Tuesday, July 06, 2010

சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை - வே.மதிமாறன் பேட்டி - பகுதி 2/3

நாகூர் இஸ்மாயில்:
எழுத்தளான் சிந்தனையாளனாக வளர்ச்சி அடைகிறான் என்பதை இன்னும் விரிவாக விளக்க முடியுமா?

வே. மதிமாறன்:
உலகத்துல எங்கே சென்றாலும் இரண்டு விதமான உணவு முறைகள் இருக்கும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். இந்த உணவு முறை பழககம் சமூக பழக்கமாகவோ குறிப்பிட்ட மக்களின் வழக்கமாகவோ இருக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் சைவமாக இருப்பார். அதே குடும்பத்தை சார்ந்த இன்னொரு உறுப்பினர் அசைவமாக இருப்பார். ஆனால் இந்திய சமூகத்தில் மட்டும் மூன்று விதமான உணவு முறைகள் உள்ளது. அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

நாகூர் இஸ்மாயில்:
தெரியல..

வே. மதிமாறன்:
ஒன்று சைவம், இரண்டாவது அசைவம். இன்னொன்று இருக்கிறது அசைவத்திலேயே இன்னொரு பிரிவு மாட்டு கறி சாப்பிடுபவர்கள்.
சைவம் சாப்பிடுபவன் உயர்ந்தவன். அவனை விட உயர்ந்தவன் யாரும் கிடையாது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் அவனுக்கு அடுத்த நிலை. மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் எல்லோரை விடவும் மட்டம் என்கிற நிலை இருக்கிறது.

சைவம் சாப்பிடுகிறவன் அசைவம் சாப்பிடுகிறவனை எப்படி அருவருப்பாக பார்க்கிறானோ, அதுபோலவே ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவன் மாட்டுக்கறி சாப்பிடுகிறவனை அருவருப்பாக பார்க்கிறான்; இந்த மோசடி உலகில் எங்காவது உண்டா?

இதன் காரணத்தால்தான் குறிப்பாக நகர் புறங்களில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கூட ரகசியமாகத்தான் சாப்பிடவேண்டியதாக இருக்கிறது.

இந்த மோசமான முறை இந்தியாவில் மட்டும் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் அக்கறை காட்டுவதில்லை. இந்த முறை ஏன் இந்தியாவில் மட்டும இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படிக்க வேண்டும்.

எத்தனை முன்னணி எழுத்தாளர்கள் அம்பேத்கரை படிச்சிருக்காங்க.... பெரும்பாலும் பல எழுத்தாளர்கள் இந்துமதம் பார்ப்பனியத்தின் நுட்பத்தை புரிந்து கொண்டு எழுதுவதில் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் அல்லது அக்கறை அற்று இருக்கிறார்கள் அல்லது அதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

நாகூர் இஸ்மாயில்:
பெரியாரின் முதன்மையான கருத்து என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

தொடரும்..

No comments: