Thursday, December 15, 2011

ஜட்ஜப்பா - பகுதி 9


 முந்தைய பகுதிகளின் இணைப்பு:

1 - http://nagoreismail786.blogspot.com/2009/09/1.html 

2 - http://nagoreismail786.blogspot.com/2009/11/2.html 

3 - http://nagoreismail786.blogspot.com/2009/12/3.html 

4 - http://nagoreismail786.blogspot.com/2010/07/4.html

5. http://nagoreismail786.blogspot.com/2010/08/5.html 


6. http://nagoreismail786.blogspot.com/2011/03/6.html 

7. http://nagoreismail786.blogspot.com/2011/09/6.html  


8. http://nagoreismail786.blogspot.com/2011/12/8.html
------------------------------------------------------------------
‘ஜட்ஜப்பா இஸ்லாத்த பத்தி எங்கேயாவது எழுதியிருக்காஹலா, பேசியிருக்காஹலா?’ என்று எங்க வாப்பாவிடம் நான் கேட்டதற்கு -

எங்க வாப்பா ஒண்ணுமே பேசாம என் கையில ஒரு கிதாபை கொடுத்தாஹா - 

அந்த கிதாபின் பெயர் “அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்”


இந்த கிதாபில் தான் குரான் ஷரீஃபை சரிவர உணர்ந்து, உரிய பயனைப் பெறுவதற்கு எதையெல்லாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதையே நான் புரிந்து கொண்டேன்.


அதாவது குரான் ஷரீஃபை ஆழ்ந்து படித்து உணர நினைப்பவர்கள் இந்த கிதாபை ஒரு முறை முதலில் படித்து விட்டு பிறகு குரான் ஷரீஃபை படிக்க வேண்டும் என்பது எனது சொந்த கருத்தாகும். 


இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு இஸ்லாத்தை தன் போக்கில் விளங்கி வைத்திருக்கும் அறிஞர் பெருமக்கள் (?)  அவுலியாக்களில் ஆரம்பித்து சஹாப்பாக்கள், பெருமானார் (ஸல்) அவர்கள் என்று எல்லாத்தையும் பற்றி பேசிவிட்டு கடைசியாக அல்லாஹ்வையும் விட்டு வைக்காமல் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று ஒரு ஆதாரத்தை கொண்டு வந்து விட்டார்கள்.


ஆங்கிலத்திலே "blasphemer" என்று சொல்வார்கள், அதாவது புனிதமான ஒன்றை மரியாதைக் குறைவாக பேசுவது, இவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள். 


அலி (றலி) அவர்கள் காலத்திலே காரிஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் இருந்தனர், இந்த பிரிவினரோடு நான் பேசிக் கொண்டிருக்கும் இவர்களையும் இணைத்து என்னால் பார்க்க முடிகிறது.


சரி போகட்டும், கீழ் வரும் குரான் ஷரீஃபின் வாக்கியத்தை கவனியுங்கள்:


அத்தியாயம் 39. ஸூரத்துஜ் ஜுமர் (கூட்டங்கள்)
27வது வாக்கியம்


இன்னும், இந்த குரானில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்து பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்


இந்த வாக்கியத்தில் சில செய்திகள் பிராதனமாக உள்ளது:


1. குரான் ஷரீஃபில் எல்லாவித உதாரணங்களும் (எடுத்துகாட்டுகள், நீதிக்கதைகள் - அரபியில் ‘மஸலின்’ என்ற வார்த்தை) உள்ளது


2. இந்த உதாரணம் யாருக்காக என்றால் மனிதர்களுக்காக (அரபி மொழியில் இறங்கி இருந்தாலும் சரி) தான்



(குரான் ஷரீப் என்பது என்ன தான் அனைவருக்கும் என்றாலும் அதன் முதன்மையான பெறுநர் (அதாவது first addressee - Please Read this:
http://nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_10.html - ) அந்த கால அரேபியர்கள் தான் என்பது எனது கருத்து)



3. அவர்கள் இந்த உதாரணங்களை வைத்து சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லை இல்லை ‘அப்படியே தான் எடுத்துக் கொள்வேன்’ என்று பிடிவாதம் காட்டக் கூடாது.


இங்கே இன்னும் சற்று சிந்திப்போம்:
  • குரான் ஷரீஃப் மனிதர்களுக்காக என்றால் எத்தனையோ அரபி தெரியாதவர்கள் இருக்கிறார்கள். 
  • குரான் ஷரீஃபோ மிக சிறந்த அரேபிய இலக்கியமாக இருக்கின்றது.
  • அரபி படித்தவர்களுக்கே குரான் ஷரீஃபின் எல்லா நுணுக்கங்களையும் உணர்ந்து கொள்ள முடியும் என்று உறுதியாக சொல்ல இயலாது.
  • அரபியல்லாதவர்களுக்காக குரான் ஷரீஃப் அவர்களது மொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் ஆனால் மொழிபெயர்ப்புக்கே உள்ள இயல்பான குறைபாடுகளோடு தான் படிக்க முடியும்.
ஒரு சில உதாரணங்கள்:

என்னுடைய பேஸ்புக் தளத்தில் என்னுடைய சீன நண்பர் ஒருவர் இருக்கிறார், ‘லாரண்ஸ் லீ’ என்பது அவரது பெயர். நான் ஏதாவது தமிழில் எழுதினால், என்னிடம் கேட்பார், ‘நீ தமிழ்ல்ல என்னென்னவோ எழுதுறே.. என்னன்னே புரியலை..ஆங்கிலத்தில் எழுது..’ என்று.

மொழி என்பது அடிப்படையில் ஒருவருடைய கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்க உதவும் ஒரு கருவி.

என்னுடைய நண்பர் லாரண்ஸ் சீன மொழியில் ஏதாவது எழுதினார் என்றால் எனக்கு நிச்சயம் விளங்க தான் செய்யாது.


இப்பொழுது எங்கள் இருவருக்கும் தெரிந்த மொழியான ஆங்கிலம் உள்ளது. அவர் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர். நானோ ஆங்கிலத்தில் ஆனா ஆவன்னா.   


இப்பொழுது இரண்டு பேரும் பேசுகிறோம் என்று வையுங்கள். அவர் நல்ல கிராமரில் புரியாத வொகாபலரியில் பிளந்து கட்டுகிறார் என்றால் நான் வாய் பிளந்து நிற்பேனே தவிர என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் எனக்காக விளங்க வேண்டுமென்று கொஞ்சம் எளிய மொழியில் பேசினால் எனது ஆர்வத்தை பொருத்து நான் அவர் குறிப்பிட்ட செய்தியை உள்வாங்கிக் கொள்ள முடியும்.


இப்பொழுது இன்னொரு வகையாக சிந்தித்து பார்ப்போம். எனது நண்பர் லாரண்சுக்கும் ஆங்கிலத்தில் நல்ல பாண்டித்தியம் இருக்கிறது. எனக்கு நல்ல பாண்டித்தியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது கூட என்னால் அவர் பேசும் கருத்துக்களை உள் வாங்கிக் கொள்ள முடியும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.


உதாரணமாக, லாரண்ஸ் வந்து ஒரு மருத்துவர் என்று வையுங்கள், நான் ஒரு அக்கவுண்டண்ட் என்று வைத்துக் கொள்வோம். அவர் அவருடைய டெக்னிகல் சப்ஜெக்டை பற்றி இருவரும் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலத்தில் பேசினாலும் கூட எனக்கு விளங்காமல் போய்விடும்.


மருத்துவரான அவர், ”பேலண்ஸ் டயட்” பற்றி பேசக்கூடும். ஆனால் அக்கவுண்டண்ட்டான நானோ ”பேலண்ஸ் ஷீட்” டை -பற்றி தான் பேச முடியும்.


இன்னும் ஆழமாக சிந்திப்போம், லாரண்ஸூம் நானும் ஒரே துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். இருவரும் நன்கு பயின்ற மொழியில் பேசிக் கொள்கிறோம் என்று வையுங்கள், அப்பொழுதும் கூட ஒருவரின் கருத்தை இன்னொருவருக்கு சொல்லின் மூலமாக விவரித்து விட முடியும் என்று சொல்வதற்கில்லை.


இதை புரிந்து கொள்ள உதாரணமாக, சிங்கையில் துரியான் என்று ஒரு பழம் இருக்கிறது. இதை நான் நாகூரில் உள்ள ஒரு நண்பருக்கு எந்த வார்த்தையின் உதவியை வைத்துக் கொண்டு உண்ணும் போது எனக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கி கூற முடியும்.


இன்னும் சற்று விரிவாக, இருவரும் ஒரே மரத்திலிருந்து பறிக்கப்பட்ட ஒரே பழத்தில் உள்ள இரு துண்டங்களை உண்கிறார்கள் என்று வையுங்கள்  ஒரே சமயத்தில் உண்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் ருசி முழுக்க முழுக்க ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.


ஆகையினால், நாம் மேலே சொன்ன கருத்துக்களிலிருந்து கீழ்கண்ட உண்மைகளை அறிந்து கொள்ளலாம்:
  1. மொழி சில வரையறைகளை உடையது 
  2. மொழிக்குள்ள வரையறை எதைப்பற்றி விளக்குவதற்காக அந்த மொழியை உபயோகிக்கிறோமோ அந்தப் பொருளை முழுமையாக உணர்த்தும் வகையில் மேலும் அதிகமாகிறது
  3. அந்த பொருளைத் தெளிவாக்கும் வகையில் மொழியை ஆள்கிறோமா என்பது கேட்பவர்களுடைய, படிப்பவர்களுடைய திறமையையும், அனுபவத்தையும் பொருத்திருக்கிறது
  4. சில அனுபவங்களைச் சொற்களால் உணர்த்தவோ விளக்கவோ முடியாது 
  5. ஒரே சொல் ஒன்றை அனுபவித்த ஒருவருக்கு ஒரு பொருளையும் அதை அனுபவிக்காத வேறு ஒருவருக்கு வேறொரு பொருளையும் தரக்கூடும். அதாவது, அனுபவத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் சொல் ஒன்றின் செறிவையும், திண்மையையும் அந்த அனுபவமில்லாத ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியாது.
மொழியின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்த குறைகளை எல்லாம் உணர்ந்து கொண்டு தான் குரான் ஷரீஃபை அணுக வேண்டும்.

இப்போது உதாரணமாக, ஒரு குரான் ஷரீஃபின் வசனத்தை கவனிப்போம்

அத்தியாயம் 39 - ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)


67வது வாக்கியம்


“மேலும், அல்லாஹ்வுக்குக் காண்பிக்க வேண்டிய அளவுக்கு அவர்கள் அவனைக் கண்ணியப்படுத்துவதில்லை; இந்த பூமி முழுவதும் இறுதித் தீர்ப்பு வேளையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள்ளே தான் இருக்கும்; வானங்கள் அனைத்தும் அவனது வலக்கரத்திலே சுருட்டப்பெற்று இருக்கும். அவன் மிக்க பரிசுத்தமானவன்; இவர்கள் அவனுக்கு இணையாக்கி வைப்பவற்றுக்கெல்லாம் மேலானவன் அவன்.”

இந்த ஆயத்தை எப்படி அணுகுவது?

பூகோள அறிவைக் கொண்டு நாம் தெரிந்து வைத்திருக்கிறோமே நாம் வாழும் பூமியைப் பற்றி -அந்த பூமியை அல்லாஹ் அவனது ஒரு கைக்குள்ளே அடக்கி வைத்திருப்பான். அது மட்டுமல்ல அவனோட வலது கையில் வானங்களையெல்லாம் சுருட்டி வைத்துக் கொள்வான்.

இப்படி நேரடியாக பொருள் கொண்டு விளங்க முற்படலாமா?

அப்படி என்றால் இவ்வளவையும் கையில் வைத்திருக்கிற அந்த உருவம் எங்கே நிற்கும்?

பூமியிலேயும் நிற்க முடியாது - வானத்திலேயும் மிதக்க முடியாது, என்றால் - அது நிற்பதற்காக இன்னொரு இடத்தை படைக்குமா என்ன?

நான் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள நினைக்கிறார்கள். அதனால் வந்த கோளாறு தான் இறைவனுக்கு உருவம் உள்ளது என்ற பினாத்தல் யாவும்.

இதற்கு தான் - அறிவின் இருப்பிடமும் மூலமுமான இறைவனை பற்றி அந்த இறைவன் படைத்த மொழியில் விளக்க முற்படுவது அல்லது தர்க்கத்தில் விளங்க முற்படுவது முழுமையடையாது - என்கிறோம்.

ஆக, அவர்கள் இது மாதிரியான விஷயத்தில் ”மூக்கை நுழைக்காமல்” (இங்கே ‘மூக்கு’ என்பதன் சரியான பொருள் விளங்கும் என்று நம்புவோமாக) இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

அவர்கள் தங்கள் வாழ்நாளில் எதுவெல்லாம் ’ஷிரிக்’ என்று பட்டியலிட்டுக் கொண்டும் யாரெல்லாம் ஷிர்க்வாசிகள் என்று ஜாப்தா போட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

ஆகவே, இந்த வாக்கியத்தை மேலே கண்ட குரான் ஷரீஃபின் 39வது அத்தியாயம் 27வது வாக்கியம் கூறுவது போல் உதாரணமாக உருவகித்து சொல்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.

மேலே கண்ட இந்த வசனம் சிருஷ்டிகர்த்தாவான இறைவன் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் விட உயர்ந்தவன் - பெரியவன் என்பதை உறுதிப்படுத்துவதுடன் அனைத்துமே அவனுடைய ஆதிக்கத்தின் கீழ் வருபவையே என்பதை தெளிவுபடுத்தவுமே இந்த உருவகத்தை கையாண்டு இருக்கிறது.

அதனால் தான் உடனே ”அவன் பரிசுத்தமானவன்” என்று வருகிறது கவனியுங்கள் -மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் “கையிருக்கு - காலிருக்கு” என்று தெரிந்தோ தெரியாமலோ இணையாக்குகிறாகள் அல்லவா அவர்களை எச்சரிக்கவும் இந்த ஆயத்து இந்த உருவகத்தை கொண்டே அறிவுறுத்துகிறது - இவர்கள் இணைவைக்கிறார்கள் அல்லவா அவற்றை எல்லாம் விட அல்லாஹ் உயர்ந்தவன் என்று உணர்த்துவதே இந்த ஆயத்தின் நோக்கமாக இருக்கலாம்.

ஜட்ஜப்பாவின் “அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை” படிக்காமல் போயிருந்தால் குரான் ஷரீஃபுடைய இலக்கிய அழகு எனக்கு விளங்காமலே போயிருக்கும்.

இன்னொரு உதாரணம் பாருங்கள்..

அத்தியாயம் 7 - ஸூரத்துல் அஃராஃப் 


54 வது வாக்கியம்


“... அவனே இரவைக் கொண்டு பகலை மூடிவிடுமாறு செய்கிறான். அ(ப்பகலான)து அதனை இடையறாது தொடர்ந்தே செல்கிறது. .....”

யுக்ஸி - அதனை மூடுகிறான்

அல் லைல - இரவினை

னஹார - பகலை(க் கொண்டு)

யத்லுப்ஹு - தேடுகிறது, செல்கிறது

ஹஸீஸன் - இடையறாது

ஜட்ஜப்பா எழுதுகிறார்கள்,

“.. இரவும் பகலும் இடையறாது ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டும் தேடிக் கொண்டும் சென்று கொண்டிருக்கின்றன என்பதும் ஓர் அழகிய கற்பனை நிறைந்த அலங்காரமாகும்”

No comments: