Friday, December 18, 2009

மாச்சிஸ் (- தீக்குச்சி) இந்தி பட விமர்சனம்

சீக்கியர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் குறுந்தகவல்களையும் இணைய அஞ்சல்களையும் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தவர்களுக்கு அவர்களின் கடந்த கால வேதனைகளை பற்றியும் 80களில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை பற்றியும் படித்து மனம் குமுறியதுண்டா என்று தெரியவில்லை.

இன்றைக்கு ஒரு சமூகத்தில் புள்ளையாண்டான் படித்து விட்டு அமெரிக்காவில் நன்ன உத்தியோகத்துல இருந்தா தான் பெருமை. வேறொரு சமூகத்தில் வாப்பா பயணத்துல இருக்காஹா என்றால் தான் பெருமை.

ஆனால் ராணுவத்தில் இன்ன ரேங்கில் இருக்கிறான் என்று பெருமைபடும் ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது சீக்கிய சமூகமாகத் தான் இருக்கும்.

அந்த சமூகத்தின் புனித தலமான பஞ்சாப் கோவிலில் புளு ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவம் (எந்த ராணுவத்தில் பணியாற்றுவதை பெருமை என்று கருதினார்களோ அதே ராணுவம் தான்) உள்ளே புகுந்ததை தொடர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தமும் நினைத்து  பார்க்கையில்  அல்லது  படித்து  பார்க்கையில் ரத்தம் உறைய வைப்பவையாகவே இருக்கிறது.

தீவிரவாதிகளை பந்தாடும் விஜயகாந்துகளும் அர்ஜுன்களும் ஸ்டார்களாக வேண்டுமென்றால் மின்னியிருக்கலாம், ஆனால் சமுதாய அக்கறை உள்ள கதாபாத்திரங்களாக நம்முடன் வாழவிலை என்பது தான் உண்மை.

இளைஞர்கள் என்பவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சின்ன உரசலிலும் தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படி தீ பற்றிக் கொண்ட தீக்குச்சிகளின் கதை தான் மாச்சிஸ். அதுமட்டுமல்ல அப்படி உரசுவதற்கு காரணமாக காவல் துறையினரின் வழக்கமான விருந்தோம்பல்களும் அரசியல்வாதியின் அரசியல் இயல்புகளுமே காரணம் என்பதையும் இந்த படம் சுட்டிக் காட்ட தவறவில்லை.

ஒரு அரசியல்வாதியை சுட்டதற்காக 'ஜிம்மி' என்ற தீவிரவாதியை தேடி அலையும் இன்ஸ்பெக்டர் 'வொஹ்ரா' 'ஜஸ்வந்த் சிங்'கின் வீட்டில் ஜிம்மி ஆயுதங்களுடன் மறைந்து இருப்பதாக கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு போலிஸ் படைகளுடன் விரைகிறார்.

ஜஸ்வந்த் சிங் வீட்டில் அவரின் தங்கை வீரன் என்கிற வீரேந்திரா (தபு), மற்றும் அவரின் தாயார் இவர்களுடன் தான் குடி இருக்கிறார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பன் பாலி என்கிற கிரிபால் சிங்குக்கும் வீரனுக்கும் திருமணம் செய்வது பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது தான் போலீஸ் படை உள்ளே நுழைகிறது.

ஜஸ்வந்த் சிங்கிடம், 'மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதியையும் அயுதங்களையும் மரியாதையாக ஒப்படைத்து விடும் படி' கேட்கிறது.

'அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் போகவே 'அந்த தீவிரவாதி பேரு என்னா?' என்று கேட்கிறார் ஜஸ்வந்த் சிங்

'ஜிம்மி' என்ற பெயரை சொன்னவுடன் சிரித்துக் கொண்டே 'எனக்கு ஜிம்மியை தெரியும்' என்று வீட்டுக்கு பின்புறம் அவ்வளவு போலீஸையும் கூட்டிக் கொண்டு போய் 'ஜிம்மி..' என்று கூப்பிட ஜிம்மி வருகிறது. ஜிம்மி அவர் வீட்டு நாய்.

ஜஸ்வந்த் சிங் அந்த நாயை காட்டி, 'இது தான் எனக்கு தெரிந்த ஜிம்மி, இதுக்கு துப்பாக்கி எல்லாம் பிடிக்க தெரியாதே..' என்றதும் வெந்து போகிறார் வெஹ்ரா.

விசாரணைக்கு வரவேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்கை போலீஸ் கையோடு அழைத்து கொண்டு போகிறது. 'உடனே விட்டுவிடுவோம்' என்று அழைத்து செல்கிறது போலீஸ். வீரனின் அழுகை தாங்க முடியாமல் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஸ்டேஷனாக ஏறி இறங்கி பார்த்தும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

போலீஸ்காரர்கள் இது மாதிரி தான் யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், எவன் கிடைக்கிறானோ அவனை அழைத்து கொண்டு போய் மூன்றாம் தர டிரீட்மெண்ட் கொடுத்து 'இது தாண்டா போலீஸ்' என்று படம் காட்டுவார்கள்.

15 நாட்களுக்கு பிறகு படுகாயமடைந்த நிலையில் வந்து சேருகிறான் ஜஸ்வந்த் சிங். கொதித்து போகிறான் நண்பன் பாலி. தன்னுடைய உறவினன் ஒருவன் தீவிரவாதியாக இருக்கிறான் என்பதால் அவனை கண்டு அந்த போலீஸை தண்டிக்க உதவி கிடைக்கும் என்று அவனை காண புறப்படுகிறான்.

பஞ்சாபில் சிங் அதிகம் பயணிக்கும் பஸ்ஸில் சிங் அல்லாத ஒருவர் கேமராவுடன் ஏறுகிறார். ஒரு பேருந்து நிறுத்தம் வருகிறது. பாலியுடன் அந்த கேமரா மேனும் இறங்கி வருகிறான், ஆனால் அவனிடத்தில் கேமரா இல்லை.

பாலி சொல்கிறான், 'பாய் சாப், உங்க கேமரா.." என்று -

அந்த கேமரா பார்ட்டி விழிக்கிறான், திடீரென்று கார் வருகிறது, தட்டு தடுமாறி காரின் உள்ளே புகுந்து பறந்து மறைகிறான்.

பஸ் வெடித்து சிதறுகிறது.

இந்நிலையில் தான் குண்டு தயாரிக்கும் சனாதானையும்  தீவிரவாதிகளின்  தலைவன் சந்திக்கிறான், (நான் இங்கே தீவிரவாதிகள் என்று எழுதுகிறேன், ஆனால் தீவிரவாதிக்கான சரியான அர்த்தம் (recognised definition) என்ன என்று எனக்கு தெரியவில்லை). இவனுடைய உறவினன் இறந்து  விட்டது  தெரிய  வருகிறது.

ஆனால் சனாதனிடம் துணையாக சேர்ந்து கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் வொஹ்ரா என்ற இன்ஸ்பெக்டருடன் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரை (இவர் தான் நண்பனை காட்டடி அடித்திருப்பார்) மார்க்கெட்டில் வைத்து சுட்டு விட போலீஸ் அவனை தேடி மீண்டும் ஜஸ்வந்த் சிங் வீட்டிற்கு செல்கிறது.

அங்கே என்ன நடக்கிறது, வீரன் என்ன ஆனாள், பாலியும் வீரனும் சந்தித்தார்களா?, பாலியால் வொஹ்ராவை தண்டிக்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு மாச்சிஸ் விடை சொல்கிறது.

குல்ஜார் சாப் படம் என்றால் பிளேஷ் பேக் இல்லாமலா?  படம் ஆரம்பித்த சில காட்சிகளுக்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவனாக பாலி இருக்கிறான்.  அப்போது அவர்கள் பாடும் 'சோட் ஆயே ஹம்..' 'சப்பா சப்பா..' பாடல்களும் அருமை. பானி பானி பாடல் தென்றல். இசை விஷால் பரத்வாஜ். (அப்பாஸ் மஸ்தான் தயாரிப்பில் வந்த கமினே என்ற இந்தி படத்தின் இயக்குனர்)

ஒரு கட்டத்தில் எந்த ஜிம்மியை தேடி போலீஸ் ஜஸ்வந்த் வீட்டிற்கு வந்ததோ அந்த ஜிம்மியை பாலி சந்திக்கும் போது ஜிம்மி தான் எப்படி இந்த போராளியானேன் என்று தெரிவிப்பார்.

தனது தந்தையை அவரது டர்பனை கழட்டி அந்த டர்பனாலேயே கைகளை பின்னால் கட்டி டயரில் நெருப்பை வைத்து கழுத்தில் மாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லி அழுவார்.

இப்படி ஒவ்வொருவர் தீவிரவாதியாகவோ அல்லது போராளியாகவோ மாற ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றது. அதைப் பற்றி யாராவது அக்கறையோடு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை.

இந்த படம் ரிலீசான போது கஷ்மீரிலும், பஞ்சாபிலும் தடை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றியை தடை செய்ய முடியவில்லை.

தீவிரவாதிகள் படம் என்றதும் ஒரு மணிரத்னம் படமாகவோ அல்லது விஜய்காந்த் படமாகவோ நினனத்து கொண்டு பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் 'சோட் ஆயே ஹம்..' பாடல்



'சப்பா சப்பா' பாடல்



சில நியாயங்கள் காயங்களால் விளைகிறது. அது நியாயமா இல்லையா என்று வாதிப்பதை விட காயங்களுக்கு மருந்து அல்லது காயங்களுக்கு காரணமானவைகளை அடியோடு ஒழிப்பது (apply to the source) இது ஒன்றே சிறந்த வைத்தியமாக இருக்க முடியும்.

No comments: