Thursday, December 10, 2009

சில டைரி குறிப்புகள்..

செப்டம்பர் 11 சம்பவத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பட்ட அவமானங்கள் சொல்லில் அடங்காது.

ஒரு முறை என் அலுவலக மேசை மேலே ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஒருவர் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் காணப்பட்டார்.

அதை கண்ணுற்ற எனது நண்பர் ஒருவரின் வாயில் அவரையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தை, 'டெரரிஸ்ட் குரூப்பா.. பள்ளிவாசல்ல கொடுத்தாங்களா..?' என்று

எனக்கு எரிச்சலாய் இருந்தது, 'நல்லா பாருங்களேன்..' என்றேன்

கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு (என்னமோ கண்ணாடியில் மட்டும் தான் அழுக்கு என்று நினைத்து கொண்டு) உற்றுப் பார்த்தார், அது ஒரு மருத்துவரின் படம்.

இனி அவர் துடைக்க வேண்டியது 'மனதை' தான் - என்று தோன்றியது.

நான் உடனே எனது நோட்டில் இப்படி எழுதினேன்..

ஷஹாதா
சொன்னால் கூட
ஜிஹாதா
என்று கேட்கிறார்கள் -

(குறிப்பு: ஷஹாதா என்றால் 'அல்லாஹ் (இறைவன்) ஒருவன்' என்று சாட்சியம் கூறுவதை குறிக்கும்)

---------------------------------------------------------------------------------

ஏற்கனவே அரியர் வைத்த பரீட்சையை இன்று தான் எழுத போகிறேன்.

வாப்பா, ‘நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா..?’

நான் பயந்து கொண்டே, ‘ம்.. பண்ணியிருக்கேன்..’ பரீட்சையை விட வாப்பாவின் பயம் அதிகம்

‘பாஸ்ட் கொஸ்டின்ஸ் கிடைச்சுடுச்சா..’ விடுற மாதிரி இல்லை

‘ம்.. கிடைச்சிடுச்சு..’ ஒன் வேர்ட் ஆன்சர்ஸ் தான்

‘ஒரு கேள்வியை கூட விட்டுடாதே.. ஒழுங்கா எழுது..’ - வாழ்த்து

‘சரி எழுதிடுறேன்..’

‘டைம் ரொம்ப முக்கியம்.. கடைசில டைம் இல்லைன்னா.. பாய்ண்ட் ஃபார்ம்ல எழுதிடு’ - எக்ஸாம் டிப்ஸ் அல்லது டெக்னிக்ஸ்

‘சரி..’

‘ஹால் டிக்கெட் எடுத்துக்க.. நல்ல பேனா.. நான் கொடுத்தேன்ல.. அது எழுதுதுல்ல..’ - கவலை

‘நல்லா எழுதுது..’

’சரி.. அல்லா தவக்கல்..’

சைக்கிளை மிதித்து பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன்.. இதைவிட சோர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

விறுவிறு என்று நோட்டீஸ் போர்ட் பக்கம் போய் எங்கே பரீட்சை ஹால் என்று பாக்கலாம்னு பாத்தா பேரதிர்ச்சி

நான் எழுத வேண்டிய பரீட்சையை பற்றிய தகவலே இல்லை.

சம்மந்தப்பட்ட நபரிடம் போய் விபரம் சொல்லி கேட்டதற்கு அவர் அலட்சியமாக சொன்னார்,
‘அந்த பரீட்சை நேத்தைக்கே முடிஞ்சிடுச்சே..’

எங்க வாப்பா ஏசவே இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க

----------------------------------------------------------------------------------

நான் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ரசிகன். இங்கே சிங்கப்பூரில் ஒரு முறை பாகிஸ்தான் நியுசிலேந்துடன் நடந்த ஆட்டத்தை நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.

அதிலும் அஃப்ரிடி என்ற அதிரடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது இந்திய நண்பர் ஒருவர், 'அதெப்படி நீங்கள் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாம்..?' என்று கேட்டார்
அத்தோடு நிற்காமல், 'இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை வந்தால் நீங்க எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க' என்றும் கேட்டார்

எனக்கு அவரின் இரண்டாவது கேள்வி சன் டிவி பழைய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் அருமையாக கேள்விகள் கேட்டு அசத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சீதர் என்று நினைக்கிறேன் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சீதர் என்பவர் ரபி பெர்னாட்டிடம், 'இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் யாருக்கு சப்போர்ட் பண்ணுவீர்கள்' என்ற சுழலுகிற நாற்காலியில் சுற்றிக் கொண்டே கேட்டார்.

ரபி பெர்னாட், 'என்ன ஒரு அபத்தமான கேள்வி' என்பது போல் பதில் சொன்னார்.

என் ஞாபகங்களை வாங்கி கொண்டு நான் எனது நண்பருக்கு இப்படி பதில் சொன்னேன், 'பங்களாதேஷ் நாடு கிரிக்கெட் டீமுக்கு கோச்சாக மொஹிந்தர் அமர்நாத் என்ற இந்தியரை நியமித்தார்கள், அப்போது இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்று வையுங்கள், மொஹிந்தர் அமர்நாத் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..' என்று கேட்டேன்.

----------------------------------------------------------------------------

No comments: