Tuesday, July 06, 2010

பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதி ஒழிப்புதான் - வே.மதிமாறன் பேட்டி - பகுதி 3/3

தோழர் வே.மதிமாறனின் தொலைபேசி உரையாடலின் முந்தைய பகுதிகளின் இணைப்பு:
முதல் பகுதி: http://nagoreismail786.blogspot.com/2010/07/13.html 
இரண்டாம் பகுதி: http://nagoreismail786.blogspot.com/2010/07/23.html

******************************************************

நாகூர் இஸ்மாயில்:
பெரியாரின் முதன்மையான கருத்து என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

வே. மதிமாறன்:
காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியபோது,‘ ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் இருவரைப்போலவே காங்கிரசும் தீவிரமான பக்தர்கள் நிரம்பிய கட்சியாக இருக்கிறது; கடவுள் இல்லை, இல்லேவே இல்லை; அதனால் நான் கட்சியை விட்டுபோகிறேன்’ என்று சொல்லி வெளியேறவில்லை.

ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் உட்பட்ட ஒட்டுமொத்தக் காங்கிரசும் சாதிவெறி கட்சியாக இருக்கிறது என்பதினால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். சாதி ஒழிப்புற்காகத்தான் தனி இயக்கமும் கண்டார். இறைநம்பிக்கை கொண்ட நீதிக்கட்சி தலைவர்களை அவர் ஆதரித்ததும் அதன் பொருட்டே. நீதிக்கட்சி தலைவர்களின் இறைநம்பிக்கையில் தலையிடமால் அவர்களின் சாதி உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருககு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியதும் அதனால்தான்.

பெரியாரின் கருத்துக்களில் முதன்மையானது சாதி ஒழிப்பு தான். சாதி ஒழிப்பு வழியாகத்தான் பெரியார் கடவுள் மறுப்புக்குள் வருகிறார். அதன் பிறகு கடவுள் இல்லை என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு முழுமையான பகுத்தறிவாளராக திகழ்ந்தார்.

ஆக, பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதிஒழிப்புதான்.

நாகூர் இஸ்மாயில்:
ஆனாலும் கடவுள் மதம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்தாரே?

வே. மதிமாறன்:
சாதாரண பக்தனின் இறைநம்பிக்கையைவிட, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனின் மத நம்பிக்கை ஆபத்தானது. கிராமத்தானின் இறை நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால், அது அடுத்த மதக்காரனை துன்புறுத்துகிற அளவிற்கு ஆபத்தானது இல்லை. அவன் கும்பிடுகின்ற எந்த கடவுளிடமாவது 'நான் நல்லா இருக்கணும், ஊர்ல மழை பெய்யணும்' என்று வேண்டிக் கொண்டு அவன் பாட்டுக்கு போய் விடுவான்.

ஆனால் அவனிடமிருப்பதில் மோசமானது, சாதீய உணர்வு தான். ஏனெனில் தன்னுடைய சுய சாதியை முன்னிறுத்த நினைப்பவன் மற்ற மனிதர்களை தனக்கு கீழாக நினைக்கிறான். இது மிகவும் கேவலமானது. ஆபத்தானது.

ஒரு அப்பாவி பக்தனுடைய கடவுள் நம்பிக்கையை அவனுடைய சாதி உணர்வு, ஆபத்தானதாக மாற்றிவிடுகிறது. தாழ்த்தப்பட்டவர்களை தங்களின் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களை தங்கள் கடவுள்களை வழிபட தடுப்பதும், அப்படி மீறி வழிப்பட்டால் அவர்களை கொலை செய்கிற அளவிற்குக்கூட சாதி உணர்வு அவனுடைய இறைநம்பிக்கையை பயங்கரமானதாக மாற்றிவிடுகிறது.

அதனால்தான் பெரியார் சாதிஒழிப்பின் நோக்கத்தில்தான் இறைமறுப்பையும் தீவிரப்படுத்தினார். பெரியாரின் 70 ஆண்டு கால கடின உழைப்பால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், முற்போக்கானவர்கள் மட்டுமல்ல; பிற்போக்கான சாதி சங்கத் தலைவர்கள்கூட தனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில்லை. அப்படி போட்டுக் கொள்வதற்கு விருப்பம் இருந்தாலும், அதை பகிரங்கமாக வெளிபடுத்த வெட்கப்படும்படியான நிலையை ஏற்படுத்தினார்.

ஆனால் இன்று சாதி உணர்வு பழைய மாதிரி மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. ‘சாதி உணர்வோட ஒருவன் முற்போக்கனவனாக இருக்கலாம்’ என்பது மாதரியான போக்கு தீவிரமாக வளர்ந்து வருகிறது.


முற்போக்கனவர்களாக காட்டிக்கொள்கிறவர்கள் சாதி சங்கத் தலைவர்களை ஆதரிக்கிறபோக்கும் வளர்ந்து வருகிறது.

நாகூர் இஸ்மாயில்:
அரசியில் ரீதியாக நீங்கள் செய்கிற இப்போதைய பணி...?



வே. மதிமாறன்:
முக்கியமாக அம்பேத்கரின் கருத்துக்களை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறேன். அதற்கு எனக்கு ஆதரவை விட நிறைய எதிர்ப்பும், புறக்கணிப்பும்தான் கிடைக்கிறது.

நாகூர் இஸ்மாயில்:
"நீங்கள் அம்பேத்கரின் படம் போட்ட டி-ஷர்ட் கூட கொண்டு வந்தீர்களே?'

வே. மதிமாறன்:
ஆமாம், கிராமங்களில் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்ற மாபெரும் புரட்சியாளர்களின் படத்தை, சிலையை கூட எளிதாக திறந்து வைத்து விடலாம். அவர்கள் யார் என்று தெரியாததால்... அல்லது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல என்பதினாலும் அதற்கு எதிர்ப்பு இருக்காது.

ஆனால் இந்தியாவின் மாபெரும் தலைவரான அண்ணல் அம்பேத்கரின் படங்களை, சிலைகளை திறந்து வைத்தால் உடைத்து விட்டு போய் விடுவார்கள். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதும் அத்தோடு தலித்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார் என்பதும் சிலையை உடைப்பவர்களின் கோபத்தின் முக்கிய காரணமாக இருக்கிறது.

பொதுவாக, நான் எந்த ஒரு தனி மனிதரின் உருவப் படத்தையும் டிஷர்ட்டில் போட்டுக் கொள்வதை விரும்பாதவன். அப்படி யாருடைய படம் போட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் இல்லை. அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட சட்டையைதான் விரும்பி அணிந்தேன். அதை யாரும் அணிவதில்லை என்ற காரணத்தினாலும்; அதை அணிவது சாதி எதிர்ப்பு அரசியிலின் பிரச்சார வடிவம் என்ற காரணத்தினாலும்தான்.

அதை அணிந்து கொண்டு வெளியி்ல் சென்றுவருவதே வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. என் இனிய தோழர்களோடு இணைந்து அம்பேத்கர் டி சர்ட கொண்டுவந்ததை என் வாழ்க்கையின் முக்கியமான விசயமாக கருதுகிறேன்.

நாகூர் இஸ்மாயில்:
"தாழ்த்தப்த்தப்பட்ட அந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள்?"

வே. மதிமாறன்:
தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது போல் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. இது எப்படி என்றால் இந்துமத வெறியர்களின் கொடுமையை, இந்து மதத்தை விமர்சித்து இஸ்லாமியர்களிடம் பேசுவதை போல் உள்ளது. அப்படி பேசுவதால் பேசுகிறவர்களுக்கு வேண்டுமானால் நல்ல பயன், லாபம் இருக்குமே தவிர, சமூகத்திற்கோ, அந்த மக்களுக்கோ பயன் இல்லை.

எந்த தாழ்த்தப்பட்டவராவது, என்னை தொட்டால் தீட்டு என்றோ என்னை ஊருக்கு வெளியே வையுங்கள் என்றோ சொன்னதுண்டா? தீண்டாமையைப் பற்றி தாழ்த்தப்பட்டவர்களிடம் போய் பேசாமல் எவன் சாதியை கொண்டாடுகிறானோ, தீண்டாமையை கடைப்பிடிக்கிறானோ அவனிடம் போய் பேசுவது தான் முறையாகும்.

         -தோழரின் உரையாடல் பற்றிய பதிவுகள் முற்றுப் பெறுகிறது-

No comments: