Sunday, January 31, 2010

இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்

குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம் 

இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....



இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.

நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை,  அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).

இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.

அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது  நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.

அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும்  அந்த நபருடன் உள்ளே நுழைகிறான். அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின்  ராஜிவ்  காந்தியின்  புகைப் படத்தையும்   'எ  டயலாக்  வித்  ராஜிவ்  காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.

அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.

எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.

இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது 
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப்  பார்க்கிறான்,  உறங்கிக்  கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க  அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்

பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.

இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.

ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.

மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.

கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.

'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.

அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.

'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்

அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று

அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.

முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு 

பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.

இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,

'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.

இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான  'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!

அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.

தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.

அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.

அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.

மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.

இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்

மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.

இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.

'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.


அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.

அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.

அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.

தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.

'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்

'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்

போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்

அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்

ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.


மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!

அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.

மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது

மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'

தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்

இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்

இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.

அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்

மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.

இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.

சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.

சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு..  என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.

மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்

'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.

'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்

அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.

Thursday, January 21, 2010

சில டைரி குறிப்புகள்

என் கூட ராஜகோபால்ன்னு ஒரு ஐயர் வீட்டு பையன் படித்தான். சோடா புட்டி கண்ணாடி போட்டிருப்பான். நாங்க எல்லாம் நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல் நிலை பள்ளியில் அதாவது தமிழ் புரியாதவர்களுக்கு நேஷனல் ஹை ஸ்கூலில் தான் ஒன்றாக படித்தோம்.

ஒன்றாக படித்தது மட்டுமல்ல ஒரே வாத்தியார்ட்ட தான் டியுசனும் படித்தோம். அப்போ நான் எனது மச்சான் ராஜா என்கிற ஃபாருக் மற்றும் பல முஸ்லீம் இந்து நண்பர்கள் யாவரும் பள்ளிகூடம் விட்டதும் நாகை கடைத்தெருவில் உள்ள கமாலிய்யா பள்ளிக்கு சென்று அங்கேயே டியுசனில் கொடுத்த ஹோம் ஒர்க எல்லாத்தையும் முடித்து விடுவது வழக்கம்.

ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசலில் தொழுகைக்கு ’அதான்’ (அழைப்பு) விடுப்பார்கள். நாங்கள் முஸ்லீம் நண்பர்கள் யாவரும் உடனே அங்க சுத்தி செய்து விட்டு அதாவது கை, கால், முகம், காது, வாய், தலை முடி எல்லாத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவோம்.

தொழுகையில் ஒருவர் பின் ஒருவர் அல்ல ஒருவர் தோலை உரசிக் கொண்டு ஒருவர் வரிசையாக நிற்பது, ஒரே மாதிரி குனிவது, நிமிர்வது, தொழுகை முடிந்தவுடன் கை கொடுத்து வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்வதை கவனித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்ற ஐயர் ஒரு நாள் என்னிடம் அந்த கேள்வியை கேட்டே விட்டான்.

“நானும் உங்க மதத்து வந்துடவா?’ என்று

இதை நான் இங்கே பொய்யாகவோ கொஞ்சம் கூட இட்டுகட்டியோ சொல்லவில்லை.

அவன் அப்படி கேட்டான்.

நான் உளம் மகிழ்ந்து, ’தாராளமா வந்துடு.. ஆமா, என்னா புடிச்சிருக்கு?’ என்று கேட்டேன்

‘நீங்கள்லாம் ஒரே மாதிரி ஒத்துமையா செய்றது பாக்குறதுக்கே அழகா இருக்கு’ என்றான்

இன்னைக்கு முஸ்லீகளுக்குள் இருக்கின்ற ஒத்துமையா எல்லாம் பார்த்திருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டான் என்றே தான் தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------
எங்க ஹஜ்ரத் அவர்களிடம் நான் சேர்ந்த புதிதில் கேள்விகளாக கேட்டு தள்ளுவேன். அந்த ஹதீஸ்ல அப்படி போட்டிருக்கே? இந்த ஹதீஸ் கிதாப்ல இப்படி போட்டிருக்கே என்று எனது கேள்விகள் தாறுமாறாக இருந்தது. ஆது, சமூது கூட்டத்தை பத்தி, சாலிஹ் நபியின் ஒட்டகத்தை பத்தி கேட்டிருக்கிறேன்.

சைத்தானுக்கு உருவம் இருக்கிறதா என்று கூட கேட்டிருக்கிறேன். சைத்தான் தொஹீது வாதியா என்றும் கேட்டிருக்கிறேன். பிர் அவுனிலிருந்து மூஸா நபி வரை, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பற்றி, நூஹ் நபியின் கப்பலை பத்தி, அன்னை மர்யம் (மதர் மேரி) அவர்களை பத்தி அவர்களின் புதல்வர் ஈஸா நபி பற்றி இப்படி ஒரு கேள்வியையும் விட்டது கிடையாது.

பெருமானாரிலிருந்து நாகூர் நாயகம் முதற்கொண்டு நான் கேட்காத கேள்விகளே கிடையாது எனலாம்.

ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை ‘ஹதீஸ்’ என்றே அழைத்தார்கள்.


‘இந்த வந்துட்டாரே ஹதீஸ்’ என்றார்கள்.

எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொன்னார்கள், ‘ஏன்ப்பா, பொண்ணை வுட்டுபுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுகிட்டு இருக்கிறீயே’ என்று
-------------------------------------------------------------------------------------

ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இந்த முஸ்லீம்களெல்லாம் மறுமைக்காக தொழுவுறோம், மறுமைக்காக சகாத் கொடுக்கிறோம் மக்கா யாத்திரைக்கு போறோம் உடலை வருத்திகிட்டு நோன்பு பிடிக்கிறோம்ன்னு சொல்றீங்களே.. மறுமையே வரலைன்னா என்னா செய்வீங்க..?’ என்று உலகத்திலேயே அதி முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்

நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்

அவர் நினைச்சிருப்பாரு, ’ஆனா வந்துட்டான்னு.. சொல்லி நிறுத்திட்டானே.. இவன் என்ன சொல்ல வந்திருப்பான்..? வந்துட்டாலும் வராவிட்டாலும் அவனுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்ல.. வரலேன்னா எனக்கும் நஷ்டமில்லை ஆனா மறுமைன்னு ஒண்ணு உண்மையிலே வந்துட்டா நான் தான் நஷ்டப்பேடுவேன்னு சொல்ல வந்திருப்பேன்னு அவர் நினைச்சிருப்பார்’

ஆனா அதான் இல்ல, நான் சொல்ல நினைச்சது அப்படியே மறுமை வந்துட்டாலும், முஸ்லீம்களுக்கு தான் கஷ்டம்’ன்னு சொல்ல தான் நினைச்சேன்.

குஷ்பு - (நறுமணம் - Fragrance) - பழைய இந்தி பட விமர்சனம்

”குஷ்பு" என்றதும் நடிகை குஷ்பு நடித்த படமோ என்று நினைக்க வேண்டாம். இது ஹேமா மாலினி அற்புதமாக நடித்த படம் அல்லது அவரை குல்சார் அவ்வாறு அற்புதமாக நடிக்க வைத்த படம். இந்த படம் என்னுடைய ஞாபகசக்தி எனக்கு ஒழுங்காக சேவை செய்தால் ஷோலே படம் வந்த காலகட்டத்தில் தான் இந்த படமும் வந்தது. ஆனால் ஷோலேவில் வரும் பசந்திக்கும் குஷ்புவில் வரும் குசுமுக்கும் தீச்சுடருக்கும் (ஷோலே) நறுமணத்துக்கும் (குஷ்பு) உள்ள வித்தியாசம்.

குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.

அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை  சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.

ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.

குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.

சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.

இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.

குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.

இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.

குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.

இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.

படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.

பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.

அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.

அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.

இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.

அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.

அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.

சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.

இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.

பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.

குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று

தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று

குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று

தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று

குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று

ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க  இருக்கின்ற  தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.

தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்

சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்

பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்

சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.

உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.

‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்

பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்

குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.

குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.

ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து




சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?

பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?

இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!

நடிப்பு

பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்

இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.

-----------------------------------------------------------------------------------------------------------

அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!

Thursday, December 31, 2009

டிரஸ் கோட் - உடை கட்டுப்பாடு - (ஹிஜாப் அல்லது பர்தா)

இந்த பதிவுக்கு போறதுக்கு முன்னாடி மூன்று செய்திகள்

1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

2. ஒரு பின்னூட்டத்தில் "இஸ்லாத்தின் மீது மரியாதை உள்ளது" என்று எழுதிய தோழர் சுகுணா திவாகருக்கு கோடி நன்றிகள்.

3. இஸ்லாமியர்களும் பெரியாரிஸ்டுகளும் இணையும் புள்ளி - என்ற ஒரு பதிவு கூட எழுத வேண்டி உள்ளது, இன்ஷா அல்லாஹ் வரும்..

---------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சாயங்காலம் வேலையிடத்தில் என்னால் ஒரு  தேர்வு நடத்த முடியாமல் அதாவது exam invigilation செய்ய முடியாமல் போனது. என் வீட்டில் ஒரு அவசர தேவை இருந்ததால் தான் நான் அவ்வாற தேர்வு நடத்தாமல் வீட்டிற்கு அவசரமாக போக வேண்டியிருந்தது.

ஆகையால், அன்றைய தினம் விடுப்பிலிருந்த எனது சக-ஊழியரை தொலைபேசியில் அழைத்து எனது பணியை அவர் ஏற்று நடத்தும் படி (take over) சொல்லி விட்டு நிர்வாக ஊழியர்களிடமும் நான் இன்னவரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தெரிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

அப்போது வேலையாக வெளியிலிருந்து அப்படியே அலுவலகத்துக்கு தேர்வு நடத்த வந்த அந்த சக-ஊழியர் காலில் சப்பாத்து போடாமல் செருப்பு அணிந்தவாறே வந்து விட்டார்.  அதை பார்த்த எங்களது மேலதிகாரி கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டு திட்டி விட்டார்.

அதெப்படி நீ செருப்பு போட்டுட்டு வரலாம்? ஒரு நன்னெறி (ethics) இல்லையா, ஒழுக்கம் (discipline) வேண்டாமா? என்று இன்னும் என்னென்னவோ சொல்லி சத்தம் போட்டு திட்டி விட்டார்.

அவர் சத்தம் போட்டது சரியா? தவறா? என்று வாதிப்பதற்கு அல்ல இந்த பதிவு.

அது மட்டுமல்லாமல் செருப்பு போட்டு கொண்டு வந்து விட்டதால் இவர் எப்படி ஒழுக்கம் தவறி விட்டார், அப்போ செருப்பு போட்டுட்டு வர்ரவங்க எல்லாம் ஒழுக்க கேடானவர்களா என்று அவரை சண்டை பிடிப்பதற்கு அல்லது தாழிக்கும் கவிதை எழுதுவதற்கு கூட அல்ல இந்த பதிவு.

அப்புறம் வேறு எதற்காம்? - நியாயமான கேள்வி -

ஒவ்வொரு இடத்திற்கும் அந்தந்த இடத்திற்கு என்று உடுத்த தகுந்த ஆடை உள்ளது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்பதை சொல்லவே இந்த பதிவு.

பள்ளிகூடத்துல படிக்கும் போது யுனிஃபார்ம் எனப்படும் சமச்சீர் சீருடை கொடுப்பார்கள், அதை அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) கூட எடுப்பதுண்டு.

அதை எல்லாம் தவறு என்று சொல்லி விட முடியுமா?

அல்லது யுனிஃபார்ம் போடாதவர்கள் எல்லாம் ஒழுக்க கேடானவர்கள் இல்லை என்று பள்ளிகூட நிர்வாகத்திடம் சண்டை தான் போட முடியுமா?

கட்டுமான தல வேலை, கப்பல் பட்டறை வேலை, உற்பத்தி துறை, பெட்ரோல் இரசாயன துறை வேலைகளுக்கு கூட பார்த்தீர்கள் என்றால் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்தந்த வேலைக்கு என தகுந்த ஆடைகள் என்று உள்ளது, அதை மட்டுமே அணிய வேண்டும்.

உதாரணமாக, பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி இவைகளை எல்லாம் கட்டாயமாக (mandatory) அணிய தான் வேண்டும்.
அப்படி பாதுகாப்பு உடைகளை போட்டு கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு அசௌகரிய குறைச்சலாக இருக்கலாம்,

அதை போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களவர்களது விருப்பம் என்று கூட விட்டு விடலாம். ஆனால் அரசாங்கம் இத்தகைய ஆடை கட்டுப்பாட்டை விதியாக்கி உள்ளது. ஏன்..?

உதாரணமாக இரசாயன உற்பத்தி துறையில் வேலை செய்பவர்கள் ஒரு வகை தீ தடுப்பு (fire retardant - அந்த ஆடையில் தீச்சுடரின் படம் கூட போட்டிருக்கும்) ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும்.

வேலையிடம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் இந்த தீ தடுப்பு ஆடை பற்றிய விதிகளே தேவை இல்லை என்று விட்டு விட முடியாது. உலகத்திலேயே மிக சிறந்த பாதுகாப்பான இடமாக இரசாயன தொழிற்சாலை அமைந்து இருந்தாலும் நாம் இத்தகைய தற்காப்பு ஆடைகளை அணிவதை தவறு என்று வாதிட முடியாது.

இந்த ஆடை கட்டுப்பாடு வேண்டுமானால் ஆபத்துகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கை வரிசைகளில் (hierarchy of control) கடைசி தடுப்பாக (last line of defence ஆக) இருக்கலாம், ஆனால் இதுவும் அவசியம் தான் என்பதை மறுக்க முடியாது.

இன்னும் மருத்துவர்களை பார்த்தீர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்யும் போது உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து இருப்பார்கள், தலைமுடியையும் மறைத்திருப்பார்கள், இதெல்லாம் சுகாதாரம் (hygiene) என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

இல்லை, இந்த மருத்துவச்சி ஹிஜாப் அணிந்திருக்கிறார், நான் இவரிடம் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று சொன்னால் ஒருத்தரிடமும் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே முடியாது.

இன்னும் கறி, மீன் வெட்டுபவர்கள், பெரிய பெரிய ஹோட்டலில் சமைப்பவர்கள் எல்லாம் கூட உடலை மூடும் மேலங்கிகளும் தலை மூடிகளும் அணிந்திருப்பார்கள். எல்லாம் சுகாதாரம் தான்.
அதே போல தான் இஸ்லாம் இந்த சமுதாயத்தோடு கலந்த வாழ்க்கை வாழும் போது இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வேண்டுமென்றால் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்சாக இருக்கலாம், ஆனால் இதுவும் நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அம்சம் தான், நல்ல சுகாதாரமான ஆடை தான்.

ஆண்களுக்கு காம வெறி வந்தால் இந்த இடம் (சமீபத்திய கருவறை உதாரணங்களை பொருத்தி பார்த்து கொள்ளவும்) என்று கிடையாது, பெண்களின் சம்மதம் தேவை என்ற விதிகள் கூட கிடையாது அவளின் சம்மதமின்றி கூட பலாத்காரம் செய்து கூட அவனது கீழான இச்சையை அல்லது வெறியை தீர்த்துக் கொள்ள முடியும். இதை எழுதுவதற்கே கஷ்டமாக தான் உள்ளது, ஆனால் அது தான் நிதர்சனம்.

இன்னும் நாட்டில் எத்தனை கற்பழிப்புகள், ஈவ் டீசிங்குகள் எத்தனை எத்தனை பிரச்சினைகள். இத்தனை பிரச்சினைகளுக்கு நவநாகரீக ஆடை முறையா தீர்வென்று சொல்கிறீர்கள்?

மரியாதைக்குறிய சகோதரி காயத்ரி சித்தார்த் அவர்களின் கவிதை ஒன்றை வாசித்த ஞாபகம் கூட வருகிறது, அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார், ஒரு  ஆண்  அல்லது  காதலன் "நேர்மையாக முகம் பார்த்து" பேசியதாக எழுதியிருப்பார்.

எங்க ஹஜ்ரத் கூட என்கிட்டே சொன்னார்கள், 'பொம்பள புள்ளைங்க கிட்ட நீ பேசுனா முகத்த தவிர வேற எங்கேயும் ஒன் கண்ணு ஓட கூடாது.." என்று.

ஆனால் வேலையிடம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் பாதுகாப்பு ஆடை அவசியம் என்று எப்படி நான் சொன்னேனோ அதே நியாயம் தான் ஆண்கள் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக உத்தமாமானவர்களாக இருந்தாலும் (ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும்) இந்த மறைப்பு ஆடை (பர்தா) மிகவும் அவசியம். அது தான் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ்.

சட்டம் என்ற படத்தில் அறை குறை ஆடையில் இருக்கும் மாதவியிடம் கமல்ஹாசன் சொல்வார் "பொருளை தொறந்து வச்சிருந்தா திருடன் வரத்தான் செய்வன்" என்று.

அதுவும் தவிர, உடலை, தலை முடியை மறைத்து ஆடை அணிந்தால் இந்த கவுரவமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையாவது இருக்கிறதா?

ஈரான் நாட்டில் பெண்கள் மறைக்கும் ஆடை அணிந்து தீயணைப்பு படையினராக இருக்கிறார்கள், பத்திரிக்கை காரர்களாக இருக்கிறார்கள், கடைகளில் பணிபுரிகிறார்கள், மருத்துவர்களாக, வக்கீல்களாக இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ஜெமிமா என்பவர் கூட "பர்தா அணிந்தவர்களே உண்மையான விடுதலைவாதிகள். பர்தா மூலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை" என்று சொன்னதை படித்தது நினைவிற்கு வருகிறது.

நான் எனது வகுப்பில் வேலையிட பாதுகாப்பை பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஆடைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

வேலைக்கு போகும் போது எப்படி உடுப்புகள் அணிந்து கொண்டு போக வேண்டும் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை போன்று வேலையிடத்தில் அணியக் கூடாது என்பதை புரிய வைக்கலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன்.

அதாவது, 'பொண்ணு பாக்க போவும் போது எப்படி போவணும்?' என்று கேட்டேன்.

என் வகுப்பில் இருந்த ஒரு குசும்பன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம இப்படி சொன்னார், "சார், நான் பொண்ணு பாக்க போவும் போது பொண்டாட்டியோட தான் போவேன்.." என்று

இவரை என்ன செய்யலாம்..?

நான் சொன்னேன், "நான் உங்க புள்ளைக்கு கேக்கல... உங்களுக்கு கேக்குறேன்.." என்று

Wednesday, December 23, 2009

எத்திராஜ் காலேஜை தெரியுமா? - இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் கேள்வி

 ஆபிதீன் நானா அவர்கள் இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் எஸ்.எம்.எஸ்.   ஐ பதிவாக எழுதியிருந்தார்கள். அதில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்க்ள் 'அல்லா என்று உனக்கு பெயரிட்டது யார்?' என்று கவிதை எழுதியிருந்தார்கள்.

அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள்.

அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.

எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.

இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது.

என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான்.

ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.

ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள்.

ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.

ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.

வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.


1. http://abedheen.googlepages.com/zafarulla.html

2. http://nagoori.wordpress.com/category/கவிஞர்-ஜபருல்லா/


3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1

இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..

நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை.

அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.

அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.

அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..

இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?

நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு

இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே,

நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது

இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?

எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.

"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த

எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.

இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.

'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.

ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை.

'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.

'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.

'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்

'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா

Tuesday, December 22, 2009

சில டைரி குறிப்புகள்...

புதுசா படம் ரிலீசானா இந்த நாகூர் ஜமாக்கு (கூட்டத்துக்கு)  ஹல்பெல்லாம் (மனசெல்லாம்) குளுந்த மண்டபமா (குளிர்ந்த மண்டம் - நாகூர் தர்காவில் உள்ள ஒரு இடம் - கோடையில் கூட குளிராய் இருக்கும்) மாறிடும்.

ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு.

ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.

அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை.

பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் எங்களை திரும்பி பார்த்தார்.

நான் அவரை கவனித்தேன், என்னா இவர் நம்மளை ஏன் திரும்பி பார்க்கிறார் என்று நினைக்கும் போதே முறைப்பது போல் தெரிந்தது. என்னா இவர் நம்மள பார்த்து முறைக்கிறார் என்று நினைக்கும் போதே எழுந்து விட்டார். என்னா எழுந்திருக்கிறார் என்று ..... எங்கள் குரூப்பை நோக்கி வந்தார்.

வந்தவர் கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, 'சார், படம் எப்ப போடுவாங்க.." என்ற கேள்வி தான் அது.

என் மச்சான், 'ஓய்..! படம் ஆரம்பிச்சு இடைவேளை உட போறான், படம் எப்ப போடுவானா..?' என்று கேட்க

'சூரியன்னு.. (சூரியன் படம் - சரத்குமார் நடித்தது - சூரியன  யாரும்  சுட  முடியாது சார் - சூரியன்  வெப்பம்  தான்  நம்மள  சுடும்  என்ற  கவுண்டமனி  காமெடி) போஸ்டர்ல பாத்தோமே ! அந்த படம் கிடையாதா சார்..!' என்று அப்பாவியாக கேக்க

'சூரியன் படம் ஆனந்த் தியேட்டர்ல..! இது லிட்டில் ஆனந்த்' என்றதும் அவர் மொகத்துல இருந்த லிட்டில் ஆனந்தமும் மறைஞ்சு போச்சு.

என் மச்சான் ஜாபர் சுல்தான் சிரித்து கொண்டே சொன்னான், 'இவர் வந்து சூரியன் படத்த பத்தி கேக்கலைன்னா கொடுத்த காசு தெண்டமா போயிருக்கும்.'

(இந்த டைரி குறிப்புல நிறைய 'take away' இருக்கு)

Friday, December 18, 2009

மாச்சிஸ் (- தீக்குச்சி) இந்தி பட விமர்சனம்

சீக்கியர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் குறுந்தகவல்களையும் இணைய அஞ்சல்களையும் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தவர்களுக்கு அவர்களின் கடந்த கால வேதனைகளை பற்றியும் 80களில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை பற்றியும் படித்து மனம் குமுறியதுண்டா என்று தெரியவில்லை.

இன்றைக்கு ஒரு சமூகத்தில் புள்ளையாண்டான் படித்து விட்டு அமெரிக்காவில் நன்ன உத்தியோகத்துல இருந்தா தான் பெருமை. வேறொரு சமூகத்தில் வாப்பா பயணத்துல இருக்காஹா என்றால் தான் பெருமை.

ஆனால் ராணுவத்தில் இன்ன ரேங்கில் இருக்கிறான் என்று பெருமைபடும் ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது சீக்கிய சமூகமாகத் தான் இருக்கும்.

அந்த சமூகத்தின் புனித தலமான பஞ்சாப் கோவிலில் புளு ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவம் (எந்த ராணுவத்தில் பணியாற்றுவதை பெருமை என்று கருதினார்களோ அதே ராணுவம் தான்) உள்ளே புகுந்ததை தொடர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தமும் நினைத்து  பார்க்கையில்  அல்லது  படித்து  பார்க்கையில் ரத்தம் உறைய வைப்பவையாகவே இருக்கிறது.

தீவிரவாதிகளை பந்தாடும் விஜயகாந்துகளும் அர்ஜுன்களும் ஸ்டார்களாக வேண்டுமென்றால் மின்னியிருக்கலாம், ஆனால் சமுதாய அக்கறை உள்ள கதாபாத்திரங்களாக நம்முடன் வாழவிலை என்பது தான் உண்மை.

இளைஞர்கள் என்பவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சின்ன உரசலிலும் தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படி தீ பற்றிக் கொண்ட தீக்குச்சிகளின் கதை தான் மாச்சிஸ். அதுமட்டுமல்ல அப்படி உரசுவதற்கு காரணமாக காவல் துறையினரின் வழக்கமான விருந்தோம்பல்களும் அரசியல்வாதியின் அரசியல் இயல்புகளுமே காரணம் என்பதையும் இந்த படம் சுட்டிக் காட்ட தவறவில்லை.

ஒரு அரசியல்வாதியை சுட்டதற்காக 'ஜிம்மி' என்ற தீவிரவாதியை தேடி அலையும் இன்ஸ்பெக்டர் 'வொஹ்ரா' 'ஜஸ்வந்த் சிங்'கின் வீட்டில் ஜிம்மி ஆயுதங்களுடன் மறைந்து இருப்பதாக கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு போலிஸ் படைகளுடன் விரைகிறார்.

ஜஸ்வந்த் சிங் வீட்டில் அவரின் தங்கை வீரன் என்கிற வீரேந்திரா (தபு), மற்றும் அவரின் தாயார் இவர்களுடன் தான் குடி இருக்கிறார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பன் பாலி என்கிற கிரிபால் சிங்குக்கும் வீரனுக்கும் திருமணம் செய்வது பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது தான் போலீஸ் படை உள்ளே நுழைகிறது.

ஜஸ்வந்த் சிங்கிடம், 'மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதியையும் அயுதங்களையும் மரியாதையாக ஒப்படைத்து விடும் படி' கேட்கிறது.

'அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் போகவே 'அந்த தீவிரவாதி பேரு என்னா?' என்று கேட்கிறார் ஜஸ்வந்த் சிங்

'ஜிம்மி' என்ற பெயரை சொன்னவுடன் சிரித்துக் கொண்டே 'எனக்கு ஜிம்மியை தெரியும்' என்று வீட்டுக்கு பின்புறம் அவ்வளவு போலீஸையும் கூட்டிக் கொண்டு போய் 'ஜிம்மி..' என்று கூப்பிட ஜிம்மி வருகிறது. ஜிம்மி அவர் வீட்டு நாய்.

ஜஸ்வந்த் சிங் அந்த நாயை காட்டி, 'இது தான் எனக்கு தெரிந்த ஜிம்மி, இதுக்கு துப்பாக்கி எல்லாம் பிடிக்க தெரியாதே..' என்றதும் வெந்து போகிறார் வெஹ்ரா.

விசாரணைக்கு வரவேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்கை போலீஸ் கையோடு அழைத்து கொண்டு போகிறது. 'உடனே விட்டுவிடுவோம்' என்று அழைத்து செல்கிறது போலீஸ். வீரனின் அழுகை தாங்க முடியாமல் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஸ்டேஷனாக ஏறி இறங்கி பார்த்தும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

போலீஸ்காரர்கள் இது மாதிரி தான் யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், எவன் கிடைக்கிறானோ அவனை அழைத்து கொண்டு போய் மூன்றாம் தர டிரீட்மெண்ட் கொடுத்து 'இது தாண்டா போலீஸ்' என்று படம் காட்டுவார்கள்.

15 நாட்களுக்கு பிறகு படுகாயமடைந்த நிலையில் வந்து சேருகிறான் ஜஸ்வந்த் சிங். கொதித்து போகிறான் நண்பன் பாலி. தன்னுடைய உறவினன் ஒருவன் தீவிரவாதியாக இருக்கிறான் என்பதால் அவனை கண்டு அந்த போலீஸை தண்டிக்க உதவி கிடைக்கும் என்று அவனை காண புறப்படுகிறான்.

பஞ்சாபில் சிங் அதிகம் பயணிக்கும் பஸ்ஸில் சிங் அல்லாத ஒருவர் கேமராவுடன் ஏறுகிறார். ஒரு பேருந்து நிறுத்தம் வருகிறது. பாலியுடன் அந்த கேமரா மேனும் இறங்கி வருகிறான், ஆனால் அவனிடத்தில் கேமரா இல்லை.

பாலி சொல்கிறான், 'பாய் சாப், உங்க கேமரா.." என்று -

அந்த கேமரா பார்ட்டி விழிக்கிறான், திடீரென்று கார் வருகிறது, தட்டு தடுமாறி காரின் உள்ளே புகுந்து பறந்து மறைகிறான்.

பஸ் வெடித்து சிதறுகிறது.

இந்நிலையில் தான் குண்டு தயாரிக்கும் சனாதானையும்  தீவிரவாதிகளின்  தலைவன் சந்திக்கிறான், (நான் இங்கே தீவிரவாதிகள் என்று எழுதுகிறேன், ஆனால் தீவிரவாதிக்கான சரியான அர்த்தம் (recognised definition) என்ன என்று எனக்கு தெரியவில்லை). இவனுடைய உறவினன் இறந்து  விட்டது  தெரிய  வருகிறது.

ஆனால் சனாதனிடம் துணையாக சேர்ந்து கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் வொஹ்ரா என்ற இன்ஸ்பெக்டருடன் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரை (இவர் தான் நண்பனை காட்டடி அடித்திருப்பார்) மார்க்கெட்டில் வைத்து சுட்டு விட போலீஸ் அவனை தேடி மீண்டும் ஜஸ்வந்த் சிங் வீட்டிற்கு செல்கிறது.

அங்கே என்ன நடக்கிறது, வீரன் என்ன ஆனாள், பாலியும் வீரனும் சந்தித்தார்களா?, பாலியால் வொஹ்ராவை தண்டிக்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு மாச்சிஸ் விடை சொல்கிறது.

குல்ஜார் சாப் படம் என்றால் பிளேஷ் பேக் இல்லாமலா?  படம் ஆரம்பித்த சில காட்சிகளுக்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவனாக பாலி இருக்கிறான்.  அப்போது அவர்கள் பாடும் 'சோட் ஆயே ஹம்..' 'சப்பா சப்பா..' பாடல்களும் அருமை. பானி பானி பாடல் தென்றல். இசை விஷால் பரத்வாஜ். (அப்பாஸ் மஸ்தான் தயாரிப்பில் வந்த கமினே என்ற இந்தி படத்தின் இயக்குனர்)

ஒரு கட்டத்தில் எந்த ஜிம்மியை தேடி போலீஸ் ஜஸ்வந்த் வீட்டிற்கு வந்ததோ அந்த ஜிம்மியை பாலி சந்திக்கும் போது ஜிம்மி தான் எப்படி இந்த போராளியானேன் என்று தெரிவிப்பார்.

தனது தந்தையை அவரது டர்பனை கழட்டி அந்த டர்பனாலேயே கைகளை பின்னால் கட்டி டயரில் நெருப்பை வைத்து கழுத்தில் மாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லி அழுவார்.

இப்படி ஒவ்வொருவர் தீவிரவாதியாகவோ அல்லது போராளியாகவோ மாற ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றது. அதைப் பற்றி யாராவது அக்கறையோடு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை.

இந்த படம் ரிலீசான போது கஷ்மீரிலும், பஞ்சாபிலும் தடை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றியை தடை செய்ய முடியவில்லை.

தீவிரவாதிகள் படம் என்றதும் ஒரு மணிரத்னம் படமாகவோ அல்லது விஜய்காந்த் படமாகவோ நினனத்து கொண்டு பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் 'சோட் ஆயே ஹம்..' பாடல்



'சப்பா சப்பா' பாடல்



சில நியாயங்கள் காயங்களால் விளைகிறது. அது நியாயமா இல்லையா என்று வாதிப்பதை விட காயங்களுக்கு மருந்து அல்லது காயங்களுக்கு காரணமானவைகளை அடியோடு ஒழிப்பது (apply to the source) இது ஒன்றே சிறந்த வைத்தியமாக இருக்க முடியும்.

Thursday, December 17, 2009

ஜட்ஜப்பா - பகுதி 3

ஜட்ஜப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்

ஜட்ஜப்பா - பகுதி 2 ஐ இங்கே படிக்கலாம்

முதன் முதலாக சிகரெட் குடிக்கும் போது இருமல் வருகிறதல்லவா? அது வெறும் இருமல் அல்ல - உடல் நம்மிடம் சொல்கிறது, அதாவது ”ஏதோ ஒரு அந்நிய உடலுக்கு ஒவ்வாத பொருளை உள்ளே இழுக்கிறாய்” என்று.

நாம் இதற்கெல்லாம் அசராமல் “எங்களுக்கு தெரியும், நான் சொல்றதை நீங்க செய்யுங்க, பேசாம நான் பிடிக்கிற புகையை நீங்க உள்ளே அனுப்புங்க..” என்பது போல் தொடர்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கவும் அது ஒரு பேச்சு பேசாமல் நாம் அனுப்புகிற கேடான புகையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

இப்படி நம் உடல் பல இடங்களில் முன்கூட்டியே நமக்கு வர இருக்கும் நல்லதையோ கெட்டதையோ சரியாக சொல்லி விடும்.

இதே போல் தான் நம் வாழ்க்கையும், சிலரது வாழ்க்கையை பார்த்தால் அவர்களது சிறு வயது வாழ்க்கையிலேயே சில சம்பவங்கள் அவர்கள் யாராக வருவார்கள் என்று சொல்லி விடும். 

இது ஒரு வகை ஜோசியம் மாதிரி, முன் கூட்டியே அறிவிக்கக் கூடியது, முன்னறிவிப்பு செய்வதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது பாவம் என்று வகைப்படுத்துவது சரியல்ல, இஸ்லாத்தை பொறுத்த வரை மறுமை வாழ்க்கை உள்பட முன்னறிவிக்கப்பட்ட விஷயங்கள் நிறையவே உள்ளன.

முன்னர் சொன்ன செய்திக்கு வருகிறேன், நம் வாழ்க்கையில் கூட சிறு வயதில் நடந்த சில சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான அஸ்திவார கம்பிகளையும் கற்களையும் காண முடியும். அது நல்லதை குறித்தாலும் சரி, அல்லதை குறித்தாலும் சரியே.

வக்த் என்ற இந்தி படத்தில் ஜோசியக்காரர் ஒருவர் பால்ராஜ் சாஹ்னியின் (பழைய இந்தி நடிகர்) கையை பார்த்து “நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்” என்பார்.

அதற்கு பால்ராஜ், “அதை ஏன் கையை பார்த்து சொல்றீங்க..? அதை விட என் முதுகை பார்த்தா இன்னும் தெளிவா சொல்லலாம்” என்று சட்டையை உயர்த்தி முதுகை காட்டுவார், அதில் அவர் மூட்டைகளை தூக்கி சுமந்ததற்கான வடுக்கள் இருக்கும்.

அதே போல் ஜட்ஜப்பாவின் வாழ்க்கையிலும் இரண்டு சம்பவங்கள் அவர்கள் யாரென்று முன்னரே ஜோசியம் சொல்லுகிறது.

முதல் சம்பவம்:

ஜட்ஜப்பாவின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவராக சீயத்துக்கு சென்று விட்ட படியால் எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்த வீட்டு வேலைகளை அவர்கள் மட்டுமே தனியாக பார்க்கும் படி ஆனது.

அத்தகைய வேலைகளில் ஒன்று கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து மாடுகளை குளிப்பாட்டுவது, மாட்டு கொட்டிலை துப்புரவு செய்வது, பால் கறப்பது என இப்படி எல்லா வேலைகளையும் வெட்கப் படாமல் செய்ய வேண்டும்.

அப்படி ஒருமுறை ஜட்ஜப்பா பசுமாட்டை குளிக்க வைத்து கொண்டிருந்த போது மாடு முட்டி விட்டது. இதனால் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் ஒரு கம்பை எடுத்து மாட்டை அடிஅடியென்று அடித்து விடுகிறார்கள்.

அதோடு விட்டுட்டு போக வேண்டியது தானே, அவர்கள் யோசித்து பார்க்கிறார்கள், ”மாட்டை போய் அடிக்கிறோமே, அதுக்கு என்ன பகுத்தறிவா இருக்கிறது” என்று - அந்த யோசனையின் முடிவாக அதே கம்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்கிறார்கள்.

இது யாருமே பொதுவாக செய்யாதது. யார் மீதும் கோபம் வந்தால் ஏசுவோம், அடிப்போம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து விட்ட பிறகு நம்மை நாமே ஏசிக் கொள்வதோ அல்லது அடித்து கொள்வதோ கிடையாது.

இவர்கள் என்னடா என்றால் யோசித்து பார்க்கிறார்கள், தவறை உணர்கிறார்கள், அத்தோடு நிற்காமல் தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்கிறார்கள்.

சிறு வயதிலேயே அவர்களிடம் இருந்த தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருந்த இத்தகைய குணம் தான் பிற்காலத்தில் அவர்கள் நீதி தவறாதவர் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.

இரண்டவது சம்பவம்:

நாகூர் மியா தெருவும் குஞ்சாலி மரைக்காயர் தெருவும் தைரியமாக  சந்தித்து கொள்ளும் தெரு முனையில் இருந்த “நாகூர் முனிசிபல் முகம்மடன் பாய்ஸ் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்ற பள்ளிகூடத்தில் தான் அவர்களது நா அனா ஆவன்னா பழகியது.

அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் சென்னை ராஜதானி கவர்னராக இருந்த வெள்ளைக்கார துரை அப்போதைய வழக்கப்படி பதவிக்காலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அவர் நாகூரின் மியா தெரு வழியாக போக போகிறார் என்றதும் பள்ளிகூடத்தில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் எதிரே இருந்த ஒரு வீட்டின் திண்ணை மீதேற்றி அந்த வழியாக போக இருக்கும் கவர்னரை பார்க்க காத்திருக்க வைத்தனர் ஆசிரியர்கள்.

அப்போது ஒரு ஆசிரியர் ஜட்ஜப்பாவை பார்த்து, ‘இப்படி தான் இஸ்மாயிலும் ஒரு நாள் கவர்னராகி பெரும் புகழ் அடைவான்” என்று கூறியிருக்கிறார்.

அவர் சொன்ன மாதிரியே இல்லை இல்லை அவர் கற்பனை செய்த மாதிரியே 1980ம் வருடம் அக்டோபர் மாசம் ஜட்ஜப்பா தற்காலிக கவர்னராக பொறுப்பேற்கிறார்கள்.

அப்போது நாகூரில் எங்க வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஜட்ஜப்பாவுக்கு வந்தது.

அவ்வளவு தான், என்னுடைய தாயாரின் தந்தை சேத்தப்பா (கவுஸ் சேட் என்ற பெயருடைய இவர்களும்  ஜட்ஜப்பாவும் தான் வீட்டு வேலைகளை ஒன்றாக பார்த்தது அதுவும் தவிர இவர்களின் தந்தையின் பூர்வீக சொத்தை தான் அப்துல் அஜீஸ் நிர்வகித்து வந்தது) எங்களது வீட்டிலிருந்து மியா தெரு பள்ளிகூடம் வரைக்கும் பந்தல் போட்டார்கள். வருகின்ற அத்தனை பேருக்கும் தங்க உண்ண குடிக்க என்று அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள்.

அந்த வழியாக ஜட்ஜப்பா வருகிறார்கள், அவர்கள் படித்த பள்ளிகூடத்தை கார் கடக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் நின்ற திண்ணையை பார்க்கிறார்கள். அவர்கள் கண் முன் சிறிய வயதில் அவர்கள் நின்ற காட்சி கண்ணுக்கு தெரிகிறது.

அவர்களின் ஆசிரியர் சொன்னதை நன்றியுடனும் இறைவனின் அருளை எண்ணித் தாழ்மையுடனும் நினைத்துக் கொண்டதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

மேலே நான் சொல்லும் போது ஆசிரியர் சொன்ன மாதிரி இல்லை கற்பனை செய்த மாதிரி என்று எழுதியிருந்தேன். பேசிய ஆயிரம் மொழிகளை விட பேசாத நினைவுகளுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல பேசுகின்ற மொழியில் உணர்வுகளும் கற்பனைகளும் கலந்திருந்தால் பேசாத மொழிகளை போன்றே சக்தி உண்டு என்றும் நான் நம்புவதால் தான் அப்படி சொன்னேன்.

-------------------------------------------------------------------------------

நான் பாட்டுக்கு வூட்டு வாசல்ல ஒக்காந்து இருந்தேன், ஜட்ஜப்பா உள்ளக்கேயிருந்து வாசலுக்கு வந்தாஹா, கார்ல ஏறுனாஹா, ‘நீயும் ஏறிக்க’ன்னு எண்ட்ட சொன்னாஹா.

நான் மறு பேச்சு பேசாம ஏறி ஒக்காந்த ஒடனே, ‘சுல்தான் தைக்காவுக்கு போவணும். வழி சொல்லு” என்று என்னிடம் சொல்ல அவர்களின் மகனார் காசிம் காரை தெரு முனைக்கு கொண்டு வந்து விட்டார்.

எனக்கு ஒரே குழப்பம் “எந்த சுல்தான் தக்கா..? தெரியாதுன்னு சொன்னாக்கா ஏச்சு உழுவுமோ” என்று பேய் முழி முழித்துக் கொண்டு எச்சில் முழுங்கினேன்....

பகுதி 4 ல் தொடரும்

Friday, December 11, 2009

குரான் ஷரீஃபின் சவால்

இந்த பதிவு மரியாதைக்குரிய திரு கோ.வி.கண்ணனின் குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல் என்ற எனது பதிவில் பின்னூட்ட கேள்விகளுக்கு பதில் எழுதும் முயற்சியாக எழுதப்படுகிறது.

கேள்வி 1.
குரான் ஷரீஃபில் வரும் ‘இது போல் இன்னொரு குரான் ஷரீஃபை கொண்டு வருவது’ என்ற சவால் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமிய அன்பர்கள் (பிறரை) ஏளனம் செய்வது பற்றிய என் கருத்து என்ன?

கேள்வி 2
குரான் ஷரீஃபில் வரும் மேலே கூறப்பட்ட அந்த சவால்கள் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுவதை பற்றி நான் என்ன நினைக்கிறேன்.

கேள்வி 3
அளவற்று (அல்லது எக்ஸ்ட்ராவாக) என்னை புகழுங்கள் என்று அல்லா கூறியதாக குரான் ஷரீஃபில் எங்காவது வசனம் உள்ளதா?

-----------------------------------------------------------------

இந்த பதிவில் முதல் இரண்டு கேள்விகளும் ஒரே திசையில் பயணிப்பதால் அதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன்,

அதுவும் தவிர முதல் இரண்டு கேள்வியில் எனக்கு பிடித்த விஷயம் நான் என்ன நினைக்கிறேன் என்று என் கருத்தை கேட்டது,  இது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்னை போய் கருத்து கேட்கிறீர்களே நான் பெரிய ஆளாயிட்டேன் என்ற பெருமிதத்தால் நிச்சயமாக அல்ல,

மாறாக, குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போது கூட ‘குரான் ஷரீஃப் இப்படி சொல்கிறது அப்படி சொல்கிறது’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ’தோராயமாக குரான் ஷரீஃப் என்ன சொல்கிறது என்றால்’ 'an approximation of the meaning of what the Quran says is ..' என்று தான் ஆரம்பிப்பார்கள்,

அதாவது நான் புரிந்து கொண்டதை என் கருத்தாக எழுதுகிறேன், ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் என் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல - மற்றவை உங்கள் கருத்து.
-------------------------------------------------------------------------

முதல் இரண்டு கேள்விகளிலும் ஒரு விஷயம் பிராதனமாக சொல்லப்படுவது என்னவென்றால் குரான் ஷரீஃபில் வரும் சவால் பற்றியது.

அந்த சவால் என்ன என்று விபரமாக அறிவதுடன் அது எந்த கட்டத்தில் வருகிறது என்பதையும் அலசுவது அவசியமாகிறது.

அரபுக்காரர்கள் சிலைகளை வணங்கினார்கள், செத்ததை தின்று கொண்டிருந்தார்கள், உறவுகளை துண்டித்தார்கள், அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தினார்கள், பலவான்கள் பலவீனமானவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த காலகட்டத்தில் 40 வயதை கடந்த ஒருவர், எழுத படிக்க தெரியாதவர், ஒரு கவிதை கூட எழுதாதவர், ஒரு சொற்பொழிவை கூட ஆற்றாதவர், அல்-அமீன் (நேர்மையின் இருப்பிடம்), ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) (-முஹம்மது நபிகளை வசைக் கவிதைகள் இயற்றும் போது கூட அல்-அமீன் என்றே இயற்றினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) என்ற பெயருடைய ஒருவர் தன்னை இறைவனின் தூதர் எனவும் தனக்கு இறைவனால் வேத வசனங்கள் இறங்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.

தேவ தூதர் என்றால் அது யூத குலத்தில் தான் பிறக்கும் என்றும் யூதர்கள் மட்டும் தான் அறிஞர்கள் என்றும் (நம் நாட்டு கதை மாதிரி இருக்குல்ல..! உயர் ஜாதியிலிருந்து பெரியார் வரைக்கும் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்களே..!) மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்கள் வேத வசனங்கள் என்று சொல்லுகின்றவற்றை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்தது.

அப்படி என்ன சொன்னார்கள் என்றால் சிலை வணக்கத்தை கைவிட சொன்னார்கள், பேச்சில் உண்மை, வாக்கை காப்பாற்றுவது, வர்க்க வேறுபாடுகளை கலைவது, அமானித பொருள்களுக்கு (நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்) துரோகம் செய்யாமல் இருப்பது இப்படி பலவற்றை எடுத்து கூறினார்கள்.

இதை எல்லாம் எந்த கூட்டத்திடம் சொல்கிறார்கள் தெரியுமா..?, உதாரணமாக ஒரு சம்பவம் சொல்கிறேன்,  இம்ரவுல் கைஸ் என்று ஒருவன் இருந்தான், அவனது தந்தையை இன்னொருவன் கொன்று விட்டான். பழிக்கு பழி வாங்க (இந்தி, தமிழ் சினிமாவை போல்) அந்த கால வழக்கப்படி கடவுள் சிலையின் முன்னர் மூன்று அம்புகளை போட்டான், அதில் ஒன்றில் ‘சரி’ (-அதாவது கொல்லவும்) என்றும், இன்னொன்றில் ‘வேண்டாம்’ என்றும், மூன்றாவதில் எதுவும் எழுதாமலும் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு மூன்று முறை எடுத்தும் ‘வேண்டாம்’ என்று வரவே கடவுள் சிலையை பார்த்து, ‘உங்க அப்பனை கொன்னிருந்தால் இப்படி தான் வேண்டாம்னு சொல்லுவியா?’ என்று கேட்டுவிட்டு அம்புகளை உடைத்து அந்த கல்லுருவத்தின் முகத்தில் எறிந்து விட்டு சென்றான்.

சமூக வாழ்க்கை இன்னும் மோசம், இஸ்லாம் அந்த மக்களிடையே தோன்றியதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகளில் நூற்று முப்பத்திரெண்டு போர்கள் நடந்து ரத்தம் சிந்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் போய் ஒருத்தர் இதெல்லாம் கூடாது நான் தான் இறைவனின் தூதர் என்று சொல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய சுமையை இறைவன் முஹம்மது நபிகளின் மீது இறைவன் விதித்தான்.

இத்தனை காலம் கஃபாவில் இருக்கும் கடவுள் சிலையால் இருந்த மதிப்பும், கடவுள் குடும்பத்தினர் என்ற மரியாதையும் போய் விடுமோ என்ற பயமும் (நம்ம ஊர் கதை தான்) பணக்காரன் ஏழை என்ற வர்க்க பேதங்களை ஒழிந்து போவதையும் அந்த அரபுகள் விரும்பவில்லை.

இதன் காரணத்தால் நபிகள் நாயகம் போகும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து சென்று வசைக் கவிதைகள் பாடுவது, பைத்தியக்காரன், பிசாசு பிடித்திருக்கிறது என்பது அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சு யார் காதிலும் விழாமல் இருக்க கத்தி கூச்சலிடுவார்கள். கல்லால் அடித்தார்கள், குப்பைகளை கொட்டினார்கள்.

அவர்கள் செய்த இன்னொரு முயற்சி பதவி தருகிறேன், அதிகாரம் தருகிறேன், அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறேன் இப்படி ஆசை வார்த்தை காட்டியது.

முஹம்மது நபிகள் திடமாக நின்றார்கள், ‘ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் சேர்த்து தந்தாலும் என்னுடைய கொள்கையை விடமாட்டேன்..’ என்று அந்த கொள்கை பிடிப்போடு பிடி கொடுக்காமல் இருந்தார்கள்.

அவர்களை தொல்லைகள் கொடுத்து பார்த்து எதுவும் சரிபட்டு வராமல் போகவே, அரேபியர்களின் அடுத்த கட்ட முயற்சியாக ‘அவர் சொல்வது எல்லாம் அவரே சொல்வது தான்’ என்றும் ‘அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என்றும் குற்றம் சுமத்தி தோற்கடிக்க பார்த்தது தான்.

இப்போது தான் வருகிறது அந்த சவால் செய்தி, இப்படி சவால் விடுவது வழக்கமாக நபிமார்களுக்கு வரும் பிரச்சினை தான்.

உதாரணமாக மூஸா நபி காலத்தில் தந்திரங்கள் செய்வது பிரபலமாக இருந்தது (excelled at magical trickery). மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் நடந்த சவாலை பற்றி டென் கமாண்ட்மேண்ட்ஸ் படங்களை பார்த்திருக்கலாம். அதுவும் இறைவனால் அந்த கால மக்களுக்கு விடப்பட்ட சவால் தான்.

மூஸா நபியவர்களுடன் போட்டியிட்ட அந்த மந்திரவாதிகள் கட்டையை தூக்கி எறியும் போதும் பாம்பு வரத்தான் செய்தது, ஆனால் என்ன மூஸா நபி எறிந்த கட்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த பாம்பு மந்திரவாதிகளின் பாம்பையே விழுங்கி விட்டது. 

அதே போல் ஜீஸஸ் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஈஸா நபியவர்களின் கால கட்டத்தில் மருத்துவம் பிராதனமாக இருந்தது (excelled at matters of medicine). அதனால் தான் எல்லோரையும் மிகைக்க கூடிய அளவுக்கு அவர்கள் இறந்தவர்களை உயிர்பிப்பது வரை செய்து காட்டினார்கள்.

இதன் அடிப்படையில் முஹம்மது நபிகளின் கால கட்டத்தில் இலக்கியம் பெரிதும் மதிக்கப்பட்டது. ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அவரால் கவிதைகள் படைக்க முடியுமா என்று பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.

அவர்களிடம் தான் இறைவன் மற்ற நபிமார்களின் கால கட்டத்தில் அந்த காலத்துக்கு தேவையான சவால்கள் உருவானதோ அதே மாதிரி தான் இலக்கியத்திலேயே சவாலை விடுத்தான்.

அந்த சவால் நியாயமானது தான், உதாரணமா ஒரு கம்ப்யூட்டர் புரொகிரமர் கிட்டே போய் இந்தாப்பா உலகத்துல இல்லாத ஒரு புது கெமிக்கல் பார்முலா எழுதி கொண்டு வா என்று கெமிஸ்ட் கிட்டே வைக்க வேண்டிய சவாலை அது வைக்கவில்லை.

கவிதையில் சிறந்தவர்களிடம், இலக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டதற்காக தங்களை தாங்களே கௌரவப் படுத்தி கொண்டவர்களிடம் அந்த சவாலை வைத்தது. அதுவும் தவிர, அப்படி சவாலை வைத்ததும் முஹம்மது நபியல்ல, இறைவன் தான்.

முதல் சவால்:

ஆகவே (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்... நேரான வழியை அறிவிக்கக் கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என்று நீர் கூறும்

சூரா கஸஸ் 28:49

இது அல்லாஹ் கிட்டேயிருந்து வரவில்லை, அவரே தான் சொல்கிறார் என்று சொன்னார்களா..? அதற்காக அப்படி உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வேதத்தை கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது.

இந்த வசனத்தில் இருக்கும் அழகு சும்மா எதையாவது கொண்டு வந்து இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி விட கூடாது என்பதற்காக நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்ற அந்த வார்த்தை. எப்படி..?

இரண்டாவது சவால்:

நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும்: இதைப்போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான யாவரையும் (இதற்காக) அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். (மெய்யாகவே இது கற்பனையென்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!)

சூரா ஹூது 11:13

இந்த இரண்டாவது சவாலில் கற்பனை செய்து பார்த்து பத்தே பத்து அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் என்கிறது.

மூன்றாவது சவால்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்களும்) அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (உங்களுக்கு உதவியாக) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க் கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள்

சூரா பகரா 02:23

அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பொய்யென புரட்டென கூறி ஒழித்து கட்ட துடித்து வாய்ப்பை எண்ணி காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பல்லவா இது..?

வலிய வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முயற்சி செய்தும் பார்த்தார்கள்.. முந்தைய நபிமார்களிடத்திலே அவர்களின் எதிரிகள் எவ்வாறு படுதோல்வி அடைந்தார்களோ அதே போல் தான் இவர்களும் படுதோல்வி அடைந்தார்கள். இது நபிமார்களின் வரலாறுகளில் காணப்படாத செய்தி அல்ல.

நான் என்னா சொல்றேன், அதுவும் தவிர, இன்றைக்கு அரபிங்கறது செத்த மொழி அல்ல, வாழும் மொழி தான், இன்னமுமா அந்த சவால் இருக்கிறது என்ற கேள்வியை விடுத்து இதோ இருக்கிறதே என்று ஒரு அத்தியாயத்தையேனும் காட்டுவது அல்லது புதிதாக எழுதி கொண்டு வந்து வாதிடுவது தான் அறிவுடைமை என்கிறேன்.

எப்படி கொண்டுட்டு வரணும் தெரியுமா..?

இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்!

சூரா அல்கவ்ஸர் 108: 1-3

 இப்படிப்பட்ட அழகும் ஆழமும் எழிலும் கருத்தேற்றமும் மிக்க வசனத்திற்கொப்ப அரபிப் பெரும் புலவர்களை எல்லாம் துணையாக அழைத்துக் கொண்டு உண்மையாளர்களாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று நான் அல்ல இறைவன் சவால் விடுகிறான்.

அது முஸ்லீம்கள் ஏளனமாக கேட்பதாக கூறுகிறீர்கள்? முதலில் இது முஸ்லீம்களின் சவாலே அல்ல, இது இறைவனின் சவால், அதுவும் தவிர, இது இறைவேதம் அல்ல என்று ஏளனம் செய்தார்களே அவர்களுக்காக சொல்லப்பட்டது.

என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------

உங்களின் மூன்றாவது கேள்வி அதாங்க உருவகம், உருவம், இணைவைத்தல், பாவம், அப்புறம் எக்ஸ்ட்ரா புகழ்ச்சி இதெல்லாம் தனிப் பதிவு.
-----------------------------------------------------------------------

ஒரு கேள்வி கேட்டா ஆதம் காலத்து கதைலேந்து ஆரம்பிப்பான் என்று இந்த கொடுமையே போதும் என்று நீங்கள் சொன்னாலும் சரியே!

-------------------------------------------------------------------------

Thursday, December 10, 2009

சில டைரி குறிப்புகள்..

செப்டம்பர் 11 சம்பவத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பட்ட அவமானங்கள் சொல்லில் அடங்காது.

ஒரு முறை என் அலுவலக மேசை மேலே ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஒருவர் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் காணப்பட்டார்.

அதை கண்ணுற்ற எனது நண்பர் ஒருவரின் வாயில் அவரையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தை, 'டெரரிஸ்ட் குரூப்பா.. பள்ளிவாசல்ல கொடுத்தாங்களா..?' என்று

எனக்கு எரிச்சலாய் இருந்தது, 'நல்லா பாருங்களேன்..' என்றேன்

கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு (என்னமோ கண்ணாடியில் மட்டும் தான் அழுக்கு என்று நினைத்து கொண்டு) உற்றுப் பார்த்தார், அது ஒரு மருத்துவரின் படம்.

இனி அவர் துடைக்க வேண்டியது 'மனதை' தான் - என்று தோன்றியது.

நான் உடனே எனது நோட்டில் இப்படி எழுதினேன்..

ஷஹாதா
சொன்னால் கூட
ஜிஹாதா
என்று கேட்கிறார்கள் -

(குறிப்பு: ஷஹாதா என்றால் 'அல்லாஹ் (இறைவன்) ஒருவன்' என்று சாட்சியம் கூறுவதை குறிக்கும்)

---------------------------------------------------------------------------------

ஏற்கனவே அரியர் வைத்த பரீட்சையை இன்று தான் எழுத போகிறேன்.

வாப்பா, ‘நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா..?’

நான் பயந்து கொண்டே, ‘ம்.. பண்ணியிருக்கேன்..’ பரீட்சையை விட வாப்பாவின் பயம் அதிகம்

‘பாஸ்ட் கொஸ்டின்ஸ் கிடைச்சுடுச்சா..’ விடுற மாதிரி இல்லை

‘ம்.. கிடைச்சிடுச்சு..’ ஒன் வேர்ட் ஆன்சர்ஸ் தான்

‘ஒரு கேள்வியை கூட விட்டுடாதே.. ஒழுங்கா எழுது..’ - வாழ்த்து

‘சரி எழுதிடுறேன்..’

‘டைம் ரொம்ப முக்கியம்.. கடைசில டைம் இல்லைன்னா.. பாய்ண்ட் ஃபார்ம்ல எழுதிடு’ - எக்ஸாம் டிப்ஸ் அல்லது டெக்னிக்ஸ்

‘சரி..’

‘ஹால் டிக்கெட் எடுத்துக்க.. நல்ல பேனா.. நான் கொடுத்தேன்ல.. அது எழுதுதுல்ல..’ - கவலை

‘நல்லா எழுதுது..’

’சரி.. அல்லா தவக்கல்..’

சைக்கிளை மிதித்து பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன்.. இதைவிட சோர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

விறுவிறு என்று நோட்டீஸ் போர்ட் பக்கம் போய் எங்கே பரீட்சை ஹால் என்று பாக்கலாம்னு பாத்தா பேரதிர்ச்சி

நான் எழுத வேண்டிய பரீட்சையை பற்றிய தகவலே இல்லை.

சம்மந்தப்பட்ட நபரிடம் போய் விபரம் சொல்லி கேட்டதற்கு அவர் அலட்சியமாக சொன்னார்,
‘அந்த பரீட்சை நேத்தைக்கே முடிஞ்சிடுச்சே..’

எங்க வாப்பா ஏசவே இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க

----------------------------------------------------------------------------------

நான் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ரசிகன். இங்கே சிங்கப்பூரில் ஒரு முறை பாகிஸ்தான் நியுசிலேந்துடன் நடந்த ஆட்டத்தை நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.

அதிலும் அஃப்ரிடி என்ற அதிரடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது இந்திய நண்பர் ஒருவர், 'அதெப்படி நீங்கள் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாம்..?' என்று கேட்டார்
அத்தோடு நிற்காமல், 'இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை வந்தால் நீங்க எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க' என்றும் கேட்டார்

எனக்கு அவரின் இரண்டாவது கேள்வி சன் டிவி பழைய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் அருமையாக கேள்விகள் கேட்டு அசத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சீதர் என்று நினைக்கிறேன் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சீதர் என்பவர் ரபி பெர்னாட்டிடம், 'இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் யாருக்கு சப்போர்ட் பண்ணுவீர்கள்' என்ற சுழலுகிற நாற்காலியில் சுற்றிக் கொண்டே கேட்டார்.

ரபி பெர்னாட், 'என்ன ஒரு அபத்தமான கேள்வி' என்பது போல் பதில் சொன்னார்.

என் ஞாபகங்களை வாங்கி கொண்டு நான் எனது நண்பருக்கு இப்படி பதில் சொன்னேன், 'பங்களாதேஷ் நாடு கிரிக்கெட் டீமுக்கு கோச்சாக மொஹிந்தர் அமர்நாத் என்ற இந்தியரை நியமித்தார்கள், அப்போது இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்று வையுங்கள், மொஹிந்தர் அமர்நாத் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..' என்று கேட்டேன்.

----------------------------------------------------------------------------

குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்

1

முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மேலும், முஹம்மது நபிகளை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள்.

அதே போல், குரான் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிகளுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.

இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குரான் ஷரீஃபே சொல்கிறது.

ஆனால், குரான் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குரான் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குரான் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு 'இது அறிவியல் பூர்வமானதா?' என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------

2

அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குரான் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குரான் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

குரான் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், 'அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..' என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.

குரான் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.

ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.

அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குரான் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை 'வாயே இல்லாதவர்கள்' என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குரானின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு 'இது மனிதனின் சொல்லன்று' என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

-----------------------------------------------------------------------------------
3

மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

குரான் ஷரீஃபின் 'ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)' என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்

86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்

86:6 - குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்

86:7 - முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது

86:8 - இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்

மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
------------------------------------------------------------------------------------
4

அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிகள் சொல்கிறார்கள், 'நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்கு அந்த கால அரேபியர்கள், 'அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?' என்று கேட்கிறார்கள்.

அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான்,

மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல்  முதுகு தண்டிற்கும்  விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்' என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.
------------------------------------------------------------------------------------------
5

ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன

1. அந்த கால அரேபியர்களுக்கு 'இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.

2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல

3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான 'இறைவனால் இது சாத்தியமாகுமா..?' என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், 'மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.' என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான்.

4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக 'இங்கிருந்து' வெளியாகும் 'விந்து'  என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

A. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், 'ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை - இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே' என்று நீங்கள் கேக்க கூடாது? -

B. அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.

முதலாவது 'குமரி முதல் இமயம் வரை'  என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும்
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது

ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும்  தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.

5. அதுவும் தவிர, 'இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்' என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.

குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம்
'அல்-மும்தஹினா' வின் 12வது வசனத்தில் '... தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ.." என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.

குரான் ஷரீஃபுக்கு குரான் ஷரீபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

-----------------------------------------------------------------------------

கடைசியாக குரான் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான்   என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு மட்டும் தான் நேர்வழி காட்டும்.