Monday, July 05, 2010

நாகூரிலிருந்து தோழர் மதிமாறனுடன் தொலைபேசி உரையாடல் - பகுதி 1/3

திரு வே.மதிமாறன் அவர்களுடன் 2 சூலை 2010 சுமார் 3 லிருந்து 4 வரை தொலைபேசியில் உரையாடிய போது மனதில் பதிவு செய்தது.

27 சூன் சனிக்கிழமை அன்றே சந்தித்து பேசுவதாக இருந்தது தவிர்க்க இயலாத சில காரணிகளால் மேலே குறிப்பிட்ட தேதியில் தான் பேச இயன்றது.

தோழர் அவர்களிடம் நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

நாகூர் இஸ்மாயில்:
நீங்கள் உங்கள் வலைப்பதிவில் கேடக்கப்படுகிற எந்த பின்னூட்டத்திற்கும் பதில் எழுதுவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கிறதே?

வே. மதிமாறன்:
எனக்கு வரும் பெரும்பாலான பின்னூட்டத்தில் கேள்விகளுக்கான பதில் அந்த குறிப்பிட்ட பதில்களிலும், கட்டுரைகளிலுமே இருக்கிறது. நான் பதில் சொல்வதாக இருந்தால் அந்த பதிவில் உள்ளதை தான் திரும்ப எழுத வேண்டியது வரும்.

இரண்டாவது, பின்னூட்டங்கள் முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. அதுவும் தவிர, பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம் கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை. தனிமனித காழ்ப்புணர்ச்சியோடும் தரக்குறைவாகவும் பின்னூட்டங்கள் இடம்பெறுகிறது.

நாகூர் இஸ்மாயில்:
தொலைகாட்சிக்கு பகுத்தறிவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் இயக்கி வெளியிடும் யோசனைகள் உங்களிடம் உள்ளதா?

வே. மதிமாறன்:
இருக்கிறது. நல்ல செய்திகளோடு, சுவாரஸ்யமாக, வர்த்தக ரீதியாக வெற்றி பெறுகிற சிறந்த நிகழ்ச்சிகளை செய்து தர முடியும். ஆனால் அதற்கேற்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும்.

நாகூர் இஸ்மாயில்:
நீங்கள் ஏன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை?

வே. மதிமாறன்:
வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுபவர்கள் ஊர் உலகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து எழுதினாலும் எந்த பத்திரிக்கையில் எழுதுகிறார்களோ அந்த பத்திரிக்கையின் மோசடிகளை குறித்து வெளியில் விமர்சிப்பதே இல்லை.

உதாரணமாக, நித்தியானந்தா சாமியாரின் அயோக்கியத்தனங்களை பற்றி எழுதுவதாக இருந்தால் குமுதத்தை பற்றி எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் குமுதத்தில் தொடர்ச்சியாகவோ, எப்போதாவதோ எழுத வேண்டும் என்றால் நித்தியானந்தாவை பற்றி எழுதும் போது குமுதத்தை பற்றி எழுத முடியாது.

வெகுஜனப் பத்திரிக்கை நடத்துபவர்கள் அவர்களது பத்திரிக்கையில் எழுத வேண்டுமானால் எங்கும் எதிலும் அவர்களுக்கு விரோதமாக எழுதக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனந்த விகடனில் எழுதும் போது அதன் இந்து, பார்ப்பனிய கண்ணோட்டத்தைப் பற்றி அதிலேயே எழுதக்கூடாது என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வேறு எங்கேயும் அதன் அயோக்கியத்தனத்தை எழுதக் கூடாது; அப்படி எழுதுகிறவர்களை அவர்கள் பத்திரிகைகளில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.

குறிப்பாக பார்ப்பனியத்தை, பார்ப்பன இலக்கியத்தை, இலக்கியவாதிகளை, இந்து மதத்தை தீவிரமாக அம்பலப்படுத்துபவர்களை பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன மனோபாவத்தில் இயங்குகிற பார்ப்பனரல்லலாத பத்திரிகைகளும் திட்டமிட்டு புறக்கணிக்கத்தான் செய்கிறார்கள்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் அவர்களிடமும் இப்படித்தான் நடந்துகொண்டர்கள். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள்.

பாரதியின் பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தி எழுதிய காரணத்தால் என் புத்தகங்களின் அறிமுகத்தையோ, என் வலைப்பக்கத்தின் அறிமுகத்தையோகூட குமுதம், ஆனந்த விகடன் இதழ்கள் வெளியிடுவதில்லை. ஆனால், பெரியாரை கேவலமாக எழுதினால், அப்படி எழுதிகிறவர்களை சிறப்பு விருந்தினராக கவுரவிக்கிறார்கள் பார்ப்பன பத்திரிகைகள். அதற்கு உதாரணம்; ஜெயகாந்தன், ரவிக்குமார், ஜெயமோகன். இதுதான் தமிழ் பத்திரிகைகளின் யோக்கியதை.

இந்தக் காரணத்தால்தான் இலக்கிய, முற்போக்கான எழுத்தாளர்கள் பலர் வெளியில் எழுதும்போதுகூட ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையை எழுதாமல் பார்ப்பன பத்திரிகைகளுக்கு ஏற்றார்போல் தன்னை தயார் படுத்திக்கொள்கிறார்கள்.

நாகூர் இஸ்மாயில்:
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்?

வே. மதிமாறன்:
எனக்கு பிடிச்ச தமிழ் எழுத்தளார்கள் யாரும் இல்ல.

சிலநேரங்களில் சிலர் எழுதுகிற எதாவது ஒன்று சரியாக இருக்கும். அதற்காக அவர்களின் ஒட்டுமொத்த எழுத்தும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. பல நேரங்களில் அவைகள் அபத்தமாகத்தான் இருக்கிறது.

எழுத்துக்கள் இரண்டு செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒன்று தன்னுடைய எழுத்தை கருத்தை முன்னிறுத்தி எழுதுவது. இன்னொன்று தன்னை முன்னிறுத்தி எழுதுவது. இன்றைக்கு எழுத்தாளர்கள் எல்லோரும் தன்னை முன்னிறுத்தி தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்து அரசியல் டிரெண்டு என்னவோ அல்லது தனக்கு எது புகழ் சேர்க்குமோ அல்லது தன்னை எது மிகப் பெரிய அறிவாளியாக அடையாளம் காட்டுமோ அதை எழுதுவது.

என்னை பொறுத்தவரை தமிழில் ஒரே ஒரு எழுத்தாளர்தான் தன் கருத்தை, தன் கொள்கையை சொல்வதற்கான சாதனமாக தன் எழுத்தை மிக எளிமையாக, வலிமையான கருத்துக்களோடு தெளிவான முறையில் கையாண்டார்; அவர் தந்தை பெரியார்.

ஒரு எழுத்தாளன் தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்து எழுதினால், அவன் ஒரு சிந்தனையாளனாக உயர்கிறான் என்பதைதான் பெரியாரின் எழுத்துக்கள் நிரூபித்தது. பெரியார் தன்னை ஒரு எழுத்தாளனாக எண்ணயதில்லை. எழுதுவது பேசுவதை ஒரு தகுதியாக அவர் என்றும் கருதியதில்லை. அதனால்தான் அவர் மாபெரும் சிந்தனையாளனாக உயர்ந்து நின்றார்.

தான் எழுதுகிற விசயத்திற்கு உண்மையாக இருக்கிற எழுத்தாளன் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான். உண்மையாக இல்லாதவன் எழுத்தாளனாக தேக்கமடைகிறான்.

நாகூர் இஸ்மாயில்:
எழுத்தளான் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான் என்பதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா?

தொடரும்..

2 comments:

கோவி.கண்ணன் said...

கடவுள் ஏற்பாளர்கள் எப்படி கடவுள் எதிர்பாளர்களிடம் (கள்ளக்) கூட்டணி வைத்துக் கொள்கிறீர்கள் ?

பை த வே இந்தப் பதிவில் அது தொடர்பான கேள்விகள் எதுவும் இல்லை என்பது வேறு விசயம் என்பது எனக்கு புரிகிறது.
:)

nagoreismail said...

நாங்கள் (முஸ்லீம்கள்) தந்தை பெரியாரோடும் அவர்களின் தொண்டர்களோடும் உரையாடுவதையே கள்ளக் கூட்டணி என்று விமர்ச்சிக்கிறீர்களா?

உங்கள் மனம் இஸ்லாமிய வெறுப்பாளர்களின் மனங்களோடு கள்ளக் கூட்டணி வைத்திருப்பதன் அடையாளமா இது?

3 பகுதிகள் வரை வரும் என்பது தலைப்பிலேயே தெளிவாய் இருந்தும் உங்கள் இந்த அவசரம் எங்களின் கூட்டணி மீதுள்ள தங்களது வெறுப்பை அப்பட்டமாய் வெளிப்படுத்துகிறது.