Monday, April 04, 2011

ஹஜ்ரத் கௌதுனா (றலி) - 3

குரான் ஷரீஃப் வசனம்:

ஸூரத்துத் தாஹா - 42 வது வசனம்

”ஆகவே, நீரும் உம் சகோதரர்ரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள். (... 
and do not, you both, slacken and become weak in My Remembrance)



இறைவன் மூஸா நபியை பிர்அவ்னிடம் அத்தாட்சிகளுடன் அனுப்பும் போது இறைவன் சொல்லி அனுப்பியது இது தான்.

 “ என்னை நினைவு கூர்வதை விட்டும் சளைக்காதீர்கள்”

நினைவு கூர்வது என்பது இறைவனின் அழகிய திருநாமங்களை நாவால் உச்சரிப்பது. அதாவது திக்ரு செய்வது.

மெய்நிலை கண்ட எங்கள் மெய்ஞ்ஞானி சொல்கிறார்கள்..

”...இறைவனை நினைவு கூர்ந்து துதிக்க முனையும் ஒருவர் துவக்கத்தில் இறைநாமத்தை நாவினால் உரக்க உச்சரிக்க வேண்டும். அதன் மூலம் படிப்படியாக இறைநினைவு உடல் முழுவதும் பரவி இருதயத்தைச் சென்றடைகிறது. பின்னர் அது ஆத்மாவைத் தொடுகிறது. மேலும் அது தொடர்ந்து சென்று இறை இரகசியங்களின் உறைவிடத்தையும் எட்டுகிறது. அதனையடுத்து இரகசியத்திலும் இரகசியமாக விளங்கும் ஆதிமூல வட்டத்தையும் அது சென்றடைகிறது...”

“...இதய உணர்வு அசைவுகள் வழியே இறைவனை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் வல்லமையும் எழிலும் ஆகிய அத்தாட்சி உள்ளத்தே முகிழ்க்கிறது..”

இவ்வாறு இறைவனை நினைவு கூர்வதை விட்டும் சூஃபியாக்கள் ஒரு போதும் சளைத்ததில்லை.

சூஃபியாக்களை பொறுத்தவரை இறப்பு என்பது என்ன தெரியுமா?

இறைவனை மறந்திருப்பது தான்.

ஒரு விநாடியாவது அவர்கள் இறைவனை மறந்திருந்தால் அவர்கள் இறந்து விட்டதாகவே கருதினார்கள்.

அவர்கள் உறக்கத்தில் கூட இறைவனை மறப்பதில்லை...

அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள்,

‘அறிந்தவர்களின் உறக்கம் அறியாதவர்களின் வணக்கத்தை விட சிறந்தது’

அறியாதவர்கள் இறைவனை இறைவணக்கத்தில் கூட நினைக்க வேண்டிய  முறைப்படி நினைப்பதில்லை

இதோ தீனை உயிர்ப்பித்தவர்களின் ஞான மொழிகள்...

”அறியாமையை மயக்கம் என்றும் உறக்கம் என்றும் கூறலாம். மயக்கத்தையும் உறக்கத்தையும் உதறிவிடுவோரே இருள் சூழாத இதயம் பெற்றிருப்பர்...”


”தூய உள்ளங்கள் தூங்குவதில்லை..”


”மெய்யடியார்களின் அகவாழ்க்கையில் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே வேறுபாடில்லை.”

இவர்கள் மெய்யடியார்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்திலிருந்தே சொல்கிறார்கள்.

இவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்தது போல் தங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார்கள்.

அவ்வாறு முழுமையாக ஒப்படைத்து விடுவதை பற்றி இந்த அவ்லியாக்களின் அரசர் குறிப்பிடுகையில்..

“ஒரு இறந்த உடல் எப்படி தன்னை குளிப்பாட்டுபவனின் கையில் ஒப்படைத்து விடுமோ அப்படி ஒரு அடியான் இறைவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியான தவக்குல்”

என்று கூறுகிறார்கள்.

அவர்கள் தங்களின் இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதை பார்க்கும் எல்லா கண்களுக்கும் புலப்படுவதில்லை. அவர்கள் குகை வாசிகளை போன்றவர்கள்.

”...மேலும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்.”

ஸீரத்து கஹ்ஃபு - 18வது வசனம்

நினைவு கூர்ந்து தங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதையே குறிகோளாக கொண்டவர்கள் இவர்கள்.

ஸூரத்து கஹ்ஃபு  28 வது வசனம்:

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன்  இச்சையை பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.”

மேலே கண்ட வசனம் அஸ்ஹாபுஸ் ஸுஃபா எனப்படும் திண்ணை தோழர்களை பற்றியது.

படிக்கவும்: http://www.sufiway.net/ar_org_Suf.html

திண்ணை தோழர்களின் சங்கிலித் தொடர் தான் சூஃபியாக்கள் என்றழைக்கப்பட்ட இறைநேசச் செல்வர்கள்.

அவர்களின் வழியில் அவர்களை விட்டும் நம் கண்களை திருப்பி விடாத வரம்பு மீறிய கூட்டத்தில் சேராதவர்களாக நம்மை இறைவன் காத்தருள வேண்டும்.
------------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களின் மொழிகள்:


”தங்களின் தனித்தன்மை, தனிப் பேராற்றலை இன்னதென அறிந்து, சீரிய முறையில் செயல்படுவோரே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவர்.”


”மனிதத் தன்மையை மாசுபடுத்துவோர் இழப்படைந்தவராகிறார்கள்.”

--------------------------------------------------------------------------------------

2 comments:

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்மாயீல் பாய்,
சென்ற வியாழனிலிருந்துதான் ஃபாலோ செய்கிறேன் :)
இத்தனை நாட்களாய் ஏன் இங்கு வரவில்லை என்று
எனக்கே தெரியவில்லை.
//திண்ணை தோழர்களின் சங்கிலித் தொடர் தான்
சூஃபியாக்கள் என்றழைக்கப்பட்ட இறைநேசச் செல்வர்கள்.//

இது எனக்குப் புதிய செய்தியாகத் தெரிகிறது.

nagoreismail said...

அரபுத்தமிழன்.. அலைக்கும் ஸலாம்...

அமைதி இல்லத்தை வெளிப்படையாக பின் தொடர்வதற்கு நன்றிகள்.

இஸ்லாமிய ஆன்மீக ஞானத்திற்கு ‘தஸவ்வுஃப்’ என்று பெயர்.

இந்த ஞான வழியைப் பின்பற்றியவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்பட்டனர்.

இந்த சூஃபி என்ற வார்த்தை ‘ஸஃபா (தூய்மை)’, ‘ஸப் (வரிசை)’ ’ஸுஃபா (திண்ணை)’ ‘சூஃப் (கம்பளி)’ இப்படியாக பல வார்த்தைகளிலில் ஒன்றிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பது ஒவ்வொரு வகுப்பாரின் கருத்து.

ஆனால் எந்த சொல்லை சூஃபி என்பவருக்கு பொருளாக கொண்டாலும் தவறான கருத்தை காட்டவில்லை என்பது மட்டும் உண்மை.

ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன். ஒரு பக்கம் தான் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்.

இன்னும் விளக்கமாக பிறிதொரு சமயத்தில் பதிவாக எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்..