Sunday, April 18, 2010

நாம் கும் ஜாயேகா - பெயர் மறைந்து விடும் - இந்தி பாடல்

 கார் மெக்கானிக்காக இருந்து ஸ்பானரை பிடித்துக் கொண்டிருந்த 'சம்பூரன் சிங் கல்ரா' என்ற பஞ்சாபியான அவர் 'குல்ஜாரா'க மாறி பேனாவை பிடிக்க ஆரம்பித்த போது மழையாக பொழிந்தது கவிதை.

அப்படி ஒரு மழை தான் இந்த பாடல்.
நனைந்து விடுங்கள்
குல்ஜார் காய்ச்சல்
வந்தால்
மீண்டும் நனைந்து விடுவது நன்மை பயக்கும்..

 

நான் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்:

பல்லவி:

Naam gum jaayegaa,
Cheharaa ye badal jayegaa
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பெயர் மறைந்து விடும்
முகம், என் தோற்றம் மாறி விடும்
என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்
(which means - if you bother to remember)

சரணம் 1:
Waqt ke sitam, kam hasin nahin
Aaj hain yahaan, kal kahin nahin
Waqt se phare agar, mil gaye kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

(கண்ணீரை தரும்)
காலம் நேரம் கொடுமையானது,
ஆனால் அதுவே அழகானதும்


இன்று இங்கே (இம்மையில்) இருக்கின்றோம்
நாளை இருக்க போவதில்லை


கால நேரங்களுக்கு
கட்டுப்படாத
ஒரு உலகத்தில்
நாம் சந்திக்கக் கூடும்
(அப்போது...)


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 2:
Jo guzar ga_i, kal ki baat thi
Umr to nahin, ek raat thi
Raat kaa silaa agar, phir mile kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

எது நடந்ததோ
அது
நேற்றைக்கு சொந்தமானது


அது ஒரு இரவை
போன்றது
வாழ்க்கை முழுமைக்குமானது
அல்ல


அந்த இரவின் தொடர்ச்சி
திரும்பினால்,
நாம்  மீண்டும்
(அந்த இரவை)
அனுபவிக்கலாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 3:
Din dhale jahaan, raat paas ho
Zindagi ki lau, uunchi kar chalo
Yaad aaye gar kabhi, ji udaas ho
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பகலின் நேரங்கள்
முடிவுரை
எழுதும் போது -
இரவு
எப்போதும்
அருகிலேயே
இருக்கும்
(உடனே
தொடங்கிவிடும்)


(அப்போது)
உன்
வாழ்க்கை எனும் விளக்கின்
ஒலியை
அதிகமாக்கி விடு


உனக்கு கண்ணீரை
தந்த
அந்த கனங்களை
(அந்த விஷயங்களை)
நினைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

Thursday, April 15, 2010

பாபு Vs. பாபா

நான் நினைத்த கருத்தை எழுதுவதற்கு இரண்டு விஷயங்கள் எனக்கு உறுத்தலாய் இருக்கின்றன.
1. இறந்தவர்களை பற்றி எதுவும் தவறாக எழுதிவிடுவோமோ என்ற ஐயம்
2. ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசுவது

அப்படி எதை பற்றி எழுதப் போகிறேன் என்று கேட்டால்,

அக்டோபர் 2 Vs. ஏப்ரல் 14

காந்தியை பற்றிய படம் 18 கோடியில் செலவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. சமீபத்தில் கூட அதாவது ஜுலை 2006ல் ஒரு படம் வெளியானது, "லகே ரஹோ முன்னா பாய்' என்ற இந்தி படம் தான் அது. அதில் 'பாபு (- இது இந்தி பாபு -அப்பான்னு அர்த்தம்)' வின் செய்திகளை, "மனிதநேயம், உண்மை, வன்முறையின்மை போன்ற செய்திகளையெல்லாம் ரொமான்ஸ் கலந்து சொன்னார்கள்.

ஆனால் பாபா சாஹேபை பற்றி எடுத்து முடித்த ஒரு படத்தை வெளியிடுவதற்கு ஒன்றரை வருடம் ஆனதாக அந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஜாபர் படேல் கூறுகிறார்.

அது மட்டுமல்ல மேலும் அவர் கூறும் போது, 'அம்பேத்காருடைய கருத்துக்களை அதன் உண்மையான வடிவில் சித்தரிப்பது மிகவும் கடினம்' என்றும் கூறியிருந்தார்.

“When I made a film on Ambedkar, I realised it’s indeed difficult to do depict his ideas and achievements in their true light. My film took one-and-half-years to be released in the country due to censorship issues. In this country, it is extremely difficult to portray Ambedkar’s philosophy in its true sense,” said Patel.


“To me Lage Raho Munnabahi is too much a romanticised version of the whole Gandhian philosophy. Dr Ambedkar’s philosophy is much deeper than that. Ambedkar did not just talk about Dalits, but he also spoke about human rights,” said Jabbar Patel.


அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்,
1. அம்பேத்காரை பற்றிய படம் என்றால் கிட்டதட்ட காந்தியை வில்லன் போல் காட்டியாக வேண்டும்
2. அம்பேத்கார் தலித் மக்களின் உரிமைக்காக போராடினார் என்பதாக இருக்க கூடும்

ஆனால் எது எப்படியோ இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்று போற்றப்படும் காந்தி அவர்களை நினைவு கொள்கின்ற அளவுக்கு அல்லது  மதிக்கின்ற அளவுக்கு இந்தியாவின்  "சட்ட வரைவு குழு"விற்கே தலைவராக இருந்து இந்திய நாட்டின் உச்ச சட்டத்தையே (Supreme Law) வடிவமைத்த (உலகிலேயே நீளமான சட்டம் - the lengthiest Constitution in this world - 22 பகுதிகளாக 440 ஆர்டிகிள்ஸ் - 12 அட்டவணையுடன் 96 திருத்தங்கள் - ஆதாரம்: விக்கிபீடியா) டாக்டர் அம்பேத்காரை நினைவு கொள்கிறார்களா அல்லது மதிக்கின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அப்படி மதிக்க விடாமல் அவர்களை எது தடுக்கின்றது என்பதை அறிவது அப்படி ஒன்றும் அம்பேத்காரின் படத்தை வெளியிடுவது போன்று கஷ்டமான காரியமல்ல. ஆனால் அம்பேத்காரை  கொண்டாட  விரும்பாதவர்கள்  அவர்களை அறியாமலே 26 சனவரி தினத்தை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த கொண்டாட்டம் என்னளவில் அம்பேத்காரை கொண்டாடுவது போல் தான்.

அம்பேத்கார் 14 ஏப்ரல் 1891ஆம் ஆண்டு மஹர் என்றழைக்கப்படும் தீண்டத்தகாததாக ஆக்கப்பட்ட குலத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் 'ம்ஹௌ' எனும் ஊரில் பிறந்தார். பிறப்பின் மீதே திணிக்கப்பட்ட இந்த வன்முறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதுமே போராடினார்

என்னை பொறுத்தவரை அவரின் போராட்டமே அவர் நன்றாக படித்ததில் தொடங்குகிறது. இன்றைக்கும் அம்பேத்காரை பின்பற்றுபவர்கள் அல்லது மதிப்பவர்கள் தொடங்குகின்ற புள்ளியாக நன்றாக படிப்பது என்பதிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்றைக்கு அவர் படித்த சூழ்நிலையை படித்து பார்த்தால், கண்ணீர் கொதிக்கும். ஆசிரியரின் உதவி கிடைக்காது, பள்ளிகூடம் உள்ளேயே வர முடியாது இதையே படிக்க முடியலை இன்னும் கொடுமை என்ன என்றால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் மேல்சாதியினர் மேலே நின்று கொண்டு தண்ணீர் ஊற்றுவார்களாம், இவர்கள் கீழே இருந்து கொண்டு குடிக்க வேண்டுமாம், ஏனெனில் அந்த தண்ணீரையோ அல்லது குவளையையோ தொட கூடாது என்பதே காரணமாக இருந்தது.

இந்தியாவிலேயே அரசாங்க பள்ளியில் சேர்ந்து 1907ல் முதன் முதலாக மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர் என்ற பெயரை வாங்கினார். இது அன்றைக்கு அந்த சமூகத்துக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது.

1908ல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரி படிப்பை படித்து முடிக்கிறார். 1912ல் அவர் எக்கனாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டத்தை பெறுகிறார். அதன் பிறகு பரோடா அரசாங்க வேலை ஏற்றுக் கொள்கிறார்.

அவர் இஸ்லாத்தை பற்றியும் குறைகள் சொல்லியிருக்கிறார், 'பர்தா அணிவது, அடிமைகள் முறை' - இவைகள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி கண்டித்திருக்கிறார்.

14ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு நாக்புர் எனும் ஊரில் தலித் மக்கள் 500,000 பேருடன்  பவுத்த மதத்தை தழுவினார்.

அன்றைக்கு அவர் மிகப் பெரிய கூட்டமாக மதம் மாறியது இன்றைக்கும் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்வதனால் தான் 'மத மாற்ற தடை சட்டமே வந்தது'

டிசம்பர் 6, 1956 ஆம் ஆண்டு டில்லியில் அவருடைய வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார் என்று அறியப்படுகிறது.

மேலும் நான் இன்றைக்கு படித்த கருத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டேன், நான் அரசியலில் நிபுணர் அல்ல, நான் சொல்வதில் தவறுகள் இருக்கலாம், எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.


அம்பேத்கார் இந்தியர்கள் அல்லது இந்திய பூர்வீகம் என்று சொல்லி கொள்ளும் ஒவ்வொருவராலும் மதிக்கப்பட வேண்டியவர் என்பது மட்டுமே அது.

Monday, April 12, 2010

மிஸ்டர் பீன்

ரோவான் செபாஸ்டியன் அட்கின்சனாக 6 சனவரி 1955ல் இலா மேவுக்கும் எரிக் அட்கின்சனுக்கும் மகனாக நியுகேஸ்டில்-அபான்- டைனில் (யுகே) பிறந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிட்டியில் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் முடித்தார். அங்கே ரிச்சர் கர்டிஸ் என்ற திரைக்கதை ஆசிரியரை சந்திக்கிறார். அவருடன் கிடைத்த அந்த சந்திப்பு அவர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

அவருடன் சேர்ந்து துணை திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியதோடு 'நாட் த நைன் ஓ கிளாக் நியுஸ்' (1979 - 1982) எனும் தொலைகாட்சி தொடரில் (27 எபிஸோட்ஸ்) நடித்தார். அந்த தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு ரோவான் அட்கின்சனுக்கு 'பிபிசி பெர்சானலிட்டி ஆஃப் த இயர்'  என்றும் பெயர் வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் நிறைய தொலைகாட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு உலகம் முழுக்க இரசிகர்களை பெற்று தந்தது அவர் 'மிஸ்டர் பீன்' எனும் டிவி தொடரில் 1990 ஆம் ஆண்டில் நடித்த பிறகு தான்.

வாழ்க்கை படகு படத்தில் வரும் அருமையான பாடல் 'சின்ன சின்ன கண்ணனுக்கு' என்ற பாடலில் 'பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா'  என்று வரும். மிஸ்டர் பீன் என்ற இந்த தொடரில் அவர் வளர்ந்த குழந்தையாக வந்து அவர் படும் அவஸ்தைகள் தான் கதை.

இந்த தொடரில் முதலில் அவர் வானத்திலிருந்து கீழே குதிப்பது போல் காட்டுவார்கள். அது அந்த நாடகத்தை பார்த்தால் அவர் அப்படி தான் உண்மையிலேயே குதித்தாரோ என்று எண்ணத் தோன்றும்.

அவரை வைத்து எத்தனையோ நகைச்சுவைகள் இணையத்தில் உலா வரும். அப்படி வந்தவைகளில் சில இதோ உங்கள் பார்வைக்கு:

மிஸ்டர் பீன் மருந்து கடைகாரரிடம்: என்னுடைய பேரனுக்கு விட்டமின் மாத்திரை கொடுங்க

மருந்து கடைக்காரர்: விட்டமின் A யா, B யா அல்லது C யா?

மிஸ்டர் பீன்: எதா இருந்தாலும் பராவியில்லை, என் பேரனுக்கு அல்ஃபபேட்ஸ் எல்லாம் தெரியாது
-------------

டாக்டர்: உங்களது தாயார் இறந்து விட்டார்

மிஸ்டர் பீன் கதறி அழுகிறார்.

மிஸ்டர் பீனின் நண்பர்: என் ஆழ்ந்த இரங்கல், நண்பரே!

இரண்டு நிமிடம் கழித்து மிஸ்டர் பீன் இன்னமும் வேகமாக கதறி அழுகிறார்

நண்பர்: ஏன், திடீர்ன்னு என்னாச்சு?

மிஸ்டர் பீன்: இப்ப தான் எங்கூட பொறந்த தங்கச்சி கால் பண்ணுனா, அவங்க அம்மாவும் எறந்து போயிட்டாங்களாம்
-----------

மிஸ்டர் பீனின் மகன்: அப்பா, சக்ஸஸ்ஃபூலுக்கு (Successful) ஒரு S வருமா, இல்லை இரண்டு S வருமா?

மிஸ்டர் பீன்: எதுக்குப்பா சந்தேகம், எதுக்கும் மூணு Sஆ போட்டுடேன்
--------

நண்பர்: ஏன்ப்பா, எங்கிட்டேந்து வீடியோ டேப்லாம் எடுத்துட்டு போனியே, ஓக்கேயா?

மிஸ்டர் பீன்: என்ன ஓக்கேயே, நான் பேய் படமா இருக்கும்னு நெனைச்சு எடுத்துட்டு போனேன், போட்டா ஒரு காட்சி கூட வரலை

நண்பர்: அப்படியா? ஆமா, நீ என்னா கேஸட் எடுத்துட்டு போனே?

மிஸ்டர் பீன்: அதெல்லாம் யாருக்கு தெரியும், ஹெட் கிளீனர்ன்னு எழுதியிருந்துச்சு.
--------

மிஸ்டர் பீன் எனும் இந்த தொடரில் நடித்த பிறகு அவர் மிஸ்டர் பீன் என்றே அறியப்பட்டார். அவர் திரையில் நம்மை சிரிக்க வைத்தாலும் நேரில் அவ்வளவாக பேச மாட்டாராம்.

தமிழ் சினிமாவில் ஹீரோ நல்லது செய்தால் நமக்கும் நன்மை செய்வார் என்று நம்பும் ரசிகர்களை போல் யுகேவிலும் ரசிகர்கள் மிஸ்டர் பீன் நேரிலும் நம்மிடம் சிரிக்க சிரிக்க் பேசுவார் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் சொன்ன பதிலானது, "மக்கள் நான் ஸ்டேஜில் சிரிக்க வைப்பது போல் நேரிலும் சிரிக்க வைப்பேன் என்று நம்புகிறார்கள். அப்படியல்ல, நான் உண்மையில் யாரிடமும் பேசாத ஒரு மாதிரி டல்லான ஆசாமி, ஒரு நடிகன் அவ்வளவு தான்.." என்பது போல் பதிலளித்தார்.

மிஸ்டர் பீனுக்கு சுனட்ரா சேஸ்ட்ரி என்ற மனைவியும் லில்லி பென்ஞமின் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கூட 'புதுப் புது அர்த்தங்கள்' படத்தில் மிஸ்டர் பீனிலிருந்து ஒரு காட்சியை காப்பி ரைட் அடித்திருப்பார். ஜனகராஜ் தாமதமாக விழித்து காரிலேயே பல் துளக்கி, பேண்ட் சட்டை எல்லாம் போடுவாரே அது அப்படியே மிஸ்டர் பீனில் வரும் காட்சி தான்.

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிபிஆர் செய்து ரகுவரன் உயிரை மீட்டெடுப்பாரே அதே போல் இங்கே மிஸ்டர் பீன் அவர்களும் ஒருவருக்கு சிபிஆர் செய்கிறார். சரியாக அல்ல, வேடிக்கையாக.

"மிஸ்டர் பீன் ரைட்ஸ் அகேய்ன்' என்ற தொடரில் வரும் காட்சி இது.




பின் குறிப்பு:
சரியான சிபிஆர் முறைக்கு இங்கே அழுத்தி டிரை பண்ணி பார்க்கவும்

Thursday, April 01, 2010

கடவுள் மறுப்பு - ஒரு கடவுளா? பல கடவுளா? -பெரியார்தாசன் - அப்துல்லாஹ்

நான் சொல்ல வரும் செய்திக்கு ஐஸ்-பிரேக்கர் போன்று உதவும் சில செய்திகளை கவனிப்போம்.

மு.மேத்தாவோ அல்லது கவிக்கோவோ சரியாக நினைவிலில்லை. பாபர் மசுதி இடித்த பிறகு கவிதை எழுதினார்கள்.

கடவுள் ஆலயத்தை
இடித்தான்
ஏன் இடிக்கிறாய்
என்று கேட்டேன்
கடவுள் ஆலயம்
அமைக்க என்கிறான்

- இப்படியாக எழுதியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த கோயிலையும் இடித்ததில்லை என்றும் சொல்ல கேட்டதுண்டு.

அடுத்து, இன்னொரு செய்தியும் உண்டு, "மத நம்பிக்கையுள்ளவர்கள் ஒன் கடவுள் தான் பெரிசு என் கடவுள் தான் பெரிசு என்று பார்ப்பதால் தான் சண்டையே வருகிறது.

அப்துஸ் ஸமது சாபு ஒரு முறை திராவிடர் கழகத் தோழர்களுடன் இணைந்து நடந்த கூட்டத்தில் பேசி விட்டு வரும் போது 'இவர்கள் கடவுள் இல்லை (லா இலாஹா - கடவுள் இல்லை) வரை வந்து விட்டார்கள். ஒருவனைத் தவிர (இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர) விற்கும் சீக்கிரமே வருவார்கள்' என்று பொருள் படும் படி சொன்னார்கள்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன், நாத்திகர்களின் கடவுள் மறுப்பு வாதங்களில் முக்கியமாக முன்வைப்பவை கடவுளை மனிதன் தன் கற்பனைக்கேற்ப படைத்தான் என்பதாகும். அதே போல் கடவுளுக்கு பதிலாக அல்லது கடவுளுடைய இடத்தில் அறிவியலை அல்லது இயற்கையை முன்வைப்பவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.

ஒரு கடவுளை அல்ல பல கடவுள்களை மனிதன் தன் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொண்டான் என்பதே இஸ்லாத்தின் குற்றச்சாட்டு ஆகும். அவ்வளவு தான் நாத்திகர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசம்.

திரு கோ.வி.கண்ணன் எனக்கு ஒரு முறை எழுதிய பின்னூட்டத்தில், 'இறைவனை மிதமிஞ்சிய புகழ்ச்சியும் சிலை வணக்கங்களும் ஒன்றே என்றும் முன்னது உருவகம் பின்னது உருவம் என்றும் எழுதியிருந்தார். அத்தோடு மட்டுமல்லாமல், உருவகங்களை அமைக்க தெரியாதவர்கள் தான் உருவம் அமைத்து கும்பிடுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார். அதை நாங்கள் இணைவைத்தல், பாவம் என்போம் என்றும் சுட்டியிருந்தார்.

இதை 'இணைவைத்தல், பாவம்' என்று சொல்லாமல் வேறு எதுவும் சொல்ல முடியாது சார். ஏன்னா உருவகம் என்கிறீர்கள். எப்படி நாங்கள் உருவகப் படுத்துகிறோம் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பதை விளக்க வேண்டும்.

ஏன்னா இல்லாத ஒன்றை நாங்கள் உருவகப் படுத்தவில்லை, உதாரணமாக, நீங்கள் வந்து யானை முகத்துடைய ஒரு உருவத்தை வரைந்து கடவுள் என்று வழிபடுகையில் நான் 'ஆணை முகத்துடையவனே' என்று உருவகப் படுத்தி வணங்கி வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களா?

அப்படி என்றால் நாங்கள் நிச்சயாமாக அப்படி செய்யவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உண்மையில் நாங்கள் இறைவனை சொல்லவில்லை. இறைவனை பற்றி இறைவனே சொல்வதாக குரான் ஷரீஃப் சொல்வதை நம்புகிறோம். அவ்வளவு தான்.

அப்படி என்ன குரான் ஷரீஃப் இறைவனை பற்றி சொல்கிறது என்றால்:

இறைவனாகிய அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

இணையற்றவன்! (6:163)

அவனுக்கு சந்ததி இல்லை (2:116)

அனைத்தையும் ஆக்கியவன் (2:29)

புகழுக்குரியவன் (1:1)

படைப்புகளின் போஷகன் (1:1)

என்றும் உள்ளவன் (55:27)

தீர்ப்பு நாளின் அதிபதி (1:3)

அனைத்தையும் நன்கு அறிந்தவன் (35: 38)

ஆற்றல் மிக்கவன் (16:77)

அவன் அறிந்ததை எவரும் அறிய முடியாது (27:65)

நேர் வழியில் செல்வோருக்குத் துணை புரிபவன் (9:115)

மானக்கேடானதை ஏவவில்லை (7: 28)

எளிதான கட்டளைகளை ஏவுவான் (2:128)

அமைதியின் பக்கமே அழைப்பவன் (10:25)

மேற்கூறிய இவையெல்லாம் உருவகங்கள் அல்ல, இல்லாததை மிகைப்படுத்தி அல்லது எக்ஸ்ட்ராவாக புகழ்ந்து கூறியது அல்லமேலே கூறியதை படித்தாலே கடவுள் என்ற அந்த கண்ணியம் இருக்கிறது.

இதுஅல்லாமல் குழந்தையா வந்து அதை திருடினார், துணிமணியை எடுத்துட்டு மரத்துமேலே ஏறினார், கல்யாணத்துக்காக வில்லை உடைத்தார், காதல் செய்தார், புள்ளை குட்டிகளை பெற்றார், - யாரு? கடவுள்..? - இதில் எங்கே இருக்கிறது கண்ணியமான இறைவன்? என்பது தான் நமது கேள்வி.


 இதில் பெரிய வேடிக்கை என்ன என்றால் உருவகம் அமைக்க தெரியாதவர்கள் என்று சொன்னது தான்.

நான்கு வேதங்கள் எனப்படுவதே கடவுளை துதி துதி என்று துதித்து ரிஷிகள் பாடிய ரிஷிகளின் துதிப்பாடலகள் தானே.

மற்ற வேதங்கள் எல்லாம் கடவுளை மனிதன் பாடியது தான், கடவுளை மனிதன் செய்தது, அதாவது நாத்திகர்கள் சொல்வது போல் மனிதனின் கற்பனை. அவ்வாறாகவே தான் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் தவிர, ஒரு கடவுள் போல் பல கடவுளும் இருந்து விட்டு போகட்டுமே என்று வைத்துக் கொள்வதற்கு கடவுள் பண்டம் பாத்திரமோ அல்லது மரம் செடி கொடியோ அல்ல. நாம் நம் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்வதற்கு.

இறைவனின் பேச்சு என்று வழங்கப்படுகிற குரான் ஷரீஃபில் 'ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்றே (5:73) அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப் படுகிறது.

ஒரு சிற்பியையோ அல்லது ஓவியரையோ அழைத்து எனக்கு கடவுள் படம் செய்து அலல்து வரைந்து தாருங்கள் என்று கேட்கிறீர்கள் என்று வையுங்கள்.

அவர் 'எந்த கடவுள்?' என்று கேள்வி கேட்பார்.

சரி என்று ஏதாவது ஒரு கடவுளின் பெயரை சொன்னவுடன் அவரும் வரைந்து தருகிறார் என்று வையுங்கள். அவர் என்ன கடவுளை நேரில் பார்த்தாரா? நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனால் கடவுளையே வரையவோ செதுக்கவோ முடிகிறது அவர் வரைந்த கடவுளை விட வரைந்தவர் மேலானவரல்லவா?

பெருமானாரின் வாழ்வை நன்கு கவனித்து பார்த்தால் கடவுள் விஷயத்தில் ஒரு இறை கொள்கைக்கும் பல இறை கொள்கைக்கும் நடந்த போராட்டத்தில், விவாதத்தில், போரில் ஒரு இறை கொள்கைக்கு கிடைத்த வெற்றி தான் இஸ்லாமிய வரலாறு.

இந்த ஓரிறை கொள்கை என்பது தமிழுக்கு புதியதும் அல்ல. 'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்' திருமூலர் சொன்னதை அண்ணாவும் அறிமுகம்  செய்து  வைத்தது தான்.

இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுள் மறுப்பும் தவறு, பல கடவுள் இருப்பு என்று கொள்வதும் தவறு.

நாகூர் தர்ஹால் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னால் பாதுஷா நாயகம்  கபுருக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒரு முஸ்லிமிடம் 'உன் ரப் யார்?' என்று கேட்டால் என்ன விடை வருமோ (பாங்கு சொல்லியாச்சுன்னா அவர் எழுந்து நவாப் பள்ளிக்கோ அல்லது சின்ன ஹொத்துவா பள்ளிக்கோ போய் விடுவார்) அதே விடை தான் மக்காவுல கஃபதுல்லாஹ்வுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கிற ஒரு முஸ்லிமிடமிருந்தும் வரும். 'அல்லாஹ்' என்பதே அது.

பெரியார்தாசனாய் இருந்தவர் இப்போது பெரியார் நேசனாய் மாறியுள்ளார் என்பதே எனது கருத்து. இஸ்லாமும் பெரியார் பரப்பியது தான். ஆகவே, இதுவும் ஒரு வகையில் சுய மரியாதை தான். நான் யாருக்கும் அடிமையில்லை கொள்கை தான்.


இஸ்லாத்தை பொறுத்த வரை கடவுள் நம்பிக்கை கூட ஞானம் அல்ல தெளிவு அல்ல, அது எத்தனை கடவுள் என்ற உணமையில் தான் புதைந்து கிடக்கிறது ஞானம்.

அப்துல்லாஹ் சென்னை மக்கா பள்ளியில் பேசிய யுடியுப் காணொளியை நன்றிகளுடன் பதிவில் இணைத்துள்ளேன்.



















.

Monday, March 29, 2010

துளசி - என் கதை - இரண்டாம் பாகம்

துளசி - என் கதை - முதல் பாகம்

2 - திருப்பம்


'சுதாகருக்கும் எனக்கும் தான் திருமணம்னு சின்ன வயசுலேயெ பெரியவங்க பேசிக்கிடாங்க, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம், படிப்போம், அப்பலாம் சுதாகர் இல்லாமல் எதையும் நான் செய்ய மாட்டேன், அப்புறம் அவங்க வெளிநாடு பயணம் போன பிறகு எப்பவாவது போன் பேசிக்குவோம்.. ஆனா இந்த காதல்.. கல்யாணம்.. இத பத்தி எல்லாம் நாங்க எப்பவுமே பேசிக்கிட்டது கிடையாது..' என்றவள் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, 'இப்ப அத்தை கல்யாணத்த பத்தி பேச தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..' என்றாள்.

துரை மௌனமாக இருந்தான், அவனது முகத்தில் இருப்பது ஏமாற்றமா..? சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

துளசி அவனையே கவனித்து விட்டு கேட்டாள், 'என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க..' என்று.

துரை வாய் திறந்தான், வார்த்தை தடுமாறியது,, 'இப்ப எப்படி..?, உங்களுக்கு சுதாகர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே..?' தயங்கியவாறு கேட்டான் தரையையும் துளசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே..

துளசி துரையை கவனித்தாள், அவன் அவளின் பதிலுக்கு ஆர்வமாக இருப்பது தெரிந்தது, 'எனக்கு இப்ப இல்ல.. எப்பவுமே.. அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியம்..' என்றாள்.

துரை கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்து விட்டு, ' சுதாகர் இஸ் லக்கி..' என்றான்.

அந்த அத்தை அடுத்த முறை வரும் போது கல்யாணம் பேசி துளசியை கையோடு கூட்டிட்டு தான் போவேன் என்று துளசியின் பெற்றோரிடம் கறாராக சொல்லி விட்டு போயிருந்தார். அந்த அடுத்த முறை இப்போது வந்தது, கல்யாணம் சம்மந்தமாக அத்தை பேசிக் கொண்டிருந்தார், 'என் புள்ள சுதாகர பத்தி சொல்ல வேண்டியதே இல்ல.. அப்படியே இந்தி நடிகர் மாதிரியே இருப்பான், நிறைய செலவு பண்ணி எம்.பி.ஏ. படிக்க வச்சிருக்கோம், இப்ப நல்ல உத்தியோகத்துல இருக்கான், இன்னும் கொஞ்ச வருஷத்துல கம்பெனி சொந்தமா வைக்கிற அளவுக்கு பெரிய ஆளாயிடுவான்.. உங்களுக்கும் ஒரே பொண்ணு, நான் கேட்குறத கேட்டு நீங்க கொடுத்தா தான் இந்த கல்யாணத்துக்கே பெருமை, 300 பவுன் போட்டுடனும், பையனுக்கு கார் வாங்கி தந்துடணும், நுங்கம்பாக்கத்துல ஒரு பிளாட் அப்புறம் ரொக்கமா 20 லட்சம் கொடுத்துடுங்க, எல்லாம் நான் எனக்கு கேக்கல, உங்க மருமகனுக்கு தான், கடைசில பாத்தீங்கன்னா உங்க மகளுக்கு தான்..' என்றார்.

ராஜாராமன் லட்சுமியை பார்த்தார், லட்சுமியின் அகத்தில் விருப்பம் இல்லாதது அவரது முகத்தில் கண்ணாடி போல் தெரிந்தது.

அத்தை தொடர்ந்தார், 'கல்யாண செலவு பூரா உங்களோடது தான்.. நீங்க யோசிக்கவே வேண்டியதில்லை.. பட்டுன்னு சம்மதம் சொல்ல வேண்டியது தான்' ஓவராக உளறி கொட்டினார்.

ராஜாராமன் கையமர்த்தினார், 'ராஜம்.. துளசி எனக்கு ஒரே பொண்ணு.. என் கிட்ட இருக்கிறது எல்லாம் அவளுக்கு தான், ஆனா.. என் பொண்ணை மருமகளா எடுக்குறவங்க என் பொண்ண பத்தி தான் கேக்கணும், பேசணும், பொண்ண விட்டுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே பேசிக்கிட்டு இருக்கக் கூடாது..' என்றார்.

ராஜத்திற்கு புரியவில்லை, 'என்ன அண்ணே! இப்படி சொல்லிட்டே.. நம்ம சுதாகருக்கு வேற நல்ல இடத்துல இன்னும் கொட்டி கொடுக்குறேன்னுட்டு வரிசை கட்டி நிக்கிறாங்க.. நான் சொன்ன சொல் ஆச்சே.. சொந்தம் விட்டு போகூடாதுன்னு வந்தா.. நீ இஷ்டம் இல்லாத மாதிரி பேசறியே..'என்று கேட்க

'அப்படி நிறைய கொட்டி கொடுக்கிறேன்னு வந்தா நல்லா முடிச்சுக்க வேண்டியது தான்.. யாரும் தடுக்க போறதில்லை..' என்றார்.

'அப்படின்னா சரி.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊருலேந்து யு.எஸ். போய் செட்டிலான குடும்பத்திலேந்து கூட பேசி வருது.. எல்லாம் நம்ம சாதி சனம் தான்.. கல்யாணத்த ரொம்ப கிராண்டா நடத்துறேன்னு பேசிக்கிறாங்க.. நல்லா யோசிச்சுக்க.. ' என்றார்.

'இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல..' என்றவர் ராஜம் போனவுடன் லட்சுமியிடம் சொன்னார், 'இவ கேட்டத விட அதிகமா கொடுத்து நம்ம பொண்ண கட்டி கொடுப்போம்.. கவலைப்படாதே..' என்று.

லட்சுமி, 'நமக்கு எப்படியோ போகட்டுங்க.. சின்ன வயசுலேந்து சுதாகர் தான் இவளுக்குன்னு பேசுனது.. துளசி மனசுல ஆசய வளர்த்து இருந்தான்னா.. அவள்ட்ட ஒரு வார்த்தை கலந்துக்கறது நல்லது..' என்று.

ராஜாராமன் லட்சுமி சொல்வது தான் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

துளசி அழைக்கப்பட்டாள், நடந்த சம்பவங்கள் விளக்கி சொல்லப்பட்டாள், இப்பொழுது அவளது வார்த்தைக்காக காத்திருந்தார்கள், "என் கல்யாணம் உங்க ரெண்டு பேரோட இஷ்டப்படி தான் நடக்கும்..' என்று கல்யாண குணத்தோடு சொன்னாள்.

சில நாட்கள் கழித்து, சுதாகர் போன் பேசிய போது துளசி தான் எடுத்தாள்,

சுதாகர், 'யேய்.. துளசி என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. நீ அத்தை மாமா எல்லோரும் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்... நீ வரலேன்னா ஒன் கூட பேசவே மாட்டேன்....' இப்படியாக இன்னும் ஏதேதோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசிவிட்டு வைத்து விட்டான்.

சுதாகரின் மனைவி ராஜத்தை சரியாக மதிப்பதில்லை, 'எனக்கு டயர்டா இருக்கு.. நீங்க போய் காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க ஆன்ட்டி.. உங்க கையால தான் சாப்பிடணும்..' என்று மாமியாரை வேலை வாங்க ஆரம்பித்து விட்டாள். ராஜமும் முதலில் 'என் மருமகள் என் மேல ரொம்ப பிரியமா இருக்கா, என் கையால தான் எதுவும் சாப்பிடுவாள்' என்று வாய் நிறைய சொல்ல ஆரம்பித்தவர் போக போக தன்னை ஓரங்கட்ட தான் எல்லா வேலையும் என்று புரிந்தவுடன் வாயடைத்து போனார், 'ஐயோ தெரியாம சேத்துல கொண்டு போய் கால உட்டுட்டேனே...' என்று. கடைசியில் ராஜம் சொந்தங்கள் இருந்தும் பணக்கார அனாதை ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்.

கொஞ்ச நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த துரை கல்லூரிக்கு திரும்ப வந்த போது துளசியின் கல்யாணம் நின்று போன செய்தி எல்லாம் கேள்விப்பட்டு துளசியை பார்க்க வந்தான், துளசி கேட்டாள், 'ஆளே இளைச்சு போய், யாரோ மாதிரி ஆயிட்டீங்களே?, உடம்பு இப்ப எப்படி இருக்கு?'

துரை, 'இருக்குது.. அத விடுங்க.. உங்க கல்யாணம் சம்மந்தமா நான் கேள்விப்பட்டது பொய்யா இருக்கணும்னு விரும்பறேன்..' என்றான்.

துளசி அவன் முகத்தையே உற்று பார்த்து விட்டு சொன்னாள், 'அப்ப பொய் தான் சொல்லனும்'

இதற்கிடையில் துளசிக்கு வட நாட்டிலிருந்து ஒரு நல்ல இடத்தில் வரன் பேசி வந்தது. பேச்சுக்கள் எல்லாம் நல்ல விதமாக இருந்ததால் எல்லோருக்கும் பிடித்து போய் விட்டது. படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று முடிவானது. ஆனால், நடக்க இருக்கும் இந்த கல்யாணத்தில் துளசி பல கசப்பான அனுபவங்களை பெற போகிறாள் என்று அப்போது ஒருத்தர் கூட உணர்ந்தாரில்லை.

படிப்பு முடிந்தது..

கல்யாணம்..

ராஜம் கல்யாணத்திற்கு வந்திருந்தார், துளசி ராஜத்தின் காலை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டாள், 'கடவுளே! என் வீட்டுக்கு வர வேண்டியத இப்படி ஊர் பேர் தெரியாத எடத்துக்கு அனுப்பி விட நானே காரணமாயிட்டேனே..! காசு, பணம்ல என் கண்ண மறச்சுடுச்சு' என்று கண்ணீர் விட்டு புலம்பினார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்க துரைக்கு ராஜத்தை போலவே அழுது புலம்ப வேண்டும் போல் இருந்தது. ஏதோ ஒரு புதிய உணர்வு அவன் மனதில் மின்னலை போல் வெட்டி விட்டு போனது, இவன் அந்த உணர்வின் வெட்டில் துண்டு பட்டது போல் துடித்தான். அது காதலின் அவஸ்தை என்று அவன் உணர்ந்த போது துளசி மூர்த்தி என்பவருக்கு சொந்தமாகி இருந்தாள்.

தொடரும்

Saturday, March 20, 2010

இக்ரா - (படியுங்கள் அல்லது ஓதுங்கள்)

இறக்கி அருளப்பட்ட குரான் ஷரீஃபின் முதல் வார்த்தையே 'இக்ரா (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read) என்பதாக உள்ளது.

கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - கல்வியே  செல்வத்துட்  செல்வம் என்பதும் தமிழர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று தான்.

கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்ற வித்தியாசத்தை பார்த்ததில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.

"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது

எங்கள் ஹஜ்ரத் சொன்னார்கள், 'சீன்'ங்குற வார்த்தைய தான் 'சீனா'ன்னு சொல்லி இக்கிறாஹா, 'சீன்'ங்குற வார்த்தைக்கு சிங்கத்துட நெத்தின்னு இன்னொரு அர்த்தம் இருக்கு, அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா இருக்கும்..' என்று

அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் அது சிங்கத்தின் நெற்றியில் இருந்தாலும் சரி' - என்று அர்த்தம். (இந்த அர்த்தத்தில் பார்த்தால் சீனாக்காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும்)

குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில் வருகிறதாம்.

இந்த கல்வி மார்க்க கல்வியை மட்டும் தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும் உண்டு. உண்மை அப்படி அல்ல என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லீம்கள் மீது போர் தொடுக்கிறார்கள் காஃபிர்கள் எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் (kafir means non-muslim). முஸ்லீம்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் கைதிகளாகி நிற்கிறார்கள் காஃபிர்கள்.

இந்த கட்டத்தில் நமக்கு நமது இந்த நவீன காலத்தில் நம் அறிவுக்கு உட்பட்டு போரில் சிறைப்பட்ட நமது தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை கண்கூடாக பார்த்தும் கையையும் காலையும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது.

பெருமானார் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள், 'முஸ்லீம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று.

இங்கே கவனிக்க வேண்டியது கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள், சற்று முன்னர் தங்களோடு போர் களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக் கொண்டவர்கள்.

வழக்கமாக சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தான், 'நான் அவனுக்கு (தோல்வி அடைந்தவருக்கு) சரியான அல்லது நல்ல பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால் அன்று பத்ரு போரில் தோல்வி அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தார்கள்.

முஸ்லீம்கள் அவர்கள் பெற்ற வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடவில்லை. மாறாக தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவனாக பாடம் கற்றுக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.

படிக்க வரக்கூடாது உங்களுக்கு கல்வி கிடையாது என்று கல்வி மறுக்கப்பட்ட மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால்  அந்த  சிறந்த பாடத்தை புரிந்து கொள்ள முடியும்.

அதுவும் தவிர இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் முஸ்லீம்களுக்கு என்ன இஸ்லாமிய ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள். உலக கல்வியை தான் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பள்ளிவாசலானது முஸ்லீம்கள் தொழுத நேரம் போக அன்று முதல் பகுதிநிலை பள்ளிகூடமாகவும் மாறியது அதாவது ஜாமிஆவாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தான்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிவாசல் பகுதி நேர வகுப்புகள் (பார்ட் டைம் கிளாஸ்) நடக்கும் இடமாக மாறியது, அந்த வகையில் பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு பார்ட் டைம் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நான் அறிகிறேன்.

இன்றைக்கு முதியோர் கல்வி, Adult Learning, continuous learning, life long learning   என்ற  கல்வி  முறைகளுக்கெல்லாம் பெருமானார்  அன்று  வகுத்து  தந்த  திட்டம் தான் முன்னோடி.

இதெல்லாம் ஒரு புறமிருக்க என் வகுப்பில் நான் பாடம் நடத்தும் போது ஒருவர் உறங்கி கொண்டிருந்தார். (முழிச்சிக்கிட்டிருந்தா தானே நியூஸ் என்கிறீர்களா?)

நான் அவர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் 'அவரை எழுப்பி விடுங்கள்' என்று சொன்னேன்.

அவரும் எழுப்பி விடவே, திடுக்கிட்டு எழுந்திருந்த அவர், 'சாரி சார், அசந்துட்டேன்..' என்றேன்

நான், 'என்னா அசந்துட்டேன்.. நான் என்ன சண்டை காட்சியா நடத்தி காட்டுனேன்..' என்று சொல்லி விட்டு 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன்

அவர் உடனே 'காமராஜ்' என்றார்

நான் சொன்னேன், 'என்னங்க காமராஜ் தான் கல்வி கண்ணை தொறந்தாரும்பாங்க.. நீங்க என்னடான்னா கண்ணை மூடிட்டிங்களே.." என்றேன்

Sunday, March 14, 2010

நேசக்குமாருக்கு.... வித்தியாசம் இருக்கிறது..

முதலில் சிகப்பு எழுத்தில் இருக்கும் இந்த செய்தியை படியுங்கள். இது திண்ணையில் நேசக்குமார் என்பவர் எழுதியது.

'நான் கடவுள்' என்று ஒரு நபி அல்லது இறைதூதர் சொல்லிக்கொள்ளவில்லை என்று வாதிடலாம். 'நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.


படித்துவிட்டீர்களா?.. இந்த கருத்தை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று ஆச்சர்யமா இருக்குமே?
 
அது வேறொன்றுமில்லை. மேப்புடியான் நடிகை ரஞ்சிதாவோடு "யாரும் விளையாடும் தோட்டம் தினந்தோறும் ஆட்டம் பாட்டம்.." என்று பாடிய பாட்டு பட்டையை கிளப்பியதை வைத்து யாரும் சாமியாரே வேண்டாம் என்று சொல்வது தவறு, எல்லா மதத்திலும் இது போன்ற குருமார்கள் இருக்கிறார்கள். அவங்களுக்கும் இவங்களுக்கும் வித்தியாசமில்லை என்கிற ரீதியில் நேசக்குமார் எழுதியது தான் இது. (இந்த கர்மத்தை எழுதியது என்றும் சொல்லலாம் புலம்பியது என்றும் சொல்லலாம்.)
 
இந்த நேசக்குமார் என்பவர் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற நாகூர் ரூமியில் புத்தகத்துக்கு எதிர்வினை எழுதி அறிமுக(மூடியா)மானவர். அவர் வீட்டில் அடுப்பு எறிஞ்சா கூட அது இஸ்லாமியர்கள் எறித்தது தான் என்பார். அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது பாச(க்கயிறு)ம்.
 
இதுக்கு முன்னாடி பிரேமானந்தா சுவாமிகள் கையும் களவுமா (இப்ப எல்லாம் கையும் சிடியுமா.. (ச்சீச்சீ.. கர்மம்..கர்மம்.. லோகம் ரொம்ப கெட்டு போயிடுச்சு..!) மாட்டிகிட்ட போது பழனிபாபா பேசிய பேச்சு ஒன்று நினைவுக்கு வருகிறது,
 
அவர் பேசுனாரு, 'பிரேமானந்தா என்கிட்டே வராம போயிட்டான், வந்தா ஒரு நிமிஷத்துல அவனுக்கு விடுதலை வாங்கி தந்திருப்பேன், அவன் என்னாய்யா பெரிய தப்பு பண்ணிட்டான், அந்த பொண்ணு என்னா சொன்னுச்சு.. சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திபுட்டாருன்னு சொல்லிடுச்சு.. நான் என்னா சொல்றேன்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு நரகத்த காமிச்சிருந்தா அரெஸ்ட் பண்ணலாம்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு சொர்க்கத்த  தானே காமிச்சிருக்கான்.." என்ற ரீதியில அவர் பேசிட்டு போயே போயிட்டரு.
 
சரி, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன், இந்த நேசக்குமார் என்னா சொல்றாரு,
 
''நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை."
 
அவரு வித்தியாசம் இல்லைங்கிறாரு.. நான் என்னா சொல்றேன்.. வித்தியாசம் இருக்குங்குறேன்.. எப்படின்னு கேக்குறீங்களா?
 
நான் கடவுள் என்று சொன்னது - பொய்
நன் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது நான் செய்வதெல்லாம் கடவுள் செய்ய சொல்லி செய்வது என்று சொன்னது - உண்மை
 
இது தான் அந்த வித்தியாசம்.. அவ்வளவு தான்.. மேட்டர் ஓவர்.
 
----------------------------------------------------------------------------------------
 
அடுத்து ஒரு முக்கியமான செய்தி.. எனக்கு பேராசிரியர் பெரியார் தாசன் என்றால் கொள்ளை பிரியம். அவர் இஸ்லாத்தை தழுவி விட்டாராமே? அவரையே நாங்கள் எல்லாம் தழுவிக் கொள்ள தயாராக இருக்கிறோம்
அவர் மீது இறக்கி வைத்த சூத்திர ஆடையை தூக்கி எறிந்து விட்டு இஹ்ராம் ஆடையை கட்ட தயாராகி விட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே!
 
http://arabnews.com/saudiarabia/article29180.ece
 
மேற்கூறிய இந்த லிங்க்லே போட்டிருக்காஹலே.. மர்ஹபா...

Wednesday, March 03, 2010

நூஹ் நபியின் கப்பல் தரும் பாடம் - படித்தவை.. பிடித்தவை..

Plan Ahead...

It wasn't raining when Noah (Alai) built the ark

Don't listen critics - Do what has to be done

Build on high ground

Two heads are better than one

Speed isn't always an advantage
The Cheetahs were on board but... so were the snails

If you can't fight or flee... float!

Take care of your animals as if they were the last ones on Earth

Don't forget that we're all in the same boat
When things get really deep, don't sit there and complain.. Shovel!

Stay below deck during the storm

Remember that the Ark was built by Amateurs and the Titanic was built by Professionals
If you have to start over, have a friend by your side

Don't miss the boat
No matter how bleak it looks, there's always a rainbow on the horizon

Sunday, February 28, 2010

மீலாதுந்நபி

1

உலகம் பூராவும் சவுதி அரேபியா தவிர மற்ற முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் மீலாதுந்நபியன்று விடுமுறையாம். அது சவுதி அரேபியா  நாட்டின் சிறப்புகளில் ஒன்றா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனக்கு நாகூரின் சிறப்புகளில் ஒன்றினை பற்றி தெரியும். அது, நாகூரில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மதரஸாக்களில் ஓதும் பிள்ளைகளும் பிறை கொடி ஏந்தி "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" முழங்கி இந்த மீலாது தினத்தை நினைவு கூர்வார்கள்.

சிறு வயதில் நாகூரின் தெரு பள்ளி தெருவில் அமைந்திருந்த வஹ்ஹாப் சாஹிப் பள்ளியின் சார்பாக பிறை கொடி ஏந்தி மீலாது விழாவில் கலந்து கொண்டு நாகூர் தெருக்களில் ஊர்வலமாக நடந்து சென்றதில் என் கால்களுக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். Too be child was very heaven.

மீலாதுந்நபி என்றால் நபி பெருமானார் அவர்கள் பிறந்த தினம் என்று கொள்ளலாம். மீலாது என்ற வார்த்தை 'விலாதத்' என்ற பிறப்பை குறிக்கும் அரேபிய வார்த்தையிலிருந்து வந்தது.

மீலாதுந்நபி என்றால் 'ஹேப்பி பர்த்டே' பாடி கேக்கில் வைக்கப் பட்டிருக்கும் மெழுகுவர்த்தியை கொளுத்தி அதை ஊதி அனைத்து கேக் ஊட்டி கொண்டாடும் நிகழ்வு அல்ல.

மீலாதுந்நபி என்பது பெருமானாரின் ஒட்டு மொத்த வாழ்வையும் நினைத்து பார்த்து அவர்களை பற்றி தெரியாத அறியாத பல செய்திகளை அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டதாகும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மீலாது விழா தான் பெரியோர்களை தலைவர்களை அவர்களின் பிறந்த நாளில் எப்படி நினைவு கூர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.

நாங்கள் தெரு பூராவும் கொடி ஏத்தி பேனர்களில் வார்த்தைகள் எழுத நாகூரின் சொல்லரசு மரியாதைக்குறிய மர்ஹும் மு.ஜாபர் முஹ்யித்தீன் மாமா அவர்களிடம் போய் நிற்போம்.

அவர்கள் பெருமானாரை பற்றி நூறு புகழ் வார்த்தைகள் எழுதி வைத்து உங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்பார்கள்.
திருக்குறள் மாதிரி இரண்டு அடியில் இருக்கும் அந்த வாசகங்களை தேர்ந்தெடுக்க நாங்கள் திணறி போவோம் எதை எடுப்பது எதை விடுப்பது என்று.

அரபு மண்ணின் அழியா காவியம்
மரபுக் கவிதை மாநபி வாக்கியம்

- இது ஒரு சோறு தான், பானை நிறைய சோறு இருந்தது. சொல்லரசு மாமா சமைத்தது.

2

இன்றைக்கு அறிஞர்கள் நிரம்பிய உலகமாகி விட்ட படியால் 'பெருமானாருக்கு பிறந்த நாள் விழாக்கள் தேவையா?, மார்க்க அனுமதி உண்டா?' என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள் கேள்விகளாலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.(excuse my language)

மார்க்கத்தை பிரிந்துவிடாது தூக்கி பிடித்து நிறுத்தும் (யாரும் சிரிக்க வேண்டாம்) இவர்களின் மீலாது பற்றிய ஆதார கேள்விகளுக்கெல்லாம்  பதில் சொல்லி மாளாது அல்லது எனக்கு அவர்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல தெரியாது.

எப்படி அவர்களால் என்னை இதுவரை மீலாது  வேண்டாம் என்று அத்தனை ஆதாரங்களை முன்வைத்தும் மீலாது பற்றிய என் எண்ணங்களிலிருந்து பின் வாங்க வைக்க முடியவில்லையோ அதே போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சரி, மீலாதுக்கு அதாவது பெருமானாரின் வாழ்வை நினைவு கூர்வது தான் மீலாது என்று நான் சொல்லியிருந்தேன் அல்லவா? அதை அந்த நினைவு கூர்தலை பற்றி சிந்திப்போம்.

மனைவி அல்லது லாத்தா அல்லது தங்கச்சி இப்படி யாரும் வீட்டில் பிள்ளை உண்டாகியிருந்தாலே நமக்கெல்லாம் சந்தோஷம் தாங்க முடியாது, அதுவும் அழுது கொண்டே குழந்தை பிறந்து விட்டது என்று வையுங்கள், நம் வீட்டின் சந்தோஷ சிரிப்பொலி சொல்லில் அடங்காது.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'நபி அவர்களே! நான் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன்' என்று.

இது உமர் (ரலி) அவர்களின் கூற்று மற்றுமன்று. ஒவ்வொரு முஸ்லீமின் வார்த்தையாகவும் எடுத்து கொள்ளலாம். அதனால் தான் பெருமானாரின் பிறப்பை நம் வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் சந்தோஷத்தை விட அதிகமான மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம்.

அது சரி, நாட்களை அல்லது பிறப்பை நினைத்து பார்ப்பது ஏற்புடையது தானா? என்றால் குரான் ஷரீஃபிலேயே விளக்கம் இருக்கிறது. இது ஃபாஸ்ட் புட் காலம் என்பதால் நம்மில் பலர் 'சீக்கிரம் சொல்லுங்கள், எங்கே டைரக்டாக இருக்கிறது, எனக்கு வேறு வெட்டி முடிக்கும் வேலைகள் நிறைய இருக்கிறது, இன்னும் நிறைய ஆதார கேள்விகள் தயாரிக்க வேண்டும் (state board questions, central board questions, international board questions எல்லாம் பிச்சை எடுக்கணுமாக்கும்)' என்கிற ரீதியிலேயே கேட்கிறார்களே தவிர சிந்தித்து பார்க்கவோ அல்லது ஆராய்ந்து அணுகவோ தயாராக இல்லை.

3

குரான்ஷரீஃப்
அத்தியாயம் 19
வசனம் 15

"அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக"

-  இறைவன் ஹஜ்ரத் யஹ்யா (அலை) அவர்களை பற்றி குறிப்பிடும் பொழுது தான் மேற்கண்டவாறு கூறுகிறான்.

இந்த 15ம் வசனத்திற்கு முந்தைய வசனங்கள் பூராவும் யஹ்யா நபியவர்களின் பிறப்புக்கு முந்தைய சம்பவங்களையும் அவர்கள் பிறந்த பின்னர் அவர்களின் எப்படி பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும்  பெருமை கொண்டவராகவோ அல்லது மாறு செய்பவராகவோ இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறான்.

இதை தான் முழுமையான மீலாதுந்நபி என்று சொல்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நபி ஈஸா (அலை) அவர்கள் தமக்கு தாமே மீலாது விழா கொண்டாடுகிறார்கள்.

குரான்ஷரீஃபின் அதே 19வது அத்தியாயம் 16வது வசனம் அன்னை மர்யம் (அலை) அவர்களை பற்றி நினைவு கூர்கிறது. தொடர்ந்து  33வது வசனத்தில் நபி ஈஸா (அலை) அவர்களின் பேச்சை பற்றி இறைவன் அவர்களின் வார்த்தையையே குறிப்பிடுகிறான்.

"நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் நான் உயிர் பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், சாந்தி என் மீது உண்டாவதாக" - என்று வசனம் வருகிறது.

இந்த 13வது வசனத்திற்கு முன்னர் மர்யம் அவர்கள் கர்ப்பமுற்றது, ஈஸா நபியின் அற்புத பிறப்பை எடுத்து சொல்லும் முறை எல்லாமே மீலாதின் முன் மாதிரிகள் தான்.

4

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 14 வசனம் 5ல் மூஸா நபியவர்களுக்கு இறைவன் அனுப்பிய செய்தியை பற்றி சொல்லும் போது,

"... இன்னும் அல்லாஹ்வின் நாட்களை பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக!..."  - என்று இறைவன் கூறுகிறான்.

அது என்ன நாட்கள் என்பதை பற்றி வசனம் 6ல் குறிப்பிடும் போது "பிர் அவ்னிடமிருந்து காப்பாற்றிய பொழுது இறைவனின் நிஃமத்துகளை நினைவு  கூர சொல்வதோடு, பிர் அவ்ன் புரிந்த கொடிய செயல்களை பற்றியும் எடுத்து சொல்கிறான், அவன் கொடிய வேதனை செய்தது, ஆண் மக்களை கொன்று விட்டு பெண் மக்களை விட்டு விட்டது -

- இப்படியாக இறைவன் மூஸா நபிக்கு அளித்த செய்தியில் சொல்கிறான். இதுவே என்னளவில் மீலாது தான்.

முஸ்லீமாகிய நாங்களும் எங்களுக்கு இறைவன் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூர்கிறோம். எங்களின் அருட்கொடை முஹம்மது நபிகளன்றி வேறொன்றும் இல்லை.

குரான் ஷரீஃபின் அத்தியாயம் 21ல் வரும் வசனம் 107ல் இறைவன் பெருமானாரை பற்றி கூறும் பொழுது,

"(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை" என்றல்லவா கூறுகிறான்.

நாம் நினைத்து பார்க்க அதாவது மீலாது செய்ய இறைவன் நமக்கு புரிந்த அருள் பெருமானாரின் பிறப்பன்றி வேறென்ன இருக்க முடியும்.

5

நாம் செய்யும் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பெருமானார் தான் அழகிய முன்மாதிரி. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் நாம் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி?

அல்குரான் ஷரீஃப்

அத்தியாயம்:33; வசனம்:56

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து(அருள் பிரார்த்தனை)ச் செய்கிறார்கள். (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஸலாமும் கூறுங்கள்.

பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்வதற்கு அல்லாஹ்வும் மலக்குமார்களும் தான் அழகிய முன்மாதிரி.

அல்லாஹ் கலிமா சொல்ல வில்லை, தொழுவதுமில்லை, 100க்கு 2.50 காசு ஜகாத்தும் கொடுக்கிறதில்லை, ஹஜ்ஜும் செய்வதில்லை.

அவன் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறான். நாமும் இறைவனோடு சேர்ந்து பெருமானாரை நினைவு கூர்வோம். இதுவும் மீலாது தான்.

(அல்லாஹும்ம சல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி)

6

பெருமானாரை பற்றி பேசுவதென்பதே நாவை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல தான் என்று நான் எழுதிய ஒரு கதையில் சொல்லியிருப்பேன்.

பெருமானாரை பற்றிய கவிதைகளில் நம்மை முழுமையாக சுத்தப்படுத்தும் சக்தி 'கஸீதத்துல் புர்தாஹ்'வுக்கு உண்டு என்று நம்புகிறேன்.

அந்த கஸீதாவிலிருந்து..

35 வது கஸீதா

எமது (நபி பெருமானார் (ஸல்)) அவர்கள் (நன்மையானவற்றை ஏவி, (தீமையானவற்றை) விலக்குபவராவர். எனவே, "ஆம்" அல்லது "இல்லை" என்ற வாக்கில்  அவர்களை விட வேறெவரும் சக்தி வாய்ந்தவரல்லர்.

50 வது கஸீதா

கனவுகளை கண்டு அவையே போதுமென திருப்தியடைந்து கொள்ளும் துயில் கொண்ட கூட்டத்தினர், இவ்வுலகில் அ(ந் நபிய)வர்களின் அந்தரங்கத்தை எங்கனம் உணர முடியும்?

7

இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதில் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.." என தொடங்கும் மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள் அற்புதம்



இதோ அந்த வரிகள்..

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு
எங்கள் திருநபியிடம் போய் சொல்லு
சலாம் சொல்லு

தன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞ்ஞான பெருமான்
கண்ணோடு கண்ணாகி
கல்புக்குள் நிறைவாகி
கருணைக்கு பொருள் தந்த எம்மான்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

மடமையாம் இருள் போக்கி
மதுவையும் விஷம் ஆக்கி
மாந்தரின் நலம் காத்த பெருமான்
மண்ணோடு பெண்மகவை
மகிழ்வோடு புதைத்திட்ட
மாபாத(க)ச் செயல் தடுத்த எம்மான்
அந்த மஹமூதை காண்பேனோ இந்நாள்
எங்கள் மஹமூதை காண்பேனோ இந்நாள் (தென்றல் காற்றே)

கடல்காடு மலைபாலை
கடக்கின்ற இறைவேதம்
கனிவாயில் இதழ் விண்ட பெருமான்
கடல்போன்ற பகைமுன்னே
உடைவாளை கரமேந்தி
படை கொண்டு பகைவென்ற எம்மான்
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்?
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்? (தென்றல் காற்றே)

எந்நாளும் அவர்நாமம்
இயம்பாத கணமேது
இறையில்ல பாங்கோசை பெருமான்
கைநகம் கண்தொட்டு
கனிகின்ற ஸலவாத்தில்
கஸ்தூரி மணம் கமழும் எம்மான்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)

8

குரான் ஷரீஃபில்
பெருமானாரை பற்றி இறைவன்

அத்தியாயம் 68
வசனம் 4
"(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்"
(truly you are of a magnificient charachter)

அத்தியாயம் 10
வசனம் 58

"அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும்.; ஆகவே அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும்; இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது" என்று (நபியே) நீர் கூறுவீராக

முஸ்லீம்களாகிய நம்மை பொறுத்த வரை பெருமானாரை தவிர வேறொன்றும் பேரருள் கிடையாது, அவர்களின் பிறப்பை வாழ்வை நினைவு கூர்ந்து சந்தோஷமடைவோம். இந்த சந்தோஷம் நாம் சேகரித்து வைத்திருக்கிறோமே வீடு, வாசல், சொத்து, நகை எல்லாம் இவை எல்லாவற்றையும் விட சிறந்தது.

Sunday, February 21, 2010

சில டைரி குறிப்புகள்

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சினிமா இயக்க பைத்தியம் பிடித்து அலைந்த மாதிரி நாங்களும் சிறு வயதில் சினிமா இயக்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததுண்டு. (இல்லேண்டாலும் அப்படித் தான்)

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர் படத்துக்கு ‘கத்தி முனையில் ரத்தம்’ என்று பெயர் வைத்திருப்பார்.

நாங்கள் அதே தலைப்போடு நாகூரோடு ஒத்து போகிற இன்னொரு பெயரையும் இணைத்து பெயர் வைத்து வீட்டில் பைத் வாங்கினோம்

நாங்கள் வைத்த பெயர்..

‘கத்தி முனையில் ரத்தம்
மைத்தாங் கொல்லையில் ஹத்தம்“

- இதுக்கு யார் தான் ஏசாம இருப்பார்கள்..?

--------------------------------------------------------------------------

எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம்.

வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர்.

அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?

அதற்கான விடை இதோ:

நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா.

இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...

 அடுத்து ரஜினியை பார்ப்போம்..

அவர் குடிச்சிட்டு வந்து குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் உள்ள யுனுஸ் நானா கடைக்கிட்டே ஒரு முறை தவறி விழுந்து விட்டார். தூக்க போன சிலரின் கையை உதறி விட்டு தானாகவே சிரமப்பட்டு எந்திரிச்சு ஒத்த வெரலை பாஷா படத்தில் வரும் ரஜினி மாதிரி உசத்தி காட்டி “நான் ஒரு தடவ உழுந்தா நூறு தடவ உழுந்த மாதிரி”ன்னு சொன்னார். அவர் பெயரும் பாஷா தானுங்களே..

So, நான் சொல்ல வரும் So and So எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து வைத்த கலவை தானே..?

-------------

Tuesday, February 16, 2010

மாவ்சம் - (காலங்கள் - Season) - பழைய இந்தி பட விமர்சனம்

முதலில் கீழே வரும் இந்த பாட்டை கேளுங்கள் (பாருங்கள்). மாவ்சம் என்ற படத்தில் எழுத்தில் வரும் பாடல் இது. பூபிந்தரின்  ஆழமான குரலிலிருந்து நம்மை ஆளும் அருமையான கஜல், இந்த பாடல்.  வைரமுத்து 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்று எழுதினார். இந்த கஜல் 'செவியில் விழுந்து டைரக்டாக ஆன்மாவில் நுழைந்து' விடும்.

பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.

மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்



பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?

- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்

வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார்.  டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.

இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.

வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்

ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.

27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.

வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.




சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.

கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.

அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.

அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.

அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.




இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த  வீட்டில்  தங்கியிருக்கும்  சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.

தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு    சென்றது,  தனது  தாயாரின்  நிலைக்கு  காரணமான  டாக்டரின்  மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.

கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.

டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்

'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்

டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.

கில் கஜிலியிடம்  'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.

டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.

கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.




இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.

குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.

இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.

சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.

படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.

காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்

இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.

Friday, February 12, 2010

கவ்வாலியின் மின்னும் நட்சத்திரம் - ஷாஹென்ஷா-ஏ-கவ்வாலி - The Brightest Star of Qawwaali

1948 அக்டோபர் 13ல் பாகிஸ்தான் நாட்டின் லைலாப்பூர் என்ற நகரில் இசையின் உருவம் இப்புவி மீது அழுது கொண்டே பிறக்கிறது.  (லைலாப்பூர் என்ற ஊர் இப்போது ஃபைஸலாபாத் என்ற பெயருடன் விளங்குகிறது).

 உஸ்தாத் பதேஹ் அலி கான் எனும் இசை மேதையின் குடும்பத்தில் ஐந்து பெண் மக்களுக்கு பிறகு ஆறாவதாக அந்த இசையின் பெரு உருவம் (பெரு உருவம் என்றால் பெருத்த உருவம் மட்டுமல்ல பெருமைக்குறிய உருவமும் கூட) முதன் முதலாக அழுகையின் ஊடாக இசைத்தது.



உஸ்தாத் பதேஹ் அலி கான் மற்றும் அவரது சகோதரர் உஸ்தாத் முபாரக்  அலி கான் மற்றும் சலாமத் அலி கான் ஆகியோர்களின் இசைக் குழுவில் சிறு வயதிலேயே இசை உருவம் தன்னை இணைத்து கொண்டு செயல் பட தொடங்கியது.

தபேலாவில் விரல்கள் படர ஆரம்பித்து பாகிஸ்தானின் பாரம்பரிய இசையான 'கயால்' எனும் இசையை சரி வர உள்வாங்கி கொண்டது.

1964ல் தந்தையாரின் மறைவும், 1971ல் தந்தையின் சகோதரரின் மறைவுக்கு பிறகும் அந்த இசை உருவம் தலையெடுக்க ஆரம்பித்தது.

'கவ்வாலி' என்றால் 'உரக்க சொல்வது' என்றே பொருளாம். யாரிடம் எதை சொல்வது? - உண்மையில் இறைவன் மீதும் அவனது தூதர் முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதான் அன்பை உரக்க சொல்வது. அடுத்து யாரிடம் சொல்வது? அல்லாவிடத்திலா? ஊர் உலகத்துக்கா? - என்றால் அதுவும் இல்லை, தனக்கு தானே சொல்லி கொள்வது.அதை உரக்க சொல்வதற்கு பெயர் தான் கவ்வாலி.

கவ்வாலி என்பது சூஃபி இசையின் ஒரு வடிவம். சூஃபி என்றால் இறைவனை தவிர்த்த வேறு சிந்தனையே இல்லாதவர் என்று பொருள்.

இறைவனை நினைவு கூர்வதால் உள்ளம் அமைதி பெறும் என்ற திருமறை வாசகத்தில் வருவதற்கேற்ப கவ்வாலி இசைக் கலைஞர்கள் தான் உச்சஸ்தாயியில் பாடும் போது இறைவனையே நினைவு கூர்கிறார்கள். இதனால் அவ்வாறு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் உள்ளம் அமைதி பெறுகிறது என்றால் அது மிகையல்ல.

அந்த இசை உருவம் 'கயாலை'யும் 'கவ்வாலியையும்' கலக்கியது உலகத்தையே ஒரு கலக்க இருப்பதற்கு ஒரு முன்னோட்டம் தான்.
அவரின் ஒரே கனவு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்காவில் அடங்கியிருக்கும் 'ஏழைகளின் பங்காளர்' (கரீபே நவாஜ்) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யினுத்தீன் அவர்களின் தர்பாரில் ஒரு இசை தர்பார் படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.



இந்த கனவு கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறியது. பாலிவுட்டில் ராஜ்கபூர் என்ற ஷோமேனின் அழைப்பை ஏற்று ரிஷிகபூர் - நீட்டுசிங்கின் திருமண விழாவில் பாடுவதற்காக அந்த இசை உருவம் அழைத்து கௌரவிக்கப்பட்ட போது தான் அந்த கனவு நிறைவேறியது.

(குறிப்பு: ராஜ்கபூரும் பெஷாவர் எனும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு நகரில் பிறந்து லைலாப்பூர் என்ற ஃபைஸலாபாத்தில் வளர்ந்தவர் தான். அதனால் தான் ஒரே ஊர் காரர் என்ற காரணத்தால் ரிஷி-நீட்டு திருமணத்திற்கு அழைத்தார். ராஜ்கபூர் ரஸ்ஸியாவில் தான் பிரபலம். ரஸ்ஸிய மக்களுக்கு காந்தி, நேரு எல்லாம் தெரியாது, ஆனால் ராஜ்கபூர், நர்கீஸ் என்றால் தான் தெரியும்)

பாலிவுட்டே அந்த இசை உருவத்தின் இசை கோர்வையை கேட்டு வியப்பில் மூழ்கியது.  இந்த இசை உருவம் உர்து தொடங்கி பஞ்சாபி, பாரசீகம் கடந்து இந்தியையும் விட்டு வைக்காமல் இசைத் தேனால் குளிப்பாட்டியது. உண்மையை சொன்னால் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் நம் அழகிய தமிழிலும் இந்த இசை உருவத்தின் குரலை ஏ.ஆர்.ரஹ்மானின் புண்ணியத்தால் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

(குறிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை தொகுப்பில் இந்த இசை உருவம் ஏ.ஆர்.ஆரோடு சேர்ந்து 'போறாளே பொண்ணுத்தாயி..' என்ற கருத்தம்மாவில் வந்த இசையை ரீமிக்ஸ் வடிவத்தில் கேட்டிருக்கலாம்)

இன்னும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து சோதனை முயற்சி  செய்து பார்த்த செய்திகளும் உண்டு. கின்னஸ் ரெக்கார்டில் கவ்வாலி இசை வடிவத்தின் அதிக தொகுப்புகளை படைத்தவர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெற்றதுமுண்டு.

தமிழில் பாடவில்லையே என்ற கவலை எனக்கிருந்தாலும் அவரின் இசையையும் விட்டு வைக்காமல் தமிழ் படத்துக்கு காப்பி அடித்த சம்பவமும் இருக்கவே செய்கிறது.

காப்பியடிப்பதில் சாதனை புரிந்த சுந்தர்.சி யின் முதல் படமான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி வாயசைக்க கார்த்திக் பின்னாடி ஒளிந்து கொண்டு பாடும் வைஜெயந்திமாலாவின் 'வாழ்க்கை' காலத்து காட்சிகள் நிரம்பிய 'மாமா நீ வாம்மா.. புத்தம் புது பாட்டு..' என தொடங்கும் பாடல் 'கின்னா சோனா தெய்னு ரப்னே பனாயா..' என்ற இவரின் பாடலின் இசை திருட்டு அல்லவா அது.

இன்றும் இசை பிரியர்களால் குறைந்த பட்சம் கவ்வாலி இசை பிரியர்களால் மதிக்கப்படும் அந்த இசை உருவம் 'நஸ்ரத் பதேஹ் அலி கான்' என்ற பெயர் தாங்கி உருவம் தன்னுடைய 48வது வயதில் ஆகஸ்ட் 16ல் 1997ஆம் ஆண்டில் காலத்தை முடித்துக் கொண்டு புகழோடு கரை சேர்ந்தது.


பின் குறிப்பு:

'கயால்' இசை வடிவத்தை 'கயல்' என்று தவறாக எழுதியதற்காக வருந்துகிறேன்

திருத்திய ஆபிதீன் நானா அவர்களுக்கு என் நன்றிகள்..

அதற்காக ஆபிதீன் நானா அவர்களை இந்த 'அல்லாஹூ அல்லாஹூ'வில் கரையுங்கள் என்று வாழ்த்துகிறேன்

Thursday, February 11, 2010

குழந்தை பாதுகாப்பு

'வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்' ன்னு சொல்வாங்க, அதோட 'குழந்தைய வளர்த்துப் பார்'ன்னும் சேர்த்துக்கலாம்னு தோணுது.

இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.

(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)

(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)

குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.

எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள்,  வீடு  சுத்தம்  செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.

ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.

குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.

இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நான் ஒரு ரெண்டு மூன்று  வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.

சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?

ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.

சில டைரி குறிப்புகள்...

நான் செட்டியர் ஸ்கூல்ல ரெண்டாவது படிச்சிகிட்டிருந்தேன். வாத்தியார் பேர் தெரியலை. ஆனாக்கா 'செவுட்டு வாத்தியார்' என்று தான் கூப்பிடுவோம். அவருக்கு காது அவ்வளவா கேட்காது அல்ல அவ்வளவும் கேட்காது. வாத்தியார்களுக்கு பல பேர் இப்படி மாணவர்கள் வைப்பதுண்டு. ஒரு வாத்தியாருக்கு 'போண்டா சார்' என்று கூட பெயரிருந்தது. அவர் போண்டா பிரியமா சாப்பிடுவாரா? அல்லது போண்டா மாதிரி இருப்பாரா? அல்லது இரண்டுமேவா? என்றெல்லாம் ஞாபகமில்லை.

இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'.

அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில்  (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார்.

போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார்.

'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிறர்,

போனை எடுத்தவர் தொடர்ந்து கடுப்புடனே பேசியிருக்கிறார், 'அவன்லாம் இல்லை'

'வந்தா நான் பேசுனேன்னு சொல்லுங்க..'

அவர், 'நீங்க யாருன்னு சொல்றது?' என்று கேட்டிருக்கிறார்

அறிவாளி சொல்லியிருக்கிறார், 'நானா..?'

அவர், 'ஆமா.. ஆமா..'

அறிவாளி, 'நா அறிவாளின்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்...' என்றிருக்கிறார்

அவர், '(கடுப்புல கெட்ட வார்த்தையை சொல்லிட்டு) அப்ப நாங்க என்ன முட்டாளா?' என்று கேட்டுட்டு போனை அறைந்திருக்கிறார்.

இந்த டைரி குறிப்பு 'செவிட்டு சார்' என்ற பட்டப் பெயரை வைத்து மாணவர்கள் என் வாத்தியாரை கிண்டலடித்தது பற்றியது அல்ல. சொல்ல வருவது வேறு விஷயம்..

நான் ஒரு முறை எனது தம்பி தாஜையும் எனது மச்சான் ஜெஹபரையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு போயிருந்தேன். செவிட்டு வாத்தியார் இன்னும் வரவில்லை. அதுக்கிடையில் தாஜுக்கும் ஜெஹபருக்கும் சரியான சண்டை. கட்டிகிட்டு உருளுகிறார்கள். 'நான் தான்..' 'நீ தான்' என்று பயங்கர சண்டை.

நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். முடியலை. எனக்கு வாத்தியார் வந்துட போறார் என்ற பயம் இருந்தது. அவர் வந்தவுடன் இன்னும் பயம் இன்னும் உச்சத்துக்கு எகிறியது..

செவிட்டு வாத்தியார் அமைதியாக, 'யேய்.. ஏன்ப்பா சண்டை போடுறீங்க.. சண்டை போட கூடாது.. பேசாம எடத்துல போய் உக்காருங்க..' என்று சண்டைய தடுத்தார்.

நான் குறுக்கிட்டு, 'சார், அதுல தான் சார் சண்டையே.. யார் ஒக்கார்ரதுன்னு..' கத்தினேன் நான்

'ஒவ்வொரு ஆளா ஒக்காருங்க.. மொதல்ல நீ ஒக்காரு.. (என்று தாஜ் பக்கம் கையை காட்டி விட்டு) அப்புறம் நீ ஒக்காரு (என்று ஜாஃபர் பக்கம் கையை காட்டினார்..'

'வேணாம் சார்..' கதறினேன் நான்

'ஏன் வேணாம்.. நீ சும்மா இரு.. போய் ஒக்காரு.. ஆமா எங்கே ஒக்கார போறே..' என்று கேட்க

ஜாஃபர் அவசர அவசரமாக கையை நீட்டினான், 'அங்கே தான்..' என்று.

திரும்பி பார்த்தாரு.. அது அவர் உட்கார்ர நாற்காலி.

அன்னைக்கு பூரா நிண்டுகிட்டு பாடம் நடத்துன வாத்தியாரு கடைசியா போவும் போது என்னய தனியா கூப்ட்டு,
'கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து இந்த ரெண்டு பேரையும் மட்டும் இனிமே கூட்டிட்டு வந்துடாதே..' என்று எப்போதுமே கத்தி பேசும் அவர் அந்த செய்தியை மட்டும் மெதுவாக தான் சொன்னார்.

--------------------------------------------------------------------------------------------------------

எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள்.

ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை'  (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள்.

முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான்.

'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு   போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று

வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.

எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று

அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்

---------------------------------------------------------------------------------------

மதியானம் படத்துக்கு போக வேண்டும் என்று திட்டம். எத்தனை மணிக்கு எங்கே சந்திப்பது என்பது பற்றிய பேச்சு சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது.

எங்கே சந்திப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் இப்போது எத்தனை மணிக்கு என்பது பற்றிய பேச்சு..

ஒருவர், 'பவலைக்கு எத்தனை மணி..' என்று ஆர்வமாக கேட்க
(பவல் - பகல்)
(பகல் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வி)

மற்றொரு நண்பர், '12 மணியாயிட்டா பவல் தாங்கனி..' என்றார்

Sunday, January 31, 2010

இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்

குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம் 

இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....



இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.

நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை,  அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).

இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.

அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது  நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.

அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும்  அந்த நபருடன் உள்ளே நுழைகிறான். அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின்  ராஜிவ்  காந்தியின்  புகைப் படத்தையும்   'எ  டயலாக்  வித்  ராஜிவ்  காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.

அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.

எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.

இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது 
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப்  பார்க்கிறான்,  உறங்கிக்  கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க  அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்

பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.

இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.

ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.

மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.

கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.

'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.

அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.

'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்

அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று

அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.

முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு 

பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.

இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,

'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.

இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான  'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!

அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.

தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.

அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.

அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.

மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.

இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்

மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.

இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.

'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.


அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.

அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.

அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.

தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.

'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்

'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்

போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்

அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்

ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.


மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!

அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.

மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது

மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'

தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்

இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்

இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.

அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்

மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.

இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.

சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.

சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு..  என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.

மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்

'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.

'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்

அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.