Thursday, November 11, 2010

பெருமானார் ரசுலே கரீம் (ஸல்)

1.


இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்து மலக்குமார்களையும் பார்த்து சஜ்தா செய்ய சொன்ன போது இபுலீஸ் மட்டும் அவ்வாறு சஜ்தா செய்ய மறுத்து விட்டான். இறைவன் தனது குரான் ஷரீஃபிலே அவன் பெருமை கொண்டான் (குரான் ஷரீஃப் 38:74) என்று சொல்கிறான்.


இப்லீஸ் சொன்னான், 'நான் ஆதமை விட பெரியவன், என்னை நெருப்பிலிருந்து படைத்தாய், ஆனால் அவரை மண்ணிலிருந்து படைத்தாய்' என்று வியாக்கியானம் செய்தான்.


அவ்வாறு பேசி இறைவனின் கோபத்துக்கு ஆளானான் என்பது நமக்கு தெரிந்த செய்தி தான்.


இங்கே கவனிக்க வேண்டியது, '.. என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்..' என்று இபுலீஸ் ஒப்புக் கொண்டிருக்கிறான். அதாவது தான் படைக்கப்பட்ட பொருள் என்பதை ஒப்புக் கொள்கிறான். அவன் இறைவனை வணங்க மறுத்தவனும் அல்லன்.


உண்மையில் பார்க்க போனால், அவன் பெரிய தௌஹீது வாதியாக தான் இருப்பான் போலிருக்கிறது. தமிழ்நாடு தவ்ஹீது அல்ல அகில உலகத்துக்கும் தவ்ஹீது ஜமாத் என்று ஒன்று இருந்தால் அதற்கு அவன் தான் தலைவன் பதவிக்கு பொருத்தமானவன் என்பது எனது தாழ்மையான கருத்து.


'ஆதத்தை விட நான் மேலானவன்' என்று சொன்னாலும் இபுலீஸ் தான், அல்லது ஒரு படி கீழே இறங்கி வந்து, 'முஹம்மது நபிகளும் நம்மை போன்றவர் தான்' என்று சொன்னாலும் இபுலீஸ் தான்.


2.


கீழே வருகின்ற இரண்டு குரான் ஷரீஃப் வசனங்களை கவனியுங்கள்:


************

A. 

குரான் ஷரீஃப்

அத்தியாயம் 109 - ஸூரத்துல் காஃபிரூன் (நிராகரிப்பவர்கள்)

(நபியே) நீர் சொல்வீராக: "காபீர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும் நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."


*********
B.


குரான் ஷரீஃப்


10 வது அத்தியாயம் - ஸூரத்து யூனுஸ் (நபி)  - 104வது வசனம்


நபியே நீர் கூறூவீராக, "மனிதர்களே நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன், ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமீன்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்"


************
முன்னது வந்த வசனத்திற்கும் பின்னது வந்த வசனத்திற்கும் சில ஒற்றுமைகளும் வேறு சில வேற்றுமைகளும் இருக்கலாம்.


முதலில் ஒற்றுமையை கவனித்தோம் என்றால், இரண்டுமே பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு எதனையும் வணங்க மாட்டேன் என்று பெருமானார் அவர்களே சொல்வது தான்.


இந்த இரண்டு வசனத்திற்கிடையிலும் ரொம்ப அற்புதமான நுணுக்கமான வேற்றுமை என்று பார்க்கும் போது முன்னது இடம் பெற்ற வசனத்தில் பெருமானார் அவர்கள் இஸ்லாமிய மாற்று கருத்தாளர்களிடம் அதாவது காஃபிர் சகோதரர்களிடம் சொல்கிறார்கள், இரண்டாவது இடம் பெற்ற வசனத்திலோ பெருமானார் அவர்கள் ஒட்டு மொத்த மனித குலத்துக்குமே இதனை சொல்கிறார்கள்.


அது சரி, ஒரு வகையில் பார்த்தால் இஸ்லாத்தின் இந்த கருத்தை தானே இப்லீஸும் (படிக்க முதல் அத்தியாயம்) சொன்னான், அல்லாஹ்வை தவிர ஆதத்திற்கு சஜ்தா செய்ய மாட்டேன் என்று. அவன் செய்தது எப்படி தவறாகும்?


3.


2 வது அத்தியாயம்- B.யில் எழுதப்பட்ட குரான் ஷரீஃப் வசனத்தில் பல சிறப்புகள் உள்ளது. அதனை சற்று கவனிப்போம்.


அந்த வசனத்திலே மூன்று செய்திகளை பெருமானார் (ஸல்) அவர்கள் பிராதனமாக கூறுகிறார்கள்.


1. அல்லாஹ்வை தவிர யாரையும் அல்லது எதையும் வணங்க மாட்டார்கள்.

2. மரிக்கச் செய்யும் (அதாவது மரணம் என்பது திரை விலகி மீண்டும் இறைவனிடமே திரும்புவது) அல்லாஹ்வையே வணங்குவார்கள்.

3. இறை நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள்.

மேலே கண்ட இந்த மூன்று செய்திகளிலும் நிறைய உள்ளர்த்தங்கள் புதைந்து கிடக்கினறன.

4.

இன்றைக்கு முஸ்லீம்கள் எதற்கெடுத்தாலும் ‘ஆங்... இணை வைக்கக் கூடாது..’ என்று மற்றவர்களை பார்த்து அலறுகிறார்கள். ’மற்ற பாவங்கள் அல்லாஹ் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.. ஆனால் இணை வைத்தலை மட்டும் மன்னிக்கவே மாட்டான்..’ என்று தாங்கள் இணை வைப்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் போல் இறுமாப்புடன் பேசி வருகிறார்கள். 

ஆனால் மேலே வரும் வசனத்தில் இறைவன் ‘பெருமானார் அவர்களை மனிதர்களை நோக்கி சொல்ல சொல்கிறான், அதாவது, ‘மனிதர்களே! நீங்கள்  என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்..’ என்று.

மனிதர்கள் எவ்வளவு தான் தனது தூய்மை நிலையை பற்றி நாங்கள் இணை வைக்காத கூட்டம் தௌஹீது எங்கள் கொள்கை என்று போற்றி அல்லது பீற்றிக் கொண்டாலும் அவ்வாறு நினைக்கின்ற அந்த நிலை அந்த ஒரு வகை ஈகோ கூட ஒரு வகையில் (அல்ல அல்ல எல்லா வகையிலும்) ஷிர்க்காக மாறிவிடுகிறது. 

ஷிர்க் என்பது என்ன அல்லாஹ்வை தவிர உலகத்து பொருள்களையோ மனிதர்களையோ அல்லது உள்ளத்து உணர்வுகளையோ உதாரணமாக கோபம் தாபம் பயம் கவலை உள்பட எதனையும் அல்லாஹ்வுக்கு நிகராக அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ நிறுத்துவதை குறிக்கும்.

ஆனால் பெருமானார் இந்த நிலையிலிருந்து எல்லாம் தூய்மை அடைந்தவர்கள், அவர்கள் நம்மை விட உசத்தி தான். 

அவர்கள், ‘ தான் அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்க மாட்டேன்’ என்ற உண்மையை கூட அவர்களாக சொல்லவில்லை, ‘குல் (சொல்வீராக!) என்று அல்லாஹ் கட்டளையிட்ட பிறகு தான் சொல்கிறார்கள். அந்த கட்டளை வரும் வரை மௌணமாகவே இருக்கிறார்கள். 

இறைவன் அவர்களுக்கு அவர்களின் உள்ளத்து பண்புகளை வெளிப்படுத்துமாறு கட்டளையிட்டான். அந்த கட்டளைக்கு அடிபணிந்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகின்றேன் என்று அவர்கள் சொல்லியது நம்பிக்கையையும் தாண்டிய உண்மைகளை கண்ட அனுபவத்தை இறைவன் வெளிப்படுத்த சொல்லி கட்டளையிடுகிறான். இறைவனின் அத்தாட்சிகளை அவர்கள் நன்கு அனுபவித்திருந்தார்கள்.

இதுவே உண்மையான இறை அடியாரின் குணங்களில் உள்ளதாகும். இதுவே சூஃபியாக்கள் சென்ற பாதையாகும். அதனால் தான் அவர்கள் பயமோ கவலையோ கொள்வதில்லை என்று இறைவன் கூறுகின்றான்.

இந்த இறைகட்டளைக்கு இணங்கியதே இபுலீஸ் சொல்லியதற்கும் பெருமானார் சொல்லியதற்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமுமாகும்.

No comments: