/2012/03/blog-post_16.html 

---------------------------------------------------------------------------------------------------------------

என்னுடைய சிறுவயதில் நாகூர் வஹ்ஹாப் சாப் பள்ளியில் (தெருபள்ளி தெரு குளத்திற்கு எதிரே) உள்ள மதரஸாவில் அரபி பாடம் ஓத கற்றுத் தெரிவதற்கு சேர்த்து விட்டார்கள்.

முதல் நாள் ‘இக்ர.. (ஓதுவீராக..!)’ என தொடங்கும் வசனத்தை எனக்கு சாபு ஓத சொல்லி கொடுத்தார்கள். 

தொடர்ச்சியாக ஐந்து கலிமாவும் சொல்லி கொடுத்தார்கள்.

லா இலாஹா இல்லல்லாஹ்.. முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்..

அல்லாஹ்வைத் தவிர வேறு அல்லாஹ் இல்லை... முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.


நான் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் அப்படியே திருப்பி சொன்னேன்.

அப்போது அந்த குழந்தை பருவத்தில் எந்த மத குடும்ப சூழலில் நான் பிறந்திருந்தாலும் மேலே சொன்ன கலிமா ஷஹாதாவிற்கு பதிலாக வேறு ஒரு வாசகத்தை சொல்லி கொடுக்கப்பட்டிருந்தாலும் நான் அதனையே பின்பற்றி சொல்லியிருக்கத் தான் செய்வேன்.

ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ம்மாவுக்கு பயந்தோ வாப்பாவுக்கு பயந்தோ அல்லது ஓதி கொடுக்கின்ற சாபுவுக்கு பயந்தோ அப்படியே பின்பற்றி கலிமாவை ஒப்பித்து கொண்டிருந்தேன்.

அதாவது முறைப்படி முஸ்லிமாகியிருந்தேன். சமுதாயத்தில் என்னை நானே முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் உண்மையான நம்பிக்கை என் மனதுக்குள் நுழையவில்லை. குரான் ஷரீஃபில் வரும் வாக்கியத்தை கவனிக்கலாம்:

குரான் ஷரீஃப் - 49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) - 14 வது வாக்கியம்

“நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம்” என்று நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள். “நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் இஸ்லாத்தை தழுவினோம்” என்று (வேண்டுமானால்) கூறுங்கள்”, (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை; .............”

மேலே உள்ள வாக்கியத்தின் படி ‘முஸ்லிமாக இருப்பதற்கும்’ ”ஈமானுடன்  இருப்பதற்கும்” நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

முஸ்லிமாக இருப்பதை ஒரு வீட்டிற்குள் செல்வதை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு அந்த வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு அறைக்குள் செல்வதை குறிக்கும்.

முஸ்லிமாக இருப்பதற்கு வக்து தவறாமல் குனிந்து எழுந்து அவசரகதியில் தொழுகையை கடனாக கழித்து விட வேண்டுமென்றால் ஈமான்தாரியாக இருப்பதற்கு உடலோடு சேர்த்து உள்ளத்தையும் ரூஹையும் வளைக்க கடமையாற்றியாக வேண்டும்.

முஸ்லிமாக இருப்பது வெளிப்படையானவற்றை குறிக்கும் என்றால் ஈமான்தாரியாக இருப்பது மறைவானவற்றை குறிக்கும், ஏனெனில் அல்லாஹ் குரான் ஷரீஃபில் “..அவர்கள் இதயங்களில் நுழையவில்லை..” என்று சொல்கிறான். 

இதயத்தில் நுழைவது என்பது வெளிப்படையாக தெரியக்கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சரி, ஈமான் கொள்வது என்றால், எதை ஈமான் கொள்வது? எப்படி ஈமான் கொள்வது?

இந்த கட்டத்தில் குரான் ஷரீஃபில் வரும் இன்னொரு வாக்கியத்தையும் நினைவில் கொள்வது நன்மை பயக்கலாம்.

குரான் ஷரீஃப் - 2 ஸூரத்துல்  பகரா (பசு மாடு) - 2 மற்றும் 3 வது வாக்கியங்கள்

2 - அது திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. முத்தகீன்களுக்கு நேர்வழிகாட்டியாகும்.

3 - (முத்தகீன்களான) அவர்கள், மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள், ...............”

மேலே சொன்ன 2வது வாக்கியத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் “இது  திருவேதமாகும்...” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும்,  ’இது’ என்றால் ’இந்த குரான் ஷரீஃப்’ என்று பொருள்படும் படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், 

ஆனால் ‘இது’ என்ற வார்த்தைக்கு அரபியில் ‘ஹாதல்” என்ற வார்த்தை தான் வர வேண்டும். அப்படி வராமல் ‘தாலிகல்” என்ற வார்த்தை வந்திருக்கிறது, தாலிகல் என்ற வார்த்தைக்கு ‘அந்த’ என்பது தான் சரியான நேரடி பொருளாகும்.

ஆனால் ‘அந்த’ என்று எந்த மறைவான வேதநூலை பற்றி இறைவன் சொல்கிறான். இது ஒரு கேள்வி?

அடுத்து ‘முத்தகீன்கள்” என்ற அரபி வார்த்தை.

 ’தக்வா உடையவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்க பயன்படுகிறது. ‘தக்வா’ என்ற வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் ‘பயபக்தியுடைவர்கள்’ என்று தமிழ்சொல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் ‘தக்வா’ என்றால் ஆங்கிலத்தில் self-awareness,  the act of shielding/protecting oneself, (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Taqwa).

’விழித்திரு’ என்று சொல்வார்கள் அல்லவா, விழித்திரு என்றால் ”தூங்காமல் ராத்திரி பூரா கண்ணு முழிச்சிகிட்டு இரிக்கிறது” என்று அர்த்தமல்ல, எப்போதும் சுய கவனிப்போடு, சுய நிதானத்தோடு, எப்போதும் தயாராக இருப்பது, புலன்களின் உணர்வுகளோடு இருப்பது இப்படி குறிக்கும்.

உங்கள் விரல் அசைவது, உங்கள் கண்ணில் வரும் கருப்பு விழி அசைவதிலிருந்து அது எதை பார்த்துக் கொண்டிருக்கிறது, அதில் எந்த பொருள்கள் எல்லாம் கண்ணில் தெரிந்துக் கொண்டிருக்கிறது என்பது உள்பட உங்களை பற்றிய ஒரு closed observationல் இருப்பதை குறிக்கும்.

அதாவது எப்போதும் ‘தன்னை அறிந்த நிலை’யில் இருப்பதை ’தக்வா’ எனும் வார்த்தை குறிக்கும் என்றால் ‘தன்னை அறிந்த நிலையில் இருப்பவர்களை’ ‘முத்தகீன்கள்’ என்று குறிக்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீது ஒன்று நினைவிற்கு கட்டாயம் வந்தாக வேண்டும்.

’தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ 

(-எல்லாம் ஒரு சர்க்கிளுக்கு குள்ளேயே சுற்றி வருவதை உணர்ந்து கொள்ளலாம்.)

இது வரை:

’அந்த திருவேதம்’ என்றால் எது?’
- இதற்கு குரான் ஷரீஃப் என்று பொருள் தர்ஜூமாவில் கிடைத்தாலும் அது தான் சரியானது என்று உறுதியிட்டு கூறிவிட முடியாது.

இதை பற்றி மிக அற்புதமாக இங்கே சொல்லாடப்பட்டிருக்கிறது: http://pirapanjakkudil.blogspot.sg/2011/08/blog-post_27.html

’அந்த திருவேதம் யாருக்கு வழி காட்டுகிறது?’
-Self-awarenessஓடு இருந்து தன்னை காத்து கொள்கின்றவர்களுக்கு

இப்போது அடுத்த கேள்வி - 

“அப்படி Self-awareness சுயநினைவோடு இருப்பவர்களின் குணாதிசியங்கள் என்ன?”
- அவர்களில் முதன்மையான குணாதிசியமானது ‘அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்’

’யுமினூன’ என்ற அரபி வார்த்தை ஈமான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. அதாவது ‘மறைவான வற்றின் மீது ஈமான் கொண்டிருப்பார்கள்’

இப்போது முதலில் மேலே சொன்ன ‘ஹுஜுராத்’ எனும் அத்தியாயத்தில் வந்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்போம்.

“...ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் (நம்பிக்கை) நுழையவில்லை..”

நம்பிக்கை என்றால் என்ன?

உதாரணமாக, ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி ஒரு நண்பர் சொன்னார், “இன்னும் கொஞ்ச நாளில் மொபைல் போனிலேயே இண்டர்நெட் பார்ப்பார்கள்..” என்று

அதற்கு இன்னொரு நண்பர் சொன்னார், “முட்டாளாய்யா நீ... எவனாவது மவுஸை போனில் கனெக்ட் பண்ணி ஊரெல்லாம் எடுத்துகிட்டு போவானாய்யா.. அதெல்லாம் நடக்குற காரியமா?” என்றார்

ஆனால் இன்றைக்கு காலம் ‘யார் முட்டாள்’ என்று காட்டி கொடுத்து விட்டது.

முதலாம் நண்பர் வைத்திருந்தது அவர் புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பினார்.

ஆனால் இன்றைக்கு மொபைல் போனில் இண்டர்நெட் என்பது மறைவான ஒன்றல்ல.

இப்போது ஒருவர் வந்து, “மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம்’ என்றால் அதை ஒருவர் ஏற்றுக் கொள்வதை நம்பிக்கை என்று சொல்ல முடியாது.

வெளிப்படையான ஒன்றை நம்புவது என்பது தேவையில்லாத ஒன்று.

மறைவான ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவைப்படுகிறது.

அப்படியா, அப்போ, மறைவான வற்றின் மீது நம்பிக்கை கொள்வது விளங்குகிறது, ஆனால் ’மறைவானவை’ என்றால் என்ன?

இன்னைக்கு மறைவான ஒன்று காலப்போக்கில் வெளிப்படையாகக் கூடிய ஒன்ரையா இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, உதாரணமாக மொபைல் போனில் இண்டர்நெட், etc, etc,..?

எந்த மறைவானவற்றை பற்றி இந்த இடத்தில் குரான் ஷரீஃப் குறிக்கிறது.

’மறைவான’ என்ற வார்த்தைக்கு ‘அல்-கைப்’ என்ற வார்த்தை பயன்படுகிறது.

அதாவது, ‘அல்-கைப்’ என்றால் அது இறைவன் தான்.

ஏனெனில் ஸுரத்துல் பகறாவில் 3 (தொடர்ச்சி), 4 மற்றும் 5 என தொடரும் வசனங்களில் நம்பிக்கை வைக்க வேண்டிய மற்றவைகளை பற்றி குறிப்பிடும் போது அருளப்பட்ட வேதங்கள், மறுமை உள்பட இன்றைக்கு பார்க்க முடியாத மறைவான ஒவ்வொன்றும் தனியே குறிப்பிடப்பட்டே உள்ளது, அப்போது தனித்தனியாக குறிப்பிடப்படாத ஒன்றான ஒன்றை பொதுவாக ‘அல்-கைப்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது ‘அல்-கைப்’ (unseen)  என்பது இறைவனையே குறிக்கும் என்பது சூஃபியாக்களின் கருத்தாகும்.

இதை தான் பெருமானார் (ஸல்) அவர்களும் ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்றார்கள்.

சுயநினைவோடு இருக்கும் இவர்கள் மறைவான இறைவன் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

ஆனால் இறைவன் மறைவாக தான் இருக்கின்றானா?

குரான் ஷரீஃப் - ஸூரத்துல் ஹதீத் (இரும்பு) - 4 வது வாக்கியம்

”..... நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்...”

ரொம்ப அலர்ட்டாக இருக்க வேண்டும். நீங்கள் இருக்கின்ற இடத்தில் எல்லாம் இறைவனும் இருக்கின்றான். உதாரணமா, வகுப்பில் வாத்தியார், ‘இஸ்மாயில்’ - இஸ்மாயிலாகிய நான், ‘உள்ளேன் அய்யா’ என்று விளித்தால் அவன் என்னுடனே சேர்ந்து ‘உள்ளேன் அய்யா’வாக தான் இருக்கிறான்.

ஆனால் இந்த ‘உள்ளேன் அய்யா’வை நம்ப வேண்டும். அப்படி வரும் நம்பிக்கைக்கு பல படித்தரங்கள் உண்டு.

என் நண்பர் மொபைல் போன் இண்டர் நெட் சொன்னேன் அல்லவா, அந்த உதாரணத்தோடு ஒப்பிடுவோம்.

இரண்டாம் நண்பர் மறைவான வற்றை நம்பவில்லை, எப்படி?

மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கலாம் என்ற செய்தி பிற்காலத்தில் நிறைவேறக் கூடிய ஆனால் அதே சமயத்தில் உரையாடல் நடந்த அந்த காலகட்டத்தில் மறைவாக இருந்த செய்தி. அதை இரண்டாம் நண்பர் ஏற்கவில்லை.

முதலாம் நண்பர் மறைவானவற்றை நம்பினார், எப்படி?

‘மொபைல் போனில் இண்டர்நெட் வராத போதே, அவ்வாறு வரும் என்று நம்பினார்.

ஆனால் மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்க கூடிய இந்த காலகட்டத்தில் இரண்டு நண்பர்களுமே நம்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது நம்பிக்கை கூட அல்ல, ஏனெனில் முன்னர் சொன்னது போல் மறைவானவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தான் நம்பிக்கை தேவை. இப்போது இரண்டு நண்பர்களுமே  நம்பவில்லை, அனுபவிக்கிறார்கள்.

ஆக,

1. மறைவானவற்றை நம்ப மறுப்பது ஒரு நிலை

2. மறைவானவற்றை ஒப்புக்கொள்கிறேன் என்று கேள்வி கேட்காமல் சொல்வது அடுத்த நிலை - இது தான் நான் குழந்தையில் கலிமா சொன்ன நிலை - இது தான் நான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் நுழைந்து விட்ட நிலை

3. மறைவானவற்றை அதாவது முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை நம்புவது அடுத்த நிலை - இது தான் முஸ்லிம் எனும் வீட்டிற்குள் இருக்கும் ஈமான் எனும் அறைக்குள் நுழையும் நிலை

முதன்மையாக அல்-கைப் எனும் இறைவனை அதாவது மறைவானவற்றை நம்புபவர்கள் தான் முத்தகீன்களான சுய உணர்வோடு இருப்பவர்கள்.

இப்படி சுய உணர்வோடு இருப்பவர்களான அல்-கைபை நம்புபவர்களுக்கு தான் ’அந்த’ வேதநூல் நேர்வழியை காட்டுகிறது.

அப்படி காட்டியதோடு முடிவடையவில்லை, வழிகாட்டுதல் என்பது ஊர் போய் சேர்ந்து விடுவது ஆகாது. அந்த வழிகாட்டுதலோடு சென்றால்... அடுத்த நிலை வரும்...

4. மறைவானவற்றைஅல்-கைபை நம்புவதில் இருந்து உணர்வுப்பூர்வமாக உள்ளுணர்வுகளால் அனுபவிப்பது என்பதே அந்த அதற்கும் அடுத்து இருக்கும் மேலான நிலை - இது தான் சூஃபியாக்களின் நிலை.

நான் எனக்கு குழந்தை பருவத்தில் ஓதி கொடுத்த வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்து சொன்ன போது அதை திரும்ப சொல்லி ஒப்புக் கொண்டேன். அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணின் படி இரண்டாவது நிலையில் இருந்தேன், ஆனால் எங்கள் ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது தான் ஈமான் எனும் வீட்டிற்குள்ளேயே நுழைந்தேன்.

ஆனால் எங்கள் ஹஜ்ரத் அவர்கள் இருந்ததோ......
எனக்கும் அந்த நிலைக்கு உயர ஆசை எனும் துவா பிறந்தது....

Sunday, December 02, 2012

மகேந்திரன் படங்கள் - பூட்டாத பூட்டுக்கள்

(படிச்சு கிடிச்சு ஏச ஆரம்பிச்சுடுதாங்க... வார்னிங்: பெரிய பதிவு)

மகேந்திரன் படங்கள் என்றதும் முதலில் மனதில் தட்டுப்படுவது உதிரிப்பூக்கள் அல்லது முள்ளும் மலருமாகத் தான் இருக்கும். ஆனால் எனக்கு தட்டுப்படுவது “பூட்டாத பூட்டுக்கள்” தான்.

அதற்காக ’உதிரிப்பூக்களோ” முள்ளும் மலருமோ” பிடிக்காத படமென்று ஆகிவிடாது.

உதிரிப்பூக்களில் எனக்கு பிடித்த ஒரு அற்புதமான இரு காட்சிகள் ஒன்று உள்ளது,

மூத்த மருமகன் மாமனாருக்கு கடன் கொடுத்திருப்பார், அந்த கடனை திருப்பி தர முடியாத சூழலில் திருமணமாகாத இன்னொரு மகளோடு வசிக்கும் மாமனாரிடம், ”மூத்த மகள் நோயாளியாகி விட்டாள், அவளோடு தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும் - கடனை உங்களால் திருப்பி கட்ட முடியாது என்றும் - ஆதலால் மனைவியின் தங்கையை எனக்கே கட்டி கொடுங்கள் - அக்காள் தங்கைகள் இரண்டு பேரும் ஒத்துமையாக இருப்பார்கள் என்று பெண் கேட்பார்.

அப்போது துக்கமும் கையாலாகாத தனமும் கட்டி போட்டிருக்க ஆழ்ந்த நிலையில் இருக்கும் மாமனாரிடம், “என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க..” என்பார்

மாமனார், “வேற ஏதாவது பேசலாமே”

மருமகன், “நான் இத பேசத்தான் வந்தேன்..”

மாமனார், “ஸ்கூல் எப்படி நடக்குது..”

மருமகன், “நீங்க இன்னும் பதில் சொல்லலையே..”

மாமனார், “இதுக்கு லட்சுமியும் செண்பகமும் சம்மதிக்க மாட்டாங்க..”

மருமகன், “நீங்க உங்க நிலமைய எடுத்து சொல்லி சம்மதிக்க வைங்க..”

இரு பெண்களின் தந்தை, “நான் அவங்களுக்கு அப்பாவாவே இருக்கேன், புரோக்கரா இருக்க விரும்பலை..”

மருமகன், “அப்போ என்ன சொல்றீங்க..” மாமனார் “வெளியே போ..” என்பதை சிம்பாலிக்காக நாற்காலியை விட்டு எழுவதன் மூலமாக சொல்வார், உடனே “நீங்க உக்காருங்க.. நான் போயிக்கிறேன்..” என்பது போல் கையை பிடிப்பார், பிறகு சென்று விடுவார், உள்ளே இருக்கும் இரண்டாவது மகளான செண்பகம் வந்து அப்பாவிடம், “அவர் என்னப்பா பேசிட்டு போனாரு..” என்பார்.

அப்பா, “நாங்க பேசுனது எதுவும் உன் காதுல விழலயாமா..?”

மகள் தலையை சொறிந்து கொண்டே ‘ம்ஹூம்’ என்பார்.

அப்பா சொல்வார், “நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்..” என்று

இன்னொரு காட்சியின் இதே மருமகன் இதே மாமனாரிடம் இதே கேள்வியை கேட்டு வருவார், ஆனால் இந்த முறை அமைதியாக அல்ல, மிரட்டலாக, “பஞ்சாயத்தை கூட்டி ஊர் கூட்டத்துக்கு முன்னால எங் பொஞ்சாதி எனக்கு துரோகம் பண்றான்னு ஆதாரத்தோட நிருபிப்பேன், மரியாதையா எனக்கே செண்பகத்தை கட்டி வைங்க” என்று இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது இந்த முறை அதிர்ஷ்டம் இல்லாத அந்த மகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பாள், அவள் தனது தகப்பனாரிடம் வந்து,

“அப்பா இவருக்கு நான் தானேப்பா வேணும், நான் இந்த கல்யாணத்துக்கு தயாரா இருக்கேன்” என்பார்

தந்தை மகள் பக்கம் திரும்பி, “சாப்டியாம்மா...”

தலை குனிந்திருந்த மகள் புரியாமல் அப்பாவை பார்க்கிறாள், அப்பா தொடர்கிறார்,

“சாப்டியா.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.. போ.. போம்மா.. போ..”

மகேந்திரனின் காட்சி அமைப்பில் இருக்கும் நுணுக்கத்துக்கு மேலே சொன்னது கடலில் ஒரு துளி தான். முன்னுரையாக எழுதினாலே முன்னூறு பக்கத்தை தாண்டிவிடும்.

மிக அற்புதமான காட்சிகளை கொண்டிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் என்னவோ பூட்டாத பூட்டுக்கள் தான்.

பூட்டு என்பது எதற்காக உள்ளது? பூட்டி வைப்பதற்காக தான். அது தான் இண்டெண்டெண்ட் பர்பஸ்.  ஒரு பூட்டு என்று ஒன்று இருந்தால் அதற்குறிய சாவி என்று ஒன்று இருக்க வேண்டும், அதற்குறிய சாவி இருக்கிறது பூட்டும் இருக்கிறது, ஆனாலும் அது பூட்டவில்லை.

பூட்டு என்பது மனைவி
சாவி என்பது கணவன்
பூட்டுவது என்பது மணவாழ்க்கை
இங்கே இவர்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லை..
அதாவது பூட்டு பூட்டவில்லை
அது தான்
பூட்டாத பூட்டுக்கள்..

(இங்கே பூட்டுக்கள்.. என்று பன்மையில் வந்திருந்தாலும்.. ஒரு பூட்டை பற்றி தான் சொல்லப்படுகிறது)

இனி பூட்டாத பூட்டுக்களுக்கு வருவோம்...

நன்றி காட்டுபுதூர் கிராம மக்களுக்கு... என்று தொடங்குகிறது...

இசைஞானி ‘மாமன் மச்சானை..” தாலாட்டாய் ஒலிக்க விடுகிறார்.

அந்த பெண் இன்னொரு பெண் துணையுடன் நடுநிசியில் கையில் அரிக்கண் விளக்கேந்தி சாமியாரிடம் வருகிறாள். சாமியார் அக்னி குண்டத்தை வளர்த்து, அவருக்கு உதித்ததை இப்படி சொல்கிறார்,

“கல்யாணமான உனக்கு என்ன குறைங்குறது ஈஸ்வரனுக்கு தெரியும், ஏழு வருச தாம்பத்யத்துல இன்னும் நீ தாயாகலை..இதுக்கு எந்த தோஷமும் காரணமில்லை.. பயப்படாதே.. நேரம் வரும்..”

சாமியாரின் உத்திரவின் பேரில் கடுமையான விரதமும், உடல் வறுத்தும் வேண்டுதலும் செய்வதை பார்த்த அவளது கணவன் - தனக்கு குழந்தை இல்லை என்பதை விட மனைவியின் வேதனையை பற்றி கவலையுறுகிறான், தனது கூட்டாளியான ஊழியரிடம், “டேய், எல்லாரையும் போல தனக்கு குழந்தை இல்லைன்னு கன்னியம்மா படுற வேதனை இருக்கே..” சொல்லி புலம்புகிறான்.

அவனது கூட்டாளி சொல்கிறார், “இந்த பாரு சொன்னா கோச்சுக்காதே... உன்ன்னால.. ஒன் பொண்டாட்டி புள்ளை பெத்துக்க போறதுல்ல.. இத அந்த பொண்ணுகிட்ட சொல்லாம ஏமாத்திகிட்டே இருக்கிறே.. பாவம்பா.. அந்த பொண்ணு..”

உப்பிலி சுடுகின்ற உண்மையை கேட்க சகியாமல், “சும்மா இர்ரா நாயே..” என்கிறான்.

“என்னய ஏண்டா கோச்சுக்குறே... ஒன்னால புள்ள கொடுக்க முடியாதுன்னு தானே ரொம்ப பொண்ணுங்க ஒன் பின்னாடி சுத்துறாளுங்க.. எனக்கு தெரியாதா..” என்கிறான்.

கணவனான அவன் தான் உப்புலி.. ஊரில் ஒரு டீக்கடை வைத்திருக்கிறான். தனது மனைவியை ”வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்பலவே..” பாடி காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்கிறான்.

மகிழ்ச்சியான ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டமான குழந்தை செல்வம் இல்லாததால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் கணவனுக்கு மனைவிக்கு இடையே இடைவெளி நீளுகிறது.

உப்பிலி ஒரு முறை தனது நண்பன் ஒருவனின் மகனை தான் வளர்க்க போவதாகவும், தாயில்லாத புள்ளை என்றும் சொல்லி அழைத்து வருகிறான்.

கன்னியம்மா, “என்னை ஒரு வார்த்தை கேக்காம நீங்க ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க..” கோபப்படுகிறாள்.

“அதனால இப்ப என்ன நட்டம் வந்துடுச்சு...” உப்புலி கொப்புளிக்கிறான்..

அழைத்துட்டு வந்த புள்ளையோ மகா கள்ளனாக இருக்கவே - வீட்டு பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்க்கிறான் - காதை திருகி தலை முழுகுகிறான்.

அவன் பிறந்த குழந்தையை எடுத்து வரவில்லை,

அவனது தம்பியின் மனைவி கேட்கிறாள், “ஏன்ப்பா... 20 வயசுல ஒரு பையனை கொண்ணாந்து இருக்க கூடாது..”

உப்பிலிக்கி கூட பொறந்த ஒரு பொறப்பு இருக்கு.. வழக்கம் போல சொத்து சண்டையில் சொந்தம் இடம் தெரியாமல் ஓடி ஒலிந்து விட்டது.

அண்ணன் தம்பிக்கு தான் சண்டை, தம்பியின் மனைவி இந்த சண்டையை எல்லாம் பொருட்படுத்தாமல் சொந்தம் என்ற உரிமையோடும் அண்டை வீடு என்ற உணர்வோடும் குடும்பத்தோடு கலந்து உறவாடுகிறார்.

உப்பிலி வீட்டில் வேலை பார்க்கும் வேலம்மா தனது கண்ணான கணவனின் கண் ஆபரேஷனுக்காக தெரிந்த மனிதர்களிடம் கடனாய் வாங்கி கடன் காசை திருப்பி அடைக்க முடியாமல் கடை தெருக்கு போறது, சாமான்வோ வாங்கி கொடுக்குறது, துணி துவைச்சு கொடுக்குறது இப்படியாக வேலை செய்து கடனை அடைத்து வருகிறாள்.

உப்பிலி டீக்கடை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பிரம்மச்சாரியான மூர்த்தி என்பவருக்கு எல்லா வேலையும் சாப்பாடு ஆக்கி போட்டு மாதம் நூறு ரூபாயும் வாங்கி வருகிறான்.

மூர்த்தி வந்து தனது அலுவலகத்தில் இன்னொருவர் வரப் போகிறார், அவருக்கும் சாப்பாடு சேர்த்து சமைச்சு போடணும் என்று கேட்கவே, உப்பிலி சம்மதிக்கிறார்.

மூர்த்தியின் நண்பனாக ஒரு தரித்திரம் வரப்போவதை உப்பிலி அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

இதற்கிடையில் கன்னியம்மா வாந்தி எடுக்கவே.. பிள்ளை உண்டாகியிருக்கிறாள் என்று நினைத்து மருத்துவரிடம் வண்டியேற்றி அழைத்து செல்வார் உப்பிலி.

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

என்று சென்ற போது இருந்த மனதில் இருந்த மகிழ்ச்சி திரும்ப வரும் போது மருத்துவரின் இடிசொல் தலையில் இறங்கி மறைந்து போயிருந்தது.

வண்டி கூடவே திரும்ப நடக்கிறான் உப்பிலி, மருத்துவரின் இடிசொல், “உன்னை பாத்தா பரிதாபமா இருக்குது.. ஒன் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா என்ன டானிக் கொடுக்குறதுன்னு கேக்குறியே.. அவள் கர்ப்பமா இருக்கான்ன்னு யாரு உனக்கு சொன்னா......
உப்பிலி கன்னியம்மா என்னைக்கும் தாயாக ஆக முடியாது.. இது கன்னியம்மாட குற்றமல்ல.. உன்னோட குற்றம்.. இத நான் மூணு வருசத்துக்கு முன்னாடியே ஒன்கிட்டே சொல்லியிருக்கேன்.. எல்லாத்தையும் மறந்துட்டியா..”

கன்னியம்மா மருத்துவரிடம் சொல்கிறாள், “நான் அணுஷ்டிக்காத விரதமில்லை பண்ணாத பூஜையில்லை.. நான் கும்புடுற தெய்வம் என்னை என்னிக்கும் கைவிடாது டாக்டர்..”

டாக்டர் சொல்கிறார், “விரதத்துனாலயும்.. பூஜையினாலயும் குழந்த பெத்துக்க முடியும்னா.. உலகத்துல யாரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியமில்லை..”

அன்றைய இரவு அவர்களின் தாம்பத்ய சந்தோஷமில்லாத வேதனையை கூட்டுவதாக அமைகிறது.

இந்த கட்டத்தில் தான் மூர்த்தியின் நண்பன் தியாகு உப்பிலி வீட்டில் சாப்பிட வருகிறான். ஒரு பெண் விடாமல் ரசிப்பதோடு இது எப்படி சரிபடுமா? படியுமா? என்கிற ரீதியில் பொறுக்கித்தனம் நிறைந்த படித்தவன்.

உப்பிலி வீட்டில் சாப்பிட வந்திருக்கும் போது, உப்பிலியின் வீட்டில் வேலை செய்யும் வேலம்மாவை பார்த்து அவளுக்கு தெரியாத ஆங்கிலத்தில், ‘வாவ்... ஷி இள் ரியலி டெர்ரிஃபிக்.. செக்ஸ் பாம்... ஐ ரியலி காம்ப்ளக்ஸ் ஷி இஸ் மேரிட்.. ஹெர் ஹஸ்பண்ட் இஸ் எ லக்கி கை..” என்று ஆங்கிலத்தில் உளர..

அதை சலனமில்லாமல் கேட்டு கொண்டிருந்த வேலம்மா அவளது குழந்தையை கொஞ்சுவது போல், “டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்.. ஹவ் ஐ வண்டர் வாட் யு ஆர்.. அப் அபவ் த வேர்ட் ஸோ ஹய்.. லைக் அ டயமண்ட் இன் த ஸ்கை..” என்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் பேசும் தொனியில் பேசுவதோடு “...ஸ்கை..” என்று அந்த ரைம்ஸை முடிக்கும் போது ”மேலே அண்ணாந்து பாரு..” என்று வீட்டின் மேற்கூறையை தியாகுக்கு உணர்த்துகிறாள்.

தியாகு திடுக்கிட்டு போய் மேலே கூரையை பார்க்கிறார். அங்கே விளக்குமாறு அவனை பார்த்து ஒரு கேவல பார்வை பார்த்து கொண்டு திமிறாக இருக்கிறது.

தியாகு இலையை மடிக்கிறான்.

வேலம்மா குழந்தையை தூக்கி கொண்டே, “என்ன சார்.. போதுமா... இன்னும் வேணுமா?” என்று கேக்க

மூர்த்தி பயந்து போய், “போதும் போதும்..எல்லாம் போதும்” என்று துண்டையும் துணியையும் காணாமல் தேடுகிறான்

மூர்த்தி தியாகுவிடம், “வேலம்மா படிச்சிருக்கு.. இங்கிலிஷ்லாம் தெரியும்.. பர்மால நல்லா வாழ்ந்த குடும்பம்.. புருஷனுக்கு கண்ணு போய்.. சொத்து போய்..” என்று வேலம்மாவின் சோக கீதத்தை சொல்லி காட்டுவதோடு அவனை ஒழுங்காக இருக்குமாறு எச்சரிக்கவும் செய்கிறான்.

உப்பிலியின் மாமானார் அங்கே வர உப்பிலிக்கி குழந்தை பாக்கியம் இல்லை என்ற விபரம் தியாகுவிற்கு அவர் மூலமாக தெரிய வருகிறது. அவன் பார்வையாலேயே தப்புக்கணக்கு போட ஆரம்பிக்கிறான்.

தியாகுவிடம் மூர்த்தி வேலம்மாவை பத்தி சொல்கிறான், “... அவள நீ சோறு போடுற கரண்டி மாதிரி தான் நீ பயன்படுத்தணும்.. சோத்த வுட்டுட்டு கரண்டிய முழுங்கணும்னு நெனைச்சே...” என்று

தியாகு, “நமக்கு ஏன்ப்பா வம்பு..” என்று கூறி விட்டு, “அந்த டீக்கடை காரன் பொண்டாட்டி இருக்காலே.. ம்ம்ம்ம்...” என்று கூற மூர்த்தி கோபப்பார்வை பார்த்து அடிக்க வருகிறான்.

தப்புகணக்கின் ஆரம்பமாய் தியாகு மூர்த்தியை விட்டு விட்டு தனியாக உப்பிலி வீட்டிற்கு சாப்பிட வருகிறான்.

கன்னியம்மாவின் தந்தை, “.. நீங்க பேய் பசில வந்திருப்பீங்க.. போய் சாப்பிடுங்க...வேலம்மா மார்க்கெட்டுக்கு போயிருக்குது.. நான் கன்னியம்மாவை பரிமாற சொல்றேன்..”

ஆபத்து இங்கே தான் அபவுட் டெர்ன் போட்டு அடியெடுத்து வைக்கின்றது.

கன்னியம்மா உணவு பரிமாறும் போது கையில் ஒரு காயம் இருப்பதை கவனிக்கிறான் தியாகு. வேலம்மா சிறிது நேரம் கழித்து வரவே, ‘உங்க எஜமானியம்மா கையில் என்ன காயம்..” என்று வினவுகிறான்.

”ஆனி குத்தி பத்து போட்டிருக்கு..”என்கிறாள்.

“செப்டிகாகி உயிருக்கே ஆபத்து.. நான் ஆயிண்ட்மெண்ட் தர்ரேன்.. நீ கொண்டாந்து குடு” என்று ரொம்ப அக்கறை உள்ளவன் போல் காட்டிக் கொள்கிறான்.

கன்னியம்மா இந்த மாதிரி அக்கறையை கணவனிடம் தற்காலத்தில் குறைந்திருப்பதை புதிதாக ஒருவன் காட்டும் கரிசன வார்த்தையை அவள் உள்ளம் அவளையும் மீறி ஒரு சுகத்தை அனுபவிக்க செய்கிறது. அவள் என்ன செய்வாள் பாவம்?

ஆயிண்ட்மெண்ட் வாங்க போன வேலம்மாவையே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்து விட்டு வேலம்மாவிடம் அந்த ஆயிண்ட்மெண்ட்டை தடவ விரும்பாதவள் போல் பேசுகிறாள்.

இதற்கிடையில் உப்பிலி மூர்த்தியிடமும் தியாகுவிடம் தனது நண்பன் ஒரு பொண்ணை தள்ளிவிட்டு வந்து விட்டதாகவும் அந்த பெண்ணோடு பெரிய கூத்தா போச்சு என்றும் சொல்கிறான்.

மூர்த்தி, “ஓஹோ அந்த மாதிரி கேசா..” என்று கேட்க

உப்பிலி, “அட நீங்க வேற சார் நல்ல குடும்பத்து பொண்ணு.. கல்யாணம்லாம் ஆச்சு..” என்று விளக்கவே..

மூர்த்தி, “ஏம்மா இதெல்லாம்.. தப்பில்லை.. கல்யாணம் ஆனவன்னு வேற சொல்றே..” என்று கேட்டு வைக்க

உப்பிலி, “இதுல என்னா சார் தப்பிருக்கு... அவளா வர்ரேன்னு சொல்றப்ப.. எவன் சார் வேணாம்பான்..” என்று கூறவே தியாகுவுக்கு அடைத்திருந்த கதவு திறந்து விட்டு விஷ காற்று சுதந்திரமாக உள்ளே பரவ தொடங்கியது.

ஒரு கோயில் குருக்களிடம் பணம் கேட்டிருப்பாள் வேலம்மா, அவர் செண்டெல்லாம் போட்டுகிட்டு அந்த பணத்தை கொடுக்கும் சாக்கில் அவளை கெடுக்கலாம் என்ற கெட்ட எண்ணத்தோடு அந்த குருக்கள் வேலம்மாவின் வீடு தேடி வருகிறார்.

வேலம்மாவின் கண் தெரியாத கணவர், “என்ன செண்ட் போட்டிருக்கீங்க..” என்ற கேள்விக்கு.. பதறி போய், “செண்டா.. ஒரு செண்ட்பாய் மோதிட்டு போயிட்டான், இன்னைக்கின்னு பார்த்தா மோதணும்..வேலம்மா இல்லையா..”
என்கிறார்.

“இல்ல.. வேலைக்கு போயிருக்கு..” கணவர்

“ஆமாமா.. வொர்க் வொயில் யு வொர்க்.. பிளே வொயில் யு பிளே.. நாம் ஏதாவது வெளையாடலாமா..”

வேலம்மா வருகிறாள், குருக்கள் அவளிடம், “15 ரூபா வேணும்னு கேட்டிருந்தீயே.. இந்தா..” என்கிறார்.

“.. அதை நீங்களே வச்சு.. செண்ட் வாங்கி போட்டுக்குங்க..” என்று வாங்காமல் அனுப்பி வைக்கிறாள்.

அவர், “எனக்கு கோயில்ல வேல இருக்கு..” என்றவாறு புறப்படுகிறார்.

வேலம்மாவின் கணவர் கேட்கிறார், “எத்தனை நாளைக்கி தான் இது..”

“எது?” - வேலம்மா

”இப்படி நீ கண்டவங்க் கிட்டேயும் பணம் கேக்க.. அவங்க.. உன்னய தப்பா நெனைக்கிறது..ம்ம்... இதெல்லாம் எதுக்கு?” என்று கேட்க

வேலம்மா சொல்கிறாள், “..... தப்பா நடந்து சம்பாதிக்கிறத விட இப்படி கடன் வாங்கி சம்பாதிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?” என்று இன்னொரு குற்றத்தை கம்பேர் செய்து தனது யாரையும் பாதிக்காத காரியத்திற்கு நியாயம் சொல்கிறாள்.

அந்த மழை இரவு...

மூர்த்தியை கழட்டி விட்டு விட்டு தியாகு மட்டும் தனியாய் உப்பிலி வீட்டில் உணவருந்தும் சாக்கில் உப்பிலியின் மனைவியை நெருங்குவதற்கு இப்போது அவர்கள் வீட்டில் அமர்ந்து இருக்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை புகழ்ந்து பேசி அவளின் உள்ளத்தை மயக்கியிருப்பான்.

கன்னியம்மா உணவை எடுத்துக் கொண்டு ஒரு வித வெட்கத்தோடு வருகிறாள்.

கிட்டே வருகையில் அவளது தலையில் வசித்திருந்த ஒரு பூ கட்டுபாடிழந்து அவனது இலையில் விழுகிறது..

பூவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு “இந்த் புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு..” என்று விஷ ஊசி போடுகிறான்.

அவள் பரிமாறும் போது மார்பு மறைத்த சேலை விலக, கையில் எடுத்து வைத்திருந்த பூவை அவளது மார்பில் விசிறி எரிகிறான்.

அவள் அதை அங்கீகரித்தவளாக சாதத்தை பரிமாறும் போது கையை பிடித்து விடுகிறான். யார் ஆட்சியோ தெரியவில்லை. மின்சாரம் தடையேற்படுகிறது. அந்த நேரடி தொடுதலை அப்போது அவளால் அங்கீகரிக்க முடியவில்லை. உள்ளே ஓடி மறைகிறாள்.

உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்க வேண்டிய நடு இரவில் மயான அமைதியின் எரிச்சலில் துடிக்கிறான் உப்பிலி.

உப்பிலியின் மனைவியுடனான தியாகுவின் சந்திப்பு உள்ளே தாண்டி வெளியேயும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

உப்பிலிக்கி செய்தி தெரிய வருகிறது. கொதிக்கிறான்.

வேலம்மாக்கு செய்தி தெரிய வருகிறது, அவளோ, “உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகும்.. கொஞ்சமாவது நெனைச்சு பாத்தியா...? சரி.. அவன் உன்னய அழைச்சுட்டு போயி கல்யாணம் பண்ணிப்பானா..?....
... இது குழப்பத்துல தான் போயி அதனால யாருக்கும் எந்த லாபமும் இல்லை..” என்று கூறவே..

கன்னியம்மா திரும்பி வேலம்மாவின் குழந்தையை பார்க்கிறாள். அது தான் லாபம் என்பது போல். குழந்தை முகத்தை எல்லாம் சாயத்தை பூசிக் கொண்டு ஒரு காரணமும் இல்லாமல் சிரிக்கிறது.

உப்பிலி இரவு வீடு திரும்புகிறான். கன்னியம்மா படுத்து இருக்கிறாள்.

“என்ன தூங்குறியா.. இல்ல தூங்குற மாதிரி படுத்திருக்கியா?

என்ன நகைய எல்லாம் எடுத்து போட்டிருக்கே... கிளி கூண்ட விட்டு பறக்க பாக்குதா..?

எங்கேயோ போறியாம்? எவனையோ பார்க்குறீயாம்? எல்லா நாயும் சொல்லுதே... உண்மை தானா...?

பூவெல்லாம் வச்சிருகியே... அவன் வாங்கி கொடுத்தானா..?

என்னாடி பேச மாட்டேங்குறே..?”

கன்னியம்மா விடுக்கென்று எந்திரித்து போகிறாள்..

உப்பிலி கையை பிடித்து, “எங்கேடி போறே? அவன் கிட்டேயா?”

கன்னியம்மா கணவனது ஆண்மை இல்லாத தனத்தை சுட்டி காட்டி வாயசைக்க..

“இப்படி எல்லாம் வார்த்த போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியாடி.. இதெல்லாம் அவன் கத்துக் கொடுத்தானா” என்று அடிக்க கட்டையை எடுக்க..

அவள் திரும்பி நேருக்கு நேராக நிற்கிறாள். மனைவிக்கு முன்னே ஒலித்து வைக்க முடியாத தன் குறைகள் அவனுக்குள் ஒரு நிதானத்தை கொண்டு வர.. கட்டையை வீசி எரிகிறான்...

”ஏன் நிறுத்திட்டே... அடிச்சு கொல்லு..” என்று சேலையை கழட்டி வீசி எரிகிறாள்.”உன்னோட வாழ்ந்து என்னத்த கண்டேன்.. செத்து தொலையறேன்..” என்று செவிட்டில் அறைய கோபத்தில் கையை ஓங்குகிறான் தான் ஆசையோடு தூக்கி சுமந்த மனைவியை.

ஆத்திரம் நீங்கி சமாதானம் பேசுகிறான்.

காதில் போட்டுக் கொள்ளாமல் கால் கட்டை அவிழ்க்கிறாள். வீட்டை விட்டே வெளியேறிவிட்டாள்.

தியாகுவின் ஊருக்கே அவனது வீட்டிற்கே வந்து விடுகிறாள். அவள் யாரென்று தெரிந்து அவளை அங்கிருந்து துரத்தி விடுகிறார்கள். வரும் வழியில் குளித்து விட்டு வரும் தியாகுவை சந்திக்கிறாள்.

“.. இனிமே உங்களோட வாழ்றத தவிர வேற வழியே இல்ல..” - உப்பிலியின் மனைவி தியாகுவின் காதலி என்ற நினைப்பில்...

“...இப்ப நான் ஒன் கிட்டே பேசிகிட்டு இருக்கிறதே தப்பு.. உடனே புறப்பட்டு ஊருக்கு போயிடு... இல்லைன்னா உன்னோட சேர்ந்து என் பேரும் அசிங்கப்படும்...” குளித்ததில் சாயம் வெளுத்த தியாகு

சந்தர்ப்பவாதி தியாகுவோ அவளை ஏற்க மறுத்து அவளை அங்கிருந்து துரத்தி அடிக்கிறான்.

திரும்ப ஊருக்கும் போக முடியாமல் நம்பி வந்த தியாகுவோடும் இருக்க வழியில்லாமல் போகவே திக்கு திசையின்றி கால் போன போக்கில் நடை போடுகிறாள்.

வேலம்மாவின் கணவர் வேலம்மாவிடம், “ஒன்ன நெனைச்சு.. நான் எவ்ளோ பெருமைப்படறேன் தெரியுமா? புருஷன் கண்ணோட இருக்கும் போதே ஒருத்தி ஓடியிருக்கா.. நீ நினைச்சிருந்தா எனக்கு என்னென்ன துரோகம் செஞ்சிருக்க முடியும்..”

வேலம்மா சொல்வாள், “பொம்பள துரோகம் பண்ணனும்னு நினைச்சுட்டா, புருஷனுக்கு ஆயிரம் கண்ணு இருந்தாலும் துரோகம் பண்ணுவா... இத்தனை வருஷம் வாழ்க்கைல... எம்மேல.. ஏதாச்சும் சந்தேகம் இருக்கா..”

வேலம்மாவின் கணவர் தலையை ஆட்டி மறுத்து, ‘இல்லை...”

தியாகுவை அடித்து நொறுக்கி எடுக்க உப்பிலி வரும் போது, மூர்த்தி தடுத்து, “....இவன் இங்கே இருக்குறப்ப.. கன்னியம்மா இவன் கூட்டிட்டு ஓடிட்டான்னு நீ நெனைச்சா அது முட்டாள் தனம் இல்லையா... கேக்குறவன்லாம் சிரிப்பாங்கப்பா...?........”

கன்னியம்மாவை ஊர் ஊராய் போய் தேடனும்.. கடையும் தொறக்கல.. கைல காசும் இல்ல.. என்று தம்பியிடம் போய் உதவி கேக்க சொந்த உறவோ எதிரியாய் நடத்துகிறது.

வேலம்மாவை பார்க்க செல்கிறான். கடையை விற்று விடப் போவதாக கூறுகிறான்.
வேலம்மா தனது கணவனின் தோளை தொடுகிறாள், உடனே கணவன் அதை விளங்கி கொண்டு, “நானும் அதை தான் நினைக்கிறேன்..” என்கிறார்.
வேலம்மா உள்ளே போய் கடன் வாங்கி சேர்த்து வைத்திருக்கும் மொத்த காசையும் எடுத்து வந்து கணவனின் கையை எடுத்து அந்த காசு பையில் வைக்கிறாள்.
கணவன் “நீயே கொடு” என்று கூற வேலம்மா உப்பிலியிடம் மொத்த பணத்தையும் கொடுக்கிறாள். ”கடையை விற்க வேண்டாம்.. இதுல பணம் இருக்கு...அவர் கண் ஆபரேசனுக்காக நான் சேர்த்து வச்ச பணம்... ”
கண் தெரியாத கணவர், “வாங்கிக்குங்க.. எனக்கு எந்த குறையும் இல்லை... வேலம்மா இருக்கா...”
வேலம்மா, “எங்களுக்கு கன்னியம்மா வந்தா போதும்...”
மனிதர்களை சந்தித்த மகிழ்ச்சி உப்பிலிக்கு... நன்றி பெருக்கோடு அவர்களை பார்க்கிறான்.

ஊரார் இவனை பற்றி கிண்டலாக அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஏதோ சொல்ல மல்லுக்கு நிற்கிறான் இவன்.

கன்னியம்மா போனதற்கு தியாகு காரணமல்ல... அவன் தப்பாக நினைத்து அடித்தது தான் காரணம் என்று தானாக விளங்கிக் கொண்டு தியாகுவிடம் மன்னிப்பு கேட்கிறான், “...நீங்க நல்லங்கன்னு விளங்கிகிட்டேன்...”

தியாகுவோ,  பெரிய உத்தமன் மாதிரி ”....நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க....”ஆறுதல் பேசுகிறான்.

 ஊர் பெரியவர் ஒருவர் கன்னியம்மா ஓரிடத்தில் சித்தாள் வேலையில் ஈடுபடுவதை பார்த்து விட்டு உப்பிலியிடம் போய் சொல்கிறார், கன்னியம்மாவை தானே அழைத்து வருவதாக சொல்கிறார்.

ஊர் உறங்கிய போது கன்னியம்மா வண்டியில் அந்த ஊர் பெரிய மனுஷரோடு வந்திறங்குகிறாள். அந்த உண்மையான பெரியவருக்கு உப்பிலி நன்றி சொல்கிறான்.

கன்னியம்மா திரும்பி விட்டாள், ஆனால் வந்ததிலிருந்து திரும்ப போய் விடுவதாகவும், தன்னை வேண்டாமென்று தள்ளி வைத்து விட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறாள்.

இதை போய் உப்பிலி தியாகுவிடம் சொல்வதோடு தியாகுவிடம் படித்த நீங்கள் எல்லாம் வந்து சொல்ற மாதிரி சொன்னா நிச்சயம் கன்னியம்மா கேக்கும்.. வாங்க சார்... வந்து சொல்லுங்க.. என்று தியாகுவை கன்னியம்மாவை காண அழைத்து வருகிறான்.

கன்னியம்மா மூலையில் முடங்கி கிடக்கிறாள். தியாகு வருகிறான், அவளது அருகில் துடைத்து போடப்படும் நாற்காலியில் அமர்கிறான், வேலம்மா பார்க்கிறாள், மிக அருமையாக புரியும் படியாக எடுத்து சொல்கிறான்,

”நான் சொல்றத தயவு செஞ்சு நீங்க கேக்கணும்.. ஏதோ நானும் இந்த குடும்பத்துல ஒருத்தனா இருந்து சொல்றேன்.. நீங்க போனதிலிருந்து உப்பிலி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாரு வேதனைப்பட்டாருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்...

நீங்க கடவுள் புண்ணியத்துல வந்து சேர்ந்துட்டீங்க..ஆனா மறுபடியும் இங்கேந்து போறேன்னு சொல்றீங்களாம்.. எங்களுக்கெல்லாம் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு..

இப்ப என்ன நடந்து போச்சு...இதுவரைக்கும் ஒரு சுடு சொல் அவர் வாயிலிருந்து வரல.. அப்படிபட்ட மனுசர விட்டு போறேன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது.. இந்த மாதிரி ஒரு புருஷன் கெடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும்...

எங்க பெரியப்பா ஒருத்தர் இருக்காரு.. பெரிய குடிகாரர்... எங்க பெரியம்மா.. ஆங்... அதுக்காச்சு.. ஒரு 60 வயசு இருக்கும்.. கல்யாணமான நாள்லேர்ந்து இன்னைக்கி வரைக்கும் குடிச்சிட்டு வந்து எங்க பெரியம்மாவ அடிக்கிறது இம்ச பண்ணுறதும் தான் அவருக்கு வேல..

எங்க பெரியம்மா நெனைச்சிருந்தா என்னைக்கோ அவர விட்டு போயிருந்திருக்கலாம்.. ஆனா.. போகல.. ஏன்? அது தான் குடும்பங்குறது..

எங்க பெரியப்பாவோட வச்சு பார்க்கும் போது உப்பிலி... தெய்வம் மாதிரி...

பெரியவங்கள்ளாம் திரும்ப திரும்ப சொல்றது என்ன? நல்லதோ கெட்டதோ.. எல்லாத்தையும் தாங்கிகிட்டு ஒத்துமையா குடும்பம் நடத்துற புருஷன் மனைவி தெய்வத்துக்கு சமம்னு சொல்லியிருக்காங்க...

நம்ம சுத்தி சொந்தம் பந்தம்னு ஆயிரம் பேரு இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு புருஷன் தான் துணை.. மத்தவங்கல்லாம் இன்னைக்கி வருவாங்க நாளைக்கு போயிடுவாங்க..

இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு வீட்டோட இருந்து குடும்பம் நடத்துறத பார்த்து நாங்க எல்லாரும் சந்தோஷப்படணும்..மறுபடியும் நீங்க சமைச்சத எங்கள மாதிரி உள்ளவங்க எல்லாம் சாப்பிடணும்.. உங்கள வாழ்த்தணும்..

அந்த பழைய நாட்கள் திரும்பி வரணும்.. இது தான் எங்க எல்லோரோட பிரார்த்தனையும்... தயவு செஞ்சு உங்க முடிவ மாத்திக்குங்க..கெஞ்சி கேட்டுக்குறேன்..”

எழுந்து விடுகிறான். உப்பிலி அகமகிழ்ந்து பின்னால் இருப்பதாக கூறி வேலம்மாவிடம் தேநீர் போட்டு எடுத்து வரும்படியும் சொல்லி தியாகுவை நன்றி கூற அழைத்து செல்கிறான்.

பின்னாடி தியாகுவும் உப்பிலியும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே மூலையில் அமர்ந்து தியாகு பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கன்னியம்மா தியாகுவின் மீது சாணியை கரைந்து கொண்டு வெளக்குமாறை கையில் ஏந்தி வந்து ”ஏண்டா.. எனக்கு நீ வந்து புத்தி சொல்றியா..?” என்று கேட்டு  தியாகுவின் மீது ஊற்றுகிறாள், உப்பிலி தடுப்பதையும் மீறிக் கொண்டு விளக்குமாறால் விளாசுகிறாள். ஹி டிஸ்ர்வ்ட் இட்.

பஞ்சாயத்து கூடப்போவதாகவும் கன்னியம்மா இந்த ஊரிலேயே இருக்க கூடாது எனவும் ஊர் கூடி வந்து உப்பிலியின் வீட்டு வாசலில் கூப்பாடு போடுகிறார்கள் ஊர் மக்கள், இது அத்தனையும் உப்பிலியின் தம்பியின் ஏற்பாடு. உப்பிலி அருவாளை தூக்கவே சண்டை பிடிக்கிறது.

உப்பிலி வேலம்மாவிடம், ‘வேலம்மா.. கன்னியம்மா சொன்ன மாதிரி அதுக்கு சேர வேண்டியதை எல்லாம் எடுத்து கட்டி வை.. நான் வண்டி கொண்டாறேன்..”

வேலம்மா, “அது தான் பைத்தியக்காரத்தனமா பேசுதுன்னா... நீ அதுக்கு மேலேயே இருக்குறீயே..:

“எல்லாம் எனக்கு தெரியும்.. நீங்க யாரும் எதுக்கும் கவலைப்பட வேணாம்”

தம்பியின் மனைவி, “என்ன அத்தான் சின்னபிள்ளை மாதிரி பேசறீங்க.. கடைசியில  நீங்களும் ஊர்காரங்களுக்கு பயந்துட்டீங்களா?”

வேலம்மா உண்மையான தோழமையோடு, “இந்தா உனக்கு தைரியம் இல்லைன்னா சொல்லு... கன்னியம்மாவ என் வூட்ல வச்சு நான் காப்பாத்துறேன். நீ போவ சொன்னாலும்.. நான் போக வுட மாட்டேன்..”

தம்பியின் மனைவி, “அது தான் புத்தி பேதலிச்சு பேசுதுன்னா.. நாமும் அது கூட சேர்ந்து கை தட்டுறதா.. கன்னியம்மா இனிமே இங்கிருந்து போறது உங்களுக்கும் கவுரவம் இல்ல... அதுக்கும் கவுரவம் இல்ல..”

உப்பிலி, “பேசிட்டீங்களா?.. நீங்க சொன்ன கவுரவம், மானம் அது இத பத்தியெல்லாம்.. எனக்கும் தெரியும்..”

வேலம்மா, “தெரியுமுல்ல.. ஆம்பளயா லட்சனமா கன்னியம்மாவ வீட்டோட வச்சு காப்பாத்துவேன்னு தைரியமா சொல்லு..”

உப்பிலி, “அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. நான் சொல்றத கொஞ்சம்..”

வேலம்மா, “நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.. எங்க வேதனைய கெளறாம.. கொஞ்சம் வெளியில போய் உட்காருங்க..”

உப்பிலி கோபப்படுகிறான், “சொல்ல சொல்ல இப்படி ஆளாளுக்கு கத்திகிட்டிருந்தா எப்படி? என் மனசுல என்ன இருக்கு.. அவ மனசுல என்ன இருக்குன்னு உங்கள்ள யாருக்காச்சும் தெரியுமா? சொன்ன மாதிரி எல்லாத்தையும் எடுத்து வைங்க... நான் போயி வண்டி கொண்டாறேன்...”
எழுந்து விடுகிறான்.

வண்டி வருகிறது.

வேலம்மாவும் தம்பியின் மனைவியும் கண்களில் நீர் தழும்ப எவ்வளவு சொல்லியும் கேக்காமல் பிடிவாதத்தோடு நடத்தப்படும் காட்சியை பார்க்கிறார்கள்.

கன்னியம்மா கிளம்புகிறாள், “வேலம்மா.. நான் வர்ரேன்..” - எரிகின்ற அடுப்பாய் வேலம்மா

கன்னியம்மா வண்டியருகே வருகிறாள். உப்பிலியை தேடுகிறாள். கொஞ்சம் தள்ளி நிற்கிறான். அவன் கிட்டே வர வேண்டி வண்டியில் ஏறாமல் நிற்கிறாள். புரிந்து கொண்டு அருகே வருகிறான் உப்பிலி.

கன்னியம்மா ஏறிட்டு உப்பிலியை பார்க்கிறாள். கண்களில் கண்ணீர் வடிகிறது.

உப்பிலி, “ஏன் அழுவுறே.. ஏறி உட்காரு..”

கன்னியம்மா, “எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நடந்தே போயிடறேன்...

உப்பிலி, “இதெல்லாம் இனிமே இந்த வீட்ல இருக்க வேண்டிய அவசியமில்ல...”

கன்னியம்மா, “உங்களுக்கு கெட்ட பேரை உண்டாக்கிட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க..”

உப்பிலி, “வேலம்மா அந்த பசுமாட்ட வண்டி பின்னால கட்டு...”

கன்னியம்மா, “எனக்கு வேண்டாம்..”

உப்பிலி, “கன்னியம்மா... நானும் ஒன் கூட வர்ரேன்...”

கன்னியம்மா அதிர்ச்சியாய் பார்க்கிறாள்...

உப்பிலி தொடர்கிறான், “நீ இல்லாம இந்த ஊர்ல நான் மட்டும் எதுக்கு இருக்கணும்.. வா போவலாம்.. நீ போனதுக்கு அப்புறம் எனக்கு யாரு இருக்காங்க... நீ போயிட்டியானா.. நான் அநாதை ஆயிடுவேன்.. என்னயும் ஒன் கூட அழைச்சிகிட்டு போயிடு...”

பூட்டும் சாவியும் இணைந்து கொள்கின்றன...

வண்டி நகர்கின்றது..

இது பூட்டாத பூட்டுக்கள் தான்.. ஆனாலும் இது புரிந்து கொண்ட பூட்டுக்கள்..

உப்பிலியாக நடித்திருப்பவர் ஜெகன் என்ற மலையாள நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர், இவர் நடிக்கும் சண்டை காட்சிகளிலெல்லாம் டூப்பே போடாமல் நடிப்பார்.  சென்னை அருகே நடந்த சூட்டிங்கில் பைக்கில் வந்து ஹெலிகாப்டரில் தொங்குவது போல் காட்சியில் ஃபெர்ஃபெக்டாக வரவில்லை என்று சொல்லி ரீடேக் எடுங்கள் என்று கேட்டுக் கொண்டு மீண்டும் படமாக்கப்படும் போது விபத்தில் இறந்து போனதாக தகவல் சொல்கிறது.

இந்த படத்தில் இவர் என்னமா நடித்திருக்கிறார், யார் துணிவார்கள்? ஆண்மை இல்லாதவராக நடிக்க என்னா தில் இருந்திருக்கணும் இவருக்கு...ஒரு ஹீரோ.. எப்படி தான் ஒப்புக் கொண்டாரே..?

மகேந்திரனின் இயக்கத்திற்கும் அசோக்குமாரின் ஒளிப்பதிவுக்கும் இந்த படத்தில் ஒரு திருமணமே நடந்து முடிந்து இருக்கிறது, அவ்வளவு ஒன்றோடு ஒன்று கலந்து காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

நல்ல படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் தவிர்க்க கூடாத படம் இது, ரொம்ப இயல்பாக இருக்கும், உடுத்தும் உடைகளிலிருந்து பேசும் பேச்சிலிருந்து யதார்த்தம்.